உடலிலேயே கருவாகி வளர்ந்தாலும் குழந்தை பிறக்கும் நேரத்தை எவராலும் சொல்லிவிட முடியுமா? அக்குழந்தை வளர்ந்து வாழ்ந்து இறந்துபோகும் நேரத்தைத்தான் கணித்துவிட முடியுமா? பிரபஞ்சம் கடக்கும் விஞ்ஞானத்தால் கூட உயிர் குறித்த உன்னதத்தை விளக்க இயலாது. ஆனால் ஒரு கவிஞனின் கரங்களுக்கு எல்லாம் சாத்தியம் . அவ்வாறே , ஒரே சமயத்தில் பிறந்தும் இறந்தும் நிறையாய் வாழ்ந்தும் கொள்ளலாம் கதிர்பாரதியின் 'உயர்திணைப்பறவை'யோடு.
இவர் தொகுத்த ``மெசியாவின் மூன்று மச்சங்கள்`` கவிதைப் புத்தகம் ஏற்கனவே பரிட்சயப் பட்டிருந்தாலும் உயர்திணைப்பறவையோடு உயரப் பறக்க பிரயாசைக் கொண்டு சென்னை கண்காட்சியில் புத்தகத்தை தேடினேன். பறவை சற்று உயர்ந்து பறந்ததால் என் கரங்களில் தவழ கொஞ்சம் தாமதமானது. இருந்தும் அவருடன் பேசும் ஒரு நல்வாய்ப்பு கிட்டியது பெருமகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் புத்தகமும் நானும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொள்ள ஏங்கிக் கிடந்தோம். ஒருவழியாக நேற்றிறவு கடை வரிகள் வழிய கண்நிரப்பிக் கொண்டேன்.226 பக்கங்களை கவித் தீயிட்டு நிரப்பியிருக்கிறார் கதிர்பாரதி. ஆம் பாரதிதான்.முண்டாசில்லை, ஆனால் கனலுண்டு. சிறந்த கவிதைகளை எடுத்துக்காட்டுவதற்காய் பக்கங்கள் குறிக்கப்போய் A4 தாள் தீர்ந்ததுதான் மிச்சம்.விமர்சனம் படிக்கும் சாக்கில் வாசகர் உறங்கிவிடக்கூடாதெனும் நல்லெண்ணத்தில் விமர்சகர் உறையை சுருக்கிக் கொள்கிறேன். எண்களை தலைகீழாக வகுத்து சலிக்காமல் படிக்க வைக்கும் இவரின் கவிதைக்கான கருப்பொருட்கள் ஆட்கொள்ளாதது இவ்வுலகில் எதுவுமே இல்லை. சில கவிதைகள் பிரபஞ்சம் தாண்டி பயணப்படுகின்றன. 'அநாதை மேகத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வரும் அம்மா, ஏர்வாடியில் தலைகோதும் அம்மா, ஒழுங்கையில் சுருட்டு குடிக்கும் அம்மா,பூனையை புலியாக்கும் அம்மா' இன்னுமின்னும் இருக்கிறாள் ஏராளமான அம்மா கதிரின் சொற்களுக்குள்.பிரம்மாண்டக் கடைகளுக்குள் புன்னகை மிளிர கொண்டையணிந்து ஒரே மாதிரி சேலையுடுத்தியப் பெண்களை நாம் பார்க்கும் கோணத்திலல்லாது ' அவளுக்கு அருளப்பட்ட பழைய முக்காலியோடு அவளடைந்த கணநேர நிம்மதியை' பார்க்கிறார் இவர்.
ஒரு பறவையின் குரலை அதனிடமிருந்து தனித்துப் பிரித்து இறுதியில் ஊதாரி மைந்தனாக சித்தரிப்பதை இதுவரை நான் படித்ததில்லை. அதுபோல ஒரு சமையலறை தனியே புறப்பட்டு செல்கிறது. அது எதிர்பட்டவர்களையெல்லாம் அகோரப்பசியில் விழுங்கி தீர்த்து இறுதியில் தான் வசித்த வீட்டைக் கண்டதும் உள்ளே சென்று படுத்துக்கொள்கிறது. யார் இந்த சமையலறை என யூகிக்க தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்.திலீபன், ஆனந்தன், கபிலன், செங்கதிர்செல்வன் (இயற்பெயர்) என இவருடனும் பிள்ளைகளுடனும் ஒரு குவளை தேனீர் சுவைத்துக்கொண்டே கவிதைளில் பயணிக்கச்செய்கிறார்.'திலீபனின் குட்டிக் கடிகாரத்தில் சொட்டும் மணித்துளிகள் இவரின் கடிகாரத்தில் இடி மின்னலோடு மிதத்தூறலும், அப்பாவின் கடிகாரத்தில் அடைமழையாகவும்,தாத்தாவின் கடிகாரம் ஈரம் வற்றி உலர்ந்து ஓய்ந்துவிட்டதாகவும்' படித்த கணத்தில் என் மீது தூறலிட்டுக்கொண்டிருந்தது காலம்.இக்கவிதையை அதன் நயம் குன்றாமல் வாசகருக்கு பகிர விளைகிறேன்.
No comments:
Post a Comment