27 December, 2014

சற்றுமுன் வந்த அலை



சற்றுமுன் வந்த அலை
கதையின் கதை
கதிர்பாரதி
''2012     -ம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் சுதந்திரத் தினத்துக்கு மறுநாள் வந்த அந்த வியாழக்கிழமை, ஏன் நம்ம வாழ்க்கையில வந்துதொலைச்சதுனு இன்னைக்கும் அழுகையா வருது. அந்த வியாழக்கிழமையிலேயே எங்க வாழ்க்கை தேங்கிப்போச்சு. இயேசு நாதர் சிலுவையில் இறந்த வியாழக்கிழமையை 'பெரிய வியாழன்’னு சொல்வாங்க. அதுபோல அந்த ஆகஸ்ட் வியாழன், எங்களுக்கு துயர வியாழன். அன்னைக்குத்தான் என் மகனை அந்தப் பள்ளியோட நீச்சல்குளத்தில் பறிகொடுத்தேன்'' - வார்த்தைகளின் ஒவ்வோர் எழுத்திலும் துயரம் வழிகிறது ஆர்.என்.ஆர்.மனோகரிடம். இவர் 'மாசிலாமணி’, 'வேலூர் மாவட்டம்’ படங்களின் இயக்குநர். 'சலீம்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியவர். சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த இவரது 10 வயது மகன் ரஞ்சித், அந்தப் பள்ளியின் நீச்சல்பயிற்சி வகுப்பின்போது கவனக்குறைவால் தண்ணீரில் மூழ்கி இறந்துபோக, பெற்றோர்கள் மத்தியிலும், பள்ளிகளின் மத்தியிலும் சோகமும் பயமும் பரபரப்பும் பற்றிக்கொண்டன. 
''என்னோட பதிமூணு வயசுல என் அப்பாவை இழந்து, வறுமையோடு உருண்டுபுரண்டு வளர்ந்தவன் நான். என் பையன் ரஞ்சித் பிறந்தப்போ அவ்ளோ சந்தோஷப்பட்டேன். வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றதை அவன்கிட்டதான் கத்துக்கிட்டேன். அவன் சந்தோஷத்தோடும் கேள்விகளோடும் ஆச்சர்யத்தோடும் இந்த வாழ்க்கையை எதிர்கொண்டவன். அவன் படிச்ச பள்ளியில் நீச்சல் பயிற்சிங்கிறது கட்டாயம். ஆனா, அதை அவன் அவ்வளவு சந்தோஷமாக் கத்துக்கிட்டான். அந்த நீச்சல்குளத்துலேயே அவன் வாழ்க்கை முடிஞ்சு போனதுதான் இன்னைக்கும் மர்மமா இருக்கு. ரஞ்சித் அசராம கேள்விகள் கேட்டுட்டே இருப்பான்.
ஒருமுறை குடும்பத்தோடு எல்லாரும் திருப்பதி போனோம். அப்போ அவன், 'திருப்பதியில் ஸ்விம்மிங் பூல் இருக்குமாப்பா?’னு கேட்டான். 'அங்க சாமிதான் இருக்கு. ஸ்விம்மிங் பூல் இல்லை’னு சொன்னேன். 'ஏன்... சாமிக்கு நீச்சல் தெரியாதா?’னு சிரிச்சான். சாமிக்கு தெரியாதுதான்போல. இல்லேன்னா, என் ரஞ்சித்தைக் காப்பாத்தியிருக்குமே!
கேள்விகள்போல கனவுகளும் ரஞ்சித்துக்குத் தீர்ந்ததே இல்லை. ஒருமுறை கம்ப்யூட்டர்ல மகாராஜா பேலஸ்போல ஒரு படத்தை வரைஞ்சு என்கிட்ட காண்பிச்சு, 'எப்படி இருக்கு?னு கேட்டான். நான் சிரிச்சுக்கிட்டே 'என்ன இது?’னு கேட்டேன். 'என் ட்ரீம் ஹவுஸ்பா... இன்னும் ஸ்விம்மில் பூல் மட்டும்தான் பாக்கி. அதையும் கட்டிட்டா நான் ஜாலியா நீச்சலடிப்பேன்’னு சொன்னான். அவனைப் பார்த்துப் பொறாமைப்பட்ட நிமிஷம் அது. என் பையன் இறந்ததுக்கு அடுத்து வந்த வியாழக்கிழமை சென்னையில மழை கொட்டோகொட்டுனு கொட்டுச்சு. 'இந்த மழை போன வியாழக்கிழமை வந்திருக்கக் கூடாதா... ஸ்விம்மிங் கிளாஸ் கேன்சல் ஆகிருக்குமே’னு என் மனைவி வடிச்ச கண்ணீரின் அளவு அந்த மழையைவிட அதிகம்.
ஒருநாள் ரஞ்சித் என்கிட்ட, 'நீங்க மட்டும் அடிக்கடி ஃப்ளைட்ல பறக்கிறீங்க. எங்களைக் கூட்டிட்டுப் போக மாட்டீங்களா?’ கேட்டான். அவங்களை அதிகமா காந்தி பீச்க்குத்தான் கூட்டிட்டுப் போயிருக்கேன். கடைசியா நான் காந்தி பீச்சுக்குப் போனது ரஞ்சித்தோட அஸ்தியைக் கரைக்கத்தான். அதுக்குப் பிறகு இன்னைக்கு வரைக்கும் எங்களால அங்க போக முடியலை. அஸ்தியோடு கடல்ல விட்ட என் பிள்ளையின் சிறு எலும்புத்துண்டை, ஏதாவது ஒரு அலை தூக்கி வந்து எங்க காலடியில போட்டுட்டா, நாங்க வலியில தவிச்சுப்போவோம்கிற பயம்தான் காரணம்.
'வீசிங் பிராப்ளம் இருந்திருக்கு. அதனால மூச்சுத்திணறி இறந்துபோனான்’னு பள்ளி நிர்வாகம் சொன்னது. 'நுரையீரல் முழுக்க தண்ணி புகுந்து செத்துப்போனான்’னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது. உண்மை என்னன்னு நீதிமன்றத்தில் தெரிஞ்சிடும்னு, நாங்க அமைதிக்குள்ள எங்க கண்ணீரைப் புதைச்சுட்டுக் காத்திருக்கோம்.        
ரஞ்சித் இறந்துபோன சில வாரங்களுக்குப் பிறகு அவன் படிச்ச பள்ளியில் இருந்து போன் பண்ணி, 'உங்க பையன் ஸ்கூல் பேக் இங்கே இருக்கு. வந்து வாங்கிட்டுப் போங்க’னு சொன்னாங்க. அந்த பேக்ல இருந்த ஒரு நோட்புக்ல, 'என் ஃபேமிலியோடு நான் லண்டனுக்கு  டூர் போனேன். அங்க ஒரு தீம் பார்க்ல ஆசை தீர விளையாண்டேன். ஸ்விம்மிங் பூல்ல நீச்சலடிச்சேன்’னு கற்பனையா ஒரு பயணக் கட்டுரை எழுதியிருந்தான். பக்கத்துலயே ஒரு ஸ்விம்மிங் பூல் வரைஞ்சு அதுல ஒரு மொம்மையை மிதக்கவிட்டு, 'இது நான்’னு குறிப்பிட்டிருந்தான். அதைப் பார்த்ததும் நான் நொறுங்கிப்போயிட்டேன்.
அந்தப் பொம்மைபோலத்தானே சார்... என் பிள்ளையும் அந்த நீச்சல்குளத்துல மிதந்திருப்பான்!''
நன்றி : 30.12.2014 ஆனந்த விகடன்