23 November, 2011

ஆம்புலன்சின் பின்புறத்தில் கடவுள்

விதவை மகளின் ஆண்மகவுக்கு
ரத்தமாற்று சிகிச்சையில் உதவுவதற்கெனவே
விலாவில் முளைத்த றெக்கையோடு
திடுமென நிகழ்ந்தான் சாத்தான்

பை நிறைய உதவிகளோடும்
கையே வாஞ்சையாகவும்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அவன்
அனைவருக்கும் தேவையாயிருந்தான்

ஆறுதலைக் கேடயமாக நீட்டும்
அவன் கிருபைக் குறித்து
யாருக்கும் எவ்வித ஐயப்பாடுமில்லை

துயருறுவோரின் காயங்கள் மீது பூச
துளிர்த்துக்கொண்டே இருக்கின்றன
அவனது மொனைக் கண்களில் கண்ணீர்

சம்பாசித்துக்கொண்டிருக்கையிலேயே
சாலையைக் கடக்க சிரமமுற்ற மூதாட்டிக்கு
மாறிப்போனான் கைத்தாங்கலாய்

அவ்வப்போது உலக நலனில்
தோய்ந்தெழுந்த அவனது சிந்தனை
இன்னும் பிற இத்யாதிகள் பொருட்டு
கவலையாய் மாறிற்று

அன்று அவதிக்குள்ளானவர்களை கவனமாக
தம் பிரார்த்தனைப் புத்தகத்தில் பதிந்து
உருக்கமாக ஜெபிக்கவும் துவங்குகிறான்

யாவற்றையும் அவதானித்தபடி...
பாலூட்டிக்கொண்டிருப்பவளின் முலைகளில்
முறுவலோடு லயித்திருந்த கடவுள்
தம் மாட்சிமைமிகு ஒளிபொருந்திய கிரீடத்தை
மார்வாடிக் கடையில் வைத்துவிட்டு
அறுவைசிகிச்சைக்கு விரையும்
ஆம்புலன்சின் பின்புறம் தொற்றியபடி
தாசி வீட்டுக்கு அருகாமையில் நிறுத்தச் சொல்லி
சச்சரவு செய்துகொண்டிருந்தார் கடவுள்

15 November, 2011

விதைநெல் பிரிக்கும் இக்கோடையில் நிகழாதிருந்திருக்கலாம்

துளிர்ப்பு திகைந்தாயிற்று
வேம்பின் பொன்தளிர்களை
ஆராதிக்கத் துவங்கிவிட்டது கோடை
புளிப்பு சுவைகூட்டிய மாங்காயைக்
கடித்துவிட்டு மிழற்றுகிற கிளிக்காக
இதமிதமாய் பெய்யும் இனி புன்செய் வெயில்
ஊருக்குள் புகுந்து மாயமோகினியென
எழுந்து சுழலும் சூறைக்காற்றைத்
துரத்தியோடி களிப்பார்கள் சிறார்கள்
வாதநாராயணன் தன் சக்கரவடிவ பூக்களை
காற்றின் போக்கில் உதிர்த்து விளையாடும்
மகசூலை களஞ்சியத்தில் சேர்த்துவிட்டு
சோம்பித் திரிகிற குடியானவன் மீது
கொட்டிக் குளிர்விக்கும் பெருமழை
சோபிதம் கொண்டொளிரும் அந்தியிலிருந்து
அசைபோட்டபடி மந்தைக்குத் திரும்பும்
பசுவின் முதுகில் கொண்டலாத்தி குகுகுகுக்கும்
நல்லேர் பூட்டி தானியங்களைத் தூவிவிட்டு வந்து
அடுத்த வெள்ளாமைக்கு விதைநெல் பிரிக்கும்
நல்சகுனங்கள் நிரம்பிய இக்கோடையில்
நிகழாதிருந்திருக்கலாம் உன் பிரிவு

நன்றி: புன்னகை கவிதை இதழ்

01 November, 2011

எங்களூர் பிள்ளையார்

எங்களூரில் கழுதைகள் இரையுண்ணும் பொட்டல் பிராந்தியத்தில்
குவித்து வைத்த ஏதோ ஒன்றென அவரைப் பார்க்கையில்
தெரிவார் பிள்ளையாரென
விரிந்த பிருஷ்டம் வழிந்தொழுகும் தொப்பை
மினுங்கிடும் அகலின் கீற்று உறுதிப்படுத்தும்
அவரை அவர்தானென
வருடத்துக்கொருதரம் கொழுக்கட்டை படையலோடு கூடும் குலப்பெண்களிலிருந்து கண்களின் ஒளியையும்
கொங்கைகளின் கூச்சத்தையும் பூசிக்கொண்டதுபோலிருக்கும் அவர்
அப்போது ஏற்றிருக்கும் அரிதாரம்
பிற்பாடு, திருவிழாவில் தொலைந்த குழைந்தையின் பீதியோடு
கறுத்துப்போன முகத்தைத் தூக்கி நிறுவுவார்
தனிமையின் இருக்கையில் சீந்துவாரற்றும்
மீண்டும் பல்லக்கில் ஏறும் கனவோடும்
பழிச்சாலும் நிந்திச்சாலும் கண்ணை அவிச்சுடும்டா சாமி-
சன்னதமாடும் அப்பத்தாவும் அறியும்
இச் ஷனம்வரைக்கும் ஒன்னுமேயாகாத
ஒத்த காலைத் தூக்கி புள்ளையார் மீது
ஒண்ணுக்குப் பெய்யும் கெடா நாயை

நன்றி : அகநாழிகை (மார்ச் 2010)