16 April, 2022

தேடலின் சிறகுகள் படபடக்கும் ‘உயர்திணைப் பறவை’: கதிர்பாரதியின் கவிதை நூல் விமர்சனம் – க.ரகுநாதன் நூல் விமர்சனம் | வாசகசாலை

 கவிதையின் குறியீடுகளும் படிமங்களும் சாத்தியமல்லாத உலகையும் காட்சிப்படுத்தி மனக்கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவை. நம்மை அயராது கேள்விகளின் முனையில், ஆழத்தின் ஆழத்தில், உச்சியின் உச்சத்தில், விரிவின் விரிவில்  வைத்திருக்க கவிதையின் ஒற்றைச் சொல்லால் முடியும். முதல் கவிதையில் தன் பயணத்தைத் துவங்கும் கவிஞர் கதிர் பாரதியின்  ‘உயர்திணைப் பறவை’ கடைசிப் பக்கம் முடிந்தும் இந்நூலில் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.

கட்புலனாகாத ஒன்றின் தீவிரம் நிரம்பிய இக்கவிதைகள் கவிதைக்கான பாடுபொருள் அரசியல், அழகியல், காதல் தாண்டி பெருமளவில் பரந்து விரிந்து கிடக்கிறது என்பதன் உள்ளர்த்தம் பொதிந்தவை. ஒரு புள்ளி அதிகமானாலும் அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும் கணினிக் கட்டளை போல ஒரு சொல்லில் அடுத்த தளத்தினுள் தள்ளிவிட்டு அகம் நோக்கும் இக்கவிதைகள், கையில் வைத்துள்ள ஒரு படிகத்தின் வழியே நுழைந்து எண்ணற்ற வண்ணத் துகள்களாகச் சிதறி கட்டற்ற காட்சிப் படிமங்களாக ஒளிர்கின்றன.

வாழ்வென்பதன் பொருளை தத்துவத்தில் தேடலாம். தத்துவத்தையோ கவிதையில் தேடலாம். கவிதையோ வாழ்வாக தத்துவமாகப் பிரதிபலிக்கிறது. //ஒரு மாங்கனியைத் தீண்டும் போது ………. அதன் வழி பூமியின் ஆழத்தைத் தீண்டுகிறாய். பகலை இருளை அதன் மூலம் வெளியைத் தீண்டுகிறாய்….

// எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதைப் போல எல்லா உயிரும் பொருளும்
பிரபஞ்சத்தின் மாறுபட்ட வடிவங்களே என்பதன் உட்பொருள் பொதிந்த கவிதை.

 //ஓர் அரிசிக்கும் ஒரு பருக்கைக்கும்
இடையிலான தூரம்//

காலத்துக்கும் அகாலத்துக்குமான அலைதலே அதை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றுகிறது எனில் வாழ்வுதான் என்ன? யார் இயக்குகிறார் இதை என கேள்வி எழுப்புகிறது “அலைவுறுதல்” கவிதை. பேரங்காடிகளில் கால்கடுக்க வேலை பார்க்கும் பெண்ணின் கால்வலி தீர்க்கும் ஒரு கணநேர நாற்காலி அமர்தல் தரும் நிம்மதி அவளின் பிரியமானவனின் தோள் புதைதலுக்குச் சமம் ஆக்குகிறது ஒரு கவிதை. எல்லோரும் ஏதோவொரு உயரத்தையே தேடிக் கொண்டிருக்கிறோம். பணம், பதவி, அதிகாரம், கடவுள் என.

 //உயரத்தில் இருப்பவற்றுக்கு
உயரத்தில் ஒரு வேலையும் இல்லை.//

எனில் உயரத்தில் உள்ள எவருக்கும், ஏன் கடவுளர்களுக்கும் வேலை இல்லைதானோ என சிந்திக்க வைக்கிறது ‘உயரத்தின் சரிதம்’. தேநீருக்கும் ஜென்னுக்கும் உள்ள தொடர்பைப் போல் ஒரு கோப்பைத் தேநீரில் ஏற்பட்ட ஏகாந்த அனுபவத்தைத் தேடுகிறது ‘அதிகாலையில் தித்தித்தல்’ கவிதை. “ஒரே ‘ஒரே’வுக்குள்” கவிதை பேசும் பொருள் எல்லாம் ஒன்றுக்குள், ஒன்றுக்குள்ளே எல்லாமும் என்பதே. எதுவுமற்றதுள் எல்லாமும் இருப்பது என்பது போலவும்தான். ஆசை அறுமின் என்கிறோம். ஆனால் பிணமும் ஆசையோடுதான் கங்கையில் மிதக்கிறது. பிணத்திற்கும் உண்டு கடைசி ஆசை என்கிறது ஒரு கவிதை. புள்ளி என்பதில் உருவானதே அனைத்தும். பிறகு அனைத்தும் புள்ளியில் இயைவதே காலவிதியா? காலம் 60 ‘நொடிப் பழங்கள்’ ஆன கவிதையாகிறது இவர் காலச் செடியில். ஞாபகம் ஒரு சர்வாதிகாரி. அது சொல்வதை நாம் கேட்டாக வேண்டும். ஒரு தம்பியின் ஞாபகம் இப்படியாக இருக்கிறது.

//மாடக் குழியில்
காற்றுக்கேற்ப அசைந்து மினுங்கும்
அகலின் கீற்றுக்கு,
கற்பூரமாகப் பற்றிக் கொண்டு
கரைந்த
அக்காவின் ஞாபகம்.//  



‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்ற கவிதையை வாசிக்கையில் நெஞ்சில் உருகிய உணர்ச்சிகள், பாலூட்டும் போது எப்படி நெஞ்சாங்கூட்டினுள் அவள் பொங்கித் ததும்பிருப்பாளோ அப்படி உணர வைக்கிறது. அம்மாவின் இருப்பை, அவள் வாழ்வை எல்லாமும் அவளே, அவளே எல்லாமும் என்பதாக 30 சிறுகவிதைகளாக ஒரு பெரும் வாழ்வைப் படைத்துள்ளார்.

 //சாரையும் நாகமும்
பிணையல் போடும் வைக்கோல்போர்த் தோட்ட
சீமைக்கருவேல மரத்தடியில்
அழுதபடி
ஓரிரவு முழுக்க
தனித்துப் படுத்திருந்தாயே
ஏன் அம்மா?
நீயும் பார்த்தாய் தானே நிலவே…//

பாம்பு நடமாடும் இடத்தில் விடிய விடிய ஏன் தனித்துப் படுத்தாள் அம்மா? என்ன கசப்பு அவள் மனதில்? தெரியவில்லை. இக்கவிதை பாரி மகளிரின் பாடல் நினைவூட்டும் துயரம் நிறைந்தது. உயிரை ஈந்த அன்னை வாழ்வின் இனிமையை மட்டுமல்ல கசப்பையும் சேர்த்தே அமுதவிஷமாக ஊட்டுகிறாள்.

//பால்குடி மறக்க
கற்றாழைச் சாற்றைக் காம்பில் இழுவி
முலை ஈந்த அம்மா
வாழ்வின் முதற்கசப்பையும்
உன் உடலில் இருந்தே
அருந்தப் பெற்றேன்
என்பதையாவது சொல்லிவிடுகிறேன்.//

அன்னையருக்கு வரும் துன்பங்களை செய்வதறியாது திகைத்து நின்று பார்க்கும் குழந்தைகள் ஏராளம். அதற்கான தீர்வு ஏற்படுத்தும் நிலை வாழ்வில் வரும்போது பிரச்சினைகள் மறைந்திருக்கும் அல்லது அன்னையரே…! முதலாக அமைந்த கடைசிக் கவிதையைப் படிக்கையில் கண்கள் துளிர்த்தால் அதில் நம் தாயின் பிம்பம் தெரிவதைக் காணலாம்.

 //கக்கடைசியில் ஏர்வாடி தர்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலி பிணைத்து
அழைத்துப் போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.//

கலைந்த வாழ்வை, நினைவை எந்த அலங்காரமும் நேர்த்தியாக்கி விடமுடியாது.  எத்தனை ஆசை, ஆணவம், அதிகாரம்…எல்லாமும் பிரபஞ்சத்தின் முன் தூசிதான்.

//பேசு தூசியே பேசு
உன் புஜபல பராக்கிரமத்தை//

//கங்கையில் பிணம் மிதக்கிறது.
பிணம்தான்
ஆசை ஆசையாக மிதக்கிறது
கங்கை ஒன்றும் சுமக்கவில்லை.//

இதைவிட வாழ்வைச் சிறப்பாகப் பார்க்க, உணர வைக்க கவிதையைத் தவிர  வேறு எதனால் முடியும்?          

அம்மாவைப் பிரிந்து பறந்தலைந்த பின் தாயிடம் சேரத் துடிக்கும் பறவையின் குரல், மனம் திருந்தி தன் தாயிடம் உருகும் ஊதாரி மைந்தனின் குரல் என்ற படிமம் ஒரு கணம் சிலிர்க்கச் செய்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகாரத்திற்கு பயன்படுகின்றன. அல்லது அதிகாரம் அறிவியலைக் கைக்கொள்கிறது. நவீன அறிவியல் தனிமனிதனின் சுதந்திரத்தைக் கைப்பற்றும் அதே வேளையில் அவனைக் கட்டுக்குள்ளும் வைத்திருக்கிறது என்பதற்கு “எல்லாம்வல்ல சிசிடிவி கேமிரா” கவிதையே சான்று.  இதில் வரும் கேமிரா சபலத்தை, பாவத்தை, ஆணவக் கொலையை, உணவு கொண்டு செல்பவனின் பசியை, மனைவியை சந்தேகிப்பவனின் மனதில் சுழலும் சிவப்பு விளக்கைக் கண்காணிக்கிறது.

//பூமி தன்னைத் தானே
சுற்றிக் கொண்டு
சிசிடிவி கேமிராவையும்
சுற்றி வருகிறது.//

ஆம். பல்லாயிரம் கண்கொண்ட டிஜிட்டல் மாரி அது. ஒரு குழந்தைக்கு இரு தாய்மார்கள் உரிமை கோரும் அக்பரின் தர்பார் கவிதை நோபல் பரிசு பெற்ற லூயி க்ளக் கவிதையை நினைவூட்டுகிறது. “ஆனந்தன் போல ஆனந்தன்” நகுலனின் ராமச்சந்திரன் கவிதையின் கண்ணாடி பிம்பம். ‘கிருஷ்ண நிழல்’ தரும் உபதேசம் இயற்கையின் பொருட்டு மலர்ந்த கவிதை. ஞானத்தின் வாசலை நமக்கு அறிமுகம் செய்கிறது “ஆமை+நத்தை=ஜென்” கவிதை. ஏறும் உயரம் மட்டுமல்ல இறங்கும் உயரமும் ஞானத்திற்கு இட்டுச் செல்லும்தான். //ஒன்பது துவாரங்கள் ஒன்றிலும் வடியாது ஒன்பதையும் தாண்டி நிற்கிறது ஒன்று// கூழாங்கல்லுக்குள் இருக்கும் அமைதி ஒரு பாறைக்குள்ளும் அதன் வழியே வெளியேறும் புத்தனுக்குள்ளும் தெரிகிறது எனில் அமைதியாய் இருப்பனவற்றின் அனைத்துள்ளும் நிறைந்திருப்பது புத்தனின் புன்முறுவல்தானா என வியப்படையச் செய்யும் கவிதையின் தொடர்ச்சியாக, தனித்து வந்துவிட்ட இறகு ஒன்றின் நிம்மதியில், புத்தனின் அமைதியையும் நாம் உணரலாம்.




 “தனிச்சுற்றுக்கு” கவிதை ஏற்படுத்துவது மெய்த்தேடலின் ஒரு சிறு துகள். ஒரு மலரை எல்லோரும் கைகளில் ஏந்தி உள்ளோம். எத்தனை முறை மலர்ந்தோம்? எத்தனை முறை உணர்ந்தோம்? என்பதுவே நம் தேடலின் முடிவாகப் பெறும் ஞானமாக இருக்கும். எதுவொன்றாகவோ நாம் இருப்பதாக நினைக்க அதுவாக நாம் இல்லை என நம் இயல்பு உணரும் தருணத்தை “சருகு சருகாகும் தருணம்” தருகிறது. 

பெண் வாழ்வின் துயரமெல்லாம் ஒன்றி நிற்கும் குறியீடுகள் இலக்கியத்தில் பிரபலம். சீதையின் துயர் கணையாழியிலும் கண்ணகியின் துயர் சிலம்பிலும் சகுந்தலையின் துயர் மோதிரத்திலும் காணப்படுகிறது. ஆறறிவு கொண்ட பறவை. ஆனால் தன் துயரை வெளிப்படுத்த முடியாத உயர்திணைப் பறவை. மழைத் துளிக்கு அசையும் உதிர்ந்த அரசிலைக்கு பழைய உயிராசை துளிர்க்கிறது. உடல் என்பது கல் அடுக்கப்பட்ட கட்டடம் எனில் அதன் மூலைக்கல் எது எனக் கேட்கும் கவிஞர், யாருடைய சுக்கிலத் துளி கடல் என்று கேட்கிறார். ஒரு வரியில், ஒரு படிமத்தில் காலத்தில் இருந்து வெகுதூரம் தூக்கி எறியும் கவிதைகள் இவை. கடலை மட்டுமல்ல. பூமியை, கோள்களை, பால்வெளி அனைத்தும் பிரபஞ்சத்தின் சுக்கிலம் என விளங்கிக் கொள்கிறேன். நெருஞ்சி வேரின் எண்ணவோட்டத்தையும் சிறுத்தை புகுந்த பசித்த வீட்டையும் வண்ணத்துப் பூச்சியை உண்டு தற்கொலை செய்தவனின் மனதையும் தொட்டுக் காட்டும் கவிதைகளில் தெரிகிறது மானுடத்தின் துயரம். 

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் உள்ள பிறவா வரம் பெற்ற புளிய மரம் பூத்தும் காய்க்காதது. அங்கே இறவா பனையும் உண்டு.

 //அதன் நிழலில் 
அதே புளியமரக் குளிர்ச்சி
பெற்றால் தான் தாயா?//

//கடவுளுக்கும் நிழல் இல்லை
பசிக்கும் நிழல் இல்லை
பசியே ஒளியே
நீயே அருட்பெருஞ்ஜோதி// 

//கரையும் மெழுகுவர்த்தியை
அணைத்துவிடுவதே
நல்ல ஜெபம்//

எனும் கவிதைகளில் மானுடத் துயர் நோக்கி இயற்கையின் பேரொளி வீசுகின்றது. ஓவியத்தில் ஒரு மலர் மலர, ஒன்று உதிர்கிறது. அது தினமும் நடப்பது மாபெரும் வியப்பு. 450 ஆண்டுகளையும் காந்தியையும் அன்னி பெசன்ட்டையும் மறந்த அடையாறு ஆலமரம் ‘அமரம்’ ஆகி ஜே.கிருஷ்ணமூர்த்தியை மட்டும் நினைவு கொள்வதன் மூலம் அமரத்துவம் ஏற்படுத்துகிறது. வாழ்க்கை, பிரபஞ்சம் எல்லாம் ஒரு வட்டம் அதாவது பூஜ்யம். அதிலிருந்து ஏறிச் சென்று அடையும் உயரம் வேறு. திரும்பி இறங்கி வந்தபின் அடையும் பூஜ்யம் வேறு எனும் ஒரு கவிதை, உண்மை வேறு – உண்மையான உண்மை வேறு என்றாகிறது மற்றொரு கவிதையில். ‘இரவில் மினுக்கும் தனிமம்’ கவிதை உயிரை ஒரு சுடராக பாவிக்கிறது.


//கைமாறிக் கைமாறி
கடைசியில் மாடக்குழிக்குள்
வந்துவிட்டது
உயிர்// 

‘கைப்பிடியளவு’ கவிதையில் இதயத்தின் பெருமையையும், பூமியின் பெருமையையும் கைப்பிடி அளவு கொண்டைக் கடலைக்கு ஆசைப்படும் பசி உண்டுவிடுகிறது. அமைதியைக் குலைப்பது எதுவோ அதுவே அமைதி தந்த போதிமரத்தையும் கொத்தும் மரங்கொத்தி ஆகிறது. கவிஞர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உள்ளது? வானம் நோக்கி கைவிரித்து சரணடைவது மரம் மட்டுமா? நாமும் தானே. மரங்களாகிய மனங்கள். தாமரை, மல்லிகை, முல்லை எல்லாம் பூ எனில் நாய்வாலும் பூ என்கிறார் கவிஞர். நெஞ்சில் ஒரு மென்மயிர் பூவொன்று உரசிச் செல்கிறது ‘உன் பூ எது’ கவிதையில்.

//மார்கழி முதல் வாசலில்
சிக்குக்கோலம் இடுபவள்
நெற்றியில் இருந்து
ஒரு முத்து உதிர்கிறது
புள்ளியாகும் ஆசையில்.//

ஒவ்வோர் அனுபவமும் கவிதையில் ஒரு வரியாகும் ஆசையில் முட்டி மோதுகிறது. குழந்தையின் ஓவியத்திலிருந்து பறக்கும் கிளியல்லாத கிளி கிளை அல்லாத கிளையில் அமர்கிறது. அது ஒரு அதிசயக் கிளி மற்றும் அதிசயக் கிளையாகிறது. அதில் அமர அழைக்கிறது ஒரு கவிதை. யார் எதற்கு ஆசைப்படுவர், யார் எதற்கு மதிப்புத் தருவர் என்பது கொடுப்பவனை விட பெறுபவன் தான் முடிவு செய்கிறான் ‘பதறி எழுதல்’லில். சதுரத்துக்கு தானொரு ஜென் துறவி என்று நினைப்பு என்கிறார் ‘கவிஞனின் கணக்கு வழக்குகள்’ கவிதையில். தான் எல்லாப் பக்கமும் சமமாக இருப்பதாக நினைக்கும் நம் மனம் ஒரு  சதுரமா? ஆழத்தில் அது ஒரு வட்டத்துள் அல்லது நீள அகலங்களுக்குள் அல்லாடுகிறதா? பெரும்பாலான தொடர் கவிதைகளுக்கு இறங்கு வரிசை எண்ணிட்டுள்ளார். அதை எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்கிறார். அது வாசகனின் சுதந்திரம். ஒரு உச்சகாட்சியில் இருந்து அமைதியான முதல் துவக்க காட்சிக்கு செல்வது போல உள்ளது. அது ஒரு நினைவு திரும்பலாக கவிஞருக்கு உள்ளது. இன்றிலிருந்து நேற்றைப் பார்ப்பது போல.

 //புத்தன் தன் ஞாபகங்களை
வேடிக்கை பார்க்கிறான்.
ஞாபகங்கள் சித்தார்த்தனை
கண்டும் காணாமல்
விலகி நடக்கின்றன.// 

கதிர்பாரதியின் தேடல்,  மெய்யியல் நோக்கு,  அழகியல் ஆகியவற்றை கவிதைக்குள் மெய்யியலையும் மெய்யியலை கவிதையாகவும் படைத்துள்ளதன் வழி அறிய முடிகிறது. அன்பும் கவிதானுபவமும் மெய்யறிதலின் தேடலுமே அவரது கவிதைகளாக மலர்ந்துள்ளன.  அவரால் கவிதைகளின் சில சொற்களில் பல கதைகளை, வாழ்வை, மானுட அன்பை, அகநோக்கை எடுத்து வைத்துவிட முடிகிறது. தன் கவிதைகளால் வாழ்வை இல்லாக் கோணத்தில் பார்க்கிறார். வாழ்வோ அவர் கவிதைகளில் இருந்து நம் மனதைக் கண்டுகொள்கிறது. அது எத்தனையாவது பரிமாணமாக மிளிர்கிறது நம்முள்ளே என்பது நம் வாசிப்பைப் பொருத்து மூன்றாகலாம், ஆறாகலாம் அல்லது அது கற்பனைக்கும் எட்டாத பரிமாணமும் ஆகலாம். நம் கண்ணுக்கு, மனதிற்குப் புலனாகாத காரணத்தால் அந்தக் கவியனுபவம், மெய்மை நோக்கு அதன் வழி ஏற்படும் வாழ்வின் தரிசனம் போன்ற பரிமாணங்கள் இல்லவே இல்லை எனக் கூறிவிட முடியாது. எதன் பொருட்டோ  கவிஞன் அந்தப் புள்ளியில் நின்று பேசுகிறான். காதுள்ளவர்கள் கேட்பார்கள். மனதுள்ளவர்கள் அதை அடைவார்கள். 

நூல்: உயர்திணைப் பறவை, 
ஆசிரியர்: கதிர் பாரதி 
பதிப்பு: இன்சொல் பதிப்பகம்
செல் : 6382240354

விலை:  ரூ. 260


Read more at: http://www.vasagasalai.com/book-review-k-ragunathan/

திரிசங்கு வெளிச்சம் - `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்` கவிஞர் கார்த்திக் திலகன் கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை....

 

``கவிதை என்பது மகாநதியில் மிதக்கிற ஒரு தோணி என்று சொன்னால்
ஓர் அளவில் கவிதை குறித்து நான் சொல்லிவிட்டேன் என்றே தோன்றுகிறது’’ என்கிறார் கவிஞர் தேவதேவன், தனது `மகாநதி` கவிதைத் தொகுப்பு முன்னுரையில்.

``கவிதைகள் என்பது எதற்கு என்றால் எல்லாவற்றில் இருந்தும் நம்மைக் காக்கவும், கட்டக் கடைசியில் நம்மிடம் இருந்து நம்மைக் காக்கவும்தான்’’ என்கிறார் சார்லஸ் புக்கோஸ்கி.

இந்த இரண்டு ஸ்டேட்மெண்ட்டுகளுக்கும் இடையில் திரிசங்காகி நிற்கிற கவிதைகளாக `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்` என்கிற தலைப்பைக் கொண்ட கவிஞர் கார்த்திக் திலகனின் இந்தக் கவிதைத் தொகுப்பைப் பார்க்கிறேன். இது எனது பார்வை. யாரையும் அப்படிப் பாருங்கள் என நிர்பந்திப்பது அல்ல.

மேற்சொன்ன இரண்டு ஸ்டேட்மெண்ட்டுகளிலும் `தொட்டும்தொடாத` `அகலாது அணுகாது தீய்க்காய்கிற` தன்மை இருப்பதை ஆழ்ந்து வாசிக்கும் வாசகர் உணரக்கூடும். கார்த்திக் திலகனின் இந்தத் தொகுப்புக் கவிதைகளின் பண்பு இவை என்கிறேன்.

மகாநதியில் பிடிப்பற்று மிதக்கிற தோணிக்கு தனித்த பாதை என்று ஒன்று இல்லை; அதேநேரத்தில் இப்படி யோசித்துப் பாருங்கள்…`தோணிக்கு என்று உய்த்துணரும் மனம் ஒன்று இருந்து, அது தான் செல்ல விரும்புகிற பாதையைத் தேர்ந்தெடுக்கிறது என்று வைத்துக்கொண்டால், அந்தப் பாதை நதி செல்கிற பாதையாகத்தானே இருக்கும்.’ நான் சொல்லவருவது கார்த்திக் திலகனுக்கும் விளங்கும் என்று நம்புகிறேன்.  

 

எது எதுடம் இருந்தோ கவிதை நம்மைக் காக்கிறதுதான். அதில் சந்தேகம் இல்லை. அப்படிக் காத்துத் தருகிற `நம்மை`, நம்மிடம் இருந்தும் காக்கிறதா என்றால்… ஆம் காக்கிறதுதான். இதைத்தான் கவிஞர் யூமா வாசுகி ஒவ்வொரு நேர்ப்பேச்சிலும் இப்படிச் சொல்வார்… ``தம்பி, இந்த வாழ்வை உயிர்ப்போடு நகர்த்திக்கொண்டுபோவது எது என்று நினைக்கிறாய்… அது கவித்துவம்.’’

தன்னியல்பில் இல்லாமல் மிதக்கிற தோணி போன்ற `நாம்` – நம்மிடம் இருந்து நம்மைக் காக்கிற `நாம்`… இந்த இரண்டுக்கும் இடையில் நிற்கிறவையாக இருக்கின்றன இந்தத் தொகுப்புக் கவிதைகள்.

 

அதனால்தான் …
……………………
…………………..

நான்
கொஞ்சம் தூங்கிக்கொள்ளட்டுமா
ஒரு சிலைக்கும்
அதன் மீது படிந்திருக்கும்
நம்பிக்கைக்கும் இடையில்
கடவுள் தூங்குவதைப்போல…

என்று ஒரு கவிதையில் எழுதுகிறார் கார்த்திக் திலகன்.

 

சிலைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் உள்ள திரிசங்கில் உறங்கும் கடவுளைப் போல என்கிற படிமத் தன்மையை யோசிக்கிறபோது `அடடா…’ என்று மனசில் ஒரு வெளிச்சம் தோன்றுகிறது அல்லவா… அதுதான் எதனோடும் சேர்ந்துவிட இயலாத திரிசங்கு வெளிச்சம். இந்த வெளிச்ச விளையாட்டு `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்’ என்கிற தொகுப்பின் தலைப்பில் இருந்தே ஆரம்பமாகிவிடுகிறது. இந்தக் கவிதைகள் முழுக்க அந்த வெளிச்சம் இருக்கிறது என்பதைத்தான் நான் இவ்வளவு நேரமும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவந்திருக்கிறேன் நண்பர்களே

இந்த வெளிச்சம் உள்ள இன்னொரு கவிதையைப் பாருங்கள்…

தரையில் இருந்து
ஒரு பாதை மேலேறிப்போய்
மலைமீது குடிகொண்டிருக்கும்
அதுல்ய நாதேஸ்வரரையே
பார்த்துக்கொண்டு நிற்கிறது.
மலைக்கு அந்தப் புறம்
ஒரு பாதை
கீழே இறங்கிவருகிறது
அதன் முகத்திலும்
அவரைப் பார்த்த அதே அமைதி.

அதுல்ய நாதேஸ்வரரைப் பார்த்த பாதைக்கும் பார்க்காத பாதைக்கும் இடையே சமமான திருப்தி, அமைதி, வெளிச்சம்.

இப்படி புறவயச் சித்திரிப்புகள் மூலம் அகத்தைத் தூண்டுகிற வெளிச்சங்கள் இந்தத் தொகுப்பில் நிறையவே இருக்கின்றன. சின்னச் சின்ன வார்த்தைகளில் வாழ்க்கை அததன் அழகுகளோடு அர்த்தம்கொள்ளவைக்கும் வரி வெளிச்சங்கள். என்ன ஒரு விடுதலை என்றால், அவை தத்துவச் சோகையோடு இல்லாமல் படைப்பூக்கப் புஷ்டியோடு கவித்துவமாக இருப்பதுதான்.

உதாரணங்களாக…

`விநாடி என்பது ஒரு சித்தலிங்கப் பூ`

`வானம் நமக்காகப் படைக்கப்பட்ட மலர்’ 

`வெட்டவெளிதான் என் தாய்
ஆசையோடு அம்மா என்று அழைத்தேன்’

`முதன்முறையாக என் மனதைச் சுற்றிப் பார்க்கிறேன்.’

`உடலை மனம் வழி
இன்னோர் உடலுக்குள் செலுத்துவது
காதல்’

`இமைகளால் காற்றில் மேளம் கொட்டினேன்.’

`கண்ணுக்கு எட்டியும் எட்டாத தூரம் வரை
வெட்டவெளியாய்க் கிடப்பது
நீதான்’

`முகத்தை எட்டாத உயரத்துக்குள் தூக்கி வைத்துக்கொள்’

இன்னொரு முக்கியமான விஷயம்… பெண்மையின் மீது தீராத பிரேமை கொண்ட கவிதைகள் இந்தத் தொகுப்பில் சற்றே அதிகமாக இருக்கின்றன. அறிவும் உணர்வும் அற்ற அதீத நிலைக்கு மனதைக் கொண்டுசென்று தன்னைத்தான் எழுதிக்கொள்ளும் உயிரின் வேட்கை அது. ஒரு கவிதையில் பெண்ணை `பூமியின் சதைச் சுடர்` என்கிறார் கார்த்திக் திலகன். இதைப் படிக்கும்போது காற்றில் நடுங்கும் சுடர்போலவே பெண்மையின் பேராற்றலை நினைத்து மனம் நடுங்குகிறது.

பூமியின் மீது ஒரு சதைச் சுடர்
மெத்தென்றெழுந்தாடினாற் போலவள்
நின்ற திருக்கோலம் கண்டு
அவளது
அகல் வடிவப் பாத நிழலில்
திரியாக என்னை ஏற்றிவைத்தேன்.

இந்த வரிகளைப் படிக்கும் மனம் நடுங்கிறதா… இல்லையா?!

இந்த நடுக்கம் உன்மத்தம் ஆகும்போது, கார்த்திக் திலகன் கவிதையில் பெண், கவிதையாகிறாள், சுடராகிறாள், தீயாகிறாள், பூமி ஆகிறாள், காளியாகி ஆணுக்குத் தீரவே தீராத ஆன்மிக அனுபவமாகி, புரிந்தும் புரியாத பேரண்ட வெளிச்சம் ஆகிறாள்.

மேல் உள்ளவற்றை ஆண்பாலாக்கியும் வாசிக்கலாம்… ஆண் பெண்ணுக்கு கவிதையாகிறான், சுடராகிறான், தீயாகிறான், பூமியாகிறான், காளியாகி பெண்ணுக்கு தீரவே தீராத ஆன்மிக அனுபவமாகி புரிந்தும் புரியாத பேரண்ட வெளிச்சம் ஆகிறான்.

அந்தச் சுடரோடு, அர்த்தமின்மையோடு, அந்தக் காளியோடு, எதனோடும் ஒட்டாத அதன் பேரண்ட வெளிச்சத்தோடு போராடுகிற நிலைதான் மனித குலத்துக்கு. காலமும் வாழ்வும் முயங்கி இயங்குகிற நிலை இது. வாழ்வுக்கும் காலத்துக்கும் ஆண் என்ன பெண் என்ன எல்லாம் வாழ்வுதான்; எல்லாம் காலம்தான்.

என்
முத்தங்களை
கனிகளில் பதுக்கியிருக்கிறேன்
இளமையை
வேர்களில் பதுக்கியிருக்கிறேன்
முத்தங்களைப் பெறுவதற்கு
என்மீது கல்லெறிந்தால் போதும்
இளமையைத் தரிசிக்க
எனை வேரோடு சாய்த்தாக வேண்டும்
நீ.


என பித்தேறிய அடிமுடி தேடும் பிரேமையோடும் இயங்குகிற மனமும் அதுதான்.

இருண்மையில் இருந்து படிமம், காட்சிகள், கவித்துவம், புனைவு, என்ற பண்பு நிலைகளில் தமிழ்க் கவிதை நகர்ந்து, தற்போது உரைநடையில் கவித்துவம் கட்டி எழுப்புதல் என்ற இடத்தில் வந்திருப்பது குறித்தெல்லாம் கார்த்திக் திலகனுக்கு அக்கறை இல்லைபோல அல்லது அவர் அக்கறைபடுவதாக இல்லைபோல. மொழியை அவர் நிலத்துப் பாறைகளைப் போல அல்லது சுண்டக் காய்ச்சிய மந்திரம்போல பயன்படுத்துகிறார். அப்படித்தான் இந்தக் கவிதைகளில் அவரிடம் தொந்தரவுக்கு உள்ளாகிறது மொழி. அது கவிதை தற்காலத்தில் இல்லையோ (இருக்க வேண்டுமா? அதுதான் கவிதையா?) எனத் தோன்றுகிறது. இந்தக் கவிதைகளில் குறை – நிறை இரண்டும் இதுதான்.

ரட்சகி
உன் ஆயிரம் கால்களால்
எனை எட்டி உதை
நான்
தோல்விக்கும் வெற்றிக்கும்
அப்பால் போய்
விழ வேண்டும்


என்று கார்த்திக் திலகன் அவரது ரகசிய ரட்சகியிடம் விமோசனம் வேண்டுகிறார் ஒரு கவிதையில்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளும் அப்படித்தான் தோல்விக்கும் வெற்றிக்கும் அப்பால் போய் விழுந்திருக்கின்றன. முதுக்குக்குப் பின்னால் போய் விழும் நிழலை முகத்துக்கு முன்னால் இழுத்துப்போட முடியாது.

கார்த்திக் திலகனின் முகத்து வெளிச்சத்துக்கு வாழ்த்துகள்


நிறைய அன்புடன்
கதிர்பாரதி

14, நவம்பர் 2021

சென்னை - 17