30 September, 2010

முத்தம்

ஒளி சுவிகரித்துக்கொண்ட
உன் முத்தங்கள்தாம்
விண்மீன்களாயின
சிறகு முளைத்த முத்தங்களில்
தேவதைகள் தரிசனம் தந்தனர்
முத்தங்களைத் திருடி கூடுகட்டி
தேனீக்களாய் பரிணமித்தன குளவிகள்
முத்தங்கள் எட்டாது தலைசுளுக்கவே
நரிகள் சொல்லின்
அந்த முத்தம் புளிக்கும்
உன் முத்தங்களின் ஆழத்தில்
முத்தம் குடித்து முத்தம் குடித்து
முத்தமானான் அவன்

09 September, 2010

ஆயினும் ஆறுதல்

நெருக்கித் தள்ளி வாழ்வு விதிர்விதிர்த்துத்
தளும்புகிற கணங்களைத்
துடைத்துவிடும்படிக்கு உகுக்கிறான்
மூன்றரை வயதான கபிலன்
ஆறுதல்தான் என்று தெரியாமல்
வார்த்தைகளை
''இந்தா அப்பா தண்ணி குடி''
எனினும் அதனால் ஒன்றும்
ஆகவில்லைதான்
ஆயினும் ஆகியிருந்திருப்பின்கூட
இந்தளவு ஆறுதலடைந்திருக்க
மாட்டார் அப்பா

நன்றி: உயிரோசை (27.09.10)


05 September, 2010

நாட்டாமை

மௌனங்கள் நொதித்துக்கிடக்கும் அவ்வூரின்
திசைகள் கூடிக்கொள்ளும் நாற்சந்தியில்
விற்பனைக்கு வந்ததுபோல வந்தன வார்த்தைகள்

அர்த்தங்களின் ஆழ உயரங்களுக்கு ஏற்ப
வீழ்ந்தும் எழுந்தும் கொண்டிருந்தன
வார்த்தைகளின் மதிப்பு

அவரவர் தேவைக்கேற்ப விநியோகமானதில்
மெலிந்த வலிந்த வார்த்தைகள் கலந்தே இருந்தன
வசீகரத்துக்காகவும் மயக்கத்துக்காகவும்

'கடவுள்' வார்த்தையைக் கொள்முதல் செய்தவன்
போதிக்கத் துவங்கினான்
கடவுள் வார்த்தையாய் இருக்கிறார்
வார்த்தைகளனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றன
கடவுளன்றி வார்த்தையில்லை
வார்த்தையின்றி கடவுளில்லை

பின்னிப்பின்னி சாம்ராஜ்யத்தையும்
செங்கோலையும் நிர்மாணித்துக்கொண்ட
'கடவுள்' வார்த்தையின் சிம்மாசனம்
'சாத்தான்' வார்த்தையை வாங்கிப் போனவன்
கேட்டக் கேள்வியில் கலகலக்க ஆரம்பித்தது

'சாத்தான்' வார்த்தையின் அந்தரங்கத்தில்
'கடவுள்' வார்த்தை தன் பங்குக்கு ஒளிபீய்ச்சியதும்
அழுக்குகளால் வெட்கமுற்றது அதன் இருட்டு

அந்தரங்கங்கள் வெளிச்சப்பட்டுப் போனதில்
சஞ்சலம் கொண்ட கடவுளும் சாத்தானும்
சந்தித்துக்கொண்டன
இப்போது மௌனங்களால்
ஊர் நொதிக்கத் துவங்கியது


நன்றி: கல்கி தீபாவளி மலர் 2010