21 May, 2012

கடக்கவியலாத தெரு
தெரு ஒன்றைக் கடப்பதென்பது
உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும் போலும்.
விம்மல் கலந்து உதிரும் கண்ணீர்த் துளியொன்றை
விளக்கேற்றி வைக்கும் புன்னகையொன்றை
மெதுமெதுவாய் மடல்விரியும் மலரொன்றை
புறவாசலில் பூத்து மறையும் மின்னலொன்றை
தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுமையாய் தெருவைக் கடக்கவில்லை.
வாழ்வையும்தான்.
இடமிருந்து வலமாக
குறுக்கிருந்து நெடுக்காக
வடகிழக்கிலிருந்து தென்மேற்காக
மேலிருந்து கீழாக
கடக்க வேண்டிய தெருவும் வாழ்வும்
மிச்சமிருக்கின்றன காலமெங்கும்.
கடக்கவியலாமல் பாதியிலேயே
திரும்ப வைத்த தெரு ஒன்றால்
விட்டத்தில் தொங்குகிறது உயிர் ஒன்று.

16 May, 2012

மலையின் நடுக்கம்


கோலியாத்தை
பொட்டில் அடித்து வீழ்த்திய
தாவீதின் கவன்கல்
நேற்றுக் கனவில் வந்து
எதைஎதையோ
குறிபார்த்துக் கொண்டிருந்தது.
நேற்றைக்கு முந்தின நாள் வந்த 
மலைக்குன்றம் ஒன்று
நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது.

யானையோடு நேசம் கொள்ளும் முறை


யானையோடு நேசம்கொள்ள எண்ணி இருக்கும் நாம்
முதலில் தந்தத்தை நீவிவிட்டு நேசத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
துதிக்கைக்கு முத்தங்கள் ஈந்தாலும் தப்பில்லை
அதுவும் நேசத்தின் கணக்கில் சேரும்.
தேக்குமரத் தூணையொத்த கால்களைப் பிணித்திருக்கும்
இரும்பு சங்கிலியை அகற்றுவதும் நல்லதுதான்.
மத்தகத்தைப் பாதிக்கும் அங்குசத்தை தூரதூரத்துக்கு
எறிந்துவிட்டால் போதும்
யானை நம்மை ஒரு குழந்தைப் போல தூக்கிக்கொண்டு
ஓடிக் களிக்க ஆரம்பிக்கும்.
இப்போது அதன் துதிக்கையில் ஒட்டியிருக்கும்
சப்பாத்திக் கள்ளி முள்ளை எடுத்துவிட்டு
ஏற்பட்டிருக்கும் சிறுகாயத்தின் மீது
நம் கவலையைப் பூசிவிடுகையில் உணர்ந்துவிடும்
நேசத்தின் ஆழத்தை. பிறகு,
அதன் பிரமாண்ட கனவுக்குள் எப்போதும் நமது ஆதிக்கம்தான்.
கவனம் நண்பர்களே,
ஆசீர்வாதம் வாங்குவது யானைக்குப் பிடிக்கவே பிடிக்காது.


மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்


மகிமைசால் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்பதும்
மச்சங்களுக்கு ஒன்றென காதலிகள் மூன்று என்பதும்
சமீபமாகத் தெரிய வந்திருக்கும் செய்தி.
கடனட்டைகளை அதிகமாக விநியோகிக்கும் வங்கியொன்றில்
முதல் காதலிக்கு கஸ்டமர் கேர் அதிகாரி பணி.
ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில்
போலியோ சொட்டுகளை வழங்கும் இரண்டாமவளிடம்
மெசியா குறித்த புகார்கள் நிரம்ப உள்ளனவாம்.
பெண்களின் உள்ளாடை நிறுவனத்தில் பொதுமேலாளராகப்
பணி உயர்வு பெற்றிருக்கும் மூன்றாமவள் மீது
உள்ளபடியே மெசியாவுக்கு அதிமோகம் இப்போது.
மூன்று காதலிகள் கிடைத்ததற்குக் காரணமே
தம் மூன்று மச்சங்கள்தான் என்பது அவர் கொள்ளும் கித்தாப்பு.
சிகையலங்காரத்துக்கு நிகராய் மச்சலங்காரத்தில்
மிகுந்த கிளர்ச்சி அடையும் மெசியாவுக்கு
நான்காவதாய் ஒரு மச்சம் அரும்பத் தொடங்கியிருக்கிறது.
சந்தோஷப்படுங்கள் அல்லது ஜாக்கிரதையாய் இருங்கள்
நான்காவது காதலி நீங்களாகவும் இருக்கலாம்.

14 May, 2012

வீடுஎருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
ஒரு பாழடைந்த வீட்டைக் கடக்கும்போது
இதயத்தால் உற்றுப் பார்க்கிறீர்கள்.
வசீகரமிக்கதாகத் தோன்றுகிறதா
சுடர்கிற ஒளி கண்களைக் கூசப் பண்ணுகிறதா
இப்போது அந்த வீட்டிலிருந்து
ஒரு புறா பறந்து போவதையும் காண்பீர்களே.
அந்தப் புறாவைத் தொடர்ந்து
ஓர் இறகு போல வீடும் மேலெழும்பி
மிதப்பதையும் காண்கிறீர்கள் எனில்
அந்த வீட்டிலிருந்து கொலுசொலி லயத்தோடு
கசிந்து வருவதும் உங்களுக்குக் கேட்டிருக்க வேண்டுமே.
ஆர்வத்தின் நிமித்தம் சுற்றுச்சுவர் ஏறிப் பார்க்கையில்
கொல்லைப்புறத் துளசி காய்ந்து காற்றிலாடுவது
உங்களைப் பெருமூச்சிட வைக்கிறது.
அதனால்தான் புறாக்கள் இரையுண்ட
அவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்
ஏனெனில் கிணற்றுக்குள் கறுப்பாகத் தளும்புவது தண்ணீரல்ல
ஒரு பெண்ணின் கேவல்கள் என்று
உங்களுக்குத் தெரிய வந்துவிட்டது.
இனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து
உங்களால் உங்கள் வீட்டுக்குப் போக முடியாது.


05 May, 2012

கோழிகள்கோழிகளைக் கண்டால் ஒருவித எச்சரிக்கையோடுகூடிய
அசூயையும் தொற்றிக்கொண்டபோது இரைக்காக அவை
மலங்களைக் கொத்திக் கொண்டிருந்தன... எனச் சொன்னால்
நீங்கள் வாழத் தகுதியற்றவர்கள் நண்பர்களே...
குப்பைகளைக் கிளறி, குட்டிச்சுவர்மீது அலைந்து,
புழுதிக் குடைந்தாடி, எச்சங்களை உண்டு களித்து... என
உங்கள் குற்றச்சாட்டுகளையும் ஆமோதிக்கவே செய்கிறேன்... எனில்
நானும் அப்படித்தான் தோழர்களே...
அதுவும் சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழிகளிடமிருந்து
அபயஹஸ்தம் கிட்டிவிட்டால் அப்பப்பா மோட்சம்தான்.
அதிலும் அதிலும் பெட்டையோடு சுற்றிவந்து
கொண்டை நிமிர்த்திக் கொக்கரிக்கைப்பதைத் தரிசித்துவிட்டால்
அடடா ஜென்மாந்திரஜென்மமும் சாபல்யமடைந்திடும்.
வராதுவந்த ஓரிரண்டு வரன்களும் இரண்டொரு பவுனில் இடறிப்போக
கன்னிக்கழியாமலே காலம் கழியும் கோமதி அக்காவின்
பார்வை குவிமையத்தில் விரட்டி விரட்டி சேவலும்
விரண்டு மிரண்டு பெட்டையும் சேர்ந்து தொலைக்கிறதா?
அவற்றை வேறெதுவும் செய்யாது விழுந்து சேவித்துக்
கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
கோழிகள் நாளையே ஆட்சி பீடமேறி
கோமதி அக்காவுக்கு இலவசத் திருமண திட்டத்தில்...

02 May, 2012ஒட்டடை

நான்கைந்து நூற்றாண்டுகளின் ரேகைகள் படிந்திருக்கும்
மாளிகைக்குள் நுழைகிற நீங்கள் மறவாதீர்கள்
அந்தந்த நூற்றாண்டுகளுக்குள் நுழைகிறீர்கள்.
ஒவ்வொரு படியும் உங்களை ஒவ்வொரு வடருமாக
மேல்தூக்கி அழைத்துப் போகிறது.
முன்னுக்கிருக்கும் முதல் நூற்றாண்டைக் கடந்துபோகும்போது
ஊஞ்சலாடும் சிறுமிக்கு உதவுகிறீர்கள்
பாடம் செய்யப்பட்டு அருகருகே மாட்டப்பட்டிருக்கும்
சிங்கத்துக்கும் மானுக்கும் இடையில்
அந்த ஊஞ்சல் மிக லாகவாமாகப் முன்-பின் போய் வருகிறது.
அடுத்த நூற்றாண்டின் உத்தியாவனத்தில் இறங்குகிற நிலவொளியில்
தனிமை ஒரு ராஜகுமாரியாக உலவித் திரிய
அதன் இடது அறையில் தளும்பும் ரகசிய சிணுங்கலொன்றில்
உங்கள் குரல் கேட்டுத் துணுக்குற்று நிற்கிறீர்கள்.
மூன்றாம் அடுக்கிலிருக்கும் நூற்றாண்டின் சன்னல் வழியாக
உற்றுக்கேட்கும்போது தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப
நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று.
நான்காம் அடுக்கின் நுழைவாயிலில் மாட்டப்பட்டிருக்கும்
வாளிலிருந்து சொட்டும் ரத்தத்துளிகளைப் பார்த்துவிட்டு
சடசடவென கீழிறங்கி வந்துவிடும் நீங்கள்,
செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான்.
தலையில் ஒட்டியிருக்கும் காலாதிகாலத்தின் ஒட்டடையை
உடனடியாகத் தட்டிவிட்டு விடுங்கள்.