21 September, 2024

கவிதை ~ உலகின் முதல் நிரந்தரம் ~ கதிர்பாரதி


விலக்கப்பட்ட கனியை உண்டதை முன்வைத்து
உலகின் முதல்கேள்வி கேட்டார் கடவுள்.

`நானல்ல இவள்தான் காரணம்’ என்று
உலகின் முதல்பெண்ணை
முதல்முறை காட்டிக்கொடுத்தான் 
உலகின் முதல் ஆண்.
`
நானல்ல பாம்புதான்’ என்று
தானறிந்த முதல் உண்மை சொன்னாள் பெண்.

`
பாம்பின் சந்ததிக்கும் பெண்ணின் சந்ததிக்கும்
இடையில்
காலத்துக்கும் பகையை நீட்டிப்பேன்` என்று
முதல் சபதம்போட்டார் கடவுள்.

அன்றுமுதல்
பெண் சந்ததியின் குதிங்காலைத் தீண்டிவிட
பாம்பின் பிளவுண்ட நாவு காத்திருந்தது.
பாம்பின் தலையைப் புழுதியொடு தேய்த்தழிக்க
பெண்ணின் சந்ததியும் காத்திருந்தது.

கடவுள் சூழ்ச்சியில் ஒருநாள்
நினைவில் கனன்றிருந்த முதற்பகை
பாம்பைக் கண்டு துரத்திக்கொண்டோடியது.

பெண்ணின் அடிவயிற்றில் போய்
முதன்முதலாய்ப் புகுந்துகொண்டது பாம்பு.
அவளைக் கடித்துக் கடித்து
மாதம் மூன்று நாள்
வலிக்க வலிக்க ரத்தம் கக்கவைப்பதும் அதுதான்.

உண்மையில்
நிரந்தர பேருண்மையிடம்
பெண் முதன்முதலாய்க் காட்டிக்கொடுக்கப்பட்டது
அன்றுதான்.

1 comment:

Anonymous said...

சிறப்பு 💕