26 September, 2024

கவிதை : கதிர்பாரதி ~ ரோலர் பூச்சி


சா
லையைச் செப்பனிடும்
ரோடு ரோலர் சக்கரங்கள்
பூமியில் இழைகின்றன
நீர்ப் பூச்சிகள்போல.

தேரோட்டத் திருவிழாவை வசீகரிக்கும்
நாட்டியக்காரி ஒப்பனையாக
மேலெழும்பி வருகிறது
பழுது நீங்கும் சாலை.

வெட்டி வெட்டிச் சுழன்ற சக்கரங்களை
இடைநிறுத்தி நிறுத்தி
தாகசாந்தி வேறு.

பின்னர்
பூ ஜல்லியில் தார்அமுதம் பாவ
முன்னும் பின்னும் பூச்சிகள் இழைகின்றன.
 
ஓர் உறுமநேரத்தில்
ரோலர்க்காரன் அவனே எதிர்பாராமல்
முணுமுணுத்துவிட்டான்…
`வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுது`

அப்போது ரோலர்பூச்சி
குழைந்து குழைந்து இழைக்கிறது
ஒரு
வெண்ணிலா சாலை.

- கதிர்பாரதி

2 comments:

VANNAISIVA SIVAKUMAR said...

அருமை

Anonymous said...

அருமைங்க சகோ