15 May, 2013

நிலவு நிலவுலகின் மீது ஒரு வெள்ளை வண்ணத்துப்பூச்சியைப் போல் என் முன் பறக்கவிட்ட அதிசயம். ====== தமிழ் ஆழி ஏப்ரல் 2013 இதழில் எனது ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் அய்யப்ப மாதவன் எழுதிய விமர்சனம்







கதிர்பாரதியின் கவிதைகள் எளிய சொற்களினால் சுயமான தேர்ந்த அனுபங்களிலிருந்து கட்டப்பட்டவை என்று உணர முடிகின்றது. கவிதைக்கானக் கருப்பொருள்கள் மிகவும் வித்தியாசமானவை. ஊருக்கு மத்தியிலிருக்கும் பிள்ளையாரை வேடிக்கையாகவும் தொலைவான ஊர்களுக்குச் செல்லும் பேருந்துப் பயணத்தினூடே நிகழும் அனுபங்களை மிக நுணுக்கமாகவும் கவனித்து எழுதிவிட முடிகின்றது அவரால்.
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற தன் முதல் கவிதை நூலிலேயே இளம் கவிஞர்களில் தன்னை ஒரு முக்கியமான கவிஞராகத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது.
சொற்களை கவிதைகளில் பயன்படுத்தும்விதம் புதிதாகத் தோன்றுகிறது. மற்ற கவிஞர்கள் போலில்லாது இதுவரை யாரும் பயன்படுத்தாதச் சொற்களைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறாரென்றும் சொல்லத் தோன்றுகின்றது.
பாழடைந்த வீட்டைப் பற்றிய படிமங்கள் நிரம்பிய ஒரு கவிதையில் ஒரு பத்து பக்கத்தில் சொல்லவேண்டிய ஒரு கண்ணீர்க் கதையை பத்துவரிகளில் சொல்லி நம்மை அந்தப் பெண்ணின் கேவல்களுக்குள் அழைத்துப்போய் நம்மையும் கேவ வைத்துவிடுகிறார். ஒரு கவிஞனால்தான் ஒரு கதையைக்கூட சுண்டக் காய்ச்சிய குறுகிய வடிவத்தில் படைத்துப் படிப்போரை ஆழ்ந்த சோகத்துக்குள் ஆழ்த்திவிட முடியும். இந்தக் கலை கைவரப்பெற்ற கவிஞனாக கதிர்பாரதி இருக்கிறாரென்பதற்குச் சாட்சியாக அவருடைய இந்த முதல் கவிதை நூலே இருக்கின்றது என்று சொன்னால் மிகையில்லை.
கவிஞனுக்குரிய அதீதக் கற்பனைகள் கவிதைகளில் நிரம்பிக் கிடக்கத்தான் செய்கின்றன. கொக்கு நீரை தன் அலகால் சீண்டுகையில் பிம்பமாய் நீரிலிருக்கும் நிலவு பறந்துவிடுவதாக ஒரு கவிதையில் எழுதுகிறார். படித்தபோது உண்மையில் பறக்கும் கொக்குக்குப் பதில் நிலவு என் முன் அப்போது பறந்தது. நிலவு நிலவுலகின் மீது ஒரு வெள்ளை வண்ணத்துப்பூச்சியைப் போல் என் முன் பறக்கவிட்ட அதிசயத்தை கவிஞராலேதானே நிகழ்த்திக் காட்ட முடியும். இப்படி இந்தக் கவிதைகள் எண்ணற்ற இடங்களில் இவ்வுலகத்திலிருந்து என்னை எடுத்துச் சென்று எங்கெங்கோ இருக்கச் செய்தன என்பது மிகப் பெரிய உண்மை.
ஒரு பரோட்ட மாஸ்டர் உருவாகிறான் என்ற கவிதையில் ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாத பரோட்டாவும் ஒரு பரோட்டா மாஸ்டரை உருவாக்குவது குறித்து விவாதிப்பதாக ஒரு புனைவை மிக சுவராஸ்யமாக கவிதையாக படைத்திருக்கிறார். இப்படியெல்லாம்கூட புனைவைக் கவிதையிலும் சரியாக நிகழ்த்திக்காட்டிவிட முடியுமென்பதை கவிஞர் கதிர்பாரதி திறம்படச் செய்திருக்கிறார். அந்தப் பரோட்டா மாஸ்டர் எப்படியெல்லாம் பரோட்டாவைச் செய்யவேண்டுமென்பதை அந்தப் பரோட்டா போடும் கலையை மிக நேர்த்தியாக நம் முன்னே காட்சிகளில் நிறுத்தியிருக்கிறார். பரோட்டா போடும் காட்சியின் தத்ரூபத்தைக் கவிதைவழி படைத்திருக்கிறார். அவன் கனவில் பரோட்டா வட்ட வட்ட பெளர்ணமியாக வலம் வந்திருக்க வேண்டுமென்கிற கற்பனை ஆழ்ந்த வியப்பில் ஆழ்த்தியது.
படிப்பவர் ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கும் கவிஞராகவும் தமிழ் கவிதையுலகுக்கு ஒரு சவாலான கவிஞராகவும் தமிழுக்குக் கிடைத்த அருங்கொடையாகவும் திகழ்கிறாரெனவும் பெருமைபடச் சொல்லிக்கொள்ள விழைகின்றேன். இதுபோன்று அவரது கவிதைகள் இன்னும் இவ்வுலகுக்கு வருமென்றும் நம்புகின்றேன்.

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி, வெளியீடு : புது எழுத்