விதை அல்லது வித்து ஆகிய சொற்களை 'காழ்' என்ற சொல்லில் குறிக்கிறது திருக்குறள். விதை என்றால் உயிர்ப்பு மற்றும் தொடர்ச்சி என்றும் பொருள்கொள்ளலாம். தவறு ஒன்றும் ஆகாது. 'காழ்' என்ற பெயரின் அர்த்தத்திலும் உள்ளடக்கத்திலும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் கவிஞர் - எழுத்தாளர் நர்சிம். பெரும்பாலும் சங்க இலக்கிய வரிகளில் இந்தக் 'காழ்' சொல் விரவிக் கிடக்கிறது. உதாரணத்துக்கு, 'கலைத்தரம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்...' என்பது பெரும்பாணராற்றுப்படை.
'சிறந்த கவிதைகளைப் புரிந்துகொள்ளும் முன்பே அவை நம்மைத் தொடர்புகொண்டு விடுகின்றன' என்கிறார் விமர்சகர் டி.எஸ்.எலியட். எனில், புரிந்தபிறகு மேலும் விஸ்தாரம்கொள்கின்றன நர்சிமின் கவிதைகள். பாடிப் பாடி ஒரு ராகத்தைக் கட்டி எழுப்புவதைப் போல. முட்டி முட்டி பாறையை வேர் வெட்டிவிடுவதைப் போல.
இறந்து கிடக்கும்
பறவையின் சிறகுகளில்
பறந்த காலத்தை
உண்ணக் காத்திருக்கும்
எறும்புகள்.
உப்பரித்த
சுவர்க் கொப்புளங்கள்மீது
படரும் பல்லி
உதிர்க்கும் சுண்ணாம்பு
உன் நினைவு.
பறவையின்
ஒற்றைப் பெருஞ்சிறகுபோல
தெரிகிற வானம்
மற்றொரு சிறகை
கடலுக்கு அப்பால்
அசைக்கிறது மெல்ல.
விதை ஊன்றுவதை ஒரு காட்சியாக வரையலாம் என்றால், காட்சிகளையே கவிதையாக ஊன்றப் பார்க்கிறார் நர்சிம். அது படிமமாகி வாசகருக்குள் மூளை மடிப்பாக மடிகிறது...
ஒன்றின் மீது
ஒன்றாய்க் கிடந்து,
பயணப்படும் பை
அசைந்துகொடுக்கும்
சுகத்தோடு
போய்க்கொண்டிருக்கின்றன
தொலைக்கவைத்திருக்கும்
பூனைக்குட்டிகள்
நேசத்தலின் சிறு நெருப்பில் ஒரு வாழ்வு எரிந்து அடங்கிவிடும் என்பதெல்லாம் வரமா சாபமா என்பதை என்னால் எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால், இந்தக் கவிதையை என்ன செய்வது?
எரியும்
சுடரின் பிம்பம்
எண்ணெய்யில்
நிறைந்து தெரிகிறது.
பிம்பத் திரியின்
பின்பக்க முனையும்
பற்றி எரிகிறது
உன் நிழற்படத்தின் மீது
பாவுகிறது
என் நிழல்.
தவளைக்கல்
தட் தட்டெனத் தாவுகிறது.
குளம் முழுவதும்
விர் விர்ரென
நீள்வட்டச் சுருள்கள் நீள்கின்றன.
சலனம் அடங்கியதும்
புளியம் பூவொன்று
புதிதாய் உதிர்கிறது.
முத்தம் வாங்கிய நெற்றியின்
நொடிப்பொழுது சுருக்கமொன்றில்
நீர் நிகழ்கிறது.
வழக்கமான காட்சிகள்தான். பழக்கமான வார்த்தைகள்தான். ஆனால், நர்சிம் விலக்கிக்காட்டுவது அதிநுண்ணியத் திரையை. பிறகு துலக்கமாகிறது ஓர் அனுபவம்.
'சின்னஞ்சிறு மழைத் துளிகள் பென்னம்பெரிய வானத்தின் பண்பைக் கொண்டிருக்கின்றன' என ஒரு வசதிக்காகச் சொல்லிப்பார்த்தால், அது தரும் பொருள் இன்பம் அலாதியானது. அப்படியான பண்பால் ஆனவை நர்சிமின் இந்தக் 'காழ்' தொகுப்புக் கவிதைகள் எனப் புரிந்துகொள்கிறேன்.
சிறுகதையிலும் நர்சிம் கவனம்கொள்ளத்தக்கவரே. இந்த நேரத்தில் என் நினைவில் இருக்கிற அவரது கதைகள்... 'கௌரவம்', 'பிடிக்கயிறு', 'வேப்பம்பழங்கள்', 'கள்ளந்திரி', 'அய்யனார் கம்மா'. மதுரையைச் சுற்றும் கதைகள். வாசிப்பு இன்பமும் வாய் வார்த்தையாகச் சொல்லிக் கேட்கச் சுவாரஸ்யமும் கொண்டவை.
நேற்றின் கருமையைக்
கிள்ளி எறிந்ததும்
புத்தம் புதிதாய்ச் சுடர
இன்றின் செம்மைக்கு
ஆயத்தமாகிறது
திரி
இன்னும் செம்மையாக எரிக நர்சிம்!!!
No comments:
Post a Comment