14 October, 2010

கண் பேறு

குழந்தை கொஞ்சும் பலூன்
குழந்தையாகிவிடுவதையும்
திருவிழா நெரிசலினூடே
குழந்தையை ஈர்த்துவிடும் பலூன்
தேவைதையாகி விடுவதையும்
காணும் கண்கள்
பேறு பெற்றவை

மீட்பு

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்

நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும் எமக்கு

எழுதுகோல் முளைக்கும்
கணினியும் கண்டடைவோம்
மரித்திருக்கும் எம் குலசாமிக்கு
உயிர்ப்பு துளிர்விடும்
சாங்கியமும் கொண்டாட்டமும்
மீண்டும் நிறம்கொள்ளும்
நிலத்தின் தாதுக்களால் வண்டல்களால்
செப்பமுறும் எம் மூளை
இருதயம் திடச் சித்தமடையும்
கனவுகள் கள்வெறியூட்டும்
இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு
றெக்கை அரும்பும்
மூதாதையர் தேடிக் களைப்படைந்த
புதையல்கள் அகழாமல் மேல்வரும்
நீளும் ஆயுள்ரேகைகளில் எம் சந்ததி
வளப்பமுறும்
எல்லாம் கிட்டும் எமக்கு

யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை
மீட்டாக வேண்டும்

நன்றி : உயிர்மை - நவம்பர் 2010

12 October, 2010

காலம்காலமாய் காலம்

இரண்டாய் வகுந்து கிடந்த ஒற்றையடிப் பாதையில்
வளைந்தும் நெளிந்தும் புணர்ச்சிக்குப் பிறகான
மயக்கத்திலிருக்கும் வனப்பாம்பாய்
நீண்டு கிடந்த காலம்
வெம்மையைக் குடித்து வெறி பிடித்திருந்தது

ஊடறுத்த என் கால்களின் வயிற்றில்
உப்புப் படலங்களைப் பிரசவிக்கச் செய்த
அதன் முகத்தில் சாதித்த செருக்கு

குளத்தின் அலைகளைக் கட்டிக்கொண்டு
யாத்திரை துவக்கிய காலம்
எதிர்ப்பட்ட கிழவியிடம்
குளுமையைத் திணித்ததில்
தாய்மையின் வாசம்

ஆட்டிடையனின் வளைந்த கொம்பில்
கண்கிறங்கி மணிச் சத்தத்தில்
தரித்த கனவை
நரிகள் கிழித்துப் புசிக்க அலறியது

கணவனோடு சிணுங்கிக்கொண்டு
தனித்திருந்தவளிடம்
நாணம் பூசி அது பருவத்துக்கு வந்த
அந்தக் கணம் முதல்தான்
தென்றலின் சிருங்காரத் தொந்தரவு

புள்ளினங்கள் அலைந்துருகும் அத்துவானத்தில்
பையப் பைய ஓர் ஆக்கிரமிப்பாளனைப் போல்
ஊடுருவும் காலம் குறித்து
எவ்விதப் பிரக்ஞையுமற்று ஊரும்
நத்தையின் முதுகில்
மனசை ஏற்றி அனுப்பிவிட்டு
நரைக்கத் துவங்கிக்கொண்டிருந்தான்
அவன்.

08 October, 2010

விளையாட்டு

விதைப்பு நாள் ஒவ்வொன்றிலும்
வார்த்தைகளில் சந்நதம் உருவேறிக்கொள்ளும்
தாத்தையாவுக்கு

விதைக்கையில் சிரித்தல்
ஆகாதென்று சினப்பார்
விதைக்கும் நிலத்தை விழுந்து
சேவிக்கச் சொல்வார்; செய்வார்
பிரசாதமேந்தும் பக்தனின் பாவனையில்
கையிலேந்திய விதைநெல்லை
குவித்துவைத்துக் கும்பிட்டுக் களிப்பார்
நெல்லோடு சேர்த்து
தம் மனசின் முணுமுணுப்பையும் விதைப்பார்
முடித்த பிற்பாடும்
மறக்காமல் விதைப்பார் எம் மனங்களில்...

மக்கா எனக்குக் களத்துலேயே
கல்லறைக் கட்டுங்கடா
அச்சுப்பிசகாது அப்பாவுக்கும்
அப்படியேதான் வாய்த்தது
மண்ணோடு மல்லுக்கட்டி
மக்கிப்போகும் வாழ்வு

ஏதேதோ தேவைகள் அழுத்த
கைமாறிய மண்ணை மீட்க இயலாமல்
வார்த்தைகள் தொண்டையைக் கிழிக்கும்
சோகம் எனக்கு

முப்போகமும் முங்கித் திளைத்த மண்
வெறுமையாய் விரிந்து கிடக்கிறது
கபடியையும் கிட்டிப்புல்லையும்
ஏங்கவைத்துவிட்டு எங்களூர் இளசுகள்
அதில் ஸ்டெம்ப் நட்டு கிரிக்கெட் ஆடுகிறார்கள்