29 May, 2014

புதுமையாக சிந்திக்கவும், கவித்துவமாக எழுதவும் செய்கிறார் கதிர்பாரதி. - கவிஞர் கரிகாலன்

சிறிய இடைவெளிக்குப் பிறகு கவிதை படிக்கத் தொடங்கி இருக்கிறேன். நல்வாய்ப்பாக என்னை ஏமாற்றாமலிருந்தது கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள். புதுமையாக சிந்திக்கவும், கவித்துவமாக எழுதவும் செய்கிறார் கதிர்பாரதி. கவித்துவ அமைதிகூடிய கதிர்பாரதியின் கவிதைகள் இந்த கோடையின் வெம்மையை சில இடங்களில் கூட்டியும், எதிர்பாராது பெய்த மழையைப் போல குளிர்ச்சியையும் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. நெடுஞ்சாலை மிருகம் என்கிற அவரது கவிதை இப்படி முடிகிறது. 

பருவபெண்ணின் நளினத்தோடு
வளைகிற ஒவ்வொரு திருப்பத்திலும்
அவளின் வனப்பையொத்த மினுமினுப்புகளில்
வீச்சமெடுக்கும் ரத்தத்தை
உதறிக்கொண்டு ஓடுகிறது
காலம்.

விளைநிலங்களை அழித்து மரங்களை வெட்டி வளர்ச்சியின் பொருட்டு உருவான நமது தங்க நாற்கரச் சாலைகள் இலக்கு நோக்கி விரைகின்ற வேளையில் அதுகேட்கும் பலிகளை நாள்தோறும் ஊடகங்களில் சாப்பிட்டபடி பார்க்கிறோம்.
எல்லாவித வன்முறைகளுக்கும் பழகிக்கொண்டது நமது மனது.

இளம் வயதில் கதிர்பாரதி யுவபுரஸ்கார் விருது, கலை இலக்கியப் பெருமன்ற விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது போன்ற பெருமைகளைப் பெற்றுள்ளார். தொடர்ந்து, இயங்கி சிறந்த கவி ஆளுமையாக அவர் மலர வாழ்த்துகள். இத்தொகுப்பு குறித்த விரிவான அபிப்ராயத்தை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

15 May, 2014

“ஷங்கரம் சிவ ஷங்கரம்!”

சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, ஒரு பஸில் குயின்! 
மோனலிசா ஓவியத்தையும் ஈஃபிள் டவர் ஓவியத்தையும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸில் துண்டுகளாக்கி ஐஸ்வர்யா கையில் கொடுத்தால், சில மணி நேரங்களில் அந்தத் தனித்தனி துண்டுகளை அடுக்கி ஒரிஜினல் ஓவியத்தை கண் முன் கொண்டுவந்துவிடுகிறார். இத்தனைக்கும் அந்த ஓவியங்களை அவர் முன்-பின் பார்த்திருக்க வில்லை. தன்னிடம் அளிக்கப்பட்ட பஸில் துண்டுகளில் மோனலிசா, ஈஃபிள் டவர் ஓவியங்கள்தான் ஒளிந்திருக்கின்றன என்ற ரகசியமும் அவருக்குத் தெரியாது!
'அமெரிக்கப் பள்ளிகளில் இந்த பஸில் விளையாட்டை ஒரு பாடமாகவே வைத்திருக் கிறார்களே... பள்ளிக் குழந்தைகள் செய்யும்போது 32 வயது ஐஸ்வர்யாவால் அதைச் செய்ய முடியாதா..?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.  ஐஸ்வர்யாவின் உடலுக்குத்தான் 32 வயது; மனசுக்கு மூன்று வயது! ஆம்... ஐஸ்வர்யா ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான சிறப்புக் குழந்தை. இப்போது செய்தி அது அல்ல!
'பீச்... பீட்டர் சார்... லாலி பாப்!’ என்ற குழந்தைகள் நாவலில் ஐஸ்வர்யாதான் ஹீரோயின். ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான சிறப்புக் குழந்தை ஒன்றின் திறமை களையும், அவர்களின் உலகையும் விறுவிறுவென விவரிக்கும் முதல் தமிழ் நாவல் இது. இதன் ஆசிரியர் லெஷ்மி மோகன். இவர்தான் ஐஸ்வர்யாவின் மியூசிக் தெரப்பிஸ்ட்டும்கூட. ஐஸ்வர்யாவின் கதை சொல்லத் தொடங்கினார் லெஷ்மி.
''ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான 60 குழந்தைகள் என்கிட்ட மியூசிக் தெரப்பி எடுத்துக்கிறாங்க. அவங்கள்ல வயசுல மூத்தவள் மட்டுமில்லை... ரொம்பவும் வித்தியாசமானவள் ஐஸ்வர்யா. அவள் என் வீட்டுக்கு வந்த முதல் நாள் செஞ்ச வேலை, ஃபிரிஜ்ஜைத் திறந்து உள்ளே இருந்த பொருள்களை எல்லாம் கீழே வெச்சுட்டு, மறுபடியும் இருந்த இடத்துலேயே எல்லாப் பொருள்களையும் கச்சிதமா அடுக்கி வெச்சதுதான். அப்பதான் ஐஸ்வர்யாவின் பஸில் திறமைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். உலகின் பிரபல பஸில் ஓவியங்களை ஐஸ்வர்யா ஒண்ணு சேர்த்திருக்காங்க. அந்த ஓவியங்களை வெச்சு பல கண்காட்சிகள் நடத்தியிருக்கோம்.
'எல் அண்ட் டி’ மாதிரியான பல நிறுவனங்கள் இவளோட பஸில் ஓவியங்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
ஐஸ்வர்யா, பஸில் குயின் மட்டுமல்ல; மியூசிக் தெரப்பி மூலமாக அவளுக்குச் சில ஸ்லோகன்களையும் சொல்லிக் கொடுத்தேன். ரெண்டு, மூணு வாரங்கள்ல அந்த ஸ்லோகன்களை கரெக்ட்டாப் பிடிச்சுக்கிட்டு என்கூட சேர்ந்து பாட ஆரம்பிச்சிட்டா. நாலைஞ்சு வார்த்தைகளைச் சேர்த்துக் கோர்வையாப் பேச முடியாத பொண்ணு, என்னோடு சேர்ந்து பாடினதுல எல்லாருக்கும் சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்கலை!'' என்று நெகிழும் லெஷ்மி, ஐஸ்வர்யாவின் முகத்தைக் கைகளால் வருடி முத்தம் கொடுத்துவிட்டு, அவரது வலது கையை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொள்கிறார்.
''ஐஸுக்குட்டி... என் செல்லம்ல... அங்கிளுக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டுப் பாடிக் காட்டலாமா?' என்று சன்னமாகப் பாடுகிறார் லெஷ்மி.
''ஷங்கரம் சிவ ஷங்கரம்
ஷங்கரம் சிவ ஷங்கரம்...
போலோநாத் உமாபதே ஹர
ஜோதிலிங்கம் ஷங்கரம்...'' 
என்று பாடிக் கொண்டிருக்கும்போதே, ''ஐஸுக்கு மில்க் ஷேக்... ஐஸுக்கு மில்க் ஷேக்'' என்று சொல்லியபடியே லெஷ்மியின் மடியில் படுத்துக்கொள்கிறார் ஐஸ்வர்யா. ''மில்க் ஷேக் கொடுத்தாத்தான் பாடுவாளாம்...'' என்று சொன்ன லெஷ்மி, ''ஐஸு... அங்கிளுக்குப் பாட்டுப் பாடுவியா.. மாட்டியா? பாட்டுப் பாடினாத்தான் அக்கா உன்கூடப் பேசுவேன்'' என்று சொன்னாலும், ''ஐஸுக்கு மில்க் ஷேக்... ஐஸுக்கு மில்க் ஷேக்...'' என்று மறுபடியும் சொல்ல, ''நீ பாட்டுப் பாடினாத்தான் மில்க் ஷேக்...'' என்று லெஷ்மி கண்டிப்பு காட்ட, ஐஸ்வர்யா பாட ஆரம்பித்தார்.
''ஷங்கரம் சிவ ஷங்கரம்
ஷங்கரம் சிவ ஷங்கரம்...''
மழலையும் முதிர்ச்சியும் கலந்த ஐஸ்வர்யாவின் குரல் அறையெங்கும் நிறைகிறது. பாடி முடித்ததும் ஐஸ்வர்யாவின் கையில் ஒரு மில்க் ஷேக் பாட்டிலைக் கொடுத்ததும் வாங்கிக்கொண்டாள். மீண்டும் 'ஷங்கரம் சிவ ஷங்கரம்...’ ஒலிக்கிறது!
லெஷ்மி, மீண்டும் என்னிடம் பேச ஆரம்பித்தார்...
''ஐஸ்வர்யா ஒருநாள் என்னைப் பார்த்து, 'பூனை ஓடுச்சு... அப்பா எங்கே?’னு கேட்டா. நான் அவ அம்மாகிட்ட, 'இதையே கேட்டுட்டு இருக்கா’னு சொன்னேன். 'ஐஸுக்கு நாலு வயசா இருக்கும்போது அவ பெட்ரூம்ல பூனை நுழைஞ்சதாம். அதை அவ இன்னும் மறக்கலை. அதைத்தான் இப்போ வரை சொல்லிட்டு இருக்கா’னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியம். பஸில் போடுறது, பாட்டுப் பாடறது, அபார ஞாபகசக்தி, போட்டோ ஷாப்ல கடவுள் படங்களை வரையறதுனு ஐஸ்வர்யாவின் பல திறமைகளை வெளியுலகத்துக்குக் காட்டணும்னு தான் 'பீச்... பீட்டர் சார்... லாலி பாப்!’ என்ற நாவலை எழுத ஆரம்பிச்சேன். இந்த நாவலில் ஐஸ்வர்யா, பஸில் துண்டுகளால் இணைத்த நிறைய ஓவியங்களையும் சேர்த்திருக்கேன்.
மனதளவில் மூன்று வயதான ஐஸ்வர்யா காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலை, காய்கறிகளை நறுக்கி தன் தாய் கிரிஜா உதவியோடு மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதுதான். பின்பு, பஸில் போடுவாள். அப்புறம் அவள் டைரியில் அன்னைக்கு என்ன செய்யணும் என்று மழலைக் கையெழுத்தில் மூன்று, நான்கு வரிகள் எழுதுவாள். இன்னைக்குக்கூட, 'விகடன்லேர்ந்து பார்க்க வர்றாங்க’னு எழுதிருக்கா.
ஆட்டிஸத்தின் தீவிரத்தைக் குறைக்க மருந்து மாத்திரகளோட சேர்ந்து இசையின் பங்கும் அதிகம். இவங்க சந்திக்கிற முதல் பிரச்னையே மன அழுத்தம்தான். அவங்க நினைக்கிறதைச் சொல்ல முடியாது. அதுவே அவங்க மனசுல தங்கித் தங்கி ஸ்ட்ரெஸ்ஸா மாறிடும். அதைத் தாங்க முடியா மத்தான் அவங்க ஒரு இடத்துல நிக்காம அங்கே இங்கேனு ஓடுறது, தங்களைத்தாங்களே கடிச்சுக் காயப்படுத்திக்கிறதுனு ரகளை செய்வாங்க. அவங்க மனசைச் சாந்தப்படுத்தி ஒரு இடத்துல உட்காரவைக்கும் இசை. ரைம்ஸ் போல திரும்பத் திரும்ப வருகிற வார்த்தைகள், ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்ஸ்ஷேர், பிறவியிலேயே ஆட்டிஸம் பாதிப்புக்கு உள்ளானவர். ஆனா, அபாரமான ஓவியர். எந்த ஒரு காட்சியையும் பார்த்த 10 நிமிஷத்துலேயே எந்தக் குறிப்பும் இல்லாமல் வரைஞ்சிடுவார். இவரோட திறமையைப் பாராட்டி, இங்கிலாந்து அரசவையில் உறுப்பினர் ஆக்கிட்டாங்க.
பாஸ்டனைச் சேர்ந்த டெம்பிள் கிராண்டின், ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளானவர்னு அவரோட நாலாவது வயசுலதான் கண்டுபிடிச்சாங்க. ஆனா, பெற்றோரின் அரவணைப்பு அவரை விலங்கியல் பாடத்துல முனைவர் பட்டம் வாங்கவெச்சது. ஆட்டிஸம் பாதித்தவர்களில் இப்படி அசாதாரணத் திறமைசாலிகளும் இருக்காங்க. வெளிநாட்டில் இவங்களுக்குத் தோள் கொடுக்க சட்ட திட்டங்களும் அரசாங்க வழிகாட்டுதல்களும் இருக்கு. ஆனா, இந்தியாவில் ஆட்டிஸம் பற்றிய விழிப்பு உணர்வே ரொம்பக் கம்மி. ஏதோ என் பங்குக்கு சின்ன வெளிச்சம் கொடுக்கலாம்னுதான் 'பீச்... பீட்டர் சார்... லாலி பாப்!’ நாவல் எழுதியிருக்கேன்!'' என்கிறார் லெஷ்மி.
க்கத்து அறையில் எட்டிப் பார்க்கிறேன். கால் மேல் கால் போட்டு சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு ஓர் ஓவியத்தின் பஸில் துண்டுகளை இணைத்துக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. அந்த ஓவியத்தில், பூக்கூடையில் இருந்து ஒரு பூனைக்குட்டி தாவிக் குதித்து ஓடக் காத்திருக்கிறது.
லெஷ்மி, கொஞ்சம் சத்தமாகவே சொன்னார்...
''ஐஸுக்குட்டி... அங்கிள் கிளம்புறாங்க பாரு... பை சொல்லு...''
ஐஸுக்குட்டி, அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. வலது கை விரல்கள் பிடியில் மில்க் ஷேக் இருக்க, இடது கை விரல்கள் பஸில் துண்டுகளை அடுக்கிக் கொண்டிருக்க, உதடுகள் சன்னமாக முணு முணுக்கின்றன...
''ஷங்கரம் சிவ ஷங்
''ஷங்கரம் சிவ ஷங்"

03.04.14 ஆனந்த விகடன் இதழில் வெளியானது

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்!

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்!
கதிர்பாரதி, ஓவியங்கள்: ரவி
ழுத்தாளர்கள், கவிஞர்கள் கண்ணாடிப் பேழையைப் போன்றவர்கள். அவர்களைக் கவனமாகக் கையாள வேண்டும்’ என்பார் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். தமிழின் சில 'கண்ணாடிப் பேழை’களைப் பற்றி...
வண்ணதாசன்
விதைகளில் கல்யாண்ஜி, சிறுகதைகளில் வண்ணதாசனாக இலக்கிய முகம் காட்டும் சி.கல்யாணசுந்தரம், ஓர் ஓவியரும்கூட. 'தமிழ்நாட்டில் ஓவியர் கோபுலு, கேரளாவில் நம்பூதிரி, ஆந்திரப்ரபா பாபு... இவர்களுடைய ஓவியங்கள் எனக்கு விருப்பமானவை. நான் தொலைந்துபோக விரும்பும் காடாக இவர்களது கோடுகள் இருக்கின்றன. இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் என் கட்டைவிரலை தட்சணையாகத் தரவும் சம்மதம்’ என்பார் வண்ணதாசன்.
''பனிக்குடத்தில் இருந்து சிசு வெளியே வருவதை, ஒரு பசு கன்று ஈனுவதை, முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஒரு பறவைக் குஞ்சு உலகை ஸ்பரிசிப்பதை... ஒவ்வோர் ஆணும் பார்க்க வேண்டும். நான், பசு கன்றை ஈனும்போது, கன்று தரையில் விழுவதற்கு முன்பாக கைகளில் ஏந்தியிருக்கிறேன். அந்த நேரத்தில் என் கைகளில் படிந்த உயிரின் பிசுபிசுப்பு இன்னும் என் எழுத்துகளில் ஒட்டிக்கொண்டு வருகிறது'' என்கிற வண்ணதாசன், தான் நடந்து செல்கிற பாதையில் இறகுகள் உதிர்ந்துகிடந்தால், பொறுக்கி எடுத்துக்கொள்வாராம். காரணம், ''பறவைகளை வளர்ப்பதைப் போல, நான் இறகுகளை வளர்ப்பதாக நினைத்துக்கொள்வேன். தவிரவும், உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே!'' என்கிறார். சமீபத்தில் சரஸ்வதி பூஜையின்போது வண்ணதாசன் மஞ்சள் தூளைப் பிசைந்து செய்த அம்மனைத்தான் அவரது இல்லத்தில் வழிபட்டிருக்கிறார்கள்!
தியடோர் பாஸ்கரன்
போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக இருந்து பணி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன். ''என் முக்கிய பொழுதுபோக்கே புகைப்படம் எடுப்பதுதான். குஜராத்தில் இருந்தபோது 'இந்திய மாடுகள்’ என்ற கான்செப்ட்டில் புகைப்படங்கள் எடுக்க ராஜ்கோட்டுக்கு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றேன். அங்கே கிர் இன மாடு ஒன்று கிட்டத்தட்ட குட்டி யானை அளவுக்கு நின்றிருந்தது. அந்த மாட்டைப் பராமரிக்கும் பெரியவருக்கு 72 வயது. எனக்கு மலைப்பாக இருந்தது. அந்த மாட்டைக் கட்டிக் காப்பாற்றி வந்த பெரியவருக்கு செய்யும் மரியாதையாக, நான் அவரைப் போலவே திருகிவிட்ட கூர் மீசை வைத்துக் கொண்டேன். அதுவே பின்பு என் அடையாளமாக மாறிவிட்டது. அன்றைக்கு நான் எடுத்த அந்த கிர் மாடு புகைப்படம், 1999-ம் ஆண்டு அஞ்சல்தலையாக வெளிவந்தது!'' என்கிற தியடோருக்குப் பிடித்த பறவை... ஆந்தை. சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகில் ஐந்து ஆந்தைகள் குடிவந்த பூரிப்பில் திளைக்கிறார் தியடோர்!
நாஞ்சில் நாடன்
மிழ் நவீன இலக்கிய உலகத்தில் மரபு தோய்ந்த குரல் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடையது.
'' 'உச்சத்தைத் தொடணும்னா உச்சத்தில் இருந்து ஆரம்பிக்கணும்’னு ஒரு ஜென் தத்துவம் இருக்கு. இதுதான் என்னை இயக்கும் மந்திரம்.'' என்கிற நாஞ்சில் நாடன், முன்பெல்லாம் வருடத்துக்குஅதிகபட்சம் மூன்று சிறுகதைகள்தான் எழுதுவாராம். பணி ஓய்வுபெற்ற பிறகு ஐந்து ஆறு என்று எண்ணிக்கை கூடியிருக்கிறது. கம்பன் பயன்படுத்திய சொற்களின் அழகு, ஆழம், வீச்சு... ஆகியவற்றை ஆராய்ந்து இவர் எழுதிய 'கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற புத்தகம் தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் புதிது.
அந்தாதி, உலா, தூது இலக்கியம், பிள்ளைத்தமிழ்.. போன்ற சிற்றிலக்கிய வகை இலக்கியங்களை ஆராய்ந்து 'சிற்றிலக்கியம்’ என்ற புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார். ''நாஞ்சில் நாட்டு உணவு’ என்ற புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். இது நாஞ்சில் நாட்டுப் பண்பாட்டின் இயங்குதளம் குறித்த ஆய்வின் அடிப்படையில் எழுதப்படும் புத்தகம். ''காலம் அனுமதித்தால் இன்னும் ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் என் இப்போதைய ஆசை'' எனும் நாஞ்சில் நாடன், தன் அத்தனை படைப்புகளையும் கையால்தான் எழுதுகிறார். எழுதும்போது பின்னணியில் அருணா சாய்ராம், சஞ்சய் சுப்ரமண்யன், உன்னி மேனன், டி.எம்.கிருஷ்ணா பாடல்கள் கட்டாயம் ஒலிக்கும்!
கலாப்ரியா
விஞர் கலாப்ரியா, 40 ஆண்டுகளுக்கு முன் தன்னோடு பள்ளியில் படித்த நண்பர்களைச் சந்தித்து பால்யகால நினைவுகளுக்குள் 'தொபுக்கடீர்’ என நீச்சலடித்துவிட்டு வந்திருக்கிறார். அந்த அனுபவம் கலாப்ரியாவின் வார்த்தைகளிலேயே...
''காலம் பிரித்துப்போட்டவர்களை, சிவசைலம் 'அவ்வை ஆசிரமம்’ வளாகத்தில் குடும்பத்துடன் ஒன்று சேர்த்திருந்தான் தெய்வநாயகம். 'துலாபாரம்’ மலையாளப் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் அருகில் கை சூப்பியபடி அழுத 'சொக்கு’ என்கிற சண்முகத்தை 45 வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் எனக்கு கண்ணீர் மளமளவென்று கொட்ட ஆரம்பித்தது. ஒரே தெருக்காரன். ஆனால், பார்த்துக்கொள்ள இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது.  
'இது கீதா. செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியை. என் மருமகள்; உன் கவிதைகளின் பரம ரசிகை’ என்று எனக்கு வெட்கம் வரும்படி அறிமுகப்படுத்திய வெ.ராமச்சந்திரன் முகம் பார்த்து, அரை நூற்றாண்டு நெருங்குகிறது. கடினமான கணக்குகளை சரசரவென்று போடும் 'தங்க மெடல்’ பழனியாண்டி, சுந்தரனார் பல்கலையின் இயற்பியல் பேராசியர் என்றெல்லாம் செய்தி வரும். பார்த்து
40 வருடங்கள் ஆகிவிட்டன. முருகானந்தமும் நானும் ஒரே சாப்பாடு, ஒரே ரசனை, அவ்வப்போது ஒரே சரக்கு, ஒரே ஊறுகாய்... என நகமும் சதையுமாகப் பல காலம் பழகினவர்கள்தான். என்றாலும் பார்த்து பத்து வருடங்களாவது இருக்கும். ஆசிரமக் குழந்தைகள் வழங்கிய கலை விருந்தில் ஜனனி என்கிற குட்டிக் குழந்தை அழகாக ஆடியது. தெய்வு, என்னையும் என் துணைவியையும், அந்தக்  குழந்தைக்குப் பரிசு கொடுக்கும்படி சொன்னான். பிஞ்சுக் கரத்தால் அந்தச் சிறிய சாப்பாட்டுத் தட்டைக்கூட தாங்கிப் பிடிக்க முடியவில்லை. ஆனால், அதன் வாழ்க்கைச் சுமையைக் கேட்டபோது தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஜனனியின் அப்பா, அவள் அம்மாவைக் கொலை செய்துவிட்டுத் தானும் செத்துப்போய்விட்டானாம். என்ன ஜனனமோ, என்ன மரணமோ. திரும்பும்போது மனம் கனமாக இருந்தது... சில மலையாளக் கதைகள்போல!''

எஸ்.ராமகிருஷ்ணன்
ழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பச்சை நிற சட்டை, அதிலும் கட்டம் போட்ட சட்டைகள் அணிவ தென்றால் ரொம்ப இஷ்டம். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே இருக்கும் மிகப் பழமையான மரத்தைத் தேடிப் போய் பார்த்துவிடுவார். செய்யவேண்டிய எழுத்துப் பணிகள், பயண விவரம் போன்றவை முறையாகப் பட்டியல் இடப்பட்டு, எழுதும் மேஜையின் முன்பு இருக்கும். அந்தப் பட்டியல் வாரம் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
சென்னை உதயம் தியேட்டர் அருகில் உள்ள கோகுலம் பார்க் உணவகம், இவருக்கு விருப்பமானது. கோவில்பட்டியில் இருந்து லூதியானா வரை தீப்பெட்டி பண்டல் ஏற்றிச் சென்ற லாரியில் பயணித்தது இவரால் மறக்க முடியாத பயணங்களில் ஒன்று. பொரிகடலை பொடித்துப்போட்ட வதக்கிய வெங்காயம் கொண்டு இவர் செய்யும் சமையல், குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவாம். மாலை கே.கே.நகர் சிவன் பார்க்கில் நடைபயிற்சியும், காலை வீட்டின் முன்புறத்தில் ஷட்டில்காக் ஆடுவதும் வழக்கம். இவருடைய ஷட்டில்காக் தோழர்... இயக்குநர் சசி!
தேவதச்சன்
வீன தமிழ்க் கவிஞர்களில் ஒரு தலைமுறை கவிஞர்களைப் பாதித்தவர் கவிஞர் தேவதச்சன். இவர் தமிழ் சினிமா குத்துப் பாடல்களுக்குப் பரம ரசிகர் என்பது நிச்சயம் ஆச்சர்யம்! ''குறிப்பா 'பரமசிவன்’ படத்துல வர்ற 'ஆச தோச அப்பளம் வடை’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆணுக்குள் இருக்கும் பெண் தன்மையையும் பெண்ணுக்குள் இருக்கும் ஆண் தன்மையையும் உளவியலாளர்கள் 'அனிமா’னு சொல்றாங்க. அப்படி ஒவ்வொரு மனித மனசும் 'அனிமா’வால் ஆனது. அந்த அனிமாதான் என்னை குத்துப்பாட்டை ரசிக்கவெக்குது. இன்னும் சொல்லப்போனா, 21-ம் நூற்றாண்டின் நெருக்கடியை குத்துப் பாடல்களின் ஒவ்வொரு வரி முடிவிலும் என்னால் உணர முடியுது!'' என்கிறார் தேவதச்சன்.
கோவில்பட்டியில் இருக்கும் இவரது நகைக் கடையில்தான் எப்போதும் இருப்பார். நண்பர்களோடு பேச வேண்டுமென்றால், காந்தி மைதானத்துக்கு வந்துவிடுகிறார். ''இடம் விஸ்தாரமா இருந்தா, பேச நல்லாருக்கு'' என்கிற தேவதச்சனின் அடுத்த கவிதைத் தொகுப்பின் தலைப்பு... 'எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது’  

விக்ரமாதித்யன்
ஜாதகம், ஜோதிடம் பார்ப்பதில் மகாகெட்டிக்காரர் கவிஞர் விக்ரமாதித்யன். தமிழகம் முழுக்கவுள்ள பாடல்பெற்ற தலங்கள் அனைத்தையும் தரிசித்துவிட்ட விக்ரமாதித்யனுக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவாவடுதுறை, திருவீழிமிழலை... இரண்டு ஊர் கோயில்களும் மிகவும் பிடித்தமானவை. இவரது வாசகர் மதுரை எஸ்.செந்தில்குமார் வாங்கிக் கொடுத்த சேர் டேபிளில் உட்கார்ந்துதான் பெரும்பாலும் எழுதுகிறார். அதற்கு முன்பு சூட்கேஸ் பெட்டியை மடியில் வைத்து எழுதிக்கொண்டிருந்தாராம். ''என் கவிதை வாசகர் சரவணக்குமார் சமீபத்தில் சாலை விபத்தில் இறந்துபோனது என்னைத் துக்கத்தில் ஆழ்த்துகிறது. எனது இரண்டாவது காசி பயணத்துக்குப் பெரும் உதவி செய்தவர் சரவணன். என் கவிதைகளின் நுட்பமான வாசகனை நான் இழந்துவிட்டேன்'' என்று வருத்தப்படுகிறார்!
கி.ராஜநாராயணன்
ட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா., தீவிரமான சிவாஜி ரசிகர். பூர்வீக இடைசெவல் கிராமத்துக்குப் போய் பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இயல்பாகவே கி.ரா., சாப்பாட்டுப் பிரியர். 'சாப்பிடுறது ரெண்டு இட்லி. ஆனா, மூணு சட்னி வேணும் இவர் நாக்குக்கு’ என்று மனைவி கணவதி அம்மாள் இவரைக் கிண்டலடிப்பார். 'எழுத்தாளர் ஆகவில்லையென்றால், மிகப் பெரிய இசைக் கலைஞராக வந்திருக்கக்கூடியவர்’ என்கிறார் இவரைப் பக்கத்தில் இருந்து கவனிக்கும் எழுத்தாளர் கழனியூரன். ’ஒரு கதை கொடுங்க...’ என்று கேட்டால் கி.ரா-விடம் இருந்துவரும் முதல் பதில் 'இல்லை... முடியாது’ என்பதுதான். ஆனால், எழுத வேண்டும் என்று மனசு வைத்துவிட்டால், தகவல்கள் சரம்சரமாகக் கொட்டும். ஒரு கதையை மூன்று முறையாவது திருத்தி எழுதிவிட்டுத்தான் பத்திரிகைகளுக்குக் கொடுப்பார். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட கி.ரா., 'வலியோடு வாழ்வது எப்படி என்பதற்கு நாந்தான் உதாரணம்’ என்று அடிக்கடி சொல்லிச் சிரிப்பார். டி.கே.சி. ரசிகமணியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு வாரம் முன்பே தென்காசிக்குப் போய்விடுவார். விழா முடிந்தும் ஒரு வாரம் தங்கி இருப்பாராம். அந்த இரண்டு வாரங்களும் பேச்சு... பேச்சு... பேச்சு... என இலக்கியக் கச்சேரிதான். 'அந்தப் பேச்சுகளைப் பற்றிய பதிவுகள் எங்கும் இல்லை. அதைத் தொகுத்தால் கி.ரா-வின் நாவலைவிட முக்கிய இலக்கியமாக அவை இருக்கும்’ என்கிறார்கள் நண்பர்கள். வீட்டில் இருக்கும்போது கதர் வேட்டியும் மேல் துண்டும் மட்டுமே அணியும் கி.ரா., இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது மட்டும் பண்ணையார் போல பட்டு வேட்டி சட்டை உடுத்திக்கொள்வார்!
சுகுமாரன்
விஞர் சுகுமாரன் பிறந்தது கோவையில்; வாழ்வது திருவனந்தபுரத்தில். 12 வயது வரை படித்தது ஊட்டி வெலிங்டனில். வெளிவர இருக்கும் முதல் நாவலுக்கு 'வெலிங்டன்’ என்றே பெயர் வைத்திருக்கிறார். இந்தி மொழி கற்கும் ஆர்வத்துடன் இந்தி வகுப்பில் சேர்ந்தாராம். அங்கு இவருடன் படித்த ஓர் அழகியப் பெண் திடீரென வகுப்புக்கு வராமல் போகவே, இவரும் நின்றுவிட்டார். 'என் கையெழுத்து அழகாக இருக்கும். நான் இந்தி எழுத்துகளை அழகாக எழுதுவேன். அவளுக்கு நன்றாக இந்தி உச்சரிக்க வரும். அவள் இந்தி வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். 'இவனுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா?’ என்று அந்த இந்திக்கே பொறுக்கவில்லைபோல... அவள் வகுப்பிலிருந்து நின்றுவிட்டாள். நானும் இந்தி கற்பதை நிறுத்திவிட்டேன்’ என்று நண்பர்களிடம் சொல்லிச் சிரிப்பார். பிறகு, வைக்கம் முகமது பஷீர் எழுத்துகளைப் படிப்ப தற்காக மலையாளம் கற்றுக்கொண்டார். சுகுமாரன் நன் றாகச் சமைப்பார். வெண் பொங்கல் ரொம்ப ஸ்பெஷலாம். பெங்களூருவில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் அறிமுகமான இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஃப்ரான்சிஸ்கா மாசியானோ, சுகுமாரன் சமைத்த உப்புமாவைச் சுவைத்த பிறகு, நெருங்கிய நண்பராகிவிட்டாராம். இத்தனைக்கும் சுகுமாரனுக்குப் பிடிக்காத உணவு... உப்புமா!
கோணங்கி
பாரதியாரின் 'புதிய கோணங்கிகள்’ கவிதையில் வருகிற 'கோணங்கி’யை தனக்குப் பெயராகச் சூட்டிக்கொண்டவர் எழுத்தாளர் கோணங்கி. சமீபத்தில் தனது 'த’ நாவலை தனுஷ்கோடியில் வைத்து தன்னந்தனியாக வெளியிட்டிருக்கிறார். ஒரு சுருட்டின் மீது மதுவை ஊற்றி அந்தச் சுருட்டைப் பற்றவைத்து கடலுக்குப் படைத்தவர், 'த’ நாவலின் 36பக்கங்களை கடலுக்கு வாசித்துக் காட்டியிருக்கிறார்.  
ராமேஸ்வரத்தை சிதைத்த தனுஷ்கோடி புயலில், கடலில் மூழ்கிப்போன ரயிலுக்கு கடைசியாகக் கொடி காட்டிய ரயில்வே ஊழியரின் கைகளைப் பார்க்க வேண்டும் என்று தனுஷ்கோடிக்குச் சென்று அவரைக் கண்டுபிடித்து, அவரது கைகளைத் தடவிப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினாராம் கோணங்கி.  
'தனுஷ்கோடியில் திரிகிற ஒவ்வொரு நாயும் எனக்கும் பழக்கம். எச்சில் ஒழுகுகிற அதன் நாவில் நான் இருக்கிறேன்!’ என்று அடிக்கடி சொல்வார் கோணங்கி.

10 May, 2014

நீர்ப்பாய்ச்சி

திருநெல்வேலி
11.09.2013

பேரன்புத் தோழர் கி.ரா. அவர்களுக்கு
வணக்கம்

மகாகவி பாரதியின் 92 வது நினைவுநாள் அன்று இம்மடலை எழுதுகிறேன். செப்டம்பர் 16, 2013 -ல் தங்களுக்கு வயது 90 நிறைந்து 91 தொடங்குகிறது என்பதில் நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் பெருமிதமும் அடைகிறேன். தங்களுக்கும் தங்களை கண்ணின் மணிபோல பேணிப் பாதுகாத்துவரும் தங்கள் அருமைத் துணைவியாருக்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் அன்புசால் வணக்கம்; நெஞ்சம் நிறை நல்வாழ்த்துகள். தாங்கள் மென்மேலும் சீரிய உடல்நலமும் உளநலமும் பெற்று தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தனித்தன்மையுடன் உயிரூட்டவும் ஒளியூட்டவும் அற்புதமான படைப்புகளைத் தருவீர்களாக. தங்கள் படைப்பாற்றல் மென்மேலும் வளர்க வெல்க. தமிழகம் சிற்ப்புறுக!
குமுதத்தில் தங்கள் கட்டுரைத் தொடரை சில வாரங்கள் மட்டுமே படித்தேன். மகாகவி லட்சியப் பாதையில் நாம் செல்வோம். உங்களிடம் இன்னும் உயர்தரமான வளமான கருத்தாழமிக்க வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளை எதிர்பார்ப்பர் என்பதில் எனக்கு ஐயமில்லை. 24 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தங்கள் புதுவை வாழ்க்கையை மண்வாசனையுடன் மனிதநேயத்துடன் தாங்கள் தமிழுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்பதே இந்த 89 வயது தோழன் தங்களுக்கு வைக்கும் பணிவான வேண்டுகோள். ஆவணம் செய்க!

இன்றும் தமிழுடன் 
தி.க.சி.

-இதுதான்  தேங்காய்க் கடை சிவசங்கரம் பிள்ளையோட பேரன் தி.க.சி-யிடம் இருந்து எனக்கு வந்த கடைசிக் கடிதம். ஏன் தேங்காய்க்டை சிவசங்கரம்ம் பிள்ளையோட பேரன்னு குறிப்பிட்டுறேன்னு அப்புறம் சொல்றேன். இந்தக் கடிதத்தை, தி.க.சி-யை தாமிரபரணியின் நதிக்கரையில் தகணம் செஞ்சுட்டு வந்த இரண்டாவது நாள் இப்போதான் மறுபடியும் எடுத்துப் பார்க்கிறேன். இந்தக் கடிதத்தோட வார்த்தைகள்ல ஒருவித இறுக்கம் இருக்கிறது இப்போதான் எனக்கு மட்டுப்படுது. தமிழ்ப் பண்டிதர்கள்களோட பேசிட்டு இருந்துட்டு இந்தக் கடிதத்தை எனக்கு எழுதிருப்பார் போல. அதனாலதான் கடிதத்துல பண்டித்தமிழ் சாயல் நிறையவே இருக்கு. என்னமோ சொல்ல வந்திருக்கார். ஆனா, என்னனுதான் எனக்கு மட்டுப்படலை. ஆனாலும் என்ன... எனக்கும் தி.க.சி-க்கும் மட்டுப்படறது மாதிரி எத்தனையோ ஞாபகங்கள் இருக்கே... சம்பவங்களும் நாள்களும் இருக்கே... அதுங்க போதும்னு நினைக்கிறேன். என்னைப் போல திக.சி-யைத் தேடி வந்துபோன மனிதர்கள் இன்னும் இருக்காங்களே... அவங்க போதும்னு நினைக்க்கிறேன். இதுக்கு மேல ஒரு மனிதரைப் பத்தி வேற என்ன நினைச்சுட முடியும். சொல்லிட முடியும். இதுபோல ஆயிரமாயிரம் கடிதங்கள்... ஆயிரமாயிரம் உற்சாசமூட்டுற வேலைகள்னு கடைசிவரைக்கும் இயங்கிட்டே இருந்தார் தி.க.சி. ’’ - எழுத்தாளர் கி.ராஜநாராயணன் முகத்தில் பாறையைப் போல இறுக்கமான கனத்த மௌனம். ஒரு நீண்ட பெருமூச்சை உள்வாங்கிக்கொண்டவர்  ஈரமும் பாரமுமான வார்த்தைகளில் திகசி நினைவுகளை இறக்கி வைத்தார்...


’’ தி.க.சி-யைப் பத்தி ஒரு வார்த்தையில சொல்லணும்னா அவர் ஒரு நீர்ப்பாய்ச்சி. அதனால்தான் வேர்கள் எல்லாம் அவரை நோக்கி நீண்டுகிட்டே இருந்துச்சு. இங்க வேர்கள்ங்கிறது ஆரம்பக் கால படைப்பாளிகள் உள்பட என்னையும் சேர்த்துதான் குறிக்குது. அவர் அளவுக்குப் படைப்பாளிகளை அரவணைச்சுக்கிட்டவங்க தமிழ் இலக்கிய உலகத்துல குறைவுணுதான் சொல்லணும். தன் படைப்புகள் குறித்து அவர் என்ன நினைக்கிறார்னு தெரிஞ்சிக்கறதுல நிறைய பேருக்கு அலாதியான ஆர்வம். தி.க.சி-யும் சின்னவன் பெரியவன் வயசு வித்தியாசமெல்லாம் பாக்காம எல்லாருக்குமான வார்த்தைகளை வெச்சுருந்தார். எல்லாருக்குமான வார்த்தைகள்னா ஆளுக்குத் தகுந்தார்போல பேசுவார்னு அர்த்தமில்லை. அவ்வளவு அரவணைப்பு. அவ்வளவு ஆதுரம். ஆனா, தான் வரிச்சிக்கிட்ட கொள்கையிலும் விமர்சனத்துலையும் கடைசிவரைக்கும் அத்தனை கறார்த்தனத்தோடதான் இருந்தார். அந்தச் சமயத்துல நாம கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போகணும்.

1966 -ம் வருஷத்துல நான் ’பேதை’னு ஒரு கதை எழுதி தாமரை பத்திரிகைக்கு அனுப்பினேன். அப்போ அந்தப் பத்திரிகையோட ஆசிரியர் தி.க.சி. ஒரு பெண் கிடைச்சுட்டா போதும்... அவளை இந்தச் சமூகம் எவ்வளவு கிள்ளுக்கீரைத்தனமா நடத்துதுனு சொன்ன கதை அது. அந்தக் கதையை முடிக்கிறப்ப ’அவள், அவனோட உயிர்த்தலத்தைப் பிடித்தாள்’னு எழுதிருந்தேன். ’’இந்த ’உயிர்த்தலம்’ங்கிற வார்த்தையை எடுத்துடணும். ரொம்ப ஆபாசமா இருக்கு. அந்த வார்த்தையே வரக்கூடாது’’னு தி.க.சி. சொன்னார். ’’இல்லைங்க அந்த வார்த்தைதான் இந்தக் கதைக்கு ரொம்ப முக்கியம். அதுவும் இல்லாம ’உயிர்தலம்’ங்கிற வார்த்தை ஒண்ணும் ஆபாசம் கிடையாது. ஒரு பையன் கீழே விழுந்துட்டான்னா... ’உயிர்த்தல’த்துல எதுவும் அடிப்பட்டிருக்கா பாரு’னு ஊர்ல சாதாராணமாவே பெண்கள் சொல்வாங்க. அதுவும் இல்லாம தொட்டும் பார்ப்பாங்க. இதுல எங்க ஆபாசம் இருக்கு. சாதாரணமா மக்கள்கிட்ட புழங்குற வார்த்தைதானே’’னு நான் கேட்டேன். ’’இல்ல இல்லை... அந்த வார்த்தை ஆபாசம்தான். வேணும்னா என்.டி.வானமாமலை, எஸ்.ஏ.முருகானந்தம், என்.வானமாமலை இவங்ககிட்ட கேட்டுப்பார்ப்போம்’’னு சொன்னார். இதுல எஸ்.ஏ. முருகானந்தம் அப்போ தூத்துக்குடியில் ’சாந்தி’ பத்திரிகையை நடத்திட்டு வந்தவர். என்.டி.வானமாமலை வக்கீலா இருந்தார். என்.வானமாமலை பெரிய படிப்பாளி... இந்த விஷயத்தை தி.க.சி. அவங்ககிட்ட சொல்றதுக்குள்ள நாமளே முந்திக்கணும்னு நானே கதையை எடுத்துக்கிட்டுப் போயி அவங்களைப் பார்த்தேன். கதையைப் படிச்சுப் பார்த்துட்டு , ‘எனக்கு ஆபாசமா ஒண்ணும் தோணலை. ஆனா, அறுவெறுப்பா இருக்கு’னுடார் என்.டி.வானமாமலை. ஆனா, என்.வானமாமலையோ, ’தமிழில் தோன்றிய முதல் பெண்ணியச் சிறுகதை இதுதான்’னு சொன்னார். அடுத்த ரெண்டாவது வாரத்துல அதாவது 1966 ஜூலை மாசம் ’சாந்தி’ பத்திரிகையில ’பேதை’ கதையைப் பிரசுரம் பண்ணிப்பிட்டார் எஸ்.ஏ.முருகானந்தம். அப்போ சென்னையில் இருந்த தி.க.சி-க்கு இது பெரிய திடுக்கிடலாப் போயிடுச்சு. கட்சி, கமிட்டியில்கூட ’இந்தக் கதையை எப்படிப் பிரசுரம் பண்ணலாம்?’னு விவாதத்தை தி.க.சி. கிளப்பினதாக் கேள்விபட்டேன். நானும் அதைப் பத்தி ஒண்ணும் கேட்டுக்கிடலை அவரும் ஒண்ணும் சொல்லலை. ஆனா, எனக்கு அவர் மேல கொஞ்சம் மனத்தாங்கலா போயிடுச்சு. ஆனாலும் அவர் கடைசிவரைக்கும் தன்னோட கருத்துகள்ல கறாரா இருந்தார். கொஞ்ச நாள் கழிச்சு சென்னையிலேர்ந்து நேரா இடைசெவ்வல் கிராமத்துக்கு வந்தார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு ரொம்ப நேரம் பேசினார். ஆனா, இந்தக் கதையைப் பத்தி அது ஏற்படுத்துன மனக்கிலேசங்களைப் பத்தி ரெண்டு பேரும் ஒண்ணும் பேசிக்கிடலை. இதை ஏன் சொல்றேன்னா... இந்தக் கதையை எழுதுல சமயத்துல எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பலமா சினேகிதம் இருந்துச்சு. ஆனாலும் அவர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காம தன் விமர்சனத்துல காட்டுன கறார்தன்மையில நான் திடுக்கிட்டுத்தான் போனேன்னு சொல்றதுக்காகத்தான்.

’அவர் ஒரு நீர்ப்பாய்ச்சி... அவரைத் தேடி வேர்கள் நீளும்’னு ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா... என்னோட வேர் அதாவது நான் எப்படி அவரைத் தேடிப் போனேன்னு சொல்லணும்ல... சொல்றேன். அப்போ நான் எழுதவே ஆரம்பிக்காத காலகட்டம். வசதியான குடும்பங்கிறதால வேலைக்கும் போறதில்லை. ஊர்சுத்திக்கிட்டு இருக்கிறதுதான் வேலை. ஆனா ஆளுங்களை நேர்ல போய் பாக்கிறல ஆர்வம் ஜாஸ்தி. பாக்கெட்ல பணத்தை எடுத்து வெச்சுக்கிட்டுக் கிளம்பிடுவேன். திருநவேலிக்கு வந்த நேரா நாங்க போறது கம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸுக்குத்தான். அப்போ அண்ணாச்சி சண்முகசுந்தரம்தான் திருநவேலி ஜில்லா கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர். சிந்துபூந்துறை முருகேசன்னா எல்லாத்துக்கும் தெரியும். ஏன்னா அப்போ திருநவேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு செயலாளரா இருந்தவரு. பினாடி கம்யூனிஸ்ட் கட்சியில் சேந்தாரு. அவர்கிட்டத்தான் முதன்முதலாக் கேட்டேன்.

’’தி.க.சி. வீட்டுக்கு எப்படிப் போவணும்.’’
’’ஜங்ஷன்லேர்ந்து டவுன் பஸ் புடி. ’சுடலை மாடன் கோயில் தெரு’ன்னு கேட்டு இறங்கு. இறங்கிட்டு ’தேங்காய் கடை சிவசங்கரம் பிள்ளை வீடு எது?’னு கேளு சொல்வாங்க’’னு சொன்னாரு.
இப்போதான் அது ’சுடலை மாடன் தெரு’. அப்போ அது ’சுடலை மாடன் கோயில் தெரு’. மனுஷங்க பேரை மாத்திக்கிடறது போல தெருவும் காலபோக்குல பேரை மாத்திக்கிடும் போல. அப்பறம் ஒரு விஷயம். நான் தி.க.சி-யைத் தேடி அவர் வீட்டுக்குப் போவும் அவங்க தாத்தா சிவசங்கரம் பிள்ளை தேங்காய் யாவரம் பண்ணலை. அதனால என்ன... அப்பவும் அவர் அங்கனகுள்ள இருக்கிற மனுச மக்களுக்கு தேங்காய்கடை சிவசங்கரம் பிள்ளைதான். அப்படியான காலகட்டம். நான் தி.க.சி-யைப் பாக்கப் போனப்போ அவர் ’தான்கோஸ் பேங்க்’ல உத்தியோகத்துல இருந்தாரு.
நேரா வீட்டுக்குப் போனேன். நல்லா பெரிய வீடு. நாலு குடும்பம் இருந்ததா ஞாபகம். முதல்ல பலகைக் கல்லு போட்ட திண்ணை. அதுலதான் தேய்க்காய் கடை சிவசங்கரம் பிள்ளை உட்கார்ந்து இருந்தாரு. என்னையை யாருன்னே அவருக்குத் தெரியாது. ஆனாலும் ’’வாங்க வணக்கம்’’னு சொன்னவரு... ’அப்படியே உள்ளே போங்க மாடில இருக்கான்’னு கை காமிச்சார். நான் தி.க.சி-யைப் பார்க்க வந்திருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டார். என்னைப் போல அவர் எத்தனை பேரைப் பாத்திருப்பார். நான் அப்படியே நீண்ட வராண்டால நடந்து இடது கைபக்கமா திரும்பி மாடிப்படியில ஏறிப் போறேன்.  மாடியில் அப்போ நெல்லு காய வெச்சுருந்தாங்க. நட்ட நடுவுல ஊஞ்சல்ல உட்கார்ந்து இருந்தார் தி.க.சி. அவருக்கு முன்னாடி குறுக்குவாட்டா நிலைக்கண்ணாடி இருந்துச்சு. நான் அதுவரைக்கும் நீள்வாக்குல தொங்குற நிலக்கண்ணாடியைத்தான் பாத்துருக்கேன். ஆனா முதல் முறையா குறுக்குவாட்டு நிலக்கண்ணாடி... இதையெல்லாம் கவனிச்சுக்கிட்டு நெல்லு மேல நடந்து போனேன். அப்போ என் உள்ளங்கால்கள்ல நெல்லு முனைங்க குத்துனது இப்பவும் குறுகுறுக்குது. எந்திரிச்சு வந்தவரு என் கையைப் பிடிச்சுக்கிட்டார். அப்புறம் பேசுனோம்... பேசுனோம்... பேசிக்கிட்டே இருந்தோம். அதுக்கு பிறகு திருநவேலிக்கு வந்தா போனா, சுடலை மாடன் கோயில் தெருவுல அந்த வீடு நான் உண்டு உறங்கிற பேசிச் சிரிக்கிற எடமா மாறிப்போச்சு. அப்போ அங்க இருந்த நாலு வீடுகள்ல ரெண்டாவது வீட்டுல தி.க.சி-யோட தம்பி ஒருந்தர் இருந்தார். அவருக்கு அப்படியே தி.க.சி-யோட குரல். அவர் பேசுற நேரத்துல தி.க.சி. பேசுறது மாதிரியே இருக்கும். நான் கல்யாணி(வண்ணதாசன்)கிட்ட கூட கேட்பேன். ’’நாங்களும் சிலநேரம் அப்பாத்தான் பேசுறாருனு ஏமாந்திருக்கோம் மாமா”னு அவன் சிரிச்சுக்கிடுவான். அவன் நல்ல பையன்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? கல்யாணியை நான்தான் கூட்டிப்போயி பள்ளிக்கூடத்துல சேர்த்தேன். ம்ம்... வண்ணாரப்பேட்டை பள்ளிக்கூடம். தி.க.சி. அப்போ பேங்க் உத்தியோகம்னு சொன்னேன் இல்லையா... ஒரு நாள் என்கிட்ட, ’’இவனுக்கு படிப்பு கொஞ்சம் சரியா இல்லை. வேற ஸ்கூல மாத்தலாம்னு இருக்கேன். ஆனா, எனக்கு நேரமில்லை. நீங்கதான் கூட்டிட்டுப் போவணும்’’னு சொன்னார். என்கூட ’சாந்தி’ எஸ்.ஏ.முருகானந்தமும் வந்தார். ரெண்டு பேரும் கல்யாணியை பள்ளியில சேர்த்தோம். கல்யாணி, அவன் மகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது ’’பாரத்துல கையெழுத்துப் போடுங்க மாமா’’னு சொன்னான். ஏன்னு தெரியலை. நான் ஏன்னும் கேட்கலை. கையெழுத்துப் போட்டேன். என்னென்னமோ ஞாபகம் வருது பாருங்க... என்னனு சொல்றது இதை.

மனசுக்கு என்னமோன்னு இருந்தா திருநவேலிக்கு பஸ் புடிச்சுடுவேன். நேரா தி.க.சி. வீடு. அங்க பேசிட்டே இருப்போம். வீட்ல தி.க.சி. இல்லைன்னா பேங்குக்குப் போயிடுவேன் பாத்துக்கிடுங்க. அப்படியே பேசிட்டு இருந்துட்டு மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வருவோம். அங்கயே நைட்டு தூங்கி எந்திருச்சா... திருநவேலி டவுன் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கதுல ஒரு பாதை போவும். அது வழியா நடந்து காடு கரைக்குப் போயிட்டு, தாமிரபரணில குளிச்சுட்டு மேலக்கடைசியில் இருகிற ராஜகுலராமன் தெருவுக்கு வருவோம். அங்கதான் தொ.மு.சி. இருந்தார். அங்க போனா அரட்டைக் கச்சேரிதான். இங்க தொ.மு.சி. பத்தி ஒண்ணு சொல்லணும். புத்தகம் எழுதி முதன்முதலா ஜெலுக்குப் போன முதல் எழுத்தாளன் தொ.மு.சி-தான். ’முதல் இரவு’னு ஒரு நாவல் எழுதினார். பாலியல் கதைனு புடிச்சு ஜெயில்ல போட்டுது பகவத்சலம் மந்திரி சபை. ஆனா அதுல ஒரு வேடிக்கை பாருங்க... புக் கன்னாபின்னானு வித்துது. அந்தப் பணத்துல தன் மனைவிக்கு நெக்லெஸ் வாங்கிப் போட்டார் தொ.மு.சி. ஆனா, ’முதல் இரவு’ புத்தகத்தை தி.க.சி. ஏத்துக்கிடலை. அதையே ஏத்துக்கிடாதவர் என்னோட ’மறைவாய்ச் சொன்னக் கதைகள்’ புத்தகத்தை ஏத்துக்குவாரா? ம்கூம்... ’’ஏங்க வீணானதொரு விளையாட்டு வேலையில் ஈடுபடறீங்க’’னு சொன்னார். ஆனா, நான் அவர் சொல்றதைக் கேட்கலை. இவ்வளவு இருந்தாலும் எங்க சிநேகிதம் சிதையில்ங்கிறதுதான் முக்கியம். எனக்கு நிறைய புஸ்தங்களைக் குடுத்து படிக்கவெச்ச தமிழ் எழுத்தாளர்கள் ரெண்டு பேர் ஒருத்தர் திகசி; இன்னொருத்தர் தஞ்சை ப்ராகாஷ்.

’’இந்தப் புத்தகத்தை நான் வெச்சுக்கிடட்டுங்காளா?’’னு தி.க.சி-கிட்ட கேட்பேன்.
’’வெச்சுக்கிடுங்களேன்...”னு மென்மையா ஒரு சிரிப்பு சிரிப்பார். இனிமே அந்தச் சிரிப்பைத்தான் பார்க்க முடியாது.

தூத்துக்குடி எஸ்.ஏ.முருகானந்தத்துக்குப் பிறகு ’சாந்தி’ பத்திரிகையை தொ.மு.சி. நடத்தினார். அதுல தி.க.சி. எழுதின சினிமா விமர்சனம் பரவலாப் பேசப்பட்டுது. அதுலதான் முதன்முதலா சினிமா டெக்னிகல் விஷயங்களை அதாவது கேமரா ஆங்கிள், எடிட்டிங், லைட்டிங்... பத்தியெல்லாம் தி.க.சி. எழுதினார். ’சாந்தி’ பத்திரிகை சார்பா ’புதுமைப்பித்தன் மலர்” கொண்டுவந்தாங்க. அதுலதான் சுந்தரராமசாமியோட முதல் சிறுகதை ’தண்ணீர்’ வெளிவந்துச்சு. அதுக்குப் பிறகுதான் அவர் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சார். அப்போ நான், தொ.மு.சி., தி.க.சி., சு.ரா. எல்லாரும் சேர்ந்து திருநவேலியை நடந்தே சுத்தி வருவோம். எங்களுக்கு அந்த இடமெல்லாம் ஏற்கெனவே பழக்கம். ஆனா, சுந்தரராமசாமிக்குப் புதுசு. அப்போதான் ஒரு இடத்தைக் காண்பிச்சு, ‘’இதுதான் மாடத்தெரு’’னு தி.க.சி. சொன்னார். அதைத் தாண்டினா தேரடி, அப்புறம் வாகையடி முக்கு. அங்கே தேர் நின்னுடும். கதை பாதிலேயே நின்னுடுச்சுனா புதுமைபித்தன் ’வாகையடி முக்குல படுத்துட்டது’னு சொல்வார். அந்தச் சொற்பிரயோகம் நவீன இல்லகிய உலகத்துல பின்னாடி பிரபலமாச்சு.

அப்போல்லாம் ஜீவா தலைமையில எட்டையபுரத்துல பாரதி விழா நடக்கும். அந்தக் காலத்துல கம்யூனிஸ்ட்காரங்க எல்லாரும் காக்கி கலர் அரைக்கால் டவுசர்தான் போடுவாங்க. ஜீவாவும் அரைக்கால் டவுசர்தான் போடுவார்.
’’ஏன் இப்படி டவுசர் போட்டுக்கிறீங்க. வேட்டி கட்டிக்கிடக் கூடாதா?”னு கேட்டேன்.
’’வேட்டி கட்டிக்கிட்டா மேடையில ஆட்டம் ஆடி பிரசாரம் பண்ணும்போது வேட்டி அவுந்துடும்’’னு சொன்னார்.
’’பச்சை பெல்ட் போட்டுக்கிடுங்க சரியாப் போகும்’’னு சொன்னேன்.
அதுக்கு அவர், “பச்சை பெல்ட் மிட்டா மிராசுகள் போடறது. நான் போடமாட்டேன்’’ சொல்லிட்டார்.
அப்புறம் ஒரு விழாவுல வேட்டி கட்டிருந்த ஜீவா என்னைக் கூப்பிட்டார்.
’’ராஜிநாராயணன்...’’ - இப்படித்தான் கூப்பிடுவார் அவருக்கு மட்டும் நான் ’ராஜநாராயணன்’ கிடையாது.
‘’வேட்டிக்கு மாறிட்டேன் பாத்திங்களா’’னு சொன்னார்.
இதுதாங்க நம்ம உடை. பெங்காலி புரஃபசரைப் பாருங்க. இன்னமும் பஞ்சகச்சம்தான் கட்டுறாங்கனு சொன்னேன்.
இதை எதுக்குச் சொல்றேன்னா... ஜீவானந்தம் போன்ற தலவர்கள்லாம் டவுசர் போட்டிருக்கும்போது, தி.க.சி-யும் தொ.மு.சி-யும் வேட்டிதான் கட்டிருந்தாங்க. அதுவும் தொ.மு.சி., கள்ளிஜிப்பா போட்டிருப்பார். கலைஞர்களை அவங்க போக்குல விட்டுடணும். அவங்களுக்கு விதிவிலக்குகள் ரொம்ப முக்கியம். ஆனா, கலைஞர்கள்கிட்ட நிறைய நெருக்குதல்கள்களை கம்யூனிஸ்ட் கட்சி தந்ததாலதான் நிறைய கலைஞர்கள் அந்தக் கட்சியைவிட்டு வெளிய வந்தாங்க. ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு ஏன் வந்தாருன்னு நினைக்கிறீங்க... ரெண்டாந்தாரம் கல்யாணம் கட்டிக்கிட்டார். கட்சியில விசாரணைனு கூப்பிட்டாங்க இவர் போகலை. அதான் காரணம். நான் யோசிக்கிறேன்... பி.ஜே.பி-க்கு ஆர்.எஸ்.எஸ்., விஷவ ஹிந்தி பரிஷத்... மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியிலேயும் அடுக்குகள் இருந்திருக்கணும். இருந்திருந்தா வைதீக கம்யூனிஸ்ட்களை அங்க தள்ளிவிட்டிருக்கலாம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உடைஞ்சதுக்கான காரணத்தை ’ஒண்ணு + ஒண்ணு = 11’னு ஒரு கட்டுரையா எழுதினேன். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் சொன்ன ஒரு சங்கம் இப்படி ரெண்டா உடைஞ்சுடுச்சு. உடைச்சது முதலாளிகள் சங்கம்தான். அவங்களுக்குள்ள ஒற்றுமை கட்சியில இருந்திருந்தா கட்சி உடைஞ்சிருக்காது. ’நாங்க பிரிஞ்சு போகலை. ஆனா, கட்சியின் ஸதாபகரில் ஒருவரான டாங்கே தலைவர் பதவிலேர்ந்து விலகணும் மார்க்சிஸ்ட் கோரிக்கை வெச்சதை டாங்கே ஏத்திருந்தா கட்சி உடைஞ்சிருக்காது’’னு எழுதின கட்டுரை படிச்சுட்டு, ’நீங்க சரியாத்தான் சொல்லிருக்கீங்க ஆனா யார் கேட்டா... இந்தக் கட்டுரையைக்கூட யாரும் பிரசும்கூட பண்ணமாட்டாங்க’னு வேதனையோட சொன்னதும் இல்லாம கடைசிவரை ஆதரிச்சவர் தி.க.சி. கூடங்குளம் அணு உலை நிர்மாணத்துக்கு எதிரா குரல்கொடுத்தது. ஆதரவு நிலை எடுத்த மார்க்சிஸ்ட்களை விமர்சனம் பண்ணினது மட்டுமில்லாம... அவங்களோட ஈழ எதிர்ப்பு கொள்கைகளையும் நிராகரிச்சு மண்ணுக்கேத்த மார்க்சீஸியத்தைச் சொன்னவராவும் இருந்தார் தி.க.சி..

என்னைப் பார்க்க நிறைய இளையவர்கள் வருவாங்க. ’என்ன எழுதுறீங்க... என்ன புத்தகம் கையில வெச்சுருக்கீங்க?’னு கேட்பேன். ’கவிதை எழுதுறேன் இல்ல... கவிதைப் புத்தகம் வெச்சிருக்கேன்”னு சொன்னாங்கன்னா... நான் அவங்க பக்கமே திரும்ப மாட்டேன்.  ஏற்கெனவே கவிதையில சொன்னதைவிட புதுசா யாரும் எதுவும் சொல்லிடலைங்கிறதுதான் என் அபிப்ராயம். இன்னும் சொல்லப்போனா உரைநடை இலக்கியம் தமிழ்ல வளராம இக்கிறதுக்கு கவிதைகள்தான் காரணம்.  என்னைத் தனிப்பட்ட முறைகள்ல கேட்டா கவிதைகளை தடை பண்ணனும்தான் சொல்வேன். இல்லைன்னா கவிதைக்கு, உரைநடைக்குனு தனித்தனி துறைகள் தொடங்கிடணும். ஆனா, தி.க.சி-கிட்ட இந்தக் குறபாடுகளோ கூப்பாடுகளோ இருந்ததே இல்லை. எல்லா எழுத்தையும் ஆதரிச்சார். அரவனைச்சார். உற்சாகப்படுத்தினார்.


நீர்ப்பாய்ச்சினார்.

அப்போ கல்யாணிக்கு மதுரைல பேங்க் உத்தியோகம். நாகமலை ரோட்லதான் வீடு. ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிட்டான்; போனேன். ’’வீட்டுல பெரிய பெரிய பல்லிகள் இருக்கு மாமா என்ன பண்றதுனு தெரியலை..’’னு சொல்லிக் கவலைப்பட்டான். அவன் சம்சாரத்துக்கும் அதே கவலைதான். ’’அதுங்க இங்க இருக்கிறது நல்லதுதான். பூச்சிகளையெல்லாம் தின்னுடும். அதுல விஷப்பூச்சிகளும் அடக்கம். அதனால கவலைபடாத’’ சொன்னேன்.
அவங்க ஏத்துக்கிட்டாங்க.

 இலக்கியத்துல விஷமான கருத்துகளை எதிர்க்கிற வேலையைத்தான் தி.க.சி. பண்ணினார். அதன் மூலம் அவர் நம்பின இலக்கியத்தை அறிமுகத்தினார். அது நிறைய பேருக்கு உபயோகமா இருச்சுன்னு மட்டும்தான் இப்போ என்னால சொல்லமுடியுது...’’  

-இதன் சுருக்கபட்ட வடிவம் ஆனந்த விகடன் இதழில் வெளியானது