மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி:
ஆசிரியர் குறிப்பு:
கதிர்பாரதியின் கவிதைகளை அங்கொன்று இங்கொன்றுமாகப் படித்து இருக்கிறேனே தவிர மொத்தத் தொகுப்பு வாசிப்பது எப்படியோ நழுவிக்கொண்டே வந்தது. கவிதைத் தொகுப்புக்கு நான்காம் பதிப்பு வருவது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.
கதிர்பாரதியின் கவிதைகள் அன்றாடக் காட்சிகளை நவீன மொழியில் சொல்கின்றன. Survivor's guiltஐச் சொல்லும் இந்தக்கவிதையின் முந்தைய வரிகளின் கனம் கடைசிவரிகளை இன்னும் அழுத்துகிறது.
" கணநேரத்தில் தவறவிட்ட
ஒரு தினத்தில் ரயிலைத்
துரத்திக்கொண்டோடும்படி
கோபத்தையும் இயலாமையையும்
ஏவி விட்டிருந்த போது தான்
எனைக்கடந்து போகிறவர்கள்
பெருமூச்சைச் சொரிந்தபடி
குழந்தைக்குக் கிசுகிசுக்கிறார்கள்
இவன் தான் ரயிலைக் கொன்றவன்"
குழந்தைகள் உலகத்தில் முக்காலம், மரியாதை எதுவும் இல்லை. காலமயக்கத்தில் வார்த்தைகளே அதற்கான அர்த்தங்களை கோடிட்ட இடம் பார்த்து பூர்த்தி செய்து கொள்ளும்.
" நேத்துக்குச் சாப்பிடுறேன் என்று
நேற்றின் தலைமேல் ஒரு காலை
வைக்கிறான் நம்மை எதுவும் செய்யாதிருக்க வேண்டுமே என்று
நடுநடுங்குகிறது இன்று
நாளைக்கு சோறு சாப்பிடறப்ப
எனக்கு வயித்தை வலிச்சதுல்ல
அதான் சொல்றேன் என்றபோது
நாளையின் தலையின் மீதும்
நங்கென்று ஒரு கால்.
காலங்களை மயக்கி
அவன் படைக்கும் அகாலம்
விஸ்வரூபம் எடுக்கிறது"
உதர நிமித்தம் பஹு க்ருத வேஷம் என்பது ஆண்கள் அலுத்துக்கொள்வது. பெண்களுக்கு அதைத்தாண்டியும் பல இம்சைகள். வேலையில் தாமதமாகி குழந்தைக்குப் பாலூட்டவேண்டும் என்ற குற்றஉணர்வோடு வருகிறாள் என்றால் அது ஒரு தகவல். தாலாட்டி என்ற ஒரு சொல் என்ன ஒரு அழகைக் கூட்டிவருகிறது.
"முன் மாலைக்கும் பின்மாலைக்கும்
இடையே மிதவேகத்தில் ஓடுகிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது
அந்திக்குளத்தில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
அவளின் முலைகளைத்
தாலாட்டி தாலாட்டி"
முழுசரணாகதி வைணவ தத்துவம் மட்டுமல்ல சமயத்தில் பெண்ணிடமும் கொள்வது.
"நீர் குடைந்தாட வந்தவனை
கரையோடை நிறுத்திவிட்டது
உன் பெருங்காமப் பேராற்றுதீரம்
வேறென்ன செய்ய
ஒரு கை நீரள்ளி
தலையில் தெளித்துக்கொண்டு
திரும்பிவிட்டேன்
முப்பொழுதையும் உண்டு செரிக்கும்
மோகப் பரிபூரணி நீ"
ஒன்பது வருடங்கள் கழித்து கும்பகர்ண உறக்கம் தெளிந்து ஒரு கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசுவதில் எந்த ஒரு நியாயமும் இல்லை. இவருடைய முதலையும் கடைசியையும் வாங்கியதால் மனம் வெகுவாகப்பழக்கப்பட்ட FIFO ரூலை கடைப்பிடிக்கிறது போலும்.
கதிர்பாரதியின் கவிதைகள் அவரைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் புதுமொழியில் சின்னச்சின்னதாய் படிமங்கள் கலந்து சொல்கின்றன. பிள்ளை ஊருக்குப்போன வீட்டில் அவன் செய்யும் விளையாட்டுகளை தந்தை விளையாடுவது, சிறுமிக்கு வரிசையில் வழிவிடுவது போன்ற எளிய கவிதைகளும் உண்டு. ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் போன்ற கதைக்கும் நிஜத்துக்கும் மாறிமாறி ஓடும் கவிதை, காமம் பொங்கும் இரவில் எல்லோரையும் துணைக்கழைத்துக் கடைசியாக சிறுநீர் கழித்தல் போன்ற நுட்பமான கவிதைகளும் இருக்கின்றன.
காலாதிகாலத்தின் தூசி, மகரந்த அலை,கர்ப்பகுளத்து இரவு போன்று பல படிமங்கள்இவர் கவிதைகளில் இடைவந்து போகும். மகாகவி கவிதை எழுதுகிறான், ஏப்படி கேரட் இளஞ்சிவப்பாய் மாறியது என்பது போன்ற குறும்புக் கவிதைகளும் இருக்கின்றன. கசாப்புக்கடைக்காரன் வெட்டுவதற்கு இருசக்கர வாகனத்தில் குறுக்காக வைத்து எடுத்துச் செல்லும் ஆடு கவிதையில் ஆட்டுக்கு உயிர் தங்கப்போவதில்லை. ஆனால் முதல்வரியிலேயே திசைகளைப் பதற்றத்துள்ளாக்கி என்ற வார்த்தைகளில் கவிதைக்கு உயிர் வந்துவிடுகிறது. கதிர்பாரதியின் கவிதைகள் நல்லதொரு அனுபவம்.
பிரதிக்கு:
இன்சொல் பதிப்பகம் 63822 40354
நான்காம் பதிப்பு செப்டம்பர் 2020
No comments:
Post a Comment