02 December, 2016

விமர்சனம் ~ தழையப் பறக்கும் மொழித் தும்பிகள் ~ கவிஞர் ஆத்மார்த்தி

"ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்"

கதிர்பாரதியின் கவிதைத் தொகுதியை முன் வைத்து
****************************************************************************
உயிர்மை வெளியீடு
11/29 சுப்ரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை 600018
முதல் பதிப்பு
மார்ச் 2016
விலை ரூ 85
****************************************************************************
"மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" என்கிற தனது முதல் தொகுப்பின் மூலமாக விருதுகளையும், பரிசுகளையும், பரவலான கவனத்தையும் பெற்ற கதிர்பாரதியின் 2வது கவிதைத் தொகுதி "ஆனந்தியின் பொருட்டுத் தாழப் பறக்கும் தட்டான்கள்". 
மண்ணுக்கும் மனிதனுக்குமான அந்தர நடனத்தை, விடுபடுதலை, சொல்லவொண்ணா வாதையை, வார்த்தைகளின் வழியே நெய்துதருகிற கவிதாமுயல்வுகள் இவை. மனிதனின் பின் நின்று இயக்கும் மூளையும், மனதும் போல, இக்கவிதைகளில் நிலம் மீதான கேவலும், ராட்சச வாய் பிளந்து மண்ணை அபகரித்துச் செல்லும் இன்றைய இந்த இப்பொழுதின் மண் மீதான் தீராப் பசியும்,தனித்த மனம் ஒன்றின் அலைதலும் மொழியினூடாக வெளிச்சொல்லத் தலைப்படுகின்றன.

"எனை நோக்கி  நீ வருகிறாய்
என்கிற நினைப்பே
பல பருவங்களைத் திறந்து விடுகிறது" 


கேளிக்கை, மனம் தடவல், தன்னைத் தானே வருடிக் கொள்ளுகிற பம்மாத்து, சுயபுலம்பல், இவை ஏதுமற்ற கதிர்பாரதியின் கவிதைகள் மொழியின்பால் நேர்ந்த மகா ஆறுதலும் கூட. தன்னாலான அளவு ஞாபகத்தின் சடை திறந்து, சிக்கு நீக்கி, பிரி கழுவி, எண்ணெய் பூசி, கூந்தல் பின்னி, மலர் சூட்டி, அவையொடு தானும் தன்னொடு அவையும் என நினைவேந்தலைப் பகிர்ந்து வைக்கிறார் கதிர்பாரதி. ச்சியர்ஸ், ஆல் தி பெஸ்ட், போன்ற சொல்லாடல்கள் கவிதையின் மீதான கதிர்பாரதியின் தன்பிடிவாதத்தை வெளிப்படுத்துபவை.நூற்றாண்டுகளுக்கு முந்தைய சொற்களைத் தேடியெடுத்துக் கவிதைப்படுத்துவதை ஒரு முறைமையாகவே வைக்கத் தலைப்படுகிற நவகாலத்தில் எந்தவிதமான தீர்மானத் திட்டங்களும். இன்றித் தானும் தன் சொற்களுமாய் விருப்பதிசையில் நகர்ந்துகொண்டே இருக்கிறார் கவிஞர் கருவாட்டு ரத்தமும், குள்ள நரியும், கிடாய் இடறிய கனவும், இன்ன பிறவுமாய் நம் எல்லாரின் பொருட்டும் தழையப் பறக்கின்றன மொழித் தும்பிகள். 

மழைத்துக்
கிளைத்துச்
சடைத்து
இப்போதுவரை
வெளுத்து வாங்குகிறது, 


            நுட்பமான கணங்களைக் கண்டறிந்து யாருமற்ற அன்பின் பிரதிவாதத்தை தன்னளவில் தன் கவிதைகளின் மொழிமௌன இத்யாதிகளால் ஏற்படுத்தி விட விழையும் கதிர்பாரதி எல்லோரும் எளிதில் கடந்து செல்கிற சிற்சில தருணங்களை வெகு இயல்பாகத் தம் கவிதைகளின் உள்ளே விரித்தெடுக்கிறார்.குழந்தைகளுக்காக ஊதிப் பெருக்கமடைகிற பலூன்களைப் போல அத்தருணங்கள் விரிகின்றன.கவிதை கோருவாரற்ற வினாக்களைக் காற்றெங்கும் திசையெங்கும் பரப்பிவைக்கிறது.
       இத்தொகுப்பில் இருக்கிற அமங்கலமாய்த் தொங்குதல் என்னும் கவிதை அன்பின் பொங்குநதியாய்ப் புறப்படுகிற செல்பேசி அழைப்பு அந்தமுனையில் எடுப்பாரன்றிக் கைவிடப்படுகையில் தொடர்பு எல்லைக்கு அப்பால் அந்த நேசத்தைத் தூக்கிலிட்டுக் கூடவே நீங்களும் அமங்கலமாய்த் தொங்குங்கள் என்று நிறைகிற இடத்தில் வாசிப்பவனைச் சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டு அவரவர்க்கான பிரத்யேகங்களில் ஒன்றாக மாற்றமடைகின்றன.
                  கவிதை விரும்பிகளை எவ்விதத்திலும் ஏமாற்றாத அதே நேரத்தில் மிக அழுத்தமான தன் ஒப்பத்தை வாசக மனங்களில் பதிப்பிக்கிற மொழியின் புத்தம்புதிய சாத்தியங்கள் கதிர்பாரதியின் இக்கவிதைகள்.தானே அதுவாகி அதுவே தானான நிலத்திற் பிசைந்த ஞாபகத்துக்காரனின் தன் பெருக்கித் தட்டான்கள்.

17 October, 2016

விமர்சனம் ~ அப்பங்களுக்கு காத்திராத நில மீட்பன் ~ உயிர் எழுத்து இதழ் ~ கவிஞர் யுகபாரதி


 
ஒரு நல்ல கவிதை எந்தத் தொகுப்பில் எந்தப் பக்கத்தில் இருக்கக்கூடும் என்னும் தேடலைத் தொடங்காத ஒருவர்எந்த சந்தர்ப்பதிலும் கவிதையைக் கண்டடைய வாய்ப்பில்லை என்பார்கள். அதேபோலஒரு தொகுப்பு சொல்ல விளைந்த உணர்வை உட்பொருளை மிகச் சரியாக உள்வாங்கிக்கொண்ட அல்லது கிறகித்துக்கொண்ட அணிந்துரைகளோ மதிப்புரைகளோ இதுகாரும் எழுதப்படவில்லை எனவும் சொல்லலாம். ஒருகாலம்வரைகவிதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை கூட்டியோ குறைத்தோ சொல்லிவிடக்கூடாது என்பதால் எந்த ஒரு படைப்பாளியும் தன் சக படைப்பாளியின் படைப்புகள் மீது விமர்சனம் வைக்கத் தயங்கினார்கள். படைப்பு வேறு விமர்சனம் வேறு என்பதாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு நல்ல விமர்சகர் எந்த காலங்களிலும் நல்ல படைப்பைத் தந்ததில்லை என்று சொல்பவர்களும் உண்டுதான். எழுபதுகளிலும் எண்பதுகளின் இறுதியிலும் ஓரளவு கடைபிடிக்கப்பட்ட இந்த மரபுபின்வரும் காலங்களில் முற்றிலுமாக பிறழ்ந்துவிட்டது. காரணம்படைப்பாளியே விமர்சகனாகவும் விமர்சகனே படைப்பாளியாகவும் மாற நேர்ந்துவிட்ட அபாயம்தான்.  ஒரு கவிதைத் தொகுப்புக்கு உள்ளே உள்ள அரசியலைவிடவும் அக்கவிதைத் தொகுப்புக்கு வெளியே உள்ள அரசியலைச் சமாளிப்பதற்குள் ஒரு படைப்பாளிக்குப் போதும் போதும் என்றாகிவிடுகிறது. குறிப்பாகதொண்ணூறுகளுக்கு பின்வந்த கவிஞர்கள் அத்தனை பேரும் இப்பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதிர்கொண்டுவருகிறார்கள். இதைவிடுத்து ஒரு கவிதைத் தொகுப்பை பார்வைக்குள் வசப்படுத்த இயலுவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ நமக்குள்ளும் சில எதிர்பார்ப்புகள் சில யூகங்கள் நுழைந்துகொள்கின்றன.
 
எழுத்தாளர் சுஜாதா அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இருபதுக்கும் மேலான கவிஞர்கள் தொண்ணூறுகளில் அடையாளப்பட்டதைப்போல இன்றைக்கு எந்த ஒரு கவிஞனையும் அடையாளப்படுத்த யாரும் அவ்வளவாக முனைவதில்லை என்றே தோன்றுகிறது. ஒரு பெரும் எழுத்தாளராக எல்லா மட்டத்திலும் அறியப்பட்ட ஒருவர் கவிதைகள் குறித்து சொல்லவரும் அல்லது சொல்லிவரும் கருத்துக்கள் தற்சார்ப்பு கொண்டதாக அமைந்துவிடும் இந்த நேரத்தில்தான் சுஜாதாவின் பணி எத்தகையது என உணரமுடிகிறது. ஒரு படைப்பாளி தன் சக படைப்பாளியின் படைப்பு குறித்து பேசுவதே அரசியல் என்னும் நிலையில்தான் கதிர்பாரதியின் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கவிதைத்தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. ரசித்து நெகிழ்ந்த தருணங்களை எழுத்துக்குள் கொண்டுவர முடியுமா தெரியவில்லை. ஒருவிதமான மன ஆவேசம். இன்றைக்கே எழுதிவிட வேண்டும் என  எழுத அமர்ந்து அமர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தேன். மன ஆவேசத்தை விட்டு வெளியேறாமல் சொல்ல விளைவதை தெளிவாகச் சொல்ல முடியாது எனத் தெரிந்து தாமதத்தை நானாக தருவித்துக்கொண்டேன். இன்று ஓரளவு ஆவேசம் அடங்கிவிட்டது. ஆனாலும்கதிர்பாரதி கவிதைகள் கட்டவிழித்துவிட்ட நெகிழ்வை உதறிவிட இயலவில்லை. இதற்கு முன்பு வெளிவந்த கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்னும் தொகுப்பை வாசிக்கையில் அடைந்த அதே மன ஆவேசம். அதே நெகிழ்வு. ஏற்கனவே வெளிவந்த மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் கவிதைத் தொகுப்பு கதிர்பாரதிக்கான அடையாளத்தை அழுத்தமாக ஏற்படுத்திக்கொடுத்ததை மறுப்பதற்கில்லை. பத்திரிகைகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை அத்தொகுப்பை கொண்டாடி மகிழ்ந்தன.
 
கதிர்பாரதியின் வளர்ச்சியை மற்றவர்கள் பார்ப்பதைவிட நான் சற்றே கூடுதலாக கவனித்து வந்திருக்கிறேன். அவருடைய மேல்நோக்கிய ஒவ்வொரு அடியும் என்னை மகிழ்ச்சிப்படுத்தும். சதா இயங்கிக்கொண்டிருக்கும் அவரை அவருடைய எழுத்துகளை அவை இடம்பெறும் இதழ்களை தவிர்க்காமல் சந்தித்து வருகிறேன். ஏனெனில்பாழ்பட்ட விவசாய பூமியிலிருந்து ஒரு படைப்பாளன் தன் எழுத்து எல்லைகளை விரிந்துக்கொண்டு போவது அதே மண்ணைச் சேர்ந்த எனக்கு பெருமையும் பெருமிதமும் தரவல்லதாயிற்றே. கதிர்பாரதிதன்னுடைய படைப்பூக்கத்தினால் மட்டுமே சகல முகாந்திரங்களையும் சாத்தியப்படுத்தி வருகிறார். பொதுவெளியில் அவர் உண்டாக்கியிருக்கும் அடையாளம் என்பது எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் எழுதவந்த ஒருவர் அடைந்திடா முடியாது உயரம் என்றே சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து இயங்குவதும் தொடர்ந்து தன்னை புதுக்கிக்கொண்டே இருப்பதுமாக இந்த உயரங்களை அவர் அடைந்துவருகிறார். வெகுசன பத்திரிகையொன்றில் பணிபுரிந்துவந்த போதிலும் அவருடைய இலக்கிய மனத்தின் கடைமடை அடைபடுவதே இல்லை என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
 


மேலும்ஒரு தொகுப்பு ஏற்படுத்திய அதிர்விலிருந்து மற்றொரு தொகுப்பிற்கு வாசகனைக் கடத்திக்கொண்டு போவது அவ்வளவு எளிதான காரியமில்லை. குறிப்பிட்ட காலம்வரை அந்த படைப்பாளியே அந்த அதிர்விலிருந்து  மீளுவது கடினம். இன்னும் சொல்லப்போனால் அது அதிர்வா இல்லை அதிர்வைப் போன்ற மாயையா என்று கூட யோசிக்க இயலாத நொடிக்குள் கதிர்பாரதி அடுத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறார். அவகாசம் தேவைப்படாமல் அடுத்த அதிர்வை நோக்கிய அவர் பாய்ச்சல் பாராட்டுக்குரியது. அதிர்வை நான் இப்படியாக புரிந்துகொள்வேன். தன்னை சுற்றி குவிக்கப்பட்டிருக்கும் கண்களுக்கு ஊடாக ஒருவர் எப்படி இயல்பாக நடந்துசெல்ல இயலாதோ அப்படியான செயலே அதிர்விருந்து மீள்வதும். பிறர் தன்னை கவனிக்கிறார்கள் என்பதற்காக நம்முடைய நடையில் ஏற்பட்டுவிடும் மாற்றங்கள் பலநேரத்தில் அற்புதமான நகைச்சுவையாக மாறிவிடுவதுதும் உண்டுதான். எது எப்படியாயினும் அந்த அதிர்வை யார் ஒருவர் சாமர்த்தியாக கையாண்டு கரையேறுகிறாரோ அவரே அளுமைக்கு உரியவராகிறார்.கதிர்இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். முந்தைய தொகுப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு அதே சமயம் அதில் சொல்ல எத்தனித்து விடுபற்ற விஷயங்களை இதில் எழுதியிருக்கிறார். என்றாலும்மொழியில் மேல் நோக்கிய அடுக்குகளைத் தொட்டிருக்கிறார். கதிர்பாரதியின் கவிதைகளை ஒரே மூச்சில் வாசித்து மறு மூச்சில் வெளியிட முடியாதவை. சொற்களின் ஸ்திர தன்மைகளை அவர் விவிலியத்தின் வாயிலாக அமைத்துக்கொள்கிறார். மெல்லிய ஓசைகளுக்கு மத்தியில் நடத்தப்படும் ஜெபக் கூட்டத்தின் தொனியை அவருடைய கவிதைகள் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு தஞ்சை மாவட்டத்திலிருந்து இத்தகைய மொழியமைப்பை யாரும் கொண்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இடதுசாரிகளால் பெருமளவு ஆட்கொண்ட பிரதேசத்திலிருந்து இப்படியான மொழியை அவர் விவிலியத்திலிருந்து பெற்றிருப்பது அபூர்வம்.
 
மதமாச்சர்யங்களை விலக்கி மானுட நேசத்தை ஓங்கிக் கூவும் ஒரு பூமியிலிருந்து மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் என்னும் பதப் பிரயோங்களே கூட கவனத்துக்குரியன. கதிர்பாரதியின் நிலம் சார்ந்த பதிவுகளை ஒவ்வொரு கவிதையிலும் பார்க்க முடிகிறது. நிலத்தின் மீதிருந்தே அவருடைய கவிதைகள் எழுகின்றன.என்றாலும்நிலத்தின் உள்ளே மங்கிக்கிடக்கும் விதைகளை பேசாமல் இல்லை.  நீ வரவே இல்லை என்னும் கவிதையை என் கரம்பை நிலத்தில் உதிர்ந்துவிட்ட தென்னங்குரும்பைகளை என்றே ஆரம்பிக்கிறார்.எனக்கான முதிரிளம் பருவத்து முலை கவிதையில்,கண்களில் செவ்வரி ஓடியிருப்பது /  வெடிப்புறச் செம்மாந்திருக்கும் கோடை குடித்த என் நிலம்தான் / நிலமே /மதுவே / உனை ஒருவருக்கும் கொடேன்/ ஓரேர் உழவனாய்க் கைகொள்வேன் - என்று சொல்லவரும் அவர்முப்பிரி பின்னலிட்ட நாக சர்ப்பம் கவிதையில்உழுது பயிர் செய்திருக்கிறேன் உன் யவ்வனத்தை / நீர்க்கால் ஓரத்து மரங்களெனெ/ அது தளிர்க்கத் தொடங்கியிருக்கிறது என்கிறார். சுற்றுச்சூழ நிலத்தை விடுத்து கதிர்பாரதியால் சிந்திக்க முடியவில்லை. எது ஒன்றையும் நிலத்திலிருந்து நிலத்தின் மீதிருந்தே ஆரம்பிக்கிறார். ஒருவகையில் அதுவே அவருடைய பலமாகப்படுகிறது.
 
கதிர்பாரதியின் கவிதைகள்நில அரசியலின் மைய்யத்திலிருந்துதான் உலக இலக்கியங்கள் உருப்பெற்றிருக்க கூடும் என்னும் யூகத்திற்கு இடமளிப்பவை. காதலே ஆனாலும் அவர் கைகொள்ளும் படிமங்களும் குறியீடுகளும் நிலத்தை ஒட்டியே அமைகின்றன. அரசியலைக் கூட அவர் நிலத்தின் பாதிப்பிலிருந்துதான் பார்க்கக் கற்றிருக்கிறார். பின் தங்கியவர்களின் உயரம் என்னும் கவிதையில்இரைக்குப் பிந்தங்கியவர்கள் பெருமூச்சை சொரிந்தபடி/ மீண்டும் உயரத்தைப் பார்க்கிறார்கள். / ஆம் /  இரையை/ பள்ளத்தில் தள்ளிய உயரத்தைப் பார்க்கிறார்கள் - என்கிறார். இரையைப் பள்ளத்தில் தள்ளியவர்கள் யார் என்பதும் ஏன் என்பதும் கேட்கப்பட வேண்டிய வேள்விகள். தரிசு நிலங்களில் பயிர் செய்ய மானியம் வழங்கும் ஒரு அரசுஇதுவரை விளைந்துவந்த விவசாய நிலங்களை தரிசாக்கிக்கொண்டிருப்பதை எந்தக்கேள்வியும் இல்லாமல் எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல் காலம் தன்னை கடத்துக்கொண்டிருக்கிறது. ஒரு விவசாய பூமியை சாகக்கொடுத்துவிட்டு ஆர்கானிக் உணவுக்கடைகளை ஆரம்பிக்கும் சமூகத்தை என்னவென்று சொல்வது?. மாற்று அரசியல்மாற்று சினிமாமாற்று இலக்கியம் ,மாற்று சிந்தனை என சகலத்திலும் மாற்றை பார்க்க விரும்பும் நம்முடைய மனம் ஒரு விவசாயி மாற்றுத் தொழிலை நோக்கி நகர்வதை அச்சமில்லாமல் ஏற்றுக்கொள்ள முடியுமா?மரபின் பிறழ்வுகளை அல்லது நகர்வுகளை வரவேற்க எண்ணுகிற நாம் பாரம்பரிய விதைகளை இழந்த சோகத்தை என்றைக்காவது எண்ணியிருக்கிறோமாஒரு குளத்துக்குரைவையாக என்னும் கவிதையில்என் நிலத்தின் கண்களாக அலைகளைச் சிமிட்டுகிற ஏரியில் / ஒரு குளத்துக் குரவையாகத் துள்ளுகிறது என் சொற்களின் கனவு என்று கதிர்பாரதி சொல்வதைப் புரிந்துகொண்டால் அவர் கவிதைகள் முழுவதும் எதைச் சொல்ல வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். நிலத்தின் கண்களாக அலைகளைச் சிமிட்டுகிற ஏரி என்பதை திரும்பத் திரும்பி வாசித்து லயித்தேன். நிலமடந்தை எழில் ஒழுகும் என்று தமிழ்தாய் வாழ்த்தை நிதானமாகப் பாடுகின்ற நம்மில் எத்தனை பேருக்கு நிலம் இழந்த அழகுகளைப் பற்றி சிந்திக்க நேரமிருக்கிறது?
 
கதிர்பாரதியின் கவிதைகளில் நிலத்தைப் பற்றிய பதிவுகளைப் போலவே சடார் சடாரென வந்துவிழும் கோபத்தின் பதிவுகளையும் தவிர்க்க முடியவில்லை. அறத்திற்கு எதிரான எந்த ஒரு செயலையும் அவரால் கோபமில்லாமல் பார்க்க முடியவில்லை. எதிர்வினையாற்றும் பொறுப்பிலிருந்து இன்றைய படைப்பாளிகள் நழுவிவிடுகிறார்கள் என்னும் கூற்றை கதிர்எதிர்கொள்ள தயாராயில்லை என்றே தோன்றுகிறது. சாதீயத்தின் கோரப்பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளாமல் அதிலிருந்து பெறும் அற்ப சொற்ப சகாயங்களுக்காக பிடியை இறுக்குகிற சமூகத்தை  - எளியோரின் ரத்தம் தோய்ந்து/  வாளின் தூய்மையில் துருவேறிவிட்டதென / நீங்கள் அங்கலாய்த்தீர்கள்./ இதுதான் தருணமென நீதி தன் புறவாயிலை உடைத்துக்கொண்டு வெறியேறியது / அத்தருணத்தில்தான் மூளை சரிந்து விழுந்தோம்/ மாரிலடித்துக்கொண்டு அழுத / எம் பெண்டிரின் ஓலங்களின் மீது ஊர்ந்த ரயிலை/ இன்னுமா ரயில் என்கிறீர்கள். -
என்னும் கவிதையில் பதிந்திருக்கிறார்.ஒரு கவிதை எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்று அனுமானிக்க முடியாத வேளையில் நாயக்கன் கொட்டாய் என்ற குறிப்பு இதயத்தை நடுங்கச் செய்துவிடுகிறது. கட்சி அரசியல் வாக்கு வங்கிக்காக என்றானதைப் போல சாதி அரசியலும் வன்முறை வெறியாட்டங்களும் சமூகக் கண்டனங்களுக்கு அப்பால் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு படைப்பாளியால் எழுத்தைத் தாண்டி எதையும் செய்ய இயலாத நிலை. எந்த இயக்கங்களும் தன்னுடைய செயல்பாட்டில் சிறிதளவும் மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பாத சூழல். உலகமயமாக்கலுப்பின் ஒரு சமூகம் தன் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக சாதீயத்தை தூக்குப்பிடித்துக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் தேர்ச்சக்கரங்களுக்குத் தீனியாக தாழ்த்தப்பட்ட உயிர்களைத் தர விரும்புகிறார்கள். எது நல்ல எழுத்துஎது நல்ல கவிதைஎன்னும் விவாதங்களை கதிர் எளிதாக தாண்டிவிடுகிறார். மனித நேசத்தின் சின்னப்புள்ளியிருந்தே அவருடைய அதி அற்புத கோலங்கள் ஆரம்பமாகிறது.
 
ஒருவர் மொழியைக் கண்டடைந்துவிட்ட பிறகு எது ஒன்றையும் எழுத்துக்குள் கொண்டுவர முடியும்.ஆனால்கதிர் எதை எழுத வேண்டும் என்பதிலும் எப்படி எழுத வேண்டும் என்பதிலும் கறாராய் இருக்கிறார். பக்கங்களை நிரம்பாமல் தன் பக்கத்தில் நடப்பவற்றை பதிவு செய்யவே நினைக்கிறார். ஆஸ் தி பெஸ்டின் புறவாசல்,அஸ்பெஸ்டாஸ் அம்பாள்,ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்கண்டிஷன் அப்ளைவெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல் போன்ற கவிதைகள் தலைப்பளவிலேயே வசீகரம் கொண்டவை. ஆங்கிலப் பதங்களின் ஊடாக அவர் கடத்த விரும்பும் உணர்வுகள் லேசான பகடியைக் கொண்டிருந்தாலும் காத்திரத்தில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாதவை. தன்னை முன்வைத்து எழுதுவது ஒருவகை. தன் எழுத்தை முன்வைப்பது இன்னொருவகை. தன்னையும் தன் எழுத்தையும் சமூகத்திற்கு முன் வைப்பது மூன்றாவது வகை. கதிர்பாரதிக்கு மூன்று வகை மீதே கவனம். அவரிலிருந்து ஆரம்பிக்கும் ஒருகவிதையை அவர் அவருடனே முடித்துக்கொள்ள விரும்புவதில்லை. கிளைத்து கிளர்ந்து எங்கும் வியாபிக்கும் சமூக வேர்க்கால்களை எட்டித்தொட எத்தனிக்கிறார். அமைதியை நிலைநாட்ட விரும்பும் ஒரு பள்ளி ஆசிரியர் சைலண்ட ப்ளீஸ் என்று கத்துவதைப்போல நோக்கத்தின் எதிர் முனையிலிருந்து கவிதைகளைப் படைக்கிறார். வெகுமக்கள் மொழியை இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை. என்றாலும்வெகு மக்களின் பிரச்சனைகளையே பேசுகின்றன. பிரச்சனைகளை கவிதைகள் பேசலாமா கூடாதா என்னும் வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ள நானும் இந்தக் கவிதைகளைப் போல விரும்பவில்லை.
 
என்வரையில் கதிர்பாரதியின் எழுத்து வண்டல்மண்ணின் வாழ்வை புதுக்கித் தந்திருக்கிறது. நிதானமிழந்த கோஷங்களுக்கு ஆட்படாமல் கவிதைகளின் நிறைவை நோக்கி நகந்திருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் ஓர் அமைதியை ஓர் அன்பை ஒரு பகிர்வை ஒரு தேவையை உணர்த்த முயன்றிருக்கிறது. இதற்கு முன் எழுதப்பட்ட படைப்புகளில் இருந்து ஒரு புதுவகை எழுத்தை வண்டல் மண் பகுதிக்கு கொண்டுவந்த பெருமையை கதிர்பாரதிக்கு அளிக்கலாம். அவர் எழுத்து புலியைப் பொம்மையாக்கிவிட்ட அதிகாரங்களை கொல்லவோ சொல்லவோ அஞ்சுவதில்லை. விண்ணரசின் விதைகளை மக்களுக்கானதாக மாற்றும் மனுஷ்ய குமாரனாகப் பிரசங்கிக்கிறார். ஆஸ்பெஸ்டாஸ் கொட்டைக்குள் அம்பாளாகவும் மாறி புதிய சம்பந்தன்களுக்கு அவர் எழுத்து மூலையூட்டுகிறது. எம் நிலத்தின் பாடல்களால் தானியக் கிடக்குள் நிறைந்தன  என்று குள்ள நரி அழைக்கிறது வாரீர்  கவிதையில் சொல்லியிருக்கிறார். உண்மையில் இன்று எம் நிலத்தின் பாடல்களால் தானியங் கிடங்குள் நிறையவில்லை. மாறாக ஓலங்களாலும் சோகங்களாலும் உருவிழந்து கிடக்கின்றன. அக்கிடங்குகள் விவசாயத்தின் சவப்பெட்டியாக மாறுவதற்குள் நாங்கள் எங்கள் நிலத்தை பாடல்களால் மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் கைகளில் வண்ணங்களை ஒட்டிவிட்டு இரைதேட கிளம்புகின்றன.

13 October, 2016

குறிப்பு ~ எழுத்தாளர் என்.ஸ்ரீராம்

இரு வருடங்களுக்கு முன்பு கதிர்பாரதியின் " மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் " கவிதைத்தொகுப்பை வாசித்தேன்.நிலம்,பறவை,காற்று,மழை,ரயில் ,காதல்,காம்ம,நேசம் என கவிதைகளின் படிமவேர்கள் மன ஆழத்துக்குள் ஊருருவி பெரும் நெகிழ்ச்சிகொள்ள வைத்தன.தற்போது இவரின் " ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் " கவிதைத்தொகுப்பை வாசித்து முடித்தேன்.எப்போதும் நிலக்காட்சி சார்ந்து நிறைய எழுதுவதாக இருந்த என் இறுமாப்பை இவரின் ஒவ்வொரு கவிதைகளும் உடைத்தெரிந்தன.மணிப்புறாக்களும்,தட்டான்களும்,ஆட்டுக்கிடாய்களும்,வெட்டுக்கிளிகளும்,நீர்முள்ளிகளும்,அணில்களும் என கவி உயிர் பெற்று படிம பிணையல் நர்த்தனத்தில் ஆங்காங்கே ஏகாந்த சிற்பமாய் காலவெளியின் நுட்பத்தை சுமந்து காட்சி தருகின்றன.குள்ளநரி அழைக்கிறது வாரீர்,புன்செய் வெயிலாகும் முத்தம்,அழகு பகல் ,கற்றாழைப்பழம் சுவைத்தேன்,அலறி ஓடும் மவ்னம்,நான் என இவரின் கவிதைகள் என் மனதைவிட்டு நீங்கா தன்மை கொண்டதாக இருக்கிறது.நிலத்தை நேசிப்பவனாக ,நட்பை போற்றுபவனாக ,சகபடைப்பாளிகளை ஊக்குவிப்பவனாக இருக்கும் கதிர்பாரதி பெருங்கவிஞன் என்ற தலைச்சுமை சிறிதுமின்றி எளிமையாகப் பழக கூடியவர்.சமீப ஆண்டுகளில் என்னை ் ஆனந்த விகடனில் சிலகதைகள் எழுத வைத்து எங்கள் ஊர்ப்பக்கம் வாசிக்க வைத்த என் பெருமைக்கு சொந்தக்காரன்.விரைவில் இவரிடமிருந்து சில நல்ல சிறுகதைகளையும் ஒரு நண்பனாய் எதிர்பார்க்கிறேன் .

05 August, 2016

விமர்சனம் ~ கதிர்பாரதியின் கவிதைகள் ~ ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் ~ எழுத்தாளர் இளஞ்சேரல்


       
“தட்டான்கள் தாழப்பறந்தால் மழை வரும் தெரியுமா” என்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன் முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது.....         பக்.26

    நவீன கவிதையின் அளவீடுகள் என்னென்ன..கவிதையிலிருந்து நவீன கவிதை எந்த வகையில் வேறுபடுகிறது. நவீன காலத்தின் மனிதனின் பிரச்சனைகளைப் பேசுகிறதா. நவீன காலம் என்பது என்ன..தொழிற்புரட்சியின் யுகத்திலிருந்து நவீன காலம் துவங்குகிறது. ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் மூழ்கி மோட்டார்களின் வழியாக நீரை உறிஞ்சுகிற வல்லமை பெற்ற மனிதனின் காலம் நவீன காலத்தின் துவக்கம். நெருப்பை உருவாக்கவும் கண்டுபிடிக்கவும் அடர்வனத்தின் தீயைக்கண்டு தெறிக்க சதுப்பு நிலப்பகுதிக்கு ஓடிவந்த காலம் நவீன காலம். குன்றுகளின் மீதும் மலைச்சரிவுகளில் கால்நடைகளைப் பழக்கி வேட்டையாடித் தின்ற காலத்திலிருந்து பெருமழைக்காலங்களில் நீர்த்தேக்கங்களின் ரம்மியம் பார்த்து கரைகளில் வாழும் பறவைக் கூட்டங்களின் குடும்பங்கள் பார்த்து குடும்பங்களை உருவாக்கிக் கொள்வதற்காக குடில்களை அமைக்கத் துவங்கிய காலம். பஞ்ச காலத்தில் பசிக்குப் பிறரிடம் பறித்துதான் திங்க வேண்டும் என்பதால் கருவிகளை உருவாக்கிக் கொலைத்தொழில் புரியத்துவங்கியது நவீன காலம். போதுமான அளவில் உடலில் ஆயுதங்களை வைத்துக் கொள்ள முடியாமையால் பெருங்கிடங்குகளை முதலில் உருவாக்கி பிறகு வீட்டை உருவாக்க முனைந்த காலம் நவீன காலம்.பறவைகளின் இயல்புகளைக் காப்பியடித்து வசந்த கோடை கார் பஞ்ச காலங்களில் இடம் பெயர முனைந்த காலம். உலகின் முதல் விவசாயி ஆன பறவையின் மலத்தின் வழி விளையும் உணவை உண்ணத்தொடங்கிய காலம். காட்டுத்தீயில் வெந்த மாமிசத்தின் ருசியைச் சுவைத்த காலம். விறைத்த குறியை மூடிக் கொள்ளவும் ருதுக்குறியின் உதிரக்கவிச்சியை உணர்ந்து முயங்க முனைய இலைகளின் ஆடையை அணியத் துவங்கிய காலம்.
         கூர்வாட்களால் உடன்பிறந்தோரைக் கொல்லத் துணியலாம் என்று போதனையைக் கற்ற காலம். பசிமறந்து அச்சமே துணையாகத் துடித்தடங்கி குழிகளிலும் விதைகளைப் போல வெடிகளை விதைத்து சிறுவர் சிறுமிகளை முன் நடக்கவைத்து பின் வெடிக்காலம் உணர்ந்த காலம். வேலிகள் அமைந்து அங்கேயே தின்று அங்கேயே பேண்டு கழித்து முயங்கி இனப்பெருக்கம் செய்யும் காலம். உலகத்து மணற்பரப்பு எல்லாம் ரசாயனம் தூவி உயிர்களை அழித்து உலோகப் பயிர் வளர்த்து ஒவ்வொரு பாறையாக வெடித்து வெடித்துப் பார்த்துக் குதூகலித்துக் கொள்கிற காலம்.
        இந்தக்காலங்கள் பற்றி உரையாடுகிற சொற்களை நவீன மொழி என்று சொல்கிறோம். அந்தந்த யுகங்களில் அந்தந்த கேந்திரங்களில் அந்தந்த பொழுதுகளில் நவீனன் பிறக்கிறான். அவன் பச்சயத்தின் பலனையும் சிறு சிறு காணுயிர்களின் கீச்சிடல்களையும் மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் அணில்களையும் மரத்து உடலைப் பங்கிட்டுக் கொள்கிற உயிருணிகளைப் பற்றிப் பேசுவான். ரசாயனத்தை அதன் வீரியத்தைப் பொசுக்குவான். எவ்வித கனரக உலோகமும் குரிமணி உயிரையும் காவு வாங்காமல் கவனித்துக் கொள்வான்
          கதிர்பாரதியின் இரண்டாவது கவிதைத்தொகுப்புஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்“ வாசிக்க நேர்ந்த சமயத்தில் பல நூல்களுக்கான வாசிப்பு மற்றும் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். முதல் தொகுப்பிற்கும் இரண்டாவது தொகுப்பிற்குமிருக்கிற கடந்து வந்த  தொலைவை ஒரு கணம் யோசித்துப் பார்க்கிற போது தமிழ் நவீன கவிதையின் அடுக்கும் உயர்ந்திருப்பதாக உணர்கிறேன். நவீன கவிதைக்குள் “லோட்செய்யப்படுகிற வீரியமிக்க கலன்கள் மிக முக்கியமானது. ஒரு கவிஞன் எந்தளவு உறுதிமிக்க புலன்களின் இருப்பைப் பொருத்துகிறான் என்பது அவன் கற்றதில் இருக்கிறது. அனுபவங்களுக்கு அப்பாலும் கற்பனையும் சமகாலத்தின் வெடிப்பும் பற்றாக்குறைகளும் அறிவுசார் சொத்துரிமைத்திருட்டுகளுக்கு அப்பாலும் செயல்படுகிற நவீன மனத்தின் ஆன்மாவையும் சேர்த்தே கணக்கிடச் சொல்கிறது. நன்செய் புன்செய் நிலங்கள்,வயல்கள், பொழிகள், ஏரிக் கழிகள், நீரேற்றங்கள் உள்பட பச்சயங்களும் உண்டு. அறுவடைக்குப் பிந்தைய அடுத்த காப்பிற்காகத் தயாராகிற உரமூறிய பதமிக்க தீவனப் பில்லுக்காடுகளும் உண்டு.
என் தாத்தாவிடம்
ஒரு கதை இருந்தது
சப்பரம் போல் ஜோடித்துத்திரியும்
கொள்ளிவாய்ப் பிசாசுகளும்
பலிகேட்டு நச்சரிக்காத
குலசாமிகளும் அதில் இருந்தன
அவற்றின் குழந்தைகளாக நாங்கள் இருந்தோம்.

என் தாத்தாவிடம்
உறக்கம் ஒன்று இருந்தது
அதன் தலைமாட்டில் பூவரசின் வேர்த்திண்டும்
கால் மாட்டில் உதயமரத்தின் நிழல் துண்டும்
சாமரங்களாக மாறி சேவையாற்ற
காலங்களும் பருவங்களும் களைப்பாறியதுண்டு.

            “எங்களிடம் நீர்முள்ளிப் பூக்கள் இருந்தன” எனும் நெடுங்கவிதையிலிருந்து மேற்கண்ட சில வரிகள். ஒரு தலைமுறையில் எல்லாம் மாறி அழிந்து மீண்டும் ஒரு புது யுகம் பிறக்கும் என்பதை வரலாறு நமக்கு அறிவிக்கிறது. நூறாண்டுகள் ஆகிவிட்ட வீட்டைக் கொஞ்சம் மராமத்துச் செய்து வாழ்ந்து கொள்கிறது மனித சமூகம். பல நூறாண்டுகள் அறுவடைகள் பார்த்த நிலம் மற்றும் வேளாண்மை மக்கள் ஞாபகம் வருகிறார்கள். புடவைக்கடையில் விற்பனையாளன் மிக லாவகமாகவும் நேர்த்தியாகவும் புடவையைப் பிரித்து நூல் மணக்க அயாசமாக வீசிப் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பது போல பல நெடுங்கவிதைகள் தொகுப்பில் உள்ளது.
    
         உரைநடைக் கவிதைகளின் தன்மையிலேயே கவிதைகளின் பயணங்களும் மிக நீண்ட விவரிப்புகளும் கொண்டிருக்கிறது. தலைப்புகள் மட்டுமே கவிதைகளைத் தனியாகப் பிரிக்காவிடில் ஒரு கவிதா விலாசத்தின் குறும்பாகள் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. மனிதனின் காம விகாரமும் தீர்வற்ற முறைபொருந்தாப் பசிக்கிறக்கமும் இந்த நிலத்தை சதுப்பு நிலமாக்கி வெள்ளாமையைப் பெருக்க வைத்தது. பசுமைப் புரட்சிக்கு முந்தைய மனிதன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். புதிய ஏரிகளை வெட்டி பெருநதியிலிருந்த நீரைக்கடத்தி வந்தான்.
             “என் புறாவைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.” ஒரு குளத்துக் குரவையாக” மீன் வளக் குறிப்புகள்..“ முக்கியமான கவிதைகள். சொற்களுக்குள் உருவகத்தீ கணன்று எளிதில் பற்றிக் கொள்ளக் கூடிய ரசனை மனங்களைப் பற்றிப் பரவுகிறது. செய்திகளும் விவரிப்பும் வழி அறிந்த ஒருவனின் கால்கள் போல தாவுகிறது. இலகுவாக நீந்திச் செல்கிறது. இன்று வரவேற்பு அறையில் மீன்தொட்டி இருந்தால் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நல்லது நடக்கும் என்றும். மீன் தொட்டி இருந்தால் நாமும் கடலில் மிதப்பது போன்ற பிரக்ஞை இருக்கும். பொதுவாக பற்பல வண்ணங்களைக் களித்துக் கொள்வதும் சாஸ்திரங்களில் உள்ளது என பற்பல வியாபாரங்களில் மனிதன் ஈடுபடுகிறான். எப்படியும் மனித சமூகத்திற்கு மனிதன் ஆற்றும் தியாகம் போல சில மீன்கள் நம் வரவேற்பரை செட் ஆவதற்குள் மரித்து விடுகிறது.
உம் முன்னோரில் இருவர்
ஐயாயிரம் பேருக்கு உணவாகி
புகழுடை தெய்வத்திற்கு நிகராக
வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா என
சுவைக்குதவாத அவற்றின்
இனத் தொன்மம் பற்றிப் பேசவேண்டும்..

              மனிதனைத் தவிர வேறெந்த உயிரினங்கள் தங்கள் வாழ்வின் பதிவுகளைச் செய்து வைத்திருக்கிறது. யானைகளோ,புலிகளோ, பறவைகளோ தங்கள் மூதாதையர்கள் பற்றிய ஏதேனும் குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறதா. அன்றியும் குறிப்பிட்ட ஒரு உயிரி பற்றிய பதிவையாவது மனிதன்  செய்திருக்கிறானா. ஆனால் இந்நிலத்தின் அத்து ணை உயிரிகள் தாவரங்கள் பருவகாலங்கள் பற்றிய தொகுப்பை அதன் வளத்தை அழித்தும் வளர்த்தும்  நெறி செய்கிற பொறுப்பாளான மனிதன் இருக்கிறான்.

          ஒரு நவீன கவிதையில் முக்கியமாக இடம் பெற வேண்டியது. ஒரு கதை,ஒரு நாவல்,ஒரு சிறுகதை,ஒரு பயணக்கட்டுரை, ஒரு காப்பியம். ஒரு மருத்துவனின் குடுவை, மாந்த்ரீகனின் சல்லாப பாடல், ஒரு சூதாடியின் தந்திரம், ஒரு மழலையின் அறிவார்த்மான கேள்விகள். ஒரு வேசியின் தீர்க்கதரிசனம், விந்தின் பிசுபிசுப்பு. மதர்த்தமான உப்புக் கவிச்சி. அழுக்குக் கேசத்தின் வாசம். நமுத்த அணுகுண்டின் திரி, லாரியோ கார் குண்டோ வெடித்தபடியால் சிதறிய உடல்கள். இப்படியாக அவனவன் திசைக்குத் தகுந்த மாதிரியான உரையாடல்கள், பட்டாசுக் காயம் பட்ட உடல் போன்ற சொற்றொடர்கள். இடையிடையே செனாயோ வயிலினோ புல்லாங்குழலோ நாதஸ்வரமோ இசைக்கும் இசைக்குறிப்புகள்.
      இவையெல்லாம் நவீன வாழ்வை எழுதுகிற கவிஞனின் சுரைக்குடுவையில் மீந்திருப்பவை. அவன் இறைச்சலிலிருந்து ஒரு தேவ வசனத்தின் பிராக்ருத அதிர்வை ராகமாக்குவான். தேமலிலிருந்தும் அழுக்குச் சிரட்டைக் காயங்களிலிருந்தும் கடவுச்சீட்டை அந்நிய மண்ணில் இழந்திருக்கும் சமயத்திலும் சொற்கள் எழுதுவான். இந்த நவீனப் பொருளியல் சந்தை மற்றும் புலனுகர்வும் படித்தவர்களை பல நாடுகளை நோக்கிப் பறந்து போகவைக்கிறது. இங்கு முப்பது வருசம் சம்பாதித்து ஓய்ந்து சாவதை விடவும் அயல்தேசத்தில் ஐந்து வருசம் இருந்து வந்து விட்டால் இங்கு தலைமுறைக்கும் பிரச்சனையில்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்கிற வசவு உள்ளது. சமூகத்தில் முப்பது சதம் அன்னியச் செலாவணிக்காகவும் இந்தியாவின் கடன்சுமையை அதிகரிக்கவும் வாழ்கிற வர்களும் உண்டு. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியான சமயங்களில் கீழ்த்திசைநாடுகளிலிருந்து ஆட்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு போய் ராணுவத்தில் உலகப்போர்கள் சேர்த்து அவர்களை வைத்தே கோடிக்கணக்கான மக்களைக் கொன்று புதிய நவீன உலகை ஏகாதிபத்தியம் நிறுவிக்கொண்டது.
       இந்தத் தொகுப்பில் வீரியமிக்க நவீன அரசியல் வாழ்வின் விமர்சனங்கள் இல்லை. சமகாலத்தின் கலாச்சார அரசியல் பற்றிய மிகக் கூர்மையான அரசியல் பார்வைகளும் விமர்சனங்களும் நவீன கவிஞனுக்கு முக்கியமானது.குறிப்பாக ஒரு பராரி ஏழை தேசத்தின் பிரதமர் தன் வாழ்நாலெல்லாம் வெளிநாடுகளுக்குப் பறப்பதையே தன் அலுவலகப்பணியென்று நினைத்துக் கொள்கிற தேசத்தின் கவிஞன் தன் பங்கை ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன்.
        குறுங்கவிதைகளில் கவித்துமிக்க தரிசனங்கள் அகப்படுகிறது. உரைநடைக் கதைகளில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிற அடுக்கடுக்கான விவரிப்புகள் சற்று அயற்சியைத்தருகிறது. கதிர்பாரதிக்கு இயற்கையின் மீதுள்ள கரிசனங்கள் கவிதைகளை அடுத்தடுத்த வாசிக்க வைக்கிறதும் கவிதைக்குத் திரும்பவைக்கிற உத்தியாக எழுதப்பட்டவைகள் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளது. குறிப்பாக “இரவுக்கு வெட்கமில்லை..“ கவிதையிலிருந்து சில வரிகள்..மிக சாதரணமான விவரிப்புகளில் குறும் நகைச்சுவையெனத் துள்ளிக் கொண்டிருக்கிற வெட்டுக்கிளியின் சுறுசுறுப்பு இக்கவிதையில் காணமுடிகிறது. கூத்தில் பார்வையாளர்களை மகிழ்வு கொள்ளச் செய்கிற கலைஞனின் உடல்பாசாங்கும் வசனங்களும் போல அறியும் இக்கவிதை கதிர்பாரதியின் அழகுணர்ச்சிக் கவிதைகளில் ஒன்று. கவிதையில் மேலிட்டு வருகிற மிகை தான் மிகு அழகு...
என் வானில் தேனிலா ஆடாதாவென ஏங்குகிற
அமாவாசையின் பிள்ளை நான்
எனினும்
என் கொல்லைப்புற வானை
கோடிக்கோடி நட்சத்திரங்களால் அலங்கரிப்பேன்
மல்லாந்து படுத்தபடி பார்ப்பேன்
ஒரு மூக்குத்தியாக்கலாமா என்றுகூட யோசிப்பேன்

எனக்கும்
உன் நினைவுகளுக்குமிடையில்
ஒரு சிகரெட்டின் அளவே இருக்கும்
இடைவெளியின் முன்முனையில்
ஆசையைப் பற்றவைக்கிறது இரவு
உறிஞ்சி இழுத்த இழுப்பில்
விடிகாலையின் கிழக்குக்கு
சிவந்து விட்டது.
          
 அணிகலன்களின் வழியாக ஒவ்வொரு மனித நாகரீகத்தின் வளர்ச்சியை அளவிடமுடியும். ஆப்பிரிக்கத் தேசத்து கருப்பின மக்களும் செவ்விந்திய பழங்குடிகளும் அணிகலன்களை உடலெங்கும் அணிந்து கொள்வதின் வாயியலாக அவர்களின் குலம் மற்றும் கலாச்சார மரபையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். தென்னிந்திய மரபில் தொண்ணூறுகளுக்கும் வரையிலும் மூக்குத்தி மரபு இருந்து வந்தது. பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜி மூக்குத்தி அணிந்து நடித்தார். தாய்மாமன் மடியில் உட்காரவைத்து ஆண் பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்தி முதலில் மூக்கையா மற்றும் மூக்கம்மா என்று உறவுகள் குழந்தைகளை எள்ளலும் கேலியும் பாட்டுப் பாடி விழாவைக் கொண்டாடுவார்கள். அசலான தமிழ் மரபு வழி அணிகலன். நம்மிடம் ஒவ்வொரு அணிகலனுக்கும் கலாச்சாரப் பின்னணியும் உள்ளது என்பதை இக்கவிதை ஞாபகப்படுத்துகிறது. காதலையும் அன்பையும் பிரிவாற்றாமையையும் பேசும் பல சொற்களில் காதல்,நட்பு,உறவுகள் பற்றிய விவரணைகள் இருக்கிறது.
      சில நாட்களுக்கு முன்பு முகநூலில் நண்பர்கள் வாயிலாக அனுப்ப ப்பட்ட பாலுறவுப் படங்கள் வந்து குவிந்தபோது பார்க்க நேர்ந்த அனுபவம். கூகுளில் விவரச்சேகரிப்புக்கு அடுத்தபடியாக வெகுமக்களால் கோடானு கோடி தடவைகளால் பார்க்கப்படுகிற காணொளிப்படங்களாக அவை உள்ளதை அறிவோம். அப்படித்தான் மாநிற கருப்பினப் பெண்களுக்கு “ப்ருநென்ட்டீ” என வகைமைப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி ஒரு குழுகலவிப் படத்தைப் பார்த்த சமயத்தில் நடித்துக் கொண்டிருந்த மங்கைகளில் ஒருவர் ஆசிய மங்கை என்கிறது பெயர்ப் பலகை.அம் மங்கை மூக்குத்தி அணிந்திருந்திருந்தார். மூக்குத்தியைப் பார்த்தேன். அக் காட்சிகளுக்கு அவ் உடல்களுக்கு அப்பால் அந்த மூக்குத்தி சூரியனின் நீள் கம்பி என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறது
வாழ்த்துக்கள் கதிர்பாரதி
வெளியீடு உயிர்மை பதிப்பகம் -11-29- சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம்-சென்னை 18- விலை ரூ 85

25 July, 2016

விமர்சனம்~ கவிநுகர் பொழுது~ கதிர்பாரதி (“ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்” நூலினை முன்வைத்து) ~ தமிழ் மணவாளன்

ஜோதிடத்தில் பொருட்படுத்தக்கூடிய நம்பிக்கையேதும் எனக்கில்லை. ஜோதிடத்தில் காலத்தைப் பகுத்து, ராகு திசை, கேது திசை, சுக்கிர திசை நடப்பதாகச் சொல்வதுண்டு. உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் கதிர் பாரதிக்கு கவிதைத் திசை நடக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். தமிழ்க்கவிதையின் நெடிய மரபில் தமக்கான வடிவத்தை கவிதைகள் தாமே தகவமைத்துக் கொண்டு வந்திருப்பதை வரலாற்று ரீதியான வாசிப்பில் அறியவியலும்.

"தீவிரமான மாற்றங்களைக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மொழியில்தான் கவிதைகள் உயிர்ப்புப் பெறுகின்றன. தன்னைப் பின்னகர்த்தும் காலத்துக்கு விட்டுக் கொடுக்காமல் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டு, அந்தக் காலம் அளிக்கும் அனைத்துச் சவால்களையும் ஏற்றுக்கொண்டு, கவிதையை நோக்கி வருகிறவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய மனவெழுச்சியைத் தருகின்றன. சொற்களில் விவரிக்க இயலாத பேரனுபவங்களைத் தருகின்றன.", என்பார் சுந்தரராமசாமி.

சமீப
காலமாக நவீன கவிதை எழுதும் பலரும் ஒரு மொழியையும் வடிவத்தையும் கண்டடைந்திருக்கிறார்கள்
. தொழில் நுட்பத்தில் தேர்ந்த பல நவீன கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. வாசிப்பின் போது, அவை கையகப் படுத்தியிருக்கும் தொழில் நுட்பம், புனைவின் சாத்தியம் மீறிய சாத்தியம், பேசு பொருளின் தனித்துவம் ,அதன் தேவை, அதைப் பேசுவதில் உள்ள தீவிரம் அவற்றிற்கான முக்கியத்துவத்தை உறுதி செய்வனவாய் உள்ளன.
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்என்னும் கதிர்பாரதியின் தொகுப்பிலுள்ள கவிதைகள் நவீன தமிழ்க்கவிதைகளின் தேர்ந்த அடையாளமாக இருக்கின்றன என்பதை விட, தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியில் நவீன கவிதைக்கான, கால மாற்றத்தின் வடிவம், தொழில் நுட்பம் இவற்றையெல்லாம் கடந்து , எல்லாக் காலத்துக்குமான கவிதைக்குரிய இயல்பெழுச்சியை லாவகமாய்த் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன‌ என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இதனை, தக்க மேற்கோள்களுடன் பேசும் வாய்ப்பு கட்டுரையின் பிற்பகுதியில் வாய்க்குமெனக் கருதுகிறேன்.
"கவிதை என்பது உணர்ச்சிகளின் தங்குதடையற்ற பிரவாகம்", என்றார் வேர்ட்ஸ்வொர்த்.
பொதுவாக , வீன கவிதைகளில் கட்டமைக்கப் பட்ட வடிவங்களையே பெரிதும் வாசிக்கமுடியும். பிரவாகம் என்பது உணர்வு சார்ந்தது மட்டுமன்று; மொழி சார்ந்ததும் கூட. அப்படி ஒரு பிரவாகம் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. கவிஞனைக் கடந்து கவிதை சொற்களின் கரம் பற்றி முன்னே செல்கிறது.வாசிப்பினூடாக ,வார்த்தைகளின் இடம் பற்றும் தீவிரத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.
நம் தமிழ்மரபு நிலத்தை முதன்மைப் படுத்துவது. நிலத்தை முன்வைத்து பண்பாட்டைக் கட்டமைத்தது. நிலத்தினை ஐந்திணைகளாக பகுத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கென தனித்த கருப்பொருட்களையும் உரிப் பொருட்களையும் வகுத்துக்கொடுத்தது.திணைகளுக்கு குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல்,பாலையென தாவரங்களின் ,மலர்களின் பெயரினைச் சூட்டிய மரபுடையது. நம் சமகால நவீன கவிதைகள் சங்ககாலப் பாடல்களின் நீட்சி என்பதற்கான இன்னுமோர் அடையாளமாக கதிர் பாரதியின் கவிதைகளை என்னால் குறிப்பிட முடியும். நிலம் குறித்தான அதன் மீதான இவரின் கவனம் பல சூழல்களிலும் வெளிப்படும் கவிதைகள் இடம்பெற்றிருப்பது இத் தொகுப்பின் முக்கியமெனக் கருதிகிறேன்.

"
ஓர் உயர் ரக மதுப் புட்டியென அத்துணை வாளிப்பாக
என் முன்னே இருக்கிறது என் நிலம்.
நான் அதை முத்தமிட்டு முன் -பின் தட்டித் திறப்பேன்.
மிடறு மிடறாகப் பருகுவேன்.
அப்போது வாய் திறக்கும் ஆன்மாவுக்கும்
பருகக் கொடுப்பேன்".

'
எனக்கான முதிரிளம் பருவத்து முலை
' ,என்னும் கவிதை

மேற்கண்டவாறு
தொடங்குகிறது
. மதுப்புட்டியைப் போலிருக்கும் நிலம் என்கிறார்;அதுவும் வாளிப்பாக. அருந்த ஆயத்தமானவனின் மன நிலையிலிருந்து நிலம் பெரும் சொர்க்கமென விரிகிறது.தட்டித் திறப்பதற்கு முன் முத்தமிடும் உதடுகள் அறியும் அது சொர்க்கத்தின் திறப்பென்று.
என், நான்’, என்னும் சொற்கள் கவிஞனுக்கும் நிலத்துக்குமான நெருக்கத்தை உறுதிப்படுத்துகின்றன‌.அதை ஊர்ஜிதப்படுத்தும் உவமையான மதுப்புட்டி எங்கே போதைக்குள் தள்ளி மிதக்க வைத்துவிடும் சிக்கல் தவிர்க்க , ஆன்மாவுக்குப் பருகக் கொடுத்து நிலம் நிலைத்து,
" நிலம் தந்த வெள்ளாமையெனக் கொண்டாடிக் களிப்பேன்"
என களிப்படைந்த கவிமனம், அதனாலேதான் இறுதியாக
" நிலமே
மனமே
உனை ஒருவருக்கும் கொடேன்
ஓரேர் உழவனாய்க் கைக் கொள்வேன்"
என்று தனதாக தனதே தனதாக்கி கொள்கிறது.
தனக்கு மிகவும் உகந்த ஒன்றை மதுவுடன் ஒப்பிடும் கவிமனம் அதை உச்சமான ஒப்பீடாக உவமையாகக் ருதுவது இயல்பானது.

"பதினைந்து பதினாறு கார்த்திகைக்குப்பின்
ஒரு நிலவறையிலிருந்து
பதப்படுத்தப்பட்டு வெளிவந்த
வீறுமிக்க மதுவைப் போல்"-
என்பார் கனவுகளில் மீரா.

"
உழுது பயிர் செய்துருக்கிறேன் உன் யவ்வனத்தை
நீர்கால் ஓரத்து மரங்களென
அது தளிர்க்கத் தொடங்கியிருக்கிறது."
என்கிறார் மற்றொரு கவிதையில்.
நிலம் குறித்த கவிதைகள் என்று பேசும் போது ஆனந்தியின் தாழப்பறக்கும் தட்டான்கள் கவிதை குறித்துப் பேச வேண்டும்.இவரின் ,'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்', தொகுப்பிலேயே இக்கவிதை இடம் பெற்றிருந்தது. அக்கவிதை குறித்து என் முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறேன்.
நதிகளுக்கு பெண்ணின் பெயர் சூட்டிடும் மரபு நம்முடையது.கங்கை,யமுனா, காவேரியென. தாய் மண் தாய் நாடு என்று சொல்கிறோம். பாரதமாதாவெனப் பாரதி தெய்வமாக சித்தரித்தார். திருவள்ளுவர் மிக இயல்பாக ,
" நிலம் என்னும் நல்லாள் நகும்"
என்கிறார். செல்லப்பிராணிகளுக்கு பெயர் சூட்டும் மரபுண்டு. ஆனால், குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு செல்லபெயர் சூட்டியது அனேகமாக கதிர்பாரதியாகத் தான் இருக்ககூடும்.ஆனந்தி என்று பெயர் சூட்டுகிறார்.

"மணிப்புறாவின் லாவகத்தோடு எழும்பி மிதக்கிற என் நிலத்துக்கு
ஆனந்தி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்."

அவ்விதம்
பெயர் சூட்டியதாலேயே மேலெழும்பும் பாக்கியம் பெற்றதோவென்கிறார்
.தட்டான்கல் தாழப்பறந்தால் மழை வருமெனச் சிமிட்டும் ஆனந்தியின் இமைகளிலிருந்து தட்டான்கள் தாழப்பறக்கத் தொடங்கும் போது கவிமனத்தில் மழை பெய்யத் தொடங்குகிறது.இப்படியான புனைவுச் சித்திரமாக விரியும் வரிகள்

" நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு நிலத்தின் மீது
தாழப்பறக்கின்றன தட்டான்கள் "
என்னுமிடம் ஆனந்தியைத் தனித்து முதன்மைப் படுத்துவதாய் ஆகி விடாதென்பது, ஆனந்தி தான் நிலம் என்று உள் வாங்கிக் கொண்ட வாசிப்பு மனம் மெல்ல நகைக்கும்.

"வெட்டுக்கிளிகள் பறந்துலவும் என் நிலம்"

"
இப்படியாக
என் நிலத்தின் கடைசித் துளிக் கருணையும்
உறிஞ்சப்பட்ட பிறகு"

"
எம் நிலத்தின் பாடல்களால் தானியக்கிடங்குகள்
நிறைந்தன"
என்றெல்லாம் நிலம் சார்ந்த படிமங்களை, உவமைகளை உருவக்கியிருக்க,, நீ வரவே இல்லை என்னும் கவிதை பிரிவின் பாடலாய் மாறியிருக்கிறதெனலாம்.
நம் சங்க இலக்கிய மரபில் பிரிவும் பிரிவின் நிமித்தம் படைக்கப் பட்ட இலக்கியமும் மிக முக்கியமானது.தலைவன் பிரிந்து செல்வதை ,'போர் வயிற் பிரிவு', பொருள் வயிற் பிரிவு' எனக் காண்கிறோம்.
அறத்தொடு நிற்றலின் பின் (காதல் வெளிப்படுத்தப்பட்ட பின்பு) தலைமகன் உடனே மணந்து கொள்ளாமல், பொருள் தேடப் பிரிந்து போயிருக்கிறான். அவன் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள். மழைக்காலம் வந்துவிட்டதை அறியும் தலைவன் வந்துவிடுவான் எனத் தோழி தேற்றுகிறாள்.
தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் :
யானை மூங்கில் நெல்லைத் தின்றுவிட்டு மகிழ்ச்சியுடன் உறங்கும் மலைப்புறம்; சந்தன மரங்கள் நிறைந்த “வாடு பெருங்காடு” அது. அங்கே பெருமழை பொழிந்தால் அச்சந்தரும் ஆழமான சுனைகளில் நீர் நிறையும்; மலைப்பக்கங்களில் அருவிகள் ஆர்ப்பரிக்கும்; கற்களைப் புரட்டிக் கொண்டு வேகமாக ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மூங்கில்களை மூழ்கடித்துக் காட்டில் மோதி ஆர்ப்பரிக்கும். இதோ, இப்போதே மழை பொழிய வானம் மின்னி முழங்கிக் கொண்டிருக்கிறது.’, நற்றிணைப் பாடல் பேசும்.
அப்படியொரு சித்திரத்தை கதிர்பாரதி உருவாக்குகிறார்.
"என் கரம்பை நிலத்தில்
உதிர்ந்து விழுந்துவிட்ட தென்னங்குரும்பைகளைக்
கடித்துச் ச‌திராடுகின்றன ஜோடி அணில்கள்”
என்று தொடங்கும் கவிதை,
"இந்தக் கோடையும் கைவிட்டுப் போய்விட்டது"
என்று முடியும்.தலைவிக்கு பதில் தலைவன் கூற்றாக.
நிலம் சார்ந்த கவிதைகளின் ஆளுமை, தொகுப்பை வயப்படுத்தியிருப்பினும் பிற பண்பின் பாற்பட்ட தற்கால சூழல் சார் படைப்புகளும் தொகுப்பில் கவனம் கொள்ளத்தக்கவையே.
முத்தத்தில் உயிர் வளர்க்குமொருவனை அறிய முடிகிறது. அதேசமயம் புன்செய் வெயிலாகும் முத்ததின் முற்றத்தில் தேம்பிக் குலுங்குகிற உடம்பென்பது நினைவின் ஸ்தூலவடிவமெனக் கூறிடவும் இயல்கிறது.
வருத்தங்களை முத்தமிடும் மனத்தின் தன்மை பரிசீலனைக்குரியது.
நகர்ப் புறத்தினை மெட்ரோபாலிடன் நிலம் என்கிறார்.இருசக்கன வாகனத்தில் குழந்தையை ஏற்றிக்கொண்டு செல்லும் தந்தை ,அலைபேசியில் பேசுவதும் ஆபத்தான சூழல்கள் உருவாவதும் ஒரு கவிதை.
கைவிரல்களைக் கூப்பி இல்லம் உருவாக்கும் திலீபன், அதுவே நனைந்து விடாதிருக்க உள்ளங்கை குவித்து மூடும் பாவனை குழந்தமையின் உச்சங்களில் ஒன்று.
" எனக்கும்
உன் நினைவுகளுக்குமிடையில்
சிகரெட்டின் அளவேஇருக்கும்
இடைவெளியின் முன்முனையில்
ஆசையைப் பற்ற வைக்கிறதுஇரவு
உறிஞ்சி இழுத்த இழுப்பில்
விடிகாலையின்கிழக்குக்கு
சிவந்து விட்டது."
என்னும்வரிகளில், ஒரு இடைவெளியின் அளவு ஒரு சிகரெட்டின் அளவென்பது அரூபத்தின் தன்மையை ஸ்தூல வடிவத்தில்ம மாற்றும் கவிதை உத்திதான். ஆனால் ஆசையைப் பற்ற் வைத்து இழுத்து,புகைத்து ,உறிஞ்சி விடிகாலைக் கிழக்கைச் சிவக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்புடையது.
நிறைய கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம் எனுமளவு பல கவிதைகள்.

" நமது நிலம் குறித்து, நிலத்தின் மீதான நமது வாழ்வு குறித்து , அதன் விழுமியங்கள் குறித்து யாரேனும் பேசினால் அவரை அன்பு செய்யத்தான் வேண்டும். " ,என்கிறார் லிபி ஆரண்யா.
நான் அதனை வழி மொழிகிறேன். 'வேண்டும் ,ஏனெனில் தோன்றும்'.
மேலும்,நான் ஒன்றை முன்மொழிகிறேன்.யாதெனில், சங்க காலக் கவிதைகளின் நீட்சியாகவே சமகால நவீன கவிதைகளைக் காணமுடிகிறதென்னும் கூற்றின், சிறந்த அடையாளமாக இக்கவிதைகளைக் கொள்ளமுடியும்.

தமிழ்மணவாளன்