02 May, 2017

இலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி

எழுத்தாளர் பிரபஞ்சனின் எழுத்து வாழ்க்கைக்கு இது 55-வது ஆண்டு. இதைக் கொண்டாடும் விதமாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பவாசெல்லதுரை, பதிப்பாளர் வேடியப்பன் ஒருங்கிணைப்பில், ஏப்ரல் 29-ம் தேதி சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் மிகப்பெரிய இலக்கிய விழா நடக்க இருக்கிறது. விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சனின் படைப்புகள் வெளியீடு, ரூபாய் 10 லட்சம் நிதியளிப்பு, ஆவணப்படம் திரையிடல், நாடக அரங்கேற்றம், எழுத்தாளர்கள் உரை... என ஓர் இலக்கியத் திருவிழாவே நடைபெற இருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் இயங்குகிற முன்னோடி எழுத்தாளரான பிரபஞ்சனின் பிறந்த நாளான இன்று அவரோடு பேசினேன்...

``பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்...’’

``நன்றி... இந்த நாளில் அப்படி ஒன்றும் விசேஷம் இல்லை. பிறந்துவிட்டோம். அதனால் இந்த நாள் வரும்; போகும். அவ்வளவுதான். ஆனால், நண்பர்களோடு இணக்கமாக இருக்க இன்னும் ஒரு நாள் கிடைத்திருக்கிறது. அதுதான் இதில் இருக்கும் மகிழ்ச்சியே.’’

``ஆரம்ப கால எழுத்து வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வாக எதைச் சொல்வீர்கள்?’’

``1961-ம் ஆண்டு நான் எழுத ஆரம்பித்தேன். 1982-ம் ஆண்டுதான் என் கதைகளைப் புத்தகமாக பார்க்க முடிந்தது. 8-ம் வகுப்பு படிக்கும் காலத்தில்தான் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் என்னிடம் வந்தன. அல்லது அவற்றை நான் அடைந்தேன். புதுச்சேரியின் `கலைக்கோயில்’ பத்திரிகை ஆசிரியர்தான் புதுமைப்பித்தனை எனக்குக் கொடுத்தார். அதுவரை புதுமைப்பித்தனை யார் என்றே எனக்குத் தெரியாது. அதற்கு முன்பு வரை
என் எழுத்தாளர்கள் அகிலனும் நா.பார்த்தசாரதியும்தான். ஆனால், புதுமைப்பித்தன் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கிய பிறகு, எனக்கு அவர் வித்தியாசமாக இருந்தார். கையில், அகங்கை புறங்கை என இரண்டு உண்டு. அதுவரை அகங்கையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன்தான் புறங்கையை எழுதிக் காட்டினார். இதைத்தான் முக்கியமான நிகழ்வாகச் சொல்லவேண்டும்.’’

``காவிரிக்கரை எழுத்தாளர்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறீகள அல்லவா அந்த அனுபவம் சொல்லுங்கள்?’’
``என் தஞ்சை வாழ்க்கை 1965-ம் ஆண்டு ஆரம்பித்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான்குஞ்சு ஆகியோரைச் சந்திக்கவும் அவர்களோடு நட்பாடவும் வாய்ப்பு கிடைத்தது. தி.ஜானகிராமன் மகாகலைஞன். ஆனால், அதைப் பற்றிய எந்தப் புரிதலும் அகங்காரமும் அவருக்கு இல்லை. டிபன், காபி, மனித வாழ்க்கை, மிராசுகளின் பெண்கள் சார்ந்த ஈர்ப்புகள், காவிரியில் தண்ணீர் ஓடுகிற வைபவம்... இவை போன்ற எளிய விஷயங்களைத்தான் அவர் சிலாகித்துப் பேசுவார். அவர் கதைகள் குறித்த விமர்சனம் போன்ற ஏதோ ஒன்றை நானும் தஞ்சை ப்ரகாஷும் ஆரம்பிப்போம். `அதை விடுங்கள் சார்... அவை எல்லாம் நேற்றின் விஷயங்கள். நாளை எழுதப்போகும் கதைகளை மனதுக்குள் வார்த்தை வார்த்தையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு சாயங்காலம் எந்த ஹோட்டலில் இட்லி சாப்பிடப்போகலாம் என்று சொல்லுங்கள்’ என்பார். ஆனால், உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களை அவர் அறிவார். தன் படைப்புகளை அவர்களோடு ஒப்பிட்டு மனசுக்குள் மார்க்  போட்டுக்கொள்வார். ஆனால், எதையும் பேசமாட்டார். என்னுடைய `பிரும்மம்’ கதை, தி.ஜானகிராமன் கணையாழி ஆசியராக இருந்தபோது அதில் பிரசுரமானது. அது அவருக்கு மிகவும் பிடித்த கதை. அந்தக் கதை பிரசுரத்தைக் கொண்டாட, அன்று மாலை 4 மணிக்கெல்லாம் என்னை வரச் சொல்லி, திருவல்லிக்கேணி ரத்னா கஃபேயில் ஸ்வீட், காரம், காபி வாங்கிக்கொடுத்துக் கொண்டாடினார். நான் புகழப்படும்போதெல்லாம், எனக்கு புளகாங்கிதமோ ஆணவமோ வருவதில்லை. காரணம், தி.ஜானகிராமனை நான் பார்த்துப் பழகியிருந்ததுதான். எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் கடல்போன்ற ஆழமுடையவர். அவருடைய சொத்து, பொருளாதாரம் எல்லாம் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தில்தான் நானும் தஞ்சை ப்ரகாஷும் அவரைச் சந்தித்தோம். அந்த இழப்பின் சுவட்டை நாங்கள் அறியாவண்ணம் சிரித்துச் சிரித்துப் பேசினார். பிறகுதான் அவரின் மாபெரும் இழப்புகள் குறித்து நாங்கள் அறிந்தோம். பிற எழுத்தாளர்கள் மீது காழ்ப்போ வெறுப்போ இல்லாமல் அவர், தன் மனதைப் பக்குவம்செய்து வைத்திருந்த விதம் எனக்கு இப்போதும் ஆச்சர்யம் தருகிறது. எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு மகத்தான சம்ஸ்கிருத அறிஞர். அவருடைய மேதமைத்தனத்தை வெளியிட வாழ்க்கை அவரை அனுமதிக்கவே இல்லை. அது குறித்து அவருக்கு நிறைய சோகங்கள் உண்டு. அவரிடம் இருந்து, வேதத்தில் சில உபநிஷத்துக்களை நான் அறிந்துகொண்டேன். சாதனையாளர்களை நான் சந்தித்தவரை, அவர்கள் பல நல்ல விழுமியங்களோடு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். நான் பெருமையாகச் சொல்லவில்லை... இவர்கள் போன்றவர்களின் அடியையொற்றி மேன்மையான மனிதனாக வாழ வேண்டும் என்பதே இந்த அரைநூற்றாண்டு எழுத்து வாழ்வு எனக்கு கற்றுத்தந்திருக்கிறது.’’

``புதுச்சேரிபோலவே உங்களுக்குச் சென்னையும் பிடித்தமான ஊர்... சென்னை இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத எழுத்தாளர் யார்?’’

``ஜெயகாந்தன். நான் அவரிடம் கூர்ந்து கவனித்த ஒன்று... எந்த நிலையிலும் அவர் பெண்கள் குறித்து இழிவாகவும் மரியாதைக் குறைவாகவும் பேசவே மாட்டார். பரப்பைக் கிளப்பிய அவருடைய `அக்கினிபிரவேசம்’ கதைக்கு எதிராக ஒரு பெண் எழுத்தாளர் கதை எழுதினார். ஜெயகாந்தன் மடத்தில் அந்தப் பெண் எழுத்தாளர் குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்தார் ஒரு தோழர். உடனே பொங்கியெழுந்த ஜெயகாந்தன், `வெளியே போங்கள்’ என்று அவரைக் கத்தித் தீர்த்துவிட்டார். அதன் பிறகு அவரை நான் ஜெயகாந்தன் மடத்தில் பார்த்ததே இல்லை. அப்புறம் அசோகமித்திரனைச் சொல்ல வேண்டும். நான் 61-ல் எழுத ஆரம்பித்து, 82-ல் அதைப் புத்தகமாகக் கொண்டுவந்தபோது, அறிமுகமே இல்லாத எனக்கு அழகான முன்னுரை ஒன்றை எழுதிக்கொடுத்தவர் அசோகமித்திரன். இவர்களிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டது... புதிதாக தமிழுக்கு எழுத வருகிற தகுதிவாய்ந்த எந்த எழுத்தாளரையும் வரவேற்று, அவருக்கு ஆதரவான அபிப்ராயத்தை எழுத வேண்டியது மூத்த எழுத்தாளராக என் கடமை என்பதைதான்.’’

  ``இப்போதைய இலக்கிய போக்குகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

``எனக்கு சில வருத்தங்கள் இருக்கின்றன. நானறிந்த மட்டில் மிக முக்கியமான கவிஞர்கள், கதையாளர்கள் என இருபது பேரையாவது சொல்லிவிட முடியும். ஆனால், அதைப் பற்றி எல்லாம் எந்த விதமான எழுத்தும் பேச்சும் தமிழில் இல்லை. சக எழுத்தாளர்களைத் தூஷிப்பதும் புறக்கணிப்பதும் அதிகமாகிவிட்டது. அவர்கள் குறித்து மௌனம் காப்பதன் மூலம் ஆழமாகப் புறக்கணிக்கும் போக்கு காணப்படுகிறது. பெண்கள் எழுத வந்தால் ஆண்கள் கோபப்பட எந்தவித நியாயமும் இல்லை. எல்லாவற்றையும்விட மிகப்பெரிய இழிவு, தன்னைத்தானே மிகப்பெரிய எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வதுதான். இவை எல்லாம் இலக்கியம் சார்ந்த எந்த விதமான நல்ல பண்புகளையும் வளர்க்காது.’’

``உங்கள் இலக்கிய வாழ்வில் மிக முக்கியமான பழக்கமாக எவற்றைக் கடைப்பிடிக்க விரும்புகிறீர்கள்?’’

``மூன்று விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று... எந்தச் சூழ்நிலையிலும் என்னைப் பற்றிய பெருமித உணர்வை அடையக் கூடாது. இரண்டு... எந்தக் காரணத்தைக் கொண்டும் சக எழுத்தாளனைக் காழ்ப்புஉணர்ச்சியோடு அணுகவோ, வெறுப்பு கொண்டு தூஷிக்கவோ புறக்கணிக்கவோ கூடாது. மூன்றாவது... இன்று வெளிவரும் ஒரு புதிய எழுத்தாளனின் படைப்பை நாளையே படித்துவிட வேண்டும்.’’

``வேறு எந்த இந்திய மொழிகளைக் காட்டிலும் மிகக் காத்திரமான படைப்பாளிகள் தமிழ் மொழியில் உண்டு. ஆனால், அகிலன், ஜெயகாந்தன் தவிர வேறு எவருக்கும் ஞானபீடம் விருது வழங்கவில்லை. இந்தப் பாரபட்சம் ஏன்?’’

``ஞான பீட விருது கமிட்டியில் மிக முக்கியஸ்தராக இருந்த கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியிடம், இது குறித்த என் ஆதங்கத்தைச் சொன்னேன். அப்போது அவர் சொன்னார்... `மலையாளம், கன்னடம், வங்காளம்... மொழி எழுத்தாளர்கள், அவர்கள் ஊரில் பகையாக இருந்தாலும், விருது விஷயம் என்று வரும்போது எங்கள் மொழி எழுத்தாளர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மட்டும் எதுவும் சொல்லாமல் மௌனமாகத் திரும்பிவிடுகிறார்கள்’ என்றார். அவர் இப்படிச் சொன்னதில் எனக்கு எந்த ஆச்சர்யம் இல்லை. ஏனெனில் நமது எழுத்தாளர்கள் குறித்துதான் நமக்குத் தெரியுமே. தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டான இந்த ஆண்டில் தமிழின் சிறந்த
25 சிறுகதைகளைத் தொகுத்து புத்தமாகக் கொண்டுவரலாம் என்று நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் முடிவுசெய்திருக்கிறோம். இதை முதலில் தமிழர்கள் வாசிக்க வேண்டும். பிறகு இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற உலக மொழிகளிலும் வர இருக்கிறது. அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே கொண்டுவர வேண்டும் என்பது எங்கள் திட்டம்.’’


``நீங்கள் எழுத்தாளர் மட்டுமல்ல பத்திரிகையாளராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள்... அந்த அனுபவம் சொல்லுங்கள்?’’

``தமிழில் வெளிவருகிற எல்லா பிரபல எல்லா முன்னணிப் பத்திரிகைகளிலும் வேலைபார்த்திருக்கிறேன். ஆனால், எந்தப் பத்திரிகையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்ததில்லை. 1990-ம் ஆண்டோடு என் பத்திரிகை உலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. எனக்கு பத்திரிகை வேலை தெரியாமல் இல்லை. பத்திரிகை தலைமையோடு நான் நட்போடு இருப்பதையும், அந்தத் தலைமையால் நான் மதிக்கப்படுவதையும் சக ஊழியர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஏதாவது சூழ்ச்சி செய்துவிடுவார்கள். அதில் மாட்டிக்கொண்டு கொதிப்பேறி வெளியேறிவிடுவேன். மேலும் இயல்பிலேயே என்னால் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய இயலாது. மற்றபடி கொடுத்த வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறேன் என்ற திருப்தி இப்போதும் எனக்குண்டு. ஒரு பத்திரிகையை விட்டு வெளியேறி, வேலைக்காக அடுத்த பத்திரிகையின் கதவைத் தட்டும்போதும், கசப்பான கடந்த காலம்தான் இங்கும் நிகழப்போகிறது என்றும் தெரியும். ஆனாலும், லௌகீகப் பிடுங்கலுக்காக அதைப் பொறுத்துக்கொண்டேன். தவிர உள்ளடகத்தில் ஏதும் செய்துவிடாமல் பெண்களின் முகத்தைத் தவிர வேறு எதையும் அட்டைப்படமாகப் போடாத பத்திரிகையில், பிரபஞ்சனுக்கு என்ன வேலை இருக்கிறது. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.’’

``கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் அரசியலையும் கடுமையாக விமர்சித்தவர் நீங்கள். இப்போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. கருணாநிதி அரசியலில் ஆக்டிவ்வாக இல்லை. இவர்கள் இல்லாத தமிழக அரசியல் குறித்து உங்கள் எண்ணம் என்ன?’’
``தமிழருக்கு வாய்த்த உண்மையான அரசியல் இருண்ட காலம் இதுதான். எந்த ஓர் அரசியலும் ஒரு தத்துவத்தின் மேல்தான் இயக்கப்படுகிறது. தமிகத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட்களுக்கும், திராவிட அரசியலுக்கு இந்தத் தத்துவப் பின்புலம் உண்டு. இதில் கருணாநிதி அரசியல் மீது எனக்கு கடும் விமர்சனம் உண்டுதான். ஆனாலும், சில திராவிடத் தத்துவப் பினபுலத்தோடு அரசியல் நடத்தினார் கருணாநிதி. இதற்குப் பிறகு வந்தவர்கள் சொந்த பகையின் மீதும், தனிமனித வெறுப்பின்மீது மட்டுமே அரசியலைக் கட்டினார்கள். இங்கேதான் தமிழனின் அரசியல் வீழ்ச்சி அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், இது இப்படியே போகாது. கட்சிகளை நம்பாமல் மக்கள் அரசியலைக் கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு உதாரணங்கள்தான் மாணவர்களின் மெரினா போராட்டமும் விவசாயிகளின் டெல்லிப் போராட்டமும். மக்களே சிறந்த அரசியல்வாதிகளின் போர்க்குணங்களோடு அரசியலை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பார்த்து அரசியல் கட்சிகள் நடுங்கத் தொடங்கிவிட்டன என்பது உண்மை.’’

``எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு தாண்டவமாடுகிறது. ஆனால், தமிழக அரசு `குடி’க்கு முக்கியத்துவம் கொடுத்து டாஸ்மாக்குகளைத் திறக்கத்தான் முனைப்பு காட்டுகிறது. இது எங்கே போய் முடியும்?’’
``குடி தண்ணீர் தட்டுப்பாடு, தமிழக நதிகள் வறண்டுபோனது எல்லாம் இயற்கையால நிகழ்ந்த பிழை இல்லை. அரசியல் செயற்கையாக நிகழ்த்திய பிழை. 1965 – 1975 காலகட்டத்தில் தஞ்சையின் ஐந்து நதிகளும் கரைபுரண்டு ஓடின. ஆனால், இப்போது வறண்டு கானல் நீர்தான் ஓடுகிறது. இந்த வறட்சியைப் பயன்படுத்தி மணல் மாஃபியாக்கள் உருவானது தமிழகத்தின் இன்னொரு சாபக்கேடு. இவ்வாறாக தமிழகம் வறண்டுபோகும் என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துதான் தமிழக நதிகளை இணைக்கச் சொல்லி குரல்கள் எழுந்தன. அதைச் சுலபமாகவும் நிகழ்த்தியிருக்கலாம். ஆனால், அப்போது ஆண்ட கட்சிகள் இதில் ஆர்வம் காட்டாததுதான் இந்த வறட்சிக்கு முக்கியக் காரணம். இதை கேரளமும் கர்நாடகமும் பயன்படுத்திக்கொண்டு, தாங்கள்தான் தண்ணீருக்கு எஜமானர்கள்போல நடந்துகொள்கிறார்கள். அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு கண்மூடி நடிக்கிறது. குடிதண்ணீருக்கு அலைகிறபோக்கும், குடிக்க சாராயக் கடைகளைத் திறப்பதும் எதிர்முனைகள். இரண்டுமே பணத்தையும் பலத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. டாஸ்மாக் கடையைத் திறக்காதீர்கள் என்று போராடிய பெண்களை காவல் துறை அதிகாரி ஓங்கி அறைகிறார். அது அவரது கை அல்ல... அரசாங்கத்தின் கை; அதிகாரத்தின் கை... மக்களின் போராட்டாத்துக்கு எதிராக அந்தக் கை தானாகவே ஒடிய வேண்டும். அப்போதுதான் காலம் விடியும்.’’

‘`அத்துணை நாசக்காரத் திட்டங்களை எல்லாம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்த மத்திய அரசு நினைப்பதற்கு வரலாற்று ரீதியான காரணம் இருக்கிறதா?’’

``இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் காலம் தொட்டே தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. இந்திய சுதந்திரப் போராட்டம் முதலில் வேர்கொண்டது தென்னிந்தியாவில்தான். குறிப்பாக தென் தமிழகத்தின் பூலித்தேவன் ஆரம்பித்துவைத்தான் என்பது வரலாறு. ஆனால், அதை இந்த வரலாற்றை எழுதுபவர்கள் அவ்வளவாகக் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். காந்தி தண்டி யாத்திரை போகும்போது கூடப்போனவர்கள் பற்றிக்கூட குறிப்புகள் இருக்கும். ஆனால், வ.உ.சி-யின் தியாகத்தைப் போனாபோகுது என்றுதான் ஒப்புக்கொள்வார்கள். அதனால்தான் அன்றைக்கு `வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்றார்கள். ஆனால், வடக்கோடு சரமரசம் செய்துகொண்ட பிறகு தெற்கு செழிக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், குறிப்பிட்ட சிலரே செழித்தார். மாநில நலன்கள் காவுகொடுக்கப்பட்டன. எப்போதுமே இந்திய பிரதமர்களுக்கு தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது என்ற என்பதை ஏதாவது ஒரு போராட்டம் மூலம் நினைவுப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது. தவிர தேசிய அரசியலில் முக்கிய ஆளுமையாக காமராஜர், கருணாநிதி போன்றோருக்குப் பிறகு வேறு எந்தத் தமிழரும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதும் ஒரு காரணம். தமிழக விவசாயிகளின் டெல்லிப் போராட்டத்தை அனைத்துத் தமிழகக் கட்சிகளும் கூர்மைப்படுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் அது நடக்கவில்லை. தமிழக பாஜக, விவசாயிகளைச் சந்திக்கச் சொல்லி பிரதமருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டுமே... ஏன் செய்யவில்லை. இப்படி நடக்காத வரை தமிழகத்தை நோக்கி இன்னும் அணு உலைகள் வரும். நெடுவாசல் மற்றும் நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தமிழகத்தை நஞ்சாகத் தீண்டிக்கொண்டேதான் இருக்கப்போகின்றன.’’

``இந்தப் போராட்டங்களில் இலக்கியவாதிகளின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?’’
‘`எனக்கு இலக்கிய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... நாம் மக்களின் போராட்டங்களில் இணைந்து பங்கெடுத்து நம்மால் இயன்றதை முடிந்த வரை மக்களுக்கு செய்ய வேண்டும். அப்படிப் பங்கெடுக்காவிட்டாலும் பராவயில்லை. மக்களின் உரிமைக்கு எதிராகச் செயல்படுகிற அரசாங்கத்தை ஆதரித்துவிடக் கூடாது. ஏனெனில், படித்தவன் பாவம் செய்தால் போவான், போவான் அய்யோ என்று போவான்.’’

``தமிழகத்தை பெரியார் மண் என்கிறோம். ஆனால், ஆவணக்கொலை என்ற அவலம் இப்போது இங்கு அதிகரித்துக்கொண்டு வருகிறதே?’’

``இந்திய சமூகத்தில் சாதிய மேல் - கீழ் மனோபாவம் கடந்த எல்லா நூற்றாண்டுகளிலும் இருக்கவே செய்தது. அது தாழ்த்தப்பட்டவர்களைக் கொலையும் செய்தது. ஏதோ சமூகத்தின் ஒரு பக்கம் மட்டும் கெட்டுவிட்டது என்று நினைக்காதீர்கள். ஒட்டுமொத்த பக்கமும் கெட்டுவிட்டதன் அடையாளம் இது. முன்பெல்லாம் முன்மாதிரித் தலைவர்கள் என்று ஒரு பத்து இருபது பேரைச் சொல்ல முடியும். அவர்கள் சமூகத்தின் சமநிலை கெடாமல் முடிந்தவரை பார்த்துக்கொண்டார்கள். இப்போது அப்படிப்பட்ட்வர்கள் இல்லை. எந்தத் துறையிலும் தியாகிகளோ, அர்ப்பண உணர்வுகொண்டவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். இது ஆபத்தானது. ஒரு பழத்தின் ஒரு பக்கம் அழுக ஆரம்பித்ததும், அது பழம் முழுக்கப் பரவும் அல்லவா. அதுதான் இப்போது நடந்துண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு லட்சம் என்பது பெரியத் தொகை. ஆனால், இப்போது ஆயிரம் கோடிகளில் ஊழல் நடக்கிறது. கடந்த பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமான ஒரு மணல், ஒரு மாஃபியா கும்பலை உருவாக்கும் என்று யாராவது நினைத்திருப்போமோ. சமூகத்தின் துரதிர்ஷ்டம் அதிகமாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதுபோல.’’

``சமீபத்தில் இந்திய அரசியல் மற்றும் சமூகத்தில் மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துவருவதும், முற்போக்கு சக்திகள் பலவீனப்படுவதும் நடந்துவருகிறதே இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``இந்த விஷயம் உண்மையாக எனக்குப் பயத்தை உருவாக்குகிறது. இந்திய தேசத்தை இந்து தேசமாக்கப் பார்க்கிறார்கள். இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் முன்னிலைக்குக் கொண்டுவர நினைக்கிறார்கள். பசுமாட்டுக்குக் கொடுக்கும் மரியாதையை மனிதர்களுக்கு கொடுப்பதில்லை. பாபர் மசூதி இடித்து எத்தனை வருடங்கள் ஆகின்றன? உலகமே பரபரப்போடு உற்றுநோக்கிய நிகழ்வு அது. அது நிகழ்ந்து கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு ஆகிறது. ஆனால், அதில் சம்பந்தபட்டவர்களை நமது நீதி அமைப்பால் தண்டிக்க முடியவில்லை என்றால் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? மதக் கலவரத்தைத் தூண்டி அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான அத்துணை வேலைகளும் நடைபெற்றுவருகின்றன.  இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய காலம் இது. மானுட நேசத்தையும் சத்தியத்தையும் மட்டும் ஏந்திக்கொண்டு மதவாத சக்திகளுக்கு எதிராக சகல வடிவங்களிலும் அவர்கள் போராட வேண்டும். இந்தியா என்பது மானுட மேன்மைக்கானவர்கள் வாழும் பூமி என்பதை நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே மதவாதச் சக்திகள் கட்டி எழுப்பும் ஆதிக்கக் கோட்டையில் இருந்து ஒவ்வொரு செங்கல்லையும் உருவ முடியும்.’’