22 September, 2024

விமர்சனக் குறிப்பு ~ என்.ஸ்ரீராம் : வேட்டைப் பூதம் சிறுகதை ~ கதிர்பாரதி

 வேட்டைப் பூதம் - எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்களின்சமீபத்திய சிறுகதை. சென்ற ஆண்டின் பின்பகுதியில்(2023) ஆனந்த விகடன் இதழில் வெளியான கதை. இந்த ஆண்டின்(2024) மத்தியில் அதுவும் நேற்றுதான் எனக்குப் படிக்கக் கிடைத்தது. மிக நிச்சயமாகச் சொல்வேன்... என்.ஸ்ரீராம் எழுதிய மிகச் சிறந்த அவரது கதைகளில் இதுவும் ஒன்று. 

ஒப்பீட்டுச் சொன்னால் அவரது மிகவும் புகழ்பெற்ற, கிணற்றில் குதித்தவர்கள் சிறுகதைக்கு நிகரானது இது. ஆமாம்... என்.ஸ்ரீராம் சிறுகதைகளை அவரது மற்ற சிறுகதைகளோடுதான் எனக்கு எப்போதும் ஒப்பிடத் தோன்றும். அவற்றின் தனித்துவமும் கட்டுத்திட்டும் அப்படி. வேட்டைக் கருவியாகவும் இருக்கும், கட்டுக்கோல் போல அவ்வளவு நேர்த்தியானது; உறுதியானது. ஒரே வீச்சில் வாசகரை வீழ்த்தாட்டிவிடக்கூடிய மாயம் கொண்டது.  

கொங்குவெளி வறண்ட நில வாழ்வின் அடியீரத்தை, கதைகளாக இதற்கு முன்பும் என்.ஸ்ரீராம் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்தான். ஒரே சுட்டி(link)யின் கீழ் தொகுப்பாகக் கிடைகிறதுதான். அவை கொங்குவெளி ஆதிக்க சமூகத்தின் வீழ்ச்சியை, மகிழ்ச்சியை, உயரத்தை, சத்திய மனத்தை சொல்லின. ஆனால், அவற்றில் இருந்து வேட்டைப் பூதம்’ வேறுபடும் புள்ளி மிக முக்கியமானது.  

கொங்குவெளி ஆதிக்க சமூகத்தினரின் வாழ்க்கையில் மற்ற சமூக மக்களின் பங்களிப்பும் மறுக்க முடியாத வகையில் பிண்ணிப் பிணைந்திருப்பதைப் பற்றி மிக நுணுக்கமான கௌரவமான பண்பாட்டுப் பதிவு `வேட்டைப் பூதம் கதை. தோட்டியார் ஒருவரின் சமயோஜித முடிவுதான், ஆதிக்கச் சமூகத்தின் ஒரு காதல் ஜோடியை சேர்த்துவைக்கிறது என்பது இதில் மிக முக்கியமானது.  வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஒன்றுசேர்ந்து, நிகழ்த்துக் கலை போல ஒரு வேட்டையை நிகழ்த்தியதற்கான பண்பாட்டுப் பதிவும் இந்தக் கதையில் உண்டு. இது இவரின் மற்ற எந்தச் சிறுகதையிலும் இல்லாத ஒன்று. வண்ணாரும் மாதாரியும் மூப்பரும் பண்டாரத்தாரும் நாவிதரும் தோட்டியாரும் கொங்குப் பகுதியிலும் சமூக இயங்கியலின் ஒரு பகுதியின் அடுத்தடுத்த கண்ணிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் அது.

சிறுகதையின் வேட்டைப் பகுதி உயிர்ப்பும் வேட்கையும் கொண்ட ஒரு வேட்டைச் சமூகத்தின் கொண்டாட்ட எச்சமாக வெளிப்பட்டிருக்கிறது. முயல் வேட்டையும் அது நிகழும் நிலமும் மாயக் கம்பளம்போல நம்முன் விரிகிறது. முயல் வேட்டைக் கோலான `கட்டுக்கோல்` தயாரிக்கிற விதத்தை கொஞ்சமான வார்த்தைகளில் வேட்டை ஆயுதமாக வாசக மனத்தில் நிறுத்திவிடுகிறார் என்.ஸ்ரீராம். நாவல் எனில் இந்தப் பகுதியை ஓரிரு அத்தியாயங்களுக்கு விரிக்கலாம். ஒரு நாவல் படிக்கிறதுபோது அடையும் அக அங்கலாய்ப்பை, கலைச் சலவையை,  ஏக்கத்தை என்.ஸ்ரீராமின் வேட்டைப் பூதம் சிறுகதை தருகிறது. சாமியாக, பூதமாக, மனிதனாக நினைத்தது நினைத்த நேரத்தில் மாறி மாயம் காட்டும் வாழ்வின் விளையாட்டுக்களை, எப்போதும்போல மிகச் சன்னமான குரலில் சொல்கிறார் என்.ஸ்ரீராம். நினைவடுக்குகளைக் கலைத்துப் போட்டு நான்லீனியராக விரியும் கதைக்கு நிகழ்த்து ஊக்கியாக, கொங்குவெளியின் பருவங்களும் நிலவெளிக் காட்சிகளும் குலச்சாமிகளும் உதவுகிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு அர்த்தப்புஷ்டியோடும் சிருஷ்டித் தாகத்தோடும் சுழித்தோடிக் கொண்டிருக்கிறது அமராவதி நதி. அதன் அடியீரத்தில் இருந்து  இன்னும் நல்ல கதைகளை தமிழுக்குப் பெற்றுத்தருவார் என்.ஸ்ரீராம்!

No comments: