25 July, 2016

விமர்சனம்~ கவிநுகர் பொழுது~ கதிர்பாரதி (“ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்” நூலினை முன்வைத்து) ~ தமிழ் மணவாளன்

ஜோதிடத்தில் பொருட்படுத்தக்கூடிய நம்பிக்கையேதும் எனக்கில்லை. ஜோதிடத்தில் காலத்தைப் பகுத்து, ராகு திசை, கேது திசை, சுக்கிர திசை நடப்பதாகச் சொல்வதுண்டு. உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் கதிர் பாரதிக்கு கவிதைத் திசை நடக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். தமிழ்க்கவிதையின் நெடிய மரபில் தமக்கான வடிவத்தை கவிதைகள் தாமே தகவமைத்துக் கொண்டு வந்திருப்பதை வரலாற்று ரீதியான வாசிப்பில் அறியவியலும்.

"தீவிரமான மாற்றங்களைக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மொழியில்தான் கவிதைகள் உயிர்ப்புப் பெறுகின்றன. தன்னைப் பின்னகர்த்தும் காலத்துக்கு விட்டுக் கொடுக்காமல் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டு, அந்தக் காலம் அளிக்கும் அனைத்துச் சவால்களையும் ஏற்றுக்கொண்டு, கவிதையை நோக்கி வருகிறவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய மனவெழுச்சியைத் தருகின்றன. சொற்களில் விவரிக்க இயலாத பேரனுபவங்களைத் தருகின்றன.", என்பார் சுந்தரராமசாமி.

சமீப
காலமாக நவீன கவிதை எழுதும் பலரும் ஒரு மொழியையும் வடிவத்தையும் கண்டடைந்திருக்கிறார்கள்
. தொழில் நுட்பத்தில் தேர்ந்த பல நவீன கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. வாசிப்பின் போது, அவை கையகப் படுத்தியிருக்கும் தொழில் நுட்பம், புனைவின் சாத்தியம் மீறிய சாத்தியம், பேசு பொருளின் தனித்துவம் ,அதன் தேவை, அதைப் பேசுவதில் உள்ள தீவிரம் அவற்றிற்கான முக்கியத்துவத்தை உறுதி செய்வனவாய் உள்ளன.
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்என்னும் கதிர்பாரதியின் தொகுப்பிலுள்ள கவிதைகள் நவீன தமிழ்க்கவிதைகளின் தேர்ந்த அடையாளமாக இருக்கின்றன என்பதை விட, தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியில் நவீன கவிதைக்கான, கால மாற்றத்தின் வடிவம், தொழில் நுட்பம் இவற்றையெல்லாம் கடந்து , எல்லாக் காலத்துக்குமான கவிதைக்குரிய இயல்பெழுச்சியை லாவகமாய்த் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன‌ என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இதனை, தக்க மேற்கோள்களுடன் பேசும் வாய்ப்பு கட்டுரையின் பிற்பகுதியில் வாய்க்குமெனக் கருதுகிறேன்.
"கவிதை என்பது உணர்ச்சிகளின் தங்குதடையற்ற பிரவாகம்", என்றார் வேர்ட்ஸ்வொர்த்.
பொதுவாக , வீன கவிதைகளில் கட்டமைக்கப் பட்ட வடிவங்களையே பெரிதும் வாசிக்கமுடியும். பிரவாகம் என்பது உணர்வு சார்ந்தது மட்டுமன்று; மொழி சார்ந்ததும் கூட. அப்படி ஒரு பிரவாகம் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. கவிஞனைக் கடந்து கவிதை சொற்களின் கரம் பற்றி முன்னே செல்கிறது.வாசிப்பினூடாக ,வார்த்தைகளின் இடம் பற்றும் தீவிரத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.
நம் தமிழ்மரபு நிலத்தை முதன்மைப் படுத்துவது. நிலத்தை முன்வைத்து பண்பாட்டைக் கட்டமைத்தது. நிலத்தினை ஐந்திணைகளாக பகுத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கென தனித்த கருப்பொருட்களையும் உரிப் பொருட்களையும் வகுத்துக்கொடுத்தது.திணைகளுக்கு குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல்,பாலையென தாவரங்களின் ,மலர்களின் பெயரினைச் சூட்டிய மரபுடையது. நம் சமகால நவீன கவிதைகள் சங்ககாலப் பாடல்களின் நீட்சி என்பதற்கான இன்னுமோர் அடையாளமாக கதிர் பாரதியின் கவிதைகளை என்னால் குறிப்பிட முடியும். நிலம் குறித்தான அதன் மீதான இவரின் கவனம் பல சூழல்களிலும் வெளிப்படும் கவிதைகள் இடம்பெற்றிருப்பது இத் தொகுப்பின் முக்கியமெனக் கருதிகிறேன்.

"
ஓர் உயர் ரக மதுப் புட்டியென அத்துணை வாளிப்பாக
என் முன்னே இருக்கிறது என் நிலம்.
நான் அதை முத்தமிட்டு முன் -பின் தட்டித் திறப்பேன்.
மிடறு மிடறாகப் பருகுவேன்.
அப்போது வாய் திறக்கும் ஆன்மாவுக்கும்
பருகக் கொடுப்பேன்".

'
எனக்கான முதிரிளம் பருவத்து முலை
' ,என்னும் கவிதை

மேற்கண்டவாறு
தொடங்குகிறது
. மதுப்புட்டியைப் போலிருக்கும் நிலம் என்கிறார்;அதுவும் வாளிப்பாக. அருந்த ஆயத்தமானவனின் மன நிலையிலிருந்து நிலம் பெரும் சொர்க்கமென விரிகிறது.தட்டித் திறப்பதற்கு முன் முத்தமிடும் உதடுகள் அறியும் அது சொர்க்கத்தின் திறப்பென்று.
என், நான்’, என்னும் சொற்கள் கவிஞனுக்கும் நிலத்துக்குமான நெருக்கத்தை உறுதிப்படுத்துகின்றன‌.அதை ஊர்ஜிதப்படுத்தும் உவமையான மதுப்புட்டி எங்கே போதைக்குள் தள்ளி மிதக்க வைத்துவிடும் சிக்கல் தவிர்க்க , ஆன்மாவுக்குப் பருகக் கொடுத்து நிலம் நிலைத்து,
" நிலம் தந்த வெள்ளாமையெனக் கொண்டாடிக் களிப்பேன்"
என களிப்படைந்த கவிமனம், அதனாலேதான் இறுதியாக
" நிலமே
மனமே
உனை ஒருவருக்கும் கொடேன்
ஓரேர் உழவனாய்க் கைக் கொள்வேன்"
என்று தனதாக தனதே தனதாக்கி கொள்கிறது.
தனக்கு மிகவும் உகந்த ஒன்றை மதுவுடன் ஒப்பிடும் கவிமனம் அதை உச்சமான ஒப்பீடாக உவமையாகக் ருதுவது இயல்பானது.

"பதினைந்து பதினாறு கார்த்திகைக்குப்பின்
ஒரு நிலவறையிலிருந்து
பதப்படுத்தப்பட்டு வெளிவந்த
வீறுமிக்க மதுவைப் போல்"-
என்பார் கனவுகளில் மீரா.

"
உழுது பயிர் செய்துருக்கிறேன் உன் யவ்வனத்தை
நீர்கால் ஓரத்து மரங்களென
அது தளிர்க்கத் தொடங்கியிருக்கிறது."
என்கிறார் மற்றொரு கவிதையில்.
நிலம் குறித்த கவிதைகள் என்று பேசும் போது ஆனந்தியின் தாழப்பறக்கும் தட்டான்கள் கவிதை குறித்துப் பேச வேண்டும்.இவரின் ,'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்', தொகுப்பிலேயே இக்கவிதை இடம் பெற்றிருந்தது. அக்கவிதை குறித்து என் முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறேன்.
நதிகளுக்கு பெண்ணின் பெயர் சூட்டிடும் மரபு நம்முடையது.கங்கை,யமுனா, காவேரியென. தாய் மண் தாய் நாடு என்று சொல்கிறோம். பாரதமாதாவெனப் பாரதி தெய்வமாக சித்தரித்தார். திருவள்ளுவர் மிக இயல்பாக ,
" நிலம் என்னும் நல்லாள் நகும்"
என்கிறார். செல்லப்பிராணிகளுக்கு பெயர் சூட்டும் மரபுண்டு. ஆனால், குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு செல்லபெயர் சூட்டியது அனேகமாக கதிர்பாரதியாகத் தான் இருக்ககூடும்.ஆனந்தி என்று பெயர் சூட்டுகிறார்.

"மணிப்புறாவின் லாவகத்தோடு எழும்பி மிதக்கிற என் நிலத்துக்கு
ஆனந்தி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்."

அவ்விதம்
பெயர் சூட்டியதாலேயே மேலெழும்பும் பாக்கியம் பெற்றதோவென்கிறார்
.தட்டான்கல் தாழப்பறந்தால் மழை வருமெனச் சிமிட்டும் ஆனந்தியின் இமைகளிலிருந்து தட்டான்கள் தாழப்பறக்கத் தொடங்கும் போது கவிமனத்தில் மழை பெய்யத் தொடங்குகிறது.இப்படியான புனைவுச் சித்திரமாக விரியும் வரிகள்

" நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு நிலத்தின் மீது
தாழப்பறக்கின்றன தட்டான்கள் "
என்னுமிடம் ஆனந்தியைத் தனித்து முதன்மைப் படுத்துவதாய் ஆகி விடாதென்பது, ஆனந்தி தான் நிலம் என்று உள் வாங்கிக் கொண்ட வாசிப்பு மனம் மெல்ல நகைக்கும்.

"வெட்டுக்கிளிகள் பறந்துலவும் என் நிலம்"

"
இப்படியாக
என் நிலத்தின் கடைசித் துளிக் கருணையும்
உறிஞ்சப்பட்ட பிறகு"

"
எம் நிலத்தின் பாடல்களால் தானியக்கிடங்குகள்
நிறைந்தன"
என்றெல்லாம் நிலம் சார்ந்த படிமங்களை, உவமைகளை உருவக்கியிருக்க,, நீ வரவே இல்லை என்னும் கவிதை பிரிவின் பாடலாய் மாறியிருக்கிறதெனலாம்.
நம் சங்க இலக்கிய மரபில் பிரிவும் பிரிவின் நிமித்தம் படைக்கப் பட்ட இலக்கியமும் மிக முக்கியமானது.தலைவன் பிரிந்து செல்வதை ,'போர் வயிற் பிரிவு', பொருள் வயிற் பிரிவு' எனக் காண்கிறோம்.
அறத்தொடு நிற்றலின் பின் (காதல் வெளிப்படுத்தப்பட்ட பின்பு) தலைமகன் உடனே மணந்து கொள்ளாமல், பொருள் தேடப் பிரிந்து போயிருக்கிறான். அவன் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள். மழைக்காலம் வந்துவிட்டதை அறியும் தலைவன் வந்துவிடுவான் எனத் தோழி தேற்றுகிறாள்.
தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் :
யானை மூங்கில் நெல்லைத் தின்றுவிட்டு மகிழ்ச்சியுடன் உறங்கும் மலைப்புறம்; சந்தன மரங்கள் நிறைந்த “வாடு பெருங்காடு” அது. அங்கே பெருமழை பொழிந்தால் அச்சந்தரும் ஆழமான சுனைகளில் நீர் நிறையும்; மலைப்பக்கங்களில் அருவிகள் ஆர்ப்பரிக்கும்; கற்களைப் புரட்டிக் கொண்டு வேகமாக ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மூங்கில்களை மூழ்கடித்துக் காட்டில் மோதி ஆர்ப்பரிக்கும். இதோ, இப்போதே மழை பொழிய வானம் மின்னி முழங்கிக் கொண்டிருக்கிறது.’, நற்றிணைப் பாடல் பேசும்.
அப்படியொரு சித்திரத்தை கதிர்பாரதி உருவாக்குகிறார்.
"என் கரம்பை நிலத்தில்
உதிர்ந்து விழுந்துவிட்ட தென்னங்குரும்பைகளைக்
கடித்துச் ச‌திராடுகின்றன ஜோடி அணில்கள்”
என்று தொடங்கும் கவிதை,
"இந்தக் கோடையும் கைவிட்டுப் போய்விட்டது"
என்று முடியும்.தலைவிக்கு பதில் தலைவன் கூற்றாக.
நிலம் சார்ந்த கவிதைகளின் ஆளுமை, தொகுப்பை வயப்படுத்தியிருப்பினும் பிற பண்பின் பாற்பட்ட தற்கால சூழல் சார் படைப்புகளும் தொகுப்பில் கவனம் கொள்ளத்தக்கவையே.
முத்தத்தில் உயிர் வளர்க்குமொருவனை அறிய முடிகிறது. அதேசமயம் புன்செய் வெயிலாகும் முத்ததின் முற்றத்தில் தேம்பிக் குலுங்குகிற உடம்பென்பது நினைவின் ஸ்தூலவடிவமெனக் கூறிடவும் இயல்கிறது.
வருத்தங்களை முத்தமிடும் மனத்தின் தன்மை பரிசீலனைக்குரியது.
நகர்ப் புறத்தினை மெட்ரோபாலிடன் நிலம் என்கிறார்.இருசக்கன வாகனத்தில் குழந்தையை ஏற்றிக்கொண்டு செல்லும் தந்தை ,அலைபேசியில் பேசுவதும் ஆபத்தான சூழல்கள் உருவாவதும் ஒரு கவிதை.
கைவிரல்களைக் கூப்பி இல்லம் உருவாக்கும் திலீபன், அதுவே நனைந்து விடாதிருக்க உள்ளங்கை குவித்து மூடும் பாவனை குழந்தமையின் உச்சங்களில் ஒன்று.
" எனக்கும்
உன் நினைவுகளுக்குமிடையில்
சிகரெட்டின் அளவேஇருக்கும்
இடைவெளியின் முன்முனையில்
ஆசையைப் பற்ற வைக்கிறதுஇரவு
உறிஞ்சி இழுத்த இழுப்பில்
விடிகாலையின்கிழக்குக்கு
சிவந்து விட்டது."
என்னும்வரிகளில், ஒரு இடைவெளியின் அளவு ஒரு சிகரெட்டின் அளவென்பது அரூபத்தின் தன்மையை ஸ்தூல வடிவத்தில்ம மாற்றும் கவிதை உத்திதான். ஆனால் ஆசையைப் பற்ற் வைத்து இழுத்து,புகைத்து ,உறிஞ்சி விடிகாலைக் கிழக்கைச் சிவக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்புடையது.
நிறைய கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம் எனுமளவு பல கவிதைகள்.

" நமது நிலம் குறித்து, நிலத்தின் மீதான நமது வாழ்வு குறித்து , அதன் விழுமியங்கள் குறித்து யாரேனும் பேசினால் அவரை அன்பு செய்யத்தான் வேண்டும். " ,என்கிறார் லிபி ஆரண்யா.
நான் அதனை வழி மொழிகிறேன். 'வேண்டும் ,ஏனெனில் தோன்றும்'.
மேலும்,நான் ஒன்றை முன்மொழிகிறேன்.யாதெனில், சங்க காலக் கவிதைகளின் நீட்சியாகவே சமகால நவீன கவிதைகளைக் காணமுடிகிறதென்னும் கூற்றின், சிறந்த அடையாளமாக இக்கவிதைகளைக் கொள்ளமுடியும்.

தமிழ்மணவாளன்


21 July, 2016

பகிர்தல் ~ ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் ~ கவிஞர் அய்யப்பமாதவன்....

இரவைக் கடக்கத் தவிக்கும் கவிஞனின் மனம் பிரதிபலிக்கும் கவிதையிது. துன்புறுத்தும் இரவை அதன் படிமத்தை என்னவெல்லாமோ செய்து பார்க்கிறான் கவிஞன்.
பகல் எப்படியோ ஆதுரமானதுதான் யாவருக்கும். இரவுகள்தான் நம் யாவரையும் தேனீக்கள் போல் தீண்டி விசமேற்றுபவை. வாழ்ந்த வாழ்வின் நினைவுகளை ஒரு சேர கொணர்ந்து நம் வாழ்பவைக் கொல்பவைதான் இந்த இராவுகள்.
நம்மைப்போலவேதான் இந்தக் கவிஞனும். இரவு வருவதை விரும்பாதவன் இரவைச் சந்தித்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் இரவை அதன் குணாதிசயத்தை எரியூட்டுகிறான். கிழித்தெறிகிறான். இது கவிஞனுக்கு மட்டுமே சாத்தியம். சாதாரண மனிதன் இரவு தரும் பெரும் அழுத்தத்தில் உறக்கமற்று நிம்மதியிழக்கிறான்.
கவிஞனோ நம் கற்பனை வழி ரெளத்திரத்தின் அறத்தின் வழி இரவு என்கிற வாதையை வார்த்தைகளால் சபித்துவிட்டு பகலைக் காதலியின் விரல்கள் போல பற்றத் துடிக்கிறான்.
இரவென்பது சாபமெனில் பகலென்பது விமோசனம் நமக்கும் இந்தக் கவிஞனுக்கும்கூட இல்லையா.
கதிர்பாரதி இன்றைய கவிஞர்களில் மிக முக்கியமானவரென்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
வாழ்த்துகள் தம்பி. உன்னைக் கண்டு பொறமைப்படுகிறவர்கள்தான் உன்னை மிகச் சிறந்த கவிஞனாக உன்னை உலகிற்குத் தெரிவித்துக்கொண்டே இருப்பார்கள். காலரைத் தூக்கிவிட்டு பெருமைப் பட்டுக்கொள். நீ கவிதைகளால் ஆனவன்.
பகலென விரலைப் பற்றினேன்
கொடும்வாதையான நேற்றைய இரவிலிருந்து
தப்பி வந்தவனில் நானொருவன்
என்னவெல்லாமோ செய்தேன்
மெழுகுவர்த்தியை உயிர்ப்பித்து இரவை எரித்தேன்
மின்விசிறியைச் சுழலவிட்டுக் கிழித்தேன்
போர்வைக்குள் புதைந்து இரவிலிருந்து எனைத் துண்டித்தேன்
தகித்த இரவின் தலையில் வாளி நீரைக் கொட்டினேன்
வேட்டையாடும் கண்கள் வாய்த்திருந்தன இரவுக்கு
கொய்யென மொய்க்கும் தேனீக்களின் கொடுக்குகளால்
ஆனது என்றும்கூடச் சொல்லலாம்
விடியலின் பொன்கீற்றொன்று துளைக்க
உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்
ஆம்
என் மார்பு கேசம் கோதும்
உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்
இத்துணை ஆதுரமானதா உன் விரல்
இத்துணை ஆதூரமானதா உன் பகல்.
கதிர் பாரதி
( ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் தொகுப்பிலிருந்து... )

01 July, 2016

நிலத்தின் துயரத்தைக் கொண்டாடுகிற கவிதைகள் - புன்னகை அம்சப்ரியா

     `னந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்களை`ப் பற்றிப் பேசுகிற போது, அதிகம் முந்திக்கொண்டு வந்து நிற்பவை, கதிர்பாரதி பாடு பொருளாக எடுத்துக்கொண்ட நிலத்தின் இழப்பு. நிலமென்பது வெறுமனே மண்ணும் கல்லும் அல்ல. கிராமம் சார்ந்த ஒருவருக்கு அது வாழ்வின் ரோசப்பகுதியைச் சார்ந்தது. ஒரு பிடி மண் கூட இல்லாதவனா? அவனை யார் மதிப்பார்கள் என்று கேலி செய்கிற கிராமியம் சார்ந்தது. குறிப்பாக உழவு நிலங்களின் மீதான காதலும், தீவீரப் பற்றுதலும், உறவுகளை முறிப்பதில் கூட தயங்கியதில்லை. அவ்வளவு வன்முறையாகவும், நீசத்திற்குரியதாகவும் நிலம் இருந்திருக்கிறது. அந்த நிலத்தை வாழ்தலின் பொருட்டு இழந்துவிட்டு, நகரும் நகர வாழ்வியல் பெருத்த அவமானமாகிவிடுகிறது.
      அந்த அவமானத்தை மறைக்கவும், சமாதானிக்கவும் நகர வாழ்வியலின் மீதான கட்டமைப்புக்கு தன்னை நகர்த்திய காரியங்களின் மீது பழி போடுகிறான் கவிதையை ஒரு கருவியாகக் கொண்டு. நிலத்தின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே இந்தத் தொகுப்பு இருக்கிறது. முன்பு வாயலாகவும், வயல்களின் உறவுகளாகவும் இருந்த வானம் இப்போது இல்லையென்பது வலி மிகுந்தது.
       நிலத்தை இழப்பது என்பது மாறிவரும் கலாச்சாரக் குறியீடு மட்டுமல்ல. ஒரு யுகத்தின் பிறழ்வு. மனவெடிப்புத் துயரம். கசியும் இரத்தத் துளிகளே இங்கே கவிதைகளென கிளர்ந்திருக்கிறது. எளியதாக சில கவிதைகளை குறிப்பிட்டு நிறைவு செய்துவிடுகிற தொகுப்பல்ல இது. ஒவ்வொரு கவிதையும் நாம் கண்டறிந்த உலகத்தில் உணர்ந்து கொள்ளாத இன்னுமொரு உலகத்தை அடையாளம் காட்டுகிறது. எளிய காமத்தின் வலிய துயரங்களைக் கண்ணீர் கசியக் கசியப் பேசுகிறது. "டார்லிங்" என்றோ, பெயர் சொல்லியோ அழைத்துக் கொள்கிற நகர உறவுகளில் மாமன்களுக்காக கரிசனப்படுகிறது. கடந்த காலத்தின் துயரவடுக்களை இசைப் பாடல்களால் வருடிக் கொள்கிறது.
        நான் பேச நினைத்ததை இவனே பேசிவிட்டானே என்று பொறாமை தூண்டுகிறது. இதையும் பேசியிருக்கிறாயா என்று கொண்டாடத் தூண்டுகிறது. எளிதில் வாசித்து முடித்து விடாத பெரும் ரசனைத் தடுமாற்றத்தை ஒவ்வொரு வரியும் தான் வசம் கொண்டிருக்கிறது.
        எனது ரசனையின் வழியே சற்றே விரிவாக எழுத நினைத்து, ஒவ்வொரு கவிதையையும் உங்களிடம் பகிர எண்ணி, சிலவற்றைப் பற்றி மட்டுமே பகிர்ந்த கவிதை ரசனை இது.
       அறிந்த உலகமொன்றை மனதிற்கொண்டு, இப்படி இருக்குமோ , அப்படி இருக்குமோ என்கிற பெரும் பிரயாசைக்ளோடோ, இதுதானா..? இதற்குள் என்ன இருந்துவிடப் போகிறது என்கிற முன் முடிவுகளோடோ ஔ கவிதைப் பிரதியை அணுகிற போது, ஒரு சிறந்த கவிதையை அடையாளம் காண இயலாது.
        ஏதோ ஒரு கவிதைவெளி... நமக்கான சிறகுகளோடு பயணத்தைத் தொடங்க்குகிற போதுதான் கவிதை நம்மை தன் மென்மைவெளியில் அமர்த்திக் கொள்கிற்து.
       ஒரு கவிதையை எழுதுவதற்கும் கவிதையாக வாழ்வதற்குமான நுட்பமான இடைவெளியை வாசித்து முடித்த பின் அறிந்து கொள்ள முயற்ச்சிக்கலாம். கவிஞனைக் கொண்டாடுகிறோமா, கவிதையைக் கொண்டாடுகிறோமா என்பதே மிக முக்கியமானது. கவிதைப் பிரதியை வாசிக்கத் துவங்குவதற்கு முன்பே கவிஞனின் முகம் மனக் கண்ணுக்குள் வந்துவிடுகிற போது,கவிதையின் முகத்தை தரிசிக்க இயலாது.
      கவிதைக்குள் குரூரமான முகமொன்றையோ, பிரியம் வழியும் ஒரு இணை வழிகளையோ, கேட்கக் கடவாத செவிகளையோ செவிநுகர் சலிப்பையோ உணரும் வாய்ப்பை பெறுதல் என்பதே கவிதையை நமக்கானதாக்குகிற எளிய உத்தியாகும். கவிதையைப் படைத்துவிட்ட கவினஞனின் மனநிலையை அவரவர் சாயலில் கண்டெடுத்து இதுதான் எனக்கான கவிதையென்று பிரியம் பொங்க அணைத்துக் கொள்ளலாம். என் கோபத்தை, என் பேரின்பத்தை, என் சிற்றின்பத்தை, என் விதையை உணர்த்துகிற கவிதைப் பிரதி எனக்கு நெருக்கமாகிவிடுகிறது. நான் அறிந்த உலகமும், நான் அறியாத உலகமும் ஒரு பிரதிக்குள் இருந்துவிடுகிற போது, அந்தக் கவிதைகளை அணைத்துக் கொள்வதிலோ, இடைவிடாத முத்தத்தால் திணறடிக்கவோ என்ன தடை இருக்கப் போகிறது? ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கிற இந்தத் தட்டாங்களில் வசீகரித்தது மொழியின் பெரும் வீச்சு. நிலத்தின் மீதான பெருங்கருணை. குழந்தைகளின் மீதான கனவுகள்... என்று மனம் ஈர்ப்பிற்கான ஏராளமான வழிகள் இருக்கின்றது.
         முத்தம் பற்றிய ஒரு கவிதை முதலில் முத்தக் காலத்திற்கு நம்மை உணர்த்துகிறது. ரகசிய உலகிற்குள் ஒரு பிரியமான பரிசுப் பொட்டலமென ஒவ்வொருவருக்குள் ஒரு முத்த உலகம் இருக்கிறது. அதை வாய்ப்புள்ள போதெல்லாம் மிக மென்மையாக திறந்து திறந்து பார்க்கிறார்கள். சமயங்களில் அது கண்ணீர் வடிக்கிறது. நம்மை திரும்பவும் முத்தமாக்கிக் கொள்கிறோம். கடந்த காலத்தின் தடத்தில் நாமே செல்வது மிகத்துயரமானது. மகிழ்ச்சியும் கூட பெரும் துயர மகிழ்ச்சியாகவே மாறிவிடுகிறது. கதிர்பாரதியின் கவிதைகள் தொலைந்த காலம் ஒன்றிற்குள் நம்மை மூழ்கடித்து, திணற திணற மீண்டும் மேலெழும்பக் செய்கின்றன.
          முத்தத்தில் உயிர் வளர்த்த ஒருவனை நான் அறிவேன் எனத் துவங்கி, பின்னிப் பின்னி பெரும் சரடாகி, அதுவீ கயிராகி இறுதியில் இப்படி முடிகிறது கவிதை
      "அது ரேகைகளில் ஊடுருவி
        என் ஆயுளைக் குடிக்கத் தொடங்கியிருக்கிறது"
          கவிதை, புனைவு வெளியில் கட்டமைக்கப்படுகிற போது எதார்த்தத்தை மீளாக்கம் செய்து வாசிப்பவனை உறையச் செய்ய வேண்டும். காலத்தின் தூண்களால் புணரமைக்கப்படும் சொற்கலவை, பொருத்தமாகச் சேர்கிறபோது படைப்பவனின் ஆழ்மனம், வாசிப்பவனின் நேர்கோட்டிற்குள் நுழைந்து விடுகிறது.
       "நீ வரவே இல்லை" கவிதையில் எதார்த்த புனைவு எப்பாசாங்கும் இன்றி கட்டமைக்கப்படுகிறது. துயரங்களின் மேல் கவியும் தனிமையாக அலையும் உயிரை நமக்குள் காட்சிப்படுத்தும் போது, கவிதையும் நமக்கு நெருக்கமானதாகிவிடுகிறது.
            குறிப்பாக...
               "உலர்ந்த உள்ளாடையை
                துணிகளுக்குள் பொதிந்து எடுத்துப் போகும்
                எதிர்வீட்டுப் பருவப் பெண்ணால்      நினைவூட்டப்படும் நீ
                இன்னும் வரவே இல்லை.
காலம் எவ்வளவு மாறினாலும் மண்ணின் அடையாளங்கள் என்று சிலவற்றை இன்னும் தக்க வைத்தபடிதான் இருக்கிறது உலகம். மண்ணின் வாசனையை மலர்த்துகிற கவிதை வரிகள் இவை.
             இந்த வரிகளுக்கு உரிய ஒருவரை இன்றைக்கும் பார்க்க வாய்க்கிறது. அதனால் இந்தக் கவிதை வரிகள் நம்மை ஈர்த்துவிடுகின்றன. கவிஞன் எதிர்பார்த்திருக்கிற "நீ" என்பது யார்? எப்படிப்பட்டவர் என்று அடையாளம் காட்டிவிடுகிறது. கவிஞனின் மனமும் வெளிப்பட்டு விடுகிறது.
            நிலத்தை நேசித்தல் என்பதும் அது குறித்துப் பகிர்ந்துக் கொள்வது என்பதும் புலம்புவது என்பதும் தொலைந்த காலத்தின் மீதான காதலின் முற்றிய பைத்திய நிலை என்றுதான் கூற வேண்டும்.
           "எனக்கான முதிரிளம் பருவத்து முலை" தலைப்பிட்ட கவிதைக்குள் கவிஞனின் உச்சகட்ட நிலப் பைத்தியமொன்றையே உணரக்கிடைக்கிறது. வரிகளுக்குள் நகரும் சொற்களில் மெதுவாகத் துவங்கி, சிறிது சிறிதாக போதெயேறி, இறுதியில் சுயநலம் ஒன்றின் பேரன்பாகி விடுகிறது. நிலத்தை நேசிக்கிறவனால்தான் இதன் பிரியமும், அன்பும், வாஞ்சையும் புரியும். கவிஞன் நிலமென்று அடையாளப்படுத்துவது, வெறுமனே நிலமென்று இருக்க வேண்டிய அவசியமில்லை. அது நிலமான வேறு எதுவாகவும் இருக்கலாம். கவிஞர் கிராமியத்தைத் தொலைக்காதவர் என்பதற்குச் சான்றாக சில வரிகளை அடையாளப்படுத்தலாம்.
    "நிலம் தந்த வெள்ளாமையைக் கொண்டாடிக் களிப்பேன்"
    "என் கருவேலத்து மினுக்கட்டாங்களைக் கண்டெடுப்பவன்"
    "ஓரேர் உழவனாய்க் கைகொள்வேன்"
வரிகளுக்குள் ஊடோடிக்கிடக்கிற நிலத்தின் தொலைந்த மிச்சங்கள் இவை. "ஓரேர் உழவனாய்க் கைகொள்வேன்" என்பது கவித்துவச் சொற்களின் கலவை.
      அடிமை சாசனத்து அற்பர்களின் உலகம் இது. அது எள்ளலோடு ஒரு கவிதையில் வாசிக்கக் கிடைக்கிறது. சமர்த்தாகக் குட்டிக் கரணம் போடுதல், அதிகார வர்க்கத்தின் விளையாட்டுப் பொம்மைகள் நாமென்பதைக் கவிதை வரிகள் உணர்த்துகின்றன.
சமர்த்தாகக் குட்டிக்கரணம் போடுதல்
================================
குரங்குகென சில வரைமுறைகள் இருக்கின்றன
வித்தை நிகழ்த்துகையில் குட்டிக்கரணம் போட்டாக வேண்டும்
கைதட்டலுக்கேற்ப குட்டிக் கரணத்தின் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ தெரிந்திருத்தல் அவசியம்
அதைவிட நலம், குரங்காட்டி முன்பு சோம்பித்திரியாதிருத்தல்
வித்தையின் இறுதியில் உறுதியாகத் தட்டேந்தி வரவேண்டும்
திரையிலெனில்
கிளைமாக்ஸில் வில்லனைச் சுட்டு வீழ்த்தினால் குரங்கர் திலகம்
அல்லது அப்படி லட்சியத்தை வரித்துக் கொள்வது நல்லது
காடுகளில் உலவுவது கிளைகளில் தொங்க்குவது கீழினும் கீழ்
பழங்களை உமிழ்ந்துவிட்டு பீட்சா உண்ணத்தெரிதல் பாக்கியத்திலும் பாக்கியம்
சரியான நேரத்துக்கு கூண்டுக்குள் அடைவதும்
கூண்டையே உலகமெனக் கொண்டாடுவதிலும் இருக்கிறது
குரங்காய் பிறந்ததன் பயன்
எங்கே ஒரு குட்டிக்கரணம் போட்டு
கூண்டுக்குள் அடைந்துக் கொள்ளுங்கள் பார்ப்போம்
ம்ம்ம்ம்..... சமர்த்து.
        கவிதையின் பலம் சொற்கள் எந்தச் சொல் கவிதையை தாங்கி நிற்கின்றது என்பது படைப்பாளியின் ஆழ்ந்த அலைவத்தின் வெளிப்பாடு. ஒன்றை அனுபவிக்க அனுபவிக்க தன் சுவைமேலும் மேலும் கூடுகிறது. எல்லையொன்றில் அது புளித்துப் போகிறது. கசப்பு பெரும் கோமபாகிறது. கசப்பின் உச்சகட்டம் விரக்தி. அதுவே இறுதியில் சுய கேலியாகிவிடுகிறது. மேற்கண்ட கைதை சுயகேலியின் சிறப்பு அடையாளம். இது ஓரளவு நம்மை ஆசுவாசப்படுத்தி நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்கிற எளிய உத்திதான். இது இல்லாவிட்டால் நம்மை நாமே கொன்று கொல்வோம் ! நம்மை நாமே கொலை செய்வதிலிருந்து நம்மை விடுவிக்கும் அற்புத அனுபவம் சமர்த்தாகக் குட்டிக்கரணம் போடுதல். நீங்களும் குட்டிக்கரணம் போடுகிறவராக இருந்தால் இந்தக்கவிதை உங்களையும் ஈர்க்கும்.
            தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதை பண்பாட்டின் சிகரமென வழிநடத்தியவர்கள் நாம். இப்போதைக்கு அப்படியில்லை. ஒரு வாய் தண்ணீருக்கு யாவற்றையும் விலையாக்கிவிட்டதை கவிஞனின் எழுதுகோல் கண்ணீரோடு நோக்குகிறது.
           கவிஞனின் எழுத்து சமூகம் சார்ந்தும் இயங்குவதற்கு அடையாளமாக ச்சியர்ஸ் கவிதை. யார் யாருடைய நிலமோ எங்கோ பறிபோன பின் உண்ணும் உணவுக்கு சீரலையும் காலமாகவே இருக்கிறது. நல்ல துவக்கம் சொற்களைக் கட்டமைத்தல், வாசிக்கத் தூண்டுதல் என்று கவிதை தன் பணியை செவ்வனே செய்வதற்குப் பொருத்தமான ஒரு கவிதை
ச்ச்சியர்ஸ்
*************
இப்படியாக
என் நிலத்தின் கடைசித் துளி கருணையும்
உறிஞ்சப்பட்டப் பிறகு
இப்படியாக
விதை நெல் அணைத்தையும்
விஷத்தில் முக்கியெடுத்த பிறகு
இப்படியாக
அடைக்கலாங் குருவிகள் தலைக்குப்புற
வீழ்ச்சியுற்ற பிறகு
இப்படியாக
பிராய்லர் பறவையின் சதைகள்
தேசியச் சுவைக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு
இப்படியாக
குறியின் எழுச்சிக்கு லேகியத்தால்
முட்டுக்கொடுத்த பிறகு
இப்படியாக
சாத்தானின் மனவியை
தேவமைந்தன் வன்நுகர்ந்த பிறகு
இப்படியாக
உருவி விசிறப்பட்ட குழவியொன்றை
செவ்வெறும்புகளின் கொடுக்குகள் சூழ்ந்த பிறகு
இப்படியாகக் கெக்களிக்கின்றன
இரு கருநிற கோலாக்கள்
ச்ச்சியர்ஸ்.
    கவிஞன் குழந்தைகளின் செயல்களால் ஈர்க்கப்படுவதற்கான காரணம், அவனின் குழந்தைக் காலத்தின் இழப்பு மட்டுமல்ல... மனம் குழந்தையாக இருப்பினும் உலகம் ஏதேனும் ஒரு ஆயுதமேந்தி போர்தொடுக்கிற வன்முறையை தொடர்ந்து தூண்டுகிறது. குழந்தைமையை இழப்பது என்பது பெரும் துயரமாகி விடுகிறது. அதனாலேயே குழந்தைகள் காலம் மீண்டும் நினவுப் புதையலில் இருந்து பழமையைக் கண்டடெடுக்கிற கவிப் பயணமாகிவிடுகிறது. கவிஞர் கதிர்பாரதிக்கும் இது வாய்க்கிறது. மாநகர வாழ்வில் குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிறவர்களுக்கு காலம் என்பதே தனித்த அறைதான். காலம் அவர்களை பந்தாக்கி விடுகிறது. "கண்டிஷன்ஸ் அப்ளை" கவிதை உணர்வுகளின் குவியல்.
கண்டிஷன்ஸ் அப்ளை
====================
மாநகர வாழ்வின்
கண்டிஷன்ஸ் அப்ளைகளுக்குப் பிறந்த மகனொருவன்
சிறகு முளைத்த பந்தை 
யாருமற்ற தன் வீட்டின் அறை சுவரில்
அடித்து அடித்து விளையாடுகிறான்
அந்தப் பந்து 
அவனுக்கும் தனிமைக்குமாகப்
போய்த் திரும்பி
திரும்பிப் போய்
ஓய்கிற வேளையில்
வந்தே விட்டது 
மற்றும் ஓர் இரவு."

      இந்தக் கவிதையில் தனிமை நம்மையும் சுற்றிக் கொள்கிறது.நம்மை கவிதைக்குள் நகர்த்துகிற தனிமையே இந்தக் கவிதையின் சிறப்புமாகிறது. கவிஞரின் நுட்பமான பார்வை "கொஞ்சத்திலும் கொஞ்சமாக" கவிதையில் உணர முடிகிறது. விழியிருப்பவர்கள் எளிதில் கடந்துவிட இயலாத பெரும் துயரம் "கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி. இந்தச் சுவரொட்டியில் யாரும் தங்கள் பெயரைப் பொருத்திப் பார்கத் தோன்றுவதேயில்லை. மனம் யாவற்றையும் உற்று நோக்குவதன் சாட்சியமாகவும், அது உணர்த்தும் கசிந்த மனதின் கொந்தளிப்பாகவும் வெடித்த கவிதையாக "கொஞ்சத்திலும் கொஞ்சமாக" கவிதையை உணர இயலும். எது கவிதையென்று வினா வருகிற [போதெல்லாம் எளிய இலக்கணமொன்றை உருவாக்கிக் கொள்ளலாம். வாசிபவனின் மனதிற்குள் தேங்கிக் கிடக்கிற ஏதோ ஒரு உணர்வுலகத்தை படைப்பவன் கையளிக்கிறான். வார்த்தை தொலைந்த வீதியில் உலாவும் வாசகனுக்கு சொற்களால் அந்த உலகத்தைக் கவிஞர் பரிசளிக்கிறார். அப்படியொரு கவிதைதான் இது.
   கொஞ்சத்திலும் கொஞ்சமாக
==============================
இருபுறங்களிலும்
கண்கள் சொட்டிக் கொண்டிருக்க 
மரண அஞ்சலி சுவரொட்டியின் 
நடத்த நடுவில் இருப்பவனின் புன்னகையை 
கட்டாரியாக வலது கையில்
ஏந்தியிருக்கிற வாழ்வே
ஆம்
வாழ்வே
அதை இன்னும் கொஞ்சம்
கொஞ்சத்திலும் கொஞ்சம்
அழமாக இறக்கு
என் அடிவயிற்றில்.
         கவிதையைப் படைத்தவனின் மனச் சூழலில் எழும் ஒரு கவிதை, வாசிப்பவரின் அலைவரிசையோடு இணைந்து விடுகிற போது அக்கவிதையின் சொற்கள் மேலும் மேலும் மெருகேறிவிடுகிறது.
        கவிதையை வாசித்து முடிக்கிற போது ஏற்படுகிற மன அதிர்வே அக்கவிதையின் ஆழத்தை முடிவு செய்கிறது. வலிய வரவழைக்கப்பட்ட சொற்களோ, மேலும் மேலும் மொழியைச் சிக்கலாக்குகிற மேதாவித்தனமோ கவிதையின் ஈர்ப்பைத் தீர்மானிப்பதில்லை. கவிஞன் தன் மனம் பதறப் பதற, வேறொன்றுமே இல்லை செய்வதற்கென்ற கையறு நிலையில் இறுதித் தஞ்சமாய் கவிதையைச் சரணடைந்த போதுதான் நமக்கும் ஒரு கவிதை கிடைத்து விடுகிறது. "அலறி ஓடும் மவ்னம்" அப்படியொரு அனுபவமாக நமக்குக் கிடைத்துவிடுகிறது.
அலறி ஓடும் மவ்னம்
====================
இருபது நிமிடங்கள் நகர்வதற்கு முன்பு 
தூக்கிலிட்டுக் கொண்டவளின் பொருட்டு 
அறையை அறைந்தறைந்து கலங்குகிறது
அலறும் செல்பெசி.
நேற்றைய ஊடலை நேர் செய்வதற்கான
காதலன் முத்தம் தேங்கி நிற்கிற
அந்த செல்பேசிக்குள் சாபமென நுழைகிறது 
அவனனுப்பிய அந்தரங்கக் குறுஞ்செய்தி 
இனிப்புப் பண்டங்களின் மீது ஊறுகிற எறும்புகள்
தற்கொலையின் கசப்பைச் சுமந்து தள்ளாடுகின்றன.
திரும்ப இயலாத அகாலத்துக்குள் 
சிக்கிக்கொண்டு திணறுகிற அந்த அறையை 
காற்று திறக்க அலறிக்கொண்டு ஓடுகிறது 
விக்கித்து நின்ற  மவ்னம் !.

         தமிழ் நவீன கவிதை வெறும் புரியப்படாத சொற்களாலும், அறியப்படாத உலகின் அந்தர வெளிக்குள் சுற்றி அலைகிற வெறும் தூசுகளாலும் சூழப்பட்டதாக வெறுமனே புறம் பேசுகிற பலருக்கு சமூகம் சார்ந்த கருத்தாடல்களையும், வன்மத்தையும் நிலத்தின் மீதான பேரன்பையும் நவீன கவிதையாக்க இயலும் என்பதற்குப் பெரும் சாட்சியாக இருக்கிறது இந்தத் தொகுப்பு.
        "எங்களிடம் நீர்முள்ளிப் பூக்கள் இருந்தன" தலைப்பிடட கவிதை மரபும், கிராமமும் இந்த மக்களையும் மண்ணையும் எவ்வாறு பண்படுத்தியபடி இருந்தன என்பதற்கு அழியா சாட்சியாக இருக்கிறது. ஒரு கவிஞன் இந்த நிலத்தின் துயரத்தை வேறு எப்படித்தான் வெளிப்படுத்த இயலும்?
         நகரமும், நகரம் சார்ந்த மரபு தொலைத்த வெறும் கல்வியும் இந்த மக்களை கிராமங்களை விட்டு விரட்ட வைத்தன. அப்படி விரட்டப்பட்டதில், பெயர்ந்தவர்கள் வெறும் மனிதர்கள் மட்டுமல்ல. அந்த சிறு வீதியில் விளையாடிக் களித்த குழந்தைமை, வியப்பிலும் வியப்பாக பார்த்துத் தடுமாறிய பருவமெய்துதல், சீர் சடங்கு என்று தொலைந்தவற்றுள், கரைந்து போனது ஊர்கூடல்... சிறுசிறு சங்கடங்கள்..... கூடியுண்ட உணவு, ஒன்றா..? இரண்டா..? இவையெல்லாம் காலத்திற்கு ஒவ்வாதவைகள் எனில், ஏற்றுக் கொண்டவற்றுள் எது இப்போது நிம்மதி தருகிறது? மரபில் ஊறித்திளைத்த யாரும் சொற்களைக் கண்டெடுத்துக் கண்டெடுத்து நமக்கு பரிசளித்த கதிர்பாரதி, இந்தக் கவிதையின் இறுதி வரிகளில் ஒருதுளி கண்ணீரைச் சிந்தைவைக்கிறார். மூன்று ஜோடி உழவு மாடுகளும், இறப்புட்டி, சப்பரம், குலசாமிகள், அதக்குதல் ... தலைமாடு, கால்மாடு என்று சொற்களை அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்கிறார். எவ்வளவு சொற்களை நாம் இழந்திருக்கிறோம்.. இழந்துவருகிறோம் என்று நெஞ்சு சுடுகிறது. இதற்கு மேல் சொல்ல என்னதான் இருக்கிறது என்று விரக்தியடையச் செய்கிறது. தொலைந்ததை மீட்டெடுக்க எச்சரிக்கிறது.
           கவிதையும் கவிதை சார்ந்தும் இயங்குகிற ஒருவருக்கு இந்தத்தொகுப்பு அரியதொரு தொகுப்பு.