30 January, 2010

உலகம்

ஒளியின் வழித்தடம் அழிக்கப்பட்டு
இருளுறைநிலையில்
ஜன்னல் தாழிடப்பட்ட அவனதறை
ஒன்றுமில்லையென
இயல்பாய் இருக்கிறாள் மனைவி
இயல்பு திரிந்து தேம்புகிறது
அவனுலகம்

நன்றி: கல்கி (28.02.10)

22 January, 2010

நனைதல்

தமது செல்ல பாலகனை
உறக்கத்தில் ஆழ்த்தும்பொருட்டு
அப்பா சொன்ன கதையிலிருந்து
உயிர்கொண்ட ஸர்ப்பம்
புற்று ஒன்றை நிர்மாணிக்க
உறங்கிப்போகிற மகனால்
நனைகிறது அப்பாவின் பால்யம்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

20 January, 2010

பெரு மழை

உள்ளாடையின் அந்தரங்கம்
சொட்டச்சொட்ட நனைய
அவர்கள் ஆடித்தீர்த்த பெருமழையில்
கிளர்ச்சியுற்று
முளைகொண்ட மாஞ்செடியின்
முதல் காயைக் கொய்கையில்
அவளுக்கு மேலதிகமாக சுரக்கின்றன
மார்புகள்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

19 January, 2010

பச்சைய பருவம்

நீதான் வழிநடத்திப் போகிறாய்

மறியின் பச்சைய கனவுகளை
முடித்துவைக்கும் மேய்ப்பனைப் போல
எலிகளின் தானிய சபலத்தை
நிவர்த்திக்கும் கழனிகளைப் போல
உன்னை மையமாக்கி
சுழல்கிறதென் உலகம்

உனது கோபுரங்களில் குடியிருக்கும்
ஆசையின் கனவுக் கண்களை
உனது சுனைகளில் நீராட்டிச் சிவக்கவிடுவாயா

காதுகளை உரசித் தொங்கும்
நேர்த்திக் கடனென
காமத்தின் பக்கவாட்டில் ஆடுகின்றன
கொங்கைகளின் மீதான வேட்கை

ஒரு வட்டக் கிணறு போல
குறு அலைபரப்பும் உன் பருவத்தை
நம்பியிருக்கிறது அதன் புன்செய்நிலம்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

ப்ரியமான உப்பு

எதிர்பார்ப்பு
-விலக்கான நாட்களின் ஈர நசநசப்புக்கு
ஒப்பாய் எரிச்சலூற்றி இருக்கும்

கனவு
-மழலை ஈன்றவளின் பாலூட்டும் ஏக்கம்
அலுவலகக் கழிப்பறையில் பீய்ச்சப்படுதலாய்
துயருறுத்தி இருக்கும்

வார்த்தைகள்
-பிரசவிக்க இயலாது வயிற்றுப் பிள்ளையோடு
மரித்துப்போன தாயின் இயலாமையை
விதைத்திருக்கும்

முன்முடிவுகள்
-திரும்பிப் படுத்துறங்கும் உன்னை
வன்மையாய்த் திருப்பி உன்னனுமதியின்றி
புணரும் வேதனையைத் தந்திருக்கும்

ஆக்கிரமிப்பு
-பிரசவித்த வயிற்றின் கோடுகளென
வலியின் ரேகைகளை உள்ளுக்குள்
ஓடவிட்டிருக்கும்

எல்லாம் விலக்கி

ஓர் உதட்டுச் செடி முத்தப் பூவை புஷ்பிக்கிறது
ஓர் உதட்டுச் செடி கொய்கிறது

உப்பின் சுவை கூடுகிறது

18 January, 2010

துத்தா

பார்க்குமனைத்துக்கும் பார்த்தமாத்திரத்திலேயே
பெயர்சூட்டிவிடும் ஞானம் வாய்த்திருக்கிறது
ஒன்னரை வயது கபிலனுக்கு

அதற்கு முன்பிருந்த பெயர்குறித்தோ
பின்பு வரப்போகும் பெயர் பற்றியோ
அவன் கிஞ்சித்தும் கவலையுறுவதில்லை

களிகூர்ந்து அவன் சூட்டும் நாமகரணம்
ஒருபோதும் மொழியின் கூண்டுக்குள்
நிலைகொள்ளாது மேலாக
அர்த்தத்தைச் சிங்காரிக்கும்

கல்லணையை அவனுக்கு
அறிமுகப்படுத்திய கணத்தின் முடிவில்
தேங்கித் தளும்பிய புனலை
இத்தியென அள்ளியாடினான்

வீடு மீண்டதும் கல்லணையை
பக்கெட்டில் ஊற்றி அவன்
இத்தியாடுகையில் எதிர்பட்ட
எலியின் பொருட்டு
புவ்வாவென்று அலறினான்

கேட்கப்போன அப்பாவாகிய அப்பா
துத்தாவானார்
துத்தா அப்பவானால்
அப்பா என்னவாகும்

நன்றி: கல்கி (28.02.10)

16 January, 2010

ருது

உயிர்ப்பிடித்தெழும் நாட்களின் பிடரி பற்றி
உலுக்கிஎடுப்பதற்கெனவே
ஊட்டி வளர்த்தனுப்புகிறாய்
ருதுவான சொற்களை

விடைத்தலையும் பருவத்தை
செரித்துத் தீர்க்கவே
பசிவிரித்து தவம் கொள்கிறததன்
பிரவேசப் பாய்ச்சல்

ஏறி இறங்கும் ஏக்கப் பெருமுச்சுகளில்
திய்ந்தழிகின்றன அவை உமிழ்ந்துவிட்டுப்போன
கனவுபிம்பங்கள்

அஹிம்சைபுனைந்த அதன்
அர்த்த மையத்திலிருந்து
வெடித்துப்பரவும் சாத்தியக்கூறுளோடு
கனன்றுகொண்டிருக்கும் வன்முறையில்
உன்னழகின் உக்கிரம்

வெள்ளாமையின் கழுத்தறுக்க
கருக்கேந்தி நகரும் அதன் கரத்தில்
உனக்கெழுதிய கவிதையை
ஒப்படைத்ததால் தப்பித்தது காலம்

சொற்களை மனனிப்பதிலேயே
கழிகிறது வாழ்வு