21 September, 2024

முன்னுரை ~ எதையும் முனைந்து கைப்பற்றாத ~ உயர்திணைப் பறவை கவிதைத் தொகுப்பு `~ கதிர்பாரதி

 `ஆனந்த விகடன்` பத்திரிகையில் தலைமை உதவி ஆசிரியர் பணியில் நான் இருந்தபோது, `விகடன் தடம்` இலக்கிய இதழுக்காக எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களை, புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நான், எழுத்தாளர் தமிழ்மகன், கவிஞர் வெய்யில் மூவரும் பேட்டி கண்டோம். `எழுத்து சோறு போடுமா?` என்று வெய்யில் ஒரு கேள்வி கேட்டார். கி.ரா., யோசிக்கவே இல்லை. ``போடும்… நான் சாப்பிட்டிருக்கேன்`` எனச் சட்டென்று பதில் சொன்னார். என் கதையும் அப்படித்தான். சென்னை மாநகர வாழ்க்கை, பொருளாதாரம், அன்பு, நட்பு, துயரம் எல்லாவற்றையும் எனக்குக் கவிதைதான் கொடுத்தது. கொடுத்தது என்றால் நேரடியாக இல்லை; கொஞ்சம் மறைமுகமாக. ஆனால், கிடைத்தது அதன் மூலமே. இதை நல்ல அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி?

கவிதை எழுதுவேன் என்றும் தெரிந்ததால்தான் `கல்கி` பத்திரிகையில் என்னைப் பணியில் சேர்த்தார் அப்போதைய ஆசிரியர் சீதா ரவி. அது சென்னையில் என்னைத் தொடங்கிவைத்த காலகட்டம். இப்போது நட்பில் இருக்கிற எல்லோரையும் அடைந்தது கவிதை மூலம்தான். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால் கவிதை எழுதுகிறவர்களைத் தாண்டி என் நட்பு வட்டம் (ரொம்பவும் சிறியது) விரிவடையவில்லை. இது ஆச்சர்யம்தான். ஒரு கவிஞனாக இது பின்னடைவே. ஆனால், அதுதான் வாய்த்திருக்கிறது. அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு கவிதை பிரமாணிக்கமாக இருந்த அளவுக்கு, நானும் கவிதைக்குப் பிரமாணிக்கமாக இருக்க பெருமளவு முயன்றிருக்கிறேன். நதியின் ஆழத்தில் உருண்டோடும் கூழாங்கல்போல கவிதைக்குள் நான் சதா இயங்கிக்கொண்டே இருக்கி றேன். அதன் சாட்சிதான் `உயர்திணைப் பறவை` தொகுப்பு கவிதைகள். 

`புது எழுத்து பதிப்பகம்` வெளியீடாக வந்த எனது முதல் கவிதைத் தொகுப்பு `மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’, பரவலான வாசகக் கவனம், விருது, அங்கீகாரம் பெற்றது (மூன்றாம் பதிப்பு: சால்ட் பதிப்பகம்). இப்போதுள்ள மனநிலையில் யோசிக்கும்போது அவை எல்லாம் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. ஆனால், தொடர்ந்து கவிதை எழுதுவதற்கு ஊக்கத்தை, உற்சாகத்தை அவை கொடுத்தன. `கல்கி` பத்திரிகையில் இருந்து `ஆனந்த விகடன்` பத்திரிகைப் பணிக்கு மாறி வர, சகல செல்வாக்குமிக்க ஒருவரின் சிபாரிசுக் கடிதம்போல அந்தத் தொகுப்பு இருந்தது என்ற நெஞ்சறிந்த உண்மையைச் சொல்ல வேண்டும். கவிஞனாக நிறைவளித்த விஷயம் அது. 

`உயிர்மை` பதிப்பகம் வெளியீடாக வந்த `ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்` கவிதைத் தொகுப்புக்குக் கலவையான பாராட்டுக்கள், விமர்சனங்கள் வந்தன. நிறையப் புதியவர்கள் இதன் மூலம் எனக்குக் கிடைத்தார்கள். முதல் தொகுப்பைக் காட்டிலும் மொழியில் உக்கிரமாக இயங்கியிருக்கிறேன். `சத்தம் மிகுந்த கவிதைகள்` என்று கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் இந்தத் தொகுப்பு குறித்து, கோவை இலக்கியச் சந்திப்பு – கவிஞர் நேசமித்ரனின் `வலசை` இணைந்து நடந்திய விமர்சனக் கூட்டத்தில் பேசும்போது சொன்னார். அது உண்மைதான். அப்போது அது என் விருப்பத்துக்குரிய சத்தமும்கூட. இந்தத் தொகுப்பும் இரண்டொரு விருதுக்குத் தேர்வானதுதான். 


நான்கு வருட இடைவெளியில் மூன்றாவது தொகுப்பு `உயர்திணைப் பறவை`. நல்ல இடைவெளிதான். வயசில், மனதில், உடலில், வேகம் அடங்கி உள்முகமாக வளர ஆரம்பித்திருக்கிறேன். பேச்சில், செயலில், அணுகுமுறையில் கவனிக்கத் தகுந்த நிதானம் வந்ததுபோல தோன்றுகிறது. இப்பருவத்தில் எழுதிய கவிதைகளில் அது படியவே செய்திருக்கிறது. என் மனைவி, மகன்கள் சொந்த ஊருக்குப் போயிருந்த ஒருநாள், நான் மட்டும் சென்னை வீட்டில் இருந்தேன். வெளியில் கிளம்ப எனது சட்டையை அயர்ன் செய்து கொண்டிந்தபோது, திடீரென்று `பின்னை அன்பு’ தலைப்பில் உள்ள கவிதைகளை எழுதி முகநூலில் பதிந்தேன். அது எனக்குள் ஒரு மூடியைத் திறந்துவிட்டது. அதன் பிறகான நாட்களில் கவிதை ஊற்றுக்கண் பேரோலோத்தோடு சீறிவந்தது. என் இரவு-பகலை அடித்துக்கொண்டு போனது. எப்போதும் பசித்த மனநிலை. யானையின் காதுக்குள் புகுந்துவிட்ட எறும்பின் பசி. குடைந்துகொண்டே இருந்தது. எங்கெங்கோ கூட்டிச் சென்றது. அதன் மூலம் நிறையப் பேரைத் தொட்டேன். பார்த்த, பேசிய, கேட்ட, படித்த, உணர்ந்த எல்லாவற்றையும் தாண்டிய ஒளியை இருளை கவிமனம் சலித்துச் சலித்துப் பார்த்தது. தூங்கும்போதும் மனம் வேட்டை மிருகம்போல விழித்திருந்தது. நடுசாமத்தில் எழுந்து சில கவிதைகள் எழுதினேன். அதிகாலை உண்டியலில் இருந்து நானே உதிர்ந்து நானே சேகரமானேன். `இந்தப் பிரபஞ்சமே உன்னுடையதைப் போல நீ பிரகாசமாக இரு` என்று ரூமி எனக்காகச் சொன்னதுபோல பிரகாசமாக இருந்தேன். அந்த வெளிச்சத்தை இந்தக் கவிதைகளின் சொல்லில், வடிவத்தில் காணலாம். என் முந்தைய கவிதைகளில் இருந்த சின்னச் சின்னப் பாரங்கள் குறைந்து, இந்தக் கவிதைகள் நீர்மேல் நடக்கும் பூச்சிகள்போல இலகுவாக இருக்கின்றன. கண்டுகொள்ள வேண்டிய முக்கியமான சுட்டு இதுதான். 

 எண்களில் கவிதைகளை அடுக்கிச் சொல்வது மிகப் பழைய உத்தி. இந்தத் தொகுப்பில் இறங்குமுக எண்களில் சில கவிதைகள் இருக்கும். அது ஒரு விளையாட்டாகச் செய்தது என்றாலும், அதனதன் அளவில் ஒவ்வொன்றும் தனித் தனிக் கவிதையே என்றாலும், அகச்சரடு ஒன்று எல்லாக் கவிதைகளையும் இணைக்கிறது என்றாலும், கவிதையின் க்ளைமாக்ஸ்போல (அப்படி ஒன்று இருக்கிறதா?) ஏதோ ஒன்றை, முன்பே சொல்லிவிடும் அசௌகர்யக் குறைவு என்றாலும், அவை எல்லாம் இந்த `என்றாலும்-க்காக`ச் செய்து பார்த்ததுதான். படிக்கும்போது எண் ஒன்றில் (1) இருந்தே படிக்க வேண்டும் என்று ஒரு கவிஞனாகக் கேட்டுக்கொள்கிறேன். அந்த உரிமை இருக்கிறதுதான். ஆனால், வாசக விருப்பத்தில் தலையிட நான் யார்? 

இந்தக் கவிதைகளை எழுதும்போது என் விரலோடு முன்னும் பின்னும் வந்தவர்களில் முக்கியமானவர்கள்… எழுத்தாளர்கள் - கவிஞர்கள் வண்ணதாசன், கலாப்ரியா, கரிகாலன், அசதா, காலபைரவன், கண்டராதித்தன், இசை, ரவி சுப்பிரமணியன், பழநிபாரதி, கார்த்திக் நேத்தா, காலத்தச்சன், சுந்தர்ஜி ப்ரகாஷ். சில அன்புக்குரிய இளவல்களையும் சந்தித்தேன். சிறப்பாக, பொதுவெளியில் தனிப்பட்ட பேச்சில் வண்ணதாசன் என்னைத் தொட்டுக்கொண்டே இருந்தார். அது என்னை வெகுஆழத்திலும் மிகத் தூரத்திலும் வைத்திருந்தது. அவரிடம் இருந்து எனக்குக் கிடைத்த ஆச்சர்யமான புதிய அனுபவம் இது. 

எப்போதும் ஓர் ஈரநதிபோல வெளிப்பட்டு என்னை, விஷ்ணுபுரம் சரவணன் போன்றவர்களைத் தொடும் எழுத்தாளர் யூமா வாசுகிக்கு என் அன்பு. இந்தப் புத்தகத்தை அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். பின்னட்டை வாசகம் எழுத்தாளர் பாக்கியம் சங்கர், பின் உள்ளட்டை வாசகம் கவிஞர் ராஜசுந்தரராஜனால் ஆனது. அட்டைப்படம் மற்றும் இன்சொல் பதிப்பகத்தின் லோகோ ஆகியவற்றை ஆக்கித்தந்தவர் ஓவியர் மணிவண்ணன். மூவருக்கும் நன்றி. எதையும் முனைந்து கைப்பற்றத் தெரியாத எனது சுபாவம் இந்தக் கவிதைகளை எழுத எனக்கு உதவியாக இருந்தது. ஆழ முங்கி எழுந்திருக்கிறேன். நிறையக் கிடைத்திருக்கின்றன. உங்கள் பங்கை உங்களுக்குத் தருகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி. 

 நிறைந்த அன்புடன்
கதிர்பாரதி

20 ஆகஸ்ட் 2020
சென்னை




No comments: