23 June, 2012

மதுக்கூடங்களோடு புழங்குதல்



சமூகநலக் கூடங்களுக்குள் நுழைதல் போல
அத்துனை இலகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது.
கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது
அங்கு நுரைபூத்துத் ததும்பிக்கொண்டிருக்கும் சொற்களின் மீது
இடித்துக்கொள்ளாமல் நுழைதல் வேண்டும்.
உங்களுக்குரிய இருக்கையை அணுகும்போது கரிசனம் முக்கியம்.
உங்களுக்கு முன்பும் பின்பும் அமர்ந்ததும் அமரப்போவதும்
அதிஉன்னத அனுபவமல்லவே.
மதுசிப்பந்திகளிடம் புன்னகையைக் கொடுத்துவிட்டு
மதுவைப் பெற்றுக்கொள்ளுதலே நல்லப் பழக்கம்.
ஐஸ்கட்டிகளோடு உங்களையும் முக்கிவிடுகையில்
உயிர்த்திரவமென பூரித்துக் கிளம்பும் மதுவை முத்தமிடுங்கள்.
ஒவ்வோர் இருக்கையிலும் வெவ்வேறுலகம் சுழன்றுகொண்டிருக்கும்
எவருலகத்தோடும் ஒட்டாது உரசாது
நீங்களும் சுழலவிடுங்கள் உங்கள் உலகை.
போதையின் பெருங்காதலோடு உலகங்களை அவதானிப்பதுகூட
அடடா எவ்வளவு ஆனந்தம்; எவ்வளவு பேரானந்தம்.
இரண்டாவது, மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை உங்களுக்குக் குமட்டலெடுக்கத் தொடங்கும்.
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டுவிட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல் இன்னும் ஒரேயோரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிபெரும் விசும்பலில் மதுக்கூடமே தளும்பத் தொடங்கிவிடும்.
 

19 June, 2012

என் தேவனே... என் தேவனே...

திசைகளைப் பதற்றத்துக்குள்ளாக்கி
மாநரகசாலையில் விரையும்
ஞாயிற்றுக்கிழமை கசாப்புக்கடைக்காரனின்
இருசக்கர வாகனத்தில்
குறுக்குவாட்டாகக் கிடந்து கதறுகிற
மறியைப் பார்த்ததும்
நீங்கள் என்ன செய்வீர்கள்...
என் பிதாவே என் பிதாவே
ஏன் என்னைக் கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
என் தேவனே என் தேவனே

என்று கைத்தொழுவேன்
நான்.

11 June, 2012

கனவிலிருந்து எழுந்துபோய் சிறுநீர் கழித்தேன்



நெபுகாத்நேசர், தொங்குதோட்ட மாளிகையின் இரண்டாம் அடுக்கில்
காதற்பெண்டிரோடு அளாவிக்கொண்டிருந்த போதுதான்
முதன்முறையாக விழிப்பு வந்தது எனக்கு.
முதிர்ந்த வயதுடைய செந்நிற ஒயினை மேனியெங்கிலும் வழியவிட்டப்படி
கணவனாக வரித்துக்கொண்ட தம்பியோடு கிளியோபாட்ரா சல்லாபிக்க
வியர்த்து வழிந்ததில் தூக்கமே போய்விட்டது.
தம் தளபதியின் மனைவியைக் கர்ப்பவதியாக்கிய தாவீதை நோக்கி
அவனது கவண் கல்லே நார்த்தான் தீர்க்கத்தரிசியின் எச்சரிக்கையாக
விர்ர்ர்ர்ர்ர்ரென்று வேகமெடுத்துத் திரும்பிக்கொண்டிருக்க,
கட்டிலிலிருந்து புரண்டு தரையில் விழுந்தேன்.
பாதி உறக்கத்தில் குப்புறப் படுத்து உழன்றுகொண்டிருக்கையில்
கோபியர்களின் மார்பாடைகளைக் களவாடிக்கொண்டு
கொங்கைகளின் தரிசனத் திருவிளையாடல் நடத்திய கண்ணனால்
எழுந்தமர்ந்து இரண்டு தம்ளர் குளிர்நீரை விழுங்கினேன்.
அசோகவன சீதையின் பொருட்டு பத்துத்தலை காமத்தால்
ராவணனின் உடல்வெப்பம் தகிக்கத் தொடங்குகையில்
அறையில் எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தேன்.
அகலிகை சபலத்தில் இந்திரன் கௌதமமுனியாக உருமாற
சாபம் வாங்கி கல்லாய் உறைந்து கணத்தது இரவு.
தந்தையின் மரண கணத்திலும்
மனைவியோடு ஆலிங்கனத்தில் இருக்கிற மோகன்தாஸ் காந்தியாகி,
இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்க கோவணத்தை வரிந்து கட்டியபோது
எழுந்துபோய் சிறுநீர்க் கழித்துவிட்டு வந்தேன்.
எவ்வளவு சுகமாக இருந்தது தெரியுமா?