23 September, 2024

விமர்சனம் ~ உயர்திணைப் பறவை ~ எழுத்தாளர் இந்திரன்

“உயர்திணைப் பறவை”/கதிர்பாரதி / இன்சொல் பதிப்பகம் / விலை: 260

தமிழில் கவிதைகளைக் கவனமாகக் கையாளத் தெரிந்த இளைஞர் கூட்டம் ஒன்று உருவாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. புது எழுத்து மனோன்மணியினால் அறிமுகப்படுத்தப்பட்ட கதிர்பாரதியின் 3வது தொகுப்பைப் பார்த்தேன். ”நதியின் ஆழத்தில் உருண்டோடும் கூழாங்கல்போல் கவிதைக்குள் நான் சதா இயங்கிக் கொண்டிருக்கிறேன் “ என்று கதிர்பாரதி தனது ”உயர்திணைப் பறவை “ கவிதைத் தொகுதியின் முன்னுரையில் சொல்கிறார். இதனை நூலின் உள்ளே இருக்கும் கவிதைகள் நிரூபிக்கின்றன. யுவபுரஸ்கார் விருது பெற்ற கதிர்பாரதி ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் “ ” ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்.” ஆகியவற்றுக்குப் பிறகு 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கொண்டு வந்திருக்கும் கவிதைத் தொகுதிதான் இது... இந்நூல் தற்கால வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் கவிதைக்கெனத் தேர்ந்து கொண்டிருக்கிறது.
எழுத்தாளர் இந்திரன்
அம்மா, அப்பாவிலிருந்து தொடங்கி கோவைப் பழத்தைப் பாதி கொறித்துக் கொண்டிருந்த சூல் அணிலைத் துரத்திய சிறிய குற்றத்திலிருந்து, ஞாபகம் ஒரு சர்வாதிகாரி, தனிமையில் இருக்கும் பாண்டிச்சேரி, எல்லாம் வல்ல சிசி டிவி காமிரா, இளையராஜா சவுண்டு சர்வீஸ் என்று சகலத்தையும் எழுதிக் கொண்டு போகிறார். கவிதைக்கு என்று பிரத்தியேகமான மொழியோ, பிரத்தியேகமான கருவோ தேவையில்லை என்று இவர் கருதுவது தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் மாம்பழத்துக்குள் ஒரு வண்டு சதா குடைந்து கொண்டிருப்பது போல ஏதோ ஒன்று இவர் கவிதைகளுக்குள் உயிர்த்துடிப்போடு குடைந்து கொண்டிருக்கிறது. இனீப்புக் கடைக்காரன் சாப்பிட்டுப் பார்க்கக் கொடுக்கும் துளி ஜாங்கிரி போல யதேச்சையாய்க் கண்ணில் படும் ஒரு கவிதை.
தோன்றும் துணை
-----------------------
‘வருத்தம்’
மிக இயல்பாக இருக்கிறது.
‘மகிழ்ச்சி’க்குத்தான்
மாறுவேடத்தில் சுற்ற வேண்டிய நிர்ப்பந்தம் .
தேம்பல்களை மறைத்துக் கொண்டு

அன்பிற்கினிய கண்ணீர்த்துளியே
உடலிலிருந்து
உதிர்ந்து
உடைந்து
சிதறி விடாதே.
அழுவதற்கு உனை விட்டால்
யாரிடம் செல்வேன்?
என்று இவரது கவிதைகள் அனைத்தும் எளிமையான ஒரு தமிழைப் பேசுகின்றன. வடிவ எளிமையில் ஆழம் தேட முயன்று இருக்கிறார். எளிமை வந்த பிறகு கவிதையில் ஆழம், தனியான திருஷ்டி போன்றவை இருந்தே தீரவேண்டும் என்பது கட்டாயமாகிவிடுகிறது அல்லவா



No comments: