2013 - ம் வருடம். கார்த்திகை இறுதி வாரம். நான் `தந்தி தொலைக் காட்சி’யில் பணிபுரிந்துகொண்டிருந்த காலகட்டம் அது. சென்னை, பெருங்குடியின் ஐ.டி கம்பெனிகள் இடையே `தந்தி தொலைக்காட்சி` அலுவலகம். ஓர் அந்தி மஞ்சள் வெயில் படிந்த நேரத்தில் அலுவலக நண்பர்கள் வெங்கி, அன்பு, ரகுபதி ஆகியோருடன், வெளியே தேநீர் அருந்த வந்திருந்தேன். தேநீர் அருந்துவதைவிட அங்கே ஒரு முட்டுச்சந்து வீட்டின் முன்பு, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதி சுடச்சுட விற்கும் `புனுவலு` சாப்பிடவே எங்களுக்கு ஆர்வம். ஆந்திராவின் தென்மாவட்டங்களின் தனித்தன்மைப் பலகாரம் `புனுவலு`. எலுமிச்சைப் பழம் அளவில் மெதுவடைத் தன்மையோடு இருக்கும் `புனுவலு`வை, ஓர் ஆள் ஒரே நேரத்தில் பத்துக்கும் அதிகம் சாப்பிட முடியும். தேங்காய்ச் சட்னியுடன் `புனுவலு’ தட்டைக் கையில் வாங்கிய கணத்தில், என் அலைபேசிக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து ஓர் அழைப்பு வந்தது…
``என்.ஸ்ரீராம் சாரா… `ஆனந்த விகடன்` பத்திரிகையில்
இருந்து கதிர்பாரதி பேசுறேன். தலைமை உதவி ஆசியராகப் வேலை பார்க்கிறேன். எழுத்தாளார்
நாஞ்சில் நாடன் உங்க நம்பர் கொடுத்தார். விகடனுக்கு ஒரு சிறுகதை கொடுங்க.”
``கைவசம் எங்கிட்ட இப்போ கதை இல்லை. எழுதிட்டுத்
தரட்டுங்களா?”
“அவசரமில்லை. அவகாசம் எடுத்து எழுதிக் கொடுங்க.”
``நீங்க `கல்கி` பத்திரிகையில வேலைபார்த்த
கதிர்பாரதிதானே?’’
``ஆமா சார்.’’
``உங்க கவிதைகள் எல்லாம் நிறைய சிற்றிதழ்கள்ல
படிச்சிருக்கேன். உங்களைப் பற்றி விசாரிக்கும்போது இயக்குநர் மு.மாறன், நீங்க `கல்கி`
பத்திரிகையில தலைமை உதவி ஆசிரியரா வேலை பார்க்கிறதா சொன்னாரே?’’
``ஆமாம் சார்… இப்போ `ஆனந்த விகடன்’ல வேலைக்குச்
சேர்ந்து நாலஞ்சு மாசம் ஆகுது.’’
``உங்களுக்கு எந்த ஊர்?’’
``தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமம்.’’
``ஏன் கேட்கிறேன்னா… உங்க பேர்ல ஒருத்தர் `கணையாழி`
பத்திரிகையில வேலை பார்த்தார். உங்க கவிதைகளைப் படிச்சிட்டு அவரா இருக்கும் நினைச்சு,
`அந்தக் கதிர்பாரதி’கிட்ட பேசினேன். `அது யாருனு தெரியலை சார். என் பேரைக் கெடுக்கிறதுக்குன்னே
கவிதை எழுதுறார்’னு சொன்னார்.``
கதிர்பாரதி சிரித்துவிட்டார்.
``அவர் உங்க நண்பரா… கல்கி ஆபிஸுக்கு வந்து
என்னையும் நேரில் பார்த்து, `நீங்க என் பேர்ல கவிதை எழுதாதீங்க’னு சொல்லிட்டுப் போனார்.’’
இப்போது இருவருக்கும் இடையே சிரிப்பு.
-இதுதான்
எனக்கும் கதிர்பாரதிக்குமான முதல் உரையாடல். (`கணையாழி கதிர்பாரதி` இப்போது தர்மபுரி
பக்கம் `ஓதுவார் கதிர்பாரதி`யாக ஆன்மிகச் சேவை செய்துகொண்டிருக்கிறார்).
அன்று… இருள் சூழ தரமணி பறக்கும் ரயிலடியின்
கீழே ஏரி நீரோடு மழை நீர் தேங்கிக் கிடக்கும் வழியினூடே ரயிலுக்கு நடக்கும்போது, எனக்கு
`கல்சிலம்பம்’ ஆடும் செல்லீயக் கோனார் மட்டுமே மனம் முழுக்க நிறைந்து இருந்தார். ரயில்
நிலையத்தில் ரயிலுக்குக் காத்திருக்கும் அவகாசத்தில் மின்சார ஒளியைப் பிரதிபலிக்கும்
ஏரி நீரைப் பார்த்துக்கொண்டே `கல்சிலம்பம்` கதையை அசைப்போட்டேன். அதற்கு அடுத்து வந்த
நாட்களில் உறக்கம் எனக்குக் குறைவுதான். இரவு பகல் என `கல்சிலம்பம்` கதையே மனம் முழுக்க
வியாபித்திருந்தது. ஏனோ எழுத முடியவில்லை. வேறு ஒரு கதையை எழுதவும் மனம் ஒப்பவில்லை.
இதனிடையே கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பான `மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்`
வாசித்துவிட்டு அவரிடம் ஒவ்வொரு கவிதையாகப் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதன்
செழுமையான மொழி என்னை வெகுவாகப் பாதித்தது. அப்போதுதான் அந்தத் தொகுப்பின் கவிதைகளுக்காக
2013-ம் ஆண்டுக்கான `சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார்’ விருது பெற்றிருந்தார் கதிர்பாரதி.
எனக்குத் தெரிந்து தமிழ் நவீனக் கவிதைக்குக் கிடைத்த முதல் `சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார்
விருது` அது.
`தந்தி தொலைக்காட்சி` அலுவலகத்தின் பக்கவாட்டில்
ஒரு நடைவழி உண்டு. அதில் சென்றால் ஐ.டி. கம்பெனிகளின் கேப்டீரியாவுக்குச் சென்று முடிவடையும்.
அந்த வழியின் வலப் புறத்தில் பூங்கொன்றை, மகிழம், வேம்போடு வெளிநாட்டு மரங்களை நட்டுப்
பராமரிக்கும் பூங்காவும், இடப்புறத்தில் தடித்த கல்மதிலுக்கு அப்பால் வனம் போல் அடர்ந்த
முட்காடுகளும் உண்டு. எந்நேரமும் பறவைகளின் தனித்த ஓசை கேட்கும். காற்று குளிர்ந்து
வீசும். பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டேயிருக்கும். சில நேரங்களில் கனத்த பாம்புகள்கூட
கல்மதில் துவாரத்தினூடே புகுந்து பூங்காவுக்குள் செல்லும். மதிய உணவுக்குப் பின் சற்று
ஓய்வாக இருக்கும் நேரத்தில் எல்லாம், நான் அந்த நடைவழியில் வந்து அமர்ந்து செல்வதுண்டு.
அப்படி அமர்ந்திருக்கும் கால் மணிநேரமோ அரைமணி நேரமோ எனக்கு அயல்தேசத்தில் இருக்கும்
தோரணையைத் தரும். அன்று என் அருகில் ஒரு நெடுஞ்சாரைப் பாம்பு கல்மதில் துவாரத்துனூடே
புகுந்து, வெளிப்பட்டு நடைவழியில் விரைந்தோடி, பூங்காவின் அருகுக்குள் சென்று நின்றது.
அந்தக் கணம் கதிர்பாரதியிடம் இருந்து அலைப்பேசி அழைப்பு.
“சார் வணக்கம்… நல்லாயிருக்கீங்களா?”
எனக்குள் ஒரு பதட்டம் தொற்றியது.
“நான் இன்னும் கதையை முடிக்கலை. எப்படியும்
இந்த வாரத்தில் கொடுத்துருவேனுங்க.”
``மெதுவாக் கொடுங்க. நீங்க ஏற்கெனவே விகடன்ல
எழுதின `உருவாரம்`, `மசை’ கதைகள் எல்லாம் வாசிச்சேன். `உருவாரம்` ஒரு பெரிய்ய வாழ்வைச்
சொல்லுது. `மசை` ஒரு குறியீட்டுத் தன்மைக் கதை.”
இப்படி தொடங்கி அந்தக் இரு கதைகளின் போக்கு,
நடை என நுட்பமாகப் பேசினார். உரையாடலின் இறுதியில் சினேகபாவத்துடன் `உங்கள் தொகுப்புகள்
கொடுங்கள். வாசிக்க வேண்டும்’ என்றார். வார இதழின் படுவேலைப்பாட்டுக்கு இடையேயும் என்
கதைகளைத் தேடி கதிர்பாரதி வாசித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் கவனம்
சூழலுக்குத் திரும்பும்போது நெடுஞ்சாரை மறைந்துவிட்டது. எங்கும் மஞ்சள் வெயில் படர்ந்துவிட்டது.
அடுத்த சில தினங்களில் `கல்சிலம்பம்` சிறுகதையை எழுதி அனுப்பிவிட்டேன். ஆனால், ஏனோ
உள்ளுக்குள், `கதை பிடிக்காமல் போய்விடுமோ?’ என்கிற சந்தேகம். மஞ்சள் வெயில் உறையும்
அந்தியில் அதே நடைவழியில் அமர்ந்தபடி தயங்கிக்கொண்டே கதிர்பாரதிக்கு அழைத்தேன்.
“ `கல்சிலம்பம்` கதை பிரமாதமா இருக்கு சார்.
அடுத்த வாரம் விகடன்ல வெளிவருது.”
கதிர்பாரதி, கேரளாவில் வசிக்கும் அணில் என்கிற
ஓவியரிடம் பிரத்யேகமாக ஓவியம் வாங்கி, நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு
என என்னையும் பிரபலப்படுத்தியிருந்தார். கதை வெளிவந்த வாரத்தில் ஒருநாள் அந்தியில்
மஞ்சள் வெயில் உறைந்த நேரத்தில் `ஆனந்த விகடன்` அலுவலகம் சென்று கதிர்பாரதியைச் சந்தித்தேன்.
எங்களின் முதல் சந்திப்பு, விகடன் அலுவலகம் முன்புள்ள சாலையில் தேநீர் பருகியபடி நடந்தது.
நான் என் கதைத் தொகுப்புகளை கதிர்பாரதிக்குக் கொடுத்தேன்.
“உங்கள நாஞ்சில்நாடன் `பிராமிஸிங் ரைட்டர்`னு
சொன்னார். அப்புறம்தான் நான் உங்ககிட்ட கதை கேட்டேன். உங்ககிட்ட ஒரு நல்ல நடை இருக்கு.
கொங்குமண்டலத்தோட வாழ்வு இருக்கு. நீங்க தொடர்ந்து விகடனுக்குக் கதை கொடுங்க. நிறைய
எழுதுங்க. நாவலும் எழுதுங்க.”
கதிர்பாரதி அன்றைக்குச் சொன்ன சொற்களும் அந்த
உரையாடலும் நான் தொடர்ந்து கதை எழுத பெரும் நம்பிக்கை கொடுத்தது. கதிர்பாரதி இறுமாப்பு
இல்லாத கவிஞர். பழகும் நண்பர்களின் பாராட்டை இயல்பாகக் கடந்து செல்பவர். அதற்கு அடுத்த
ஆண்டுகளில் என்னையும் ஊக்கப்படுத்தி அடுத்தடுத்து நான்கைந்து சிறுகதைகளை விகடனில் எழுதவைத்தார்.
என் கதைகளை எங்கள் ஊர்ப்பக்கம் வாசிக்கவைத்த பெருமை கதிர்பாரதியையே சேரும்.
இதனிடையே கதிர்பாரதியின் இரண்டாவது கவிதைத்
தொகுப்பு, `ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்’ உயிர்மை பதிப்பகம் வெளியீடாக
வெளிவந்தது. மஞ்சள் வெயில் உறையும் அந்தியில்தான் நான் புத்தகத்தை கையில் வாங்கினேன்.
இரு தினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். எப்போதும் நிலக்காட்சி சார்ந்து நிறைய எழுதுவதாக
இருந்த என் இறுமாப்பை, `ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ தொகுப்பின்
ஒவ்வொரு கவிதைகளும் உடைத்தெரிந்தன. மணிப்புறாக்களும், மழைத்தட்டான்களும், ஆட்டுக்கிடாய்களும்,
வெட்டுக்கிளிகளும், நீர்முள்ளிப் பூக்களும், அணில்களும், கவி உயிர்ப் பெற்று படிமப்
பிணையல் நர்த்தனத்தில் ஆங்காங்கே ஏகாந்தவெளிச் சிற்பமாய் காலநுட்பத்தைச் சுமந்து காட்சி
தந்தன. `குள்ளநரி அழைக்கிறது வாரீர்`, `புன்செய் வெயிலாகும் முத்தம்`, `அழகு பகல்`,
`கற்றாழைப் பழம் சுவைத்தேன்`, `அலறி ஓடும் மவ்னம்`… போன்ற கதிர்பாரதியின் கவிதைகள்
என் மனதைவிட்டு நீங்காத்தன்மை கொண்டதாக இருந்தன.
காலச் சூழலில் நாங்கள் இருவரும் `கலர்ஸ் தமிழ்
தொலைக்காட்சி`யில் ஒன்றாக வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கூடிவந்தது. அது எனக்குப் பெரும்
ஆறுதலாக இருந்தது. தொலைக்காட்சித் துறையில் தீவிர இலக்கியம் பேசும் நண்பர்கள் கிடைப்பது
வெகு அபூர்வம். அந்தக் குறையை எனக்குப் போக்குபவர் கதிர்பாரதி. எங்கள் அலுவகத்தின்
முன்புறம் திறந்தவெளியில் நெடிதுயர்ந்த அரச மரத்தடியுடன்கூடிய சொற்கேட்ட விநாயகர் சன்னதி
மற்றும் பெருமாள் சன்னதி உண்டு. மஞ்சள் வெயில் உறையும் அந்தியில் நாங்கள் பிரதான சாலையில்
உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டு வந்து அந்தக் கோயில் அருகில் நின்று, சமகால இலக்கியப்
போக்குகளையும், வாசிக்கும் புத்தகங்களையும் நிறையப் பேசுவோம். அப்படியான ஒரு சூழலில்தான்
கதிர்பாரதி தனது அடுத்த கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளைத் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்ததைச்
சொன்னார். அவ்வப்போது எழுதும் கவிதைகளை எனக்கு வாசிக்கவும் கொடுத்தார். அதுதான் அவரின்
மூன்றாவது கவிதைத் தொகுப்பு `உயிர்திணைப் பறவை’. இதில் இடம்பெற்ற பெரும்பாலான கவிதைகளின்
முதல் வாசகன் நானாகக்கூட இருந்திருக்கலாம். சொந்தமாக தனது `இன்சொல்’ பதிப்பகம் மூலம்
வெளியிட்டுள்ளார்.
கதிர்பாரதியின் கவிப் படிமங்கள் மாறத் தொடங்கிய
காலகட்டம் இது. சொற்கள் எளிமையாயின. விஸ்தீரமான விவரிப்புகள் குறைந்தன. ஒற்றைச் சொல்லே
பிரத்யேகமாகிச் சொல்லும் விஷயத்தை உணர்த்தின. பூடகங்கள் விலகிப் போயின. எனக்குப் பிடித்த
கலாப்ரியா, கல்யாண்ஜி, பிரமிள், பசுவைய்யா, நகுலன், தேவதேவன், தேவதச்சன் போன்ற கவிமுன்னோடிகள்
கையாளும் சொற்சிக்கனத்தை தற்போது இந்தக் கவிதைகளில் கதிர்பாரதியும் கையாண்டிருப்பதாகவே
தோன்றின. கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் கவிநெகிழ்ச்சியின் பரப்பும் விசாலமாகி இருப்பதாகவும்
தோன்றியது. `அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது` என அம்மாவைப் பற்றிய 30
கவிதைகள், `அமரம்’, `உயர்திணைப் பறவை’ எனத் தொகுப்புக்கு பெயராக அமைந்த கவிதை ஆகியன
தனி உதாரணம்.
கதிர்பாரதி வெறும் கவிஞர் மட்டுமில்லை. நுட்பமாக
சிறுகதைகள் எழுதும் திறமைகொண்டவர். ஒருமுறை என்னிடம் `மதகு` பற்றிய ஒரு கதையைச் சொல்ல
ஆரம்பித்தார். நான் வியந்துபோனேன். ஏனெனில்,
சோழ நிலத்தின் அற்புதமான குறுநாவல் அது. விரைவில் எழுதிமுடிப்பார் எனறே நினைக்கிறேன்.
தஞ்சை மண்ணின் தனித்த அடையாளமான கற்றளிக் கோயில்களும், சிற்றாறுகளும், சிற்றாம்பல்
மிதக்கும் நெல்வயல்களும், தாளடிகளும், தாம்பு மாடுகளும், மடையான்களும், வலசைக் குருவிகளும்,
சேற்றோரத்துக் கூன்நாரைகளும், கொக்குக் கூட்டங்களும், தொன்மக் கதைகளும், திருவிழா உற்சவங்களும்,
ஊர்ச் சடங்குகளும் ஊடுபாவாகப் பின்னிப் பிரத்யேகமாக ஒரு பெரிய கவிதைத் தொகுப்பைக் கொண்டு
வாருங்கள் என்று நான் அடிக்கடி அவரிடம் சொல்வதுண்டு. அவரை காலம் அதை நிறைவேற்றவைக்கும்.
கதிர்பாரதிக்குத் திரைப்படப் பாடல்கள் மீது
தீராத பிரேமை உண்டு. நான் அறிந்தவரை தத்தகராத்துக்குத் தகுந்தாற்போல் பாடல் புனையும்
சாதுர்யமும் ஆற்றலும்கொண்டவர். அதில் எளிய கவிதைகளையும் எழுதிவிடக் கூடியவர். ஏனோ அந்தத்
திறமையை அவர் வெளிப்பிரகடனப்படுத்துவதே இல்லை. நாங்கள் இருவரும் பணிப்புரியும் `கலர்ஸ்
தொலைக்காட்சி`யின் நெடுந்தொடர் ஒன்றுக்கு அற்புதமான டைட்டில் பாடல் எழுதியிருந்தார்.
அது அந்த நெடுந்தொடருக்கான புரோமோஷன் பாடலாகவே ஒளிப்பரப்பானது. விரைவில் கதிர்பாரதி
திரைப்படப் பாடலாசியராகவும் வலம்வருவார் என நினைக்கிறேன். அதையும் காலம் நிறைவேற்றும்.
`நிலத்தை நேசிப்பவனாக, நட்பை போற்றுபவனாக, சகப் படைப்பாளியை ஊக்குவிப்பவனாக இருக்கும்
கதிர்பாரதி, `கவிஞன்` என்ற தலைச்சுமைச் சிறிதும் இன்றி எளிமையாகப் பழகக் கூடியவர்”
- நான் முகநூலில் கதிர்பாரதி குறித்து ஒருமுறை இப்படி எழுதியிருந்தேன். இது நிஜம்.
என் ஆயுளின் அந்திமம் வரை மஞ்சள் வெயில் உறையும்
அந்தி வரும். அது கதிர்பாரதியின் ஏதாவது ஒரு கவிதையை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
மஞ்சள் வெயில் உறையும் அந்தி ஏன் கதிர்பாரதியின் கவிதைகளை எனக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்துகிறது
என ஆழ்ந்து யோசிக்கும்போது, அது நிஜ வாழ்க்கையில் நிகழும் அதிபுனைவு என்று கண்டுபிடித்தேன்.
சாசுவதமான பிரபஞ்ச வெளியில் காலத்தின் முன் எப்போதும் கவிஞனும் கவிதைகளும் அதிபுனைவுதானே.
கதிர்பாரதியும் அவரது கவிதைகளும் மஞ்சள் வெயில் உறையும் அந்தியும் நானும் அதற்கு விதிவிலக்கா
என்ன!?
சென்னை
26.8.2020
No comments:
Post a Comment