22 September, 2024

விமர்சனம் ~ டிஜிட்டல் சாதியை நவீனமாக்கிவிட்டது~ 'நரகத்தில் சொர்க்கத்தின் பிரதிநிதி' ~ நாராயணி கண்ணகி சிறுகதை ~ கதிர்பாரதி

ழுத்தாளர் நாராயணி கண்ணகியின் மிக நல்ல சிறுகதை 'நரகத்தில் சொர்க்கத்தின் பிரதிநிதி' ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருந்தது. டிஜிட்டல் யுகத்தில் சாதியின் நவீன முகத்தைச் சுட்டுகிறது கதை. 

ஊர்ப் பிணத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் சொர்க்கம் ரதம் (செகண்ட் ஹேண்ட்) வாங்க, நகர வங்கி ஒன்றின் 'லோன் மேளா'வில் மேலாளரிடம் கடன் கேட்கிறார் அந்த வங்கிக் காவலாளி வரதன். இவர் ஒரு (முன்னாள்) சுடுகாட்டுப் பணியாளரும்கூட. லோன் கிடைப்பதற்கு முன்பின் வரதனின் வாழ்க்கையைக் குறுக்காக வெட்டி சாதியத்தின்  விஷ முகத்தைக் காட்டுகிறார் நாராயணி கண்ணகி.

நாராயணி கண்ணகி
கதையில்... மேலாளரிடம் வங்கிக் கடன் கேட்க நினைக்கும் வரதனின் ஒத்திகைத் தவிப்பும், லோன் மேளா நடக்கும் அன்று இழவு வேலைக்கு அழைக்கும்  ஊர்ச் சாதி வசவும், வங்கிக்குள்ளே மேலாளரையும் உள்ளித்துப் பேசும் பணியாளர்களின் சாதியக் கிண்டலும், தாமதமாகச் சென்றதால் வரதனின் பள்ளிப் பிராயப் பிள்ளைகளை சாவு வேலைக்குப் பயன்படுத்தும் சாதியத் திமிரும்... வலிக்க வலிக்கப் பதிவாகியிருக்கிறது.

'இப்பலாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க?' எனக் கேட்டுக்கொண்டே சாதியை நவீனமாக்கிவிட்டது மெட்ரோபாலிட்டன் சிட்டி. 'தாயா புள்ளையா பழகுற கிராமங்க இது' என்று சொல்லிக்கொண்டேதான் ஆணவக் கொலைகள் அரங்கேறுகின்றன ஊர்ப் புறத்தில். 

சாதி கற்பிதத்துக்கு... படிப்பு பற்றி கவலை இல்லை; மேலதிகாரி என்கிற கவனம் பார்க்காது; சக மனிதன் என்கிற எண்ணம் கிடையாது; பாலினச் சமத்துவம் அறியாது; மூன்றாம் பாலினம் பற்றிய அறிவு இருக்காது... இன்னும் பிற நல்லன எவையும் அதற்குப் பொருட்டில்லை. அது மேலிருந்து கீழாக அடுக்கடுக்காகச் சுரண்டும்; உறிஞ்சும்

அப்படித்தான் அது வரதன் சாதியைச் சேர்ந்த வங்கி மேலாளரையும் சுரண்டுகிறது. வரதனின் பள்ளிப் பிராயப் புள்ளைகளையும் சுரண்டுகிறது. வரதனின் மனைவியைவும் சுரண்டுகிறது. 

ஊருக்கு வெளியே வாழும் வசதியானவர்கள் ஊருக்குள் போய் இடம் வாங்கிவிட முடியாத நுட்பத்தில் இயங்குகிறது சாதி.

வடிவத்திலும் மொழியிலும் பிரமாதமான சிறுகதையாக தொழில்பட்டுவந்திருக்கிறது 'நரகத்தில் சொர்க்கத்தின் பிரதிநிதி' கதை. காவலாளி சீருடை அணியும்போது வரதன் அடையும் கூச்சமும், அவர் குடும்பத்தினர் புளகாங்கிதமும் கதையின் கவித்துவப் பூச்சுகள் கொண்ட இடங்கள்.

'சொர்க்க ரதம் வாங்க லோன் எல்லாம் தர முடியாது. நான் உதவிசெய்றேன் உன் பிள்ளைகளைப் படிக்க வை' என வங்கி மேலாளர் வரதனிடம் சொல்லும் இடமும் மிக முக்கியமானது. ஏனெனில் யதார்த்தத்தில் அவரால் அப்படித்தான் உதவ முடியும்.

இதற்கு முன்பு மு. சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதையைப் படித்துவிட்டு எப்படி வேதனையும் வெப்புறளாமுமாக உணர்ந்தேனோ அதைவிட அதிக வேதனை தந்தது நாராயணி கண்ணகியின் இந்தக் கதை.

இதோ மு.சுயம்புலிங்கம் கவிதை....

நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் 
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை 
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும் 
ஒரு அடி கொடுப்போம் 
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள் 
தீட்டுக்கறை படிந்த 
பூ அழிந்த சேலைகள் 
பழைய துணிச்சந்தையில் 
சகாயமாகக் கிடைக்கிறது 
இச்சையைத் தணிக்க 
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது 
கால்நீட்டி தலைசாய்க்க 
தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது 
திறந்தவெளிக் காற்று 
யாருக்குக் கிடைக்கும் 
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது 
எதுவும் கிடைக்காதபோது 
களிமண் உருண்டையை வாயில் போட்டு 
தண்ணீர் குடிக்கிறோம் 
ஜீரணமாகிவிடுகிறது 
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை 
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

No comments: