உங்களுக்குக் கவிதைகள் பிடிக்காதென்றாலும் பரவாயில்லை,

ஒரு சொல்லாக அணுகையில் அம்மா என்பது ஒரு விளிச்சொல். அம்மன் என்பதன் விளி. அது தன் மீது கவனத்தைத் தரச்சொல்லிக் கேட்கும் ஓர் அழைப்பு. சொல்லாக மட்டுமே பார்க்கவியலாத சொற்களுள் முதன்மை பெறுவது 'அம்மா'. இப்பூமியில் மக்கள் இல்லாத உயிர்கூட இருக்கலாம். ஆனால், 'அம்மா' இல்லாமல் ஓர் உயிர் உருவாகமுடியாது. அம் என்றால் அழகிய என்று பொருள். அம்மா என்றால் அழகினில் மாப்பெரிது என்றும் சொல்லலாம்.
கதிர் பாரதியின் புதிய கவிதை நூல்
அம்மா என்பவள் குடும்பத்தில் ஒருத்தி... முக்கியமானவள் மற்றும் நாட்டை அம்மா என்று அழைக்கிற வழக்கமும் நம்மிடம் உண்டு. பாரதமாதா அப்படித்தான்.
நவீன கவிதை புரியவில்லை என்று சொல்பவர்கள் சாகித்ய அகாடமி வழங்கிய "யுவபுரஸ்கர்" விருதுபெற்ற கவிஞர் கதிர்பாரதியின் Kathir Bharathi "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது" என்ற 60 கவிதைகள் கொண்ட அழகிய பனுவலை வாசித்துவிட்டால், நவீன கவிதையை நோக்கி வர ஆரம்பித்துவிடுவார்கள் அல்லது குறைந்தபட்சம் கதிர்பாரதி எழுதிய மற்றத் தொகுப்புகள் எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வளவு அருமையான தொகுப்பு.
![]() |
அட்டைப்படம் : ஓவியர் மணிவண்ணன் |
நாம் அருந்திய முலைப்பாலின் கவுச்சியை சொற்களாகக் கொண்டவை கதிர்பாரதியின் இக்கவிதைகள். அம்மாவோடு 'ள்' சேர்த்தால் அம்மாள். அதுவே பின் அம்பாள் ஆனது. பேயுருவில் நெருங்கிய காரைக்காலம்மையாரை, ஈசன் 'அம்மை' என்றான். கதிர்பாரதி காட்டும் அம்மா , அவருடைய அம்மா மட்டும் அல்லர். தமிழ்ப் பிள்ளைகளின் தாய் அடையாளம் அவர். ஈன்ற மகவைக் காக்க, தெய்வமாக மட்டுமல்ல, பேயாகவும் மாறும் அம்மா அவர்.
தாயைப் போற்றும் நெடிய மரபைக் கொண்டது தமிழ். அக இலக்கியங்கள் 'அன்னாய் வாழி' எனத் தாயைப் போற்றின. 'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்றாள் ஔவை. 'மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்' என்றது உலகநீதி. ஈன்றாளை முதன்மைப்படுத்தி அறம் பழக்கினார் வள்ளுவர்.
உலக அளவில் சில்வியா பிளாத், பிலிப் லார்க்கின், ரூட்யார்ட் கிப்ளிங், எட்கர் ஆலன் போ, கிறிஸ்டினா ரோசெட்டி, என எத்தனையோ கவிகள் அன்னையைப் பாடியிருக்கிறார்கள். ஆனாலும், கதிர்பாரதி காட்டும் அம்மா சற்று வேறுபட்டவர். இதுவரை அம்மா மீது மொழி போர்த்தியிருந்த, அலங்காரங்கள் அனைத்தையும் கலைத்து , ஓர் அசல் கிராமத்து அம்மாவை தன் கவிதைவழி காட்டுகிறார் கதிர். அறியாமையோடும் வெகுளித்தனத்தோடும் குழந்தையே உலகென, உலகை மற்றமையென நினைக்கிறவர் கதிர்பாரதியின் அம்மா.
வாசிக்கிறவர்கள் கண்ணீர் பட்டு கரைந்துபோகவும், பின் இதயத்தில் நீங்காத வலியாக தேங்கிவிடவுமான சொற்கள் கொண்டு இக்கவிதைகளை எழுதியிருக்கிறார் கதிர்பாரதி. அம்மாவை எழுதி, எழுதி, இவர் விரல்கள் தாய்ப்பால் சுரக்கத் தொடங்கிவிட்டனவோ? என எண்ண வைக்கிற ஈரக் கவிதைகள் இவை. கதிருக்கு ஒரு அம்மாதான். இந்தக் கவிதைகளால் இவர் பிள்ளைகட்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்திருக்கிறார்கள்.
![]() |
கரிகாலன் - சு.தமிழ்ச்செல்வி |
![]() |
கதிர்பாரதி, சாரு நிவேதா, அர.கண்ணன், டி.பாஸ்கரன் |
அத்திரி முனிவரின் இன்னொரு பெயர்தான் புற்று மகரிஷி. அவர் வேலூரில் 1516ல் வாழ்ந்தவர். வேலூர் ஜலகண்ட ஈஸ்வரர் கோயிலின் மூலஸ்தானத்தை நிர்மாணம் செய்தவர். அந்தக் குரு வழிமரபில் வந்த 49_வது தலைமுறைதான் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன். இவரது சிறப்பே நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பதுதான். வந்த நோய்க்குத் தீர்வு மட்டுமல்ல. வரப்போகிற நோயையும் சொல்லிவிடுகிறார். கேட்டால், "எல்லாம் சித்தப் புருஷர்களின் ஆசீர் சார்..." எனப் புன்னகைப்பார்.
கொங்கணச் சித்தரின் மாணவரான சிவவாக்கியருக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர் மட்டும்தான் சித்த மரபில் திருமணம் செய்துகொண்டவர் என நினைக்கிறேன். 100க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். காசிக்குச் சென்று கொங்கணச் சித்தரை குருவாக ஏற்றுக்கொண்டவர். சிறந்த சித்தவைத்தியக் குறிப்புகளை விட்டுச் சென்றவர். மக்களைத் தேடி மருத்துவம் என்பதன் முன்னோடி சிவவாக்கியர். சித்தர்கள் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் சேர்த்து மருத்துவம் பார்த்தவர். உடல் பேணி உயிர் காத்து, உடல் வழி இறையை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
சித்த ஞான மரபில் வந்த சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களை, நான் ஒரு நவீன சிவவாக்கியர் என்றுதான் சொல்வேன். சிவவாக்கியர் போல இவரும் திருமணம் செய்துகொண்டவர். சிவவாக்கியருக்கு கொங்கணச் சித்தர் குரு. டி.பாஸ்கரன் அவர்களுக்கு குரு அவரது பெரியப்பா கேபி அர்ச்சுணன் குரு. இவர்கள் இருவருக்கும் மூல குருபரம்பரை தந்தைதான் புற்றுமகரிஷி. சிவவாக்கியரைப் போல 100க்கும் மேற்பட்ட சித்த மருத்துக் கட்டுரைகளை எழுதியவர் டி.பாஸ்கரன் அவர்கள்.கொரானா காலத்தில் இவர் தயாரித்துக் கொடுத்த மூலிகைக் கவசம், வேலூர் மாவட்டத்தில் பலரின் உயிரைக் காத்தது. இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசும், தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகமும் இவருக்கு விருது கொடுத்து அங்கீகரித்து மகிழ்ந்திருக்கின்றன. மருத்துவர் டி.பாஸ்கரன் சித்தாவரம் புத்தகத்தில் தனது வைத்திய சீக்ரெட்களை மருத்துவக் கட்டுரைகளாகச் சொல்லிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய உறவு நாகரீகம் தொடங்கி, ஆரோக்கியமான தாம்பத்திய உறவு வரைக்குமான அனைத்து வாழ்வியல் பண்பாட்டு செய்திகளையும சித்தாவரம் புத்தகத்தில் விவாதிக்கிறார் டி.பாஸ்கரன்.
சித்தாவரம் புத்தகம் பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால், "தமிழ்நாட்டில் வாழ்கிற அனைத்துக் குடும்பங்களிலும் இருக்கவேண்டிய வாழ்வியல் மற்றும் மருத்துவக் கையேடு இது" என்றுதான் சொல்வேன்.
அற்புதமான சித்த மருத்துவக் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்ட தேநீர்பதிப்பகம் கோகிலன் & தேவி அவர்களுக்கு நன்றி. நண்பரும் சித்தமருத்துவமான டி.பாஸ்கரன் அவர்களுக்கு அன்பும் வணக்கமும்.