30 September, 2024

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ மிஷன் தெரு ~ தஞ்சை ப்ரகாஷ் (30செப்2023 அன்று எழுதியது)

வாழ்நாள் முழுக்க சமூகத்தால், சக உறவுகளால், சமூக மதிப்பீடுகளால் தோற்கடிக்கப்படும் எஸ்தர்.... அவளை எழுதிய தஞ்சை ப்ரகாஷின் குறுநாவல் `மிஷன் தெரு`.

எஸ்தர், கள்ளர்குடிப் பெண்; அதுவும் கிறிஸ்தவத்துக்கு மாறிய தஞ்சாவூர் கள்ளர். ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம்... எல்லாவற்றுக்கும் மேலாக பைபிளை லத்தின் மொழியில் அறிந்தவள்; ஆங்கில பனுவல்களை, கிரந்தங்களை வாசிப்பவள். அதற்கு அவளது தந்தை ராஜரெத்தினம் வன்னியரால் ஊக்குவிக்கப்பட்டவள். இருந்தும் இவை எதுவும் அவள் வாழ்வை நேர்செய்யவில்லை. ஒரு காதலும் ஒரு கல்யாணமும் அவளைச் சிதைக்கின்றன.
தஞ்சை ப்ரகாஷ்
18_ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. தஞ்சாவூரில் நிலையான ஆட்சி இல்லை. மராட்டியர்கள், ஆங்கில அரசாங்கத்தின் இசைவோடு இரட்டையாட்சி செலுத்துகிறார்கள். அடிக்கடி நடக்கும் முகமதியர் படையெடுப்பு வேறு. அதில் ஆநிரை கவர்தல்போல சர்வநாசமாக பெண்களைப் பறித்துக்கொண்டுபோகிறார்கள். இவற்றில் எல்லாம் தப்பிப்பிழைத்து கணவனிடம் சிதைகிறாள் எஸ்தர்.
அதீத சுதந்திரம் விரும்பும் எஸ்தர், பிறப்பிலேயே பேரழகி. அவள் உடலுக்கு எதிராக, அவளுக்கு அறிமுகமாகும் அத்தனை ஆண்களும் அத்துமீறுகிறார்கள். பைபிள் கிளாஸ் சொல்லித்தரும் தேவரகசியம் வாத்தியார், காதலன் வில்லியம்ஸ், மச்சான் பர்னபாஸ், வெள்ளைக்கார துரை ஸ்டோன், தோழன் ஜோப், அரிவாளாலால் வெட்டி வெட்டி மீன்பிடிக்கும் கள்ளர்குடிப் பயல்கள்... எல்லாரும்; எல்லாரும். அவளது வாலிபமே ஒரு முள்ளாக அவள்மீது கவிகிறது.
நீர்நிலைகளும் குளிர்ச்சியும் அதிகமுள்ள மன்னார்குடியில் இருந்து, தஞ்சாவூர் மிஷன் தெரு என்ற செம்மண் பொட்டலுக்கு, மராட்டிய அதிகாரத்தால் குடியேற்றம் செய்யப்படுகிறாள் எஸ்தர்... கட்டாயக் கணவன் லாசரஸோடுதான். அவன்தான் வாழ்நாள் முழுக்க அவளால் மறக்கமுடியாத துர்க்கனவாக, உடல்வடுவாக மாறுகிறான். மன்னார்குடி குளிர்ச்சியும் தஞ்சாவூர் செம்மண் வெப்பமும், எஸ்தர் தன் வாழ்வில் அடையும் தலைக்கீழ் மாற்றத்தை உணர்த்தும் கடத்தியாக தஞ்சை ப்ரகாஷால் உருவகிக்கப்படுகிறது.

கணவன் லாசரஸ் அடித்துத் துவைத்து தன்னை அனுபவிக்கும்போதெல்லாம், முன்பு தன்னிடம் அத்துமீறியதற்காக மன்னிப்பு இரஞ்சிகொண்டே பின்வந்த துரை ஸ்டோன் எவ்வளவோ மேன்மையானவன் என ஏங்குகிறாள் எஸ்தர். அரசாங்க வேலைக்காக தன்னை கைநெகிழ்ந்த காதலன் வில்லியம்ஸ், ஸ்டோன் துரையைவிட எந்த விதத்தில் உயர்கிறான் என நினைக்கிறாள். ``யு ஆர் சோ பியூட்டிஃபுல்`` என சொல்லிச் சொல்லியே வளையவந்த ஸ்டோன் துரையால், ஏன் லாசரஸைப் போல தன்னை அபரிக்கத் தெரியவில்லை என லாசரஸோடு மாலையும் கழுத்துமாக நிற்கிறவேளையில்கூட நினைக்கிறாள் எஸ்தர். எதற்காக இந்த ஏக்கம்? ஸ்டோன் துரை ஒருவன்தான் எஸ்தரை அடைய நினைக்காமல் நெகிழ்த்த நினைக்கிறான். எனினும் அதுவும்கூட அவள் விருப்பம் இல்லாத அத்துமீறல்தான். அதாவது இருக்கிற கொள்ளியில் நல்லக்கொள்ளி.
சமத்துவம் சகோதரத்துவம் சமாதானம் பேசும் எத்தனை மிலேச்ச மதங்கள் இந்தியாவுக்கு வந்தாலும் அவற்றில் பெண்கள் உள்ளிட்ட அனைவரின் நிலை சாதிக் கட்டோடுதான் இருக்கும். கிறிஸ்துவ மதம் மாறிய கள்ளர்களை ``சோற்றுக் கள்ளர்கள்`` என ஏளம்செய்கிறது மதம்மாறாத கள்ளர்குடி. இன்னும் ஒருபடி கீழிறங்கி ``இரண்டாம் தர கள்ளர்கள்`` என்கிறது. தெருவில் இறங்கி பேசும் பெண்களை ``வீச்சரிவாளால் தலை சீவுவேன்`` என்கிறது. இன்றைக்கும் இதுதான் நிலை. முறைகள் மாறியிருக்கின்றன. ஆனால், அடக்கும்முறை இருக்கிறது. உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை தேவாலயத்துக்குள் விடமறுத்து ரத்தக்காவு வாங்குகிறது. மதம் மாறி பெண்களுக்கு கிறிஸ்தவம் கொடுத்த சலுகைகளாக ``ஜாக்கெட் போட்டுக்கொள்ளலாம்``, "ஆங்கிலப் படிப்பு படிக்கலாம்" என்பனவற்றைத் தொட்டுக்காட்டுகிறார் தஞ்சை ப்ரகாஷ்.
வன்புணர்வின் மூலம் ஒரு பெண்ணின் வாழ்வை சிதைத்துவிட முடியும்; கால்களின் இடையில் பிரயோகிக்கப்படும் அந்தப் பலவந்தம் மூலம் அவளை வீழ்த்திவிட முடியும் என வெறிகொள்கிறது ஆண் உலகம். ஆனால், அந்தப் பெண்ணுக்குள் இருக்கும் இருட்டை எந்த ஆணாலும் ஊடுருவிச் செல்ல முடியாது; ஒளிபெறச் செய்ய முடியாது என்கிறார் ப்ரகாஷ்.
பெண் அடையும் துயரத்துக்கு எதிராக உள்நாட்டு கடவுள்கள் மட்டும் அல்ல வெளிநாட்டு கடவுள்களும் பாராமுகமாகத்தான் இருக்கிறார்கள்.
பொறுமையான வாசிப்பைக் கோரும் இந்தக் குறுநாவல், வாசித்தப் பிறகு துயரச் சித்திரமாக பேரனுபம் கொள்ளவைக்கிறது. தஞ்சை ப்ரகாஷின் "அங்கிள்", "மேபல்", "நாகரத்தினம்" போன்ற கதைகளின் தொடர்ச்சி என நிறுவதற்கான சாத்தியங்களும் "மிஷன் தெரு" குறுநாவலில் இருக்கின்றன.
தன் மீது திணிக்கப்பட்ட ஆதிக்கத்தை மீற நினைத்த எஸ்தர், அதே ஆதிக்கத்தை தன் வாலிப மகள் ரூபி மீது திணிப்பதுதான் வாழ்வின் முரண். அந்த முரணை எழுதுவதில் வல்லவர் தஞ்சை ப்ரகாஷ்.
"மிஷன் தெரு" குறுநாவலின் முதலிரு பதிப்புகளை அன்னம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சமீபத்திய பதிப்பாக வாசகசாலை வெளியிட்டிருக்கிறது.

27 September, 2024

கவிதை ~ குழந்தை நட்சத்திரம் ~ கதிரபாரதி



கிறிஸ்துமஸ் விடுமுறை உழவன் விரைவு வண்டி சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு 7மணி நேரம் வேக மூச்செடுத்து ஓடிவந்து 2_வது நடைமேடையில் விடிகாலை 05:20 மணியில் நின்று ஓய்ந்துவிட்டது.

அதன் வயிற்றுக்குட்டியாக
நடைமேடையில் குதித்த ஒரு குழந்தை,
தூங்கிவிழித்த புதுவிழிகளால்
வானத்தை அண்ணார்ந்து பார்த்து
தந்தையிடம் கைக்காட்டினாள்… `அங்க பாருங்க அந்த நட்சத்திரத்தை
நான் பார்த்துட்டேன்.`

உழவன்
300 மைல்கள் தாண்டி
மூச்சடக்கி ஓடிவந்ததும்
அந்தக் குழந்தை நட்சத்திரத்தைப் பார்க்கத்தான்.

-கதிர்பாரதி

வெப்சீரிஸ் ~ தலைமைச் செயலகம் ~ இயக்குநர் வசந்தபாலன் ~ பார்வை : கதிர்பாரதி (21மே2023 அன்று எழுதியது)

லைமைச் செயலகம்` - எழுத்தாளர் சுஜாதா, மனித மூளையின் தொழில்நுட்பம், வலிமை, விஸ்தாரம் மற்றும் பராக்கிரமம் பற்றியெல்லாம் ஜூ.வி-யில் எழுதி மிகவும் வெற்றியடைந்த கட்டுரைத் தொடர். நான் சொல்லப்போவது அதைப் பற்றியல்ல... இயக்குநர் ஜி.வசந்தபாலன் எழுதி இயக்கி, வெற்றியடைந்திருக்கும் அரசியல் சதுரங்க வெப்சீரிஸ், "தலைமைச் செயலகம்" பற்றி. ZEE5-ல் வெளியாகியிருக்கிறது.

வழக்கமாக... துப்பறிந்து சைக்கோ கொலையாளியைத் தொடர்ந்து ஓடும் போலீஸின் ஓட்டம் இதில் இல்லை. இரண்டு தாதா கூட்டங்கள் மோதிக்கொண்டு, திரையையே ரத்தச் சகதியாக்கும் பகை - வன்மம் கதை இல்லை. ரெட்டை அர்த்த வசனமோ, சோனாகாச்சி சீன்களோ இல்லை. குறிப்பாக நேரிடையான கெட்டவார்த்தை வசவுகள் இல்லை. ஓர் அரசியல்வாதிக் குடும்பத்துக்குள் நிகழ்ந்தேறும் குடும்ப அரசியல் எவ்வளவு குரூரமானது என்பதைச் சொல்கிறது; மேலாக, ஒரு துப்பாக்கிப் போராளி, தன் புத்திச்சாதுர்யத்தால் ஜனநாயகத்தை ஆயுதமாகக் கையிலேந்துவது எப்படி எனச் சொல்கிறது இயக்குநர் ஜி.வசந்தபாலனின் "தலைமைச் செயலகம்" வெப்சீரிஸ்.
பொதுவாகவே அரசியல் சார்ந்த புனைவுகள், வரலாற்றுப் பனுவல்கள், காட்சி ஊடக ஆக்கங்கள் என்னை உள்ளிழுத்துக்கொள்ளும். சுஜாதாவின் "பதவிக்காக" நாவல், தமிழ்மகனின் ``வெட்டுப்புலி`` நாவல், சசிதரூர் எழுதிய "இந்தியாவின் இருண்ட காலம்" புத்தகம், ராமச்சந்திரா குஹாவின் ``இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (இரண்டு பாகங்கள்)``, ஜெயமோகனின் "வெள்ளையானை" நாவல், எஸ்.ராமகிருஷ்ணனின் "இடக்கை" நாவல்... (இவையெல்லாம் வரிசைகள் அல்ல சற்றென்று நினைவுக்கு வந்தவை) அப்படியான வரிசையில் இப்போது சேர்ந்திருக்கிறது வசந்த பாலனின் "தலைமைச் செயலகம்" வெப்சீரிஸ்.
இதற்கு முன்பு ஹாட்ஸ்டாரில் வெளிவந்த ``City of Dream`` வெப்சீரிஸ், சயீப் அலிகான் நடித்த ``தாண்டவ் (பெயர் சரியாக நினைவில்லை)``, ப்ரைமில் வெளியான ``The man in the high castle``... இன்னும் சில அரசியல் கதை வெப்சீரிஸ்களையும் ரசித்தது உண்டு.
பல வெப்சீரிஸ்கள் பெர்சனல் வியூ-க்கானதுதான். மிஞ்சிப்போனால், நண்பர்களோடு இணைந்து பார்க்கலாம். குடும்பத்தினரோடு பார்க்கமுடியும் என்பது மிகக் குறைவு. ஆனால், வசந்தபாலனின் "தலைமைச் செயலகம்" அரசியல் சதுரங்க வெப்சீரிஸைக் குடும்பத்தினரோடு, பெரிய ஹீரோக்கள் படங்களைப் பார்க்கும் கொண்டாட்ட மனநிலையோடு பார்க்க முடிகிறது.
கதை, இயக்கம், ஒளிப்பதிவு... இவற்றோடு சேர்ந்து என்னை மிகவும் கவர்ந்த இன்னொன்று, `வசனம்`. "நீதி என்பது என்ன? மக்கள் மீதான காதல்தான் நீதி" என்று ஓரிடத்தில் வசனம் வருகிறது. இன்னோரிடத்தில், "ஜனநாயகத்தின்
இயக்குநர் வசந்தபாலன்
விளைவுதான் ஊழல் என்பீர்கள். அதனால் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பீர்கள். உங்கள் நோக்கம் ஊழல் ஒழிப்பு அல்ல. ஜனநாயக ஒழிப்பின் மூலம் பாசிசத்துக்கு இட்டுச்செல்வது" என்கிற ரீதியில் ஒரு வசனம் வரும். "பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களும், அரசாங்கம் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட ஊழல்தான்" என்று ஒரு வசனம் வரும். அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சீயம்... போன்றவற்றைப் பெயரளவிலாவது உச்சரித்த தமிழ் ஜனரஞ்சக வெப்சீரிஸ் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ``மாநில அரசை நசுக்காத ஒன்றிய அரசு வேண்டும்`` எனவும் பேசுகிறது தலைமைச் செயலகம். "பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" போன்ற மக்கள் அரசியல் பேசும் புத்தகங்களை எல்லாம் திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
வெக்கை நிலத்து மனிதர்களின் ஈரமான வாழ்வை திரையில் கிளாசிக்-கலாகச் சொல்லி ஜெயித்தவர் இயக்குநர் வசந்தபாலன். அதில் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவரும்கூட. அரசியல் என்கிற சூடான களத்தில் குடும்ப உறவும் சமூக உறவும் எவ்வளவு பங்காற்றுகின்றன என்பதை "தலைமைச் செயலகம்" வெப்சீரிஸ் மூலம் சொல்லி கமர்சியலாகவும் வென்றிருக்கிறார்.
இரான் அதிபர் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த செய்தி வந்த நேரத்தில்தான், "தலைமைச் செயலகம்" சீரிஸின் க்ளைமாக்ஸ் எபிசோடு பார்த்தேன். இதிலும் அப்படி ஒரு விபத்து நடக்கிறது. இங்கே `ஹெலிகாப்டர் விபத்து`ம் ஒருவகை அரசியல்தானோ?
ஹெலிகாப்டர் விசிறியாக மனசுக்குள் சுழல்கிறது "தலைமைச் செயலகம்``

வைரமுத்து~40 வாழ்த்துக் குறிப்பு~ (10மார்ச்2020 அன்று எழுதியது) _ கதிர்பாரதி

நான் படித்த கவிஞர் வைரமுத்துவின் முதல் புத்தகம், கவிதைப் புத்தகம் அல்ல. அவரது பேட்டிகளின் தொகுப்பு... 'கேள்விகளால் ஒரு வேள்வி'. அப்போது நான் திருச்சி செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன். அவரது புகழ்பெற்ற முதல் பாடலான பொன்மாலைப் பொழுது பாடலில் 'கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்' என்று ஒரு வரி வரும். அதேயே அவரது பேட்டிகள் தொகுப்புக்கு தலைப்பாக வைத்திருப்பார்.

அந்தப் புத்தகத்தில் 'ஞானக்கூத்தன், ந.ஜயபாஸ்கரன் போன்றோர் எல்லாம் தமிழ்க் கவிதைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் தோற்றுவிட்டார்கள்' என்ற ரீதியில் ஒரு பதில் இருக்கும். 'நான் பாடல் எழுதவந்த காலத்தில் கண்ணதாசனுக்கு சாதித்த சலிப்பு வந்துவிட்டது' என்று ஒரு இடத்தில் சொல்லியிருப்பார். 'திரைப்பாட்டில் தத்துவம் என்றால் 'நிலையாமை'யைப் பாடுவதாக இருந்ததை இளம்தலைமுறைக்கு நம்பிக்கை தருவது என்பதாக என் போன்றோர் மாற்றினோம்' என்று சொல்லியிருப்பார்.
அதன் பிறகு 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்', 'இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல', 'கொடிமரத்தின் வேர்கள்', 'ரத்ததானம்', 'தமிழுக்கு நிறமுண்டு', 'தண்ணீர் தேசம்', 'சிகரங்களை நோக்கி' என அவரது புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்ததுண்டு. பிறகு அந்தப் பித்தை தெளியவைத்தார் அப்துல் ரகுமான் தன் 'பால்வீதி' தொகுப்பு மூலம். தேடலின் நல்வாய்ப்பாக கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், தேவதச்சன், தேவதேவன் இன்னும்பிற கவிஞர்கள் கிடைத்தார்கள்.
ஆனால், அப்போதிருந்து இப்போது வரை என் விருப்பதுக்குரிய ஒரே பாடலாசிரியராக வைரமுத்து மட்டும்தான் இருக்கிறார். அவ்வப்போது வாலி புலமைப்பித்தன் பழநிபாரதி ஆகியோர் அட எனச் சொல்லவைத்திருப்பது உணமைதான். ஆனால், ஆதிக்கம் செலுத்தியது வைரமுத்துதான். எம்.எஸ்.வி ஆரம்பித்து ரகுநந்தன், ஜிப்ரான் வரைக்கும் எழுதிய ஒரே ஆள் வைரமுத்து. அவ்வளவு வாய்ப்புகள். அத்தனையிலும் முதல் பாடல் வாய்ப்பு போல தன்னை முனைந்து நிறுவும் முனைப்புதான் அவரின் பிரமாண்ட வெற்றியின் பின்னணி. இளையராஜாவோடு முட்டல் உரசல் இருந்தபோது ஆறு ஆண்டுகள் அவ்வளவாக பாடல் வாய்ப்பில்லாதபோது ஓரிரு படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.
வைரமுத்து
திரைப்பாட்டில் அவரது முக்கிய சாதனையே வட்டார வழக்குகளையும் இலக்கிய அந்தஸ்தோடு உலவ விட்டதுதான்... 'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு', 'கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கிழங்கு வைக்கும்', 'காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும், ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்த... இப்படிச் சொல்லலாம்.
இந்தியக் கலை கிரேக்க கலை இணைந்த காந்தாரக் கலை போல, மரபின் தேர்ச்சி நவீன பயிற்சி இரண்டும் இணைந்த மொழி செப்பம் வைரமுத்துவுடையது. தோகை இளம் மயில் ஆடி வருகுது... சாலையோரம் சோலை ஒன்று வாடும்...ஆயிரம் தாமரை மொட்டுக்களே... தலையைக் குனியும் தாமரையே... செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ... என்று ஏராள உதாரணங்கள் சொல்லலாம். ஏர்.ஆர்.ரகுமானோடு இணைந்து வைரமுத்து தொட்டதெல்லாம் உலக உயரத்துக்கு துலங்கியது. ஏர்.ஆர்.ரகுமான் இசை தங்கக் கிண்ணம் என்றால் நிச்சயமாக வைரமுத்துவின் வரிகள் சிங்கப்பால்தான்.
நாளை நிச்சயமற்ற திரையுலக வாழ்வில் 40 ஆண்டுகள் நிலைத்திருப்பது அதுவும் உயிர்ப்போடு இருப்பது என்பதெல்லாம் நிச்சயம் சாதனை. திரையுலகில் 40 ஆண்டுகள் என்பது மூன்று தலை முறை என்பார்கள். பாடலாசிரியர்களில் மூன்றிலும் வென்றவர், மூன்றிலும் முத்தெடுத்தவர் இப்போதைக்கு வைரமுத்து மட்டும்தான்.

அயலி வெப்சீரிஸ்: முதல்பார்வை ~ ஒண்ணுமில்ல... இங்க் கொட்டிருச்சி" ~ கதிர்பாரதி ( 27ஜனவரி2023 அன்று எழுதியது)

ண்பர், கவிஞர் Sachin சச்சின், இயக்குநர் முத்துக்குமாரோடு இணைந்து வசனம் எழுதியிருக்கும் 'அயலி' வெப் சீரிஸ் பார்த்தேன்.
"அயலி" என்கிற சிறுதெய்வம் யார்? அதன் பெயரால் வீரபண்ணை ஊரில் இருக்கும் அடக்குமுறை என்ன? பெண்களின் உடல்மீது மட்டும் அது ஏவப்பட்டிருப்பது ஏன்? இதன் பின்னணியில் ஆண்மனம் எப்படிச் செயல்படுகிறது... என "அயலி" சாமி இடப்பெயர்வுக் கதையோடு சீரிஸ் ஆரம்பிக்கும்போதே, இது வழக்கமான வெப் சீரிஸ் அல்ல என்பது புரிந்துவிடுகிறது.
வீரபண்ணை ஊரில் வயசுக்கு வந்ததும் பெண்ணின் படிப்பை நிறுத்தி, கல்யாணம் செய்துவைத்துவிடுகிறார்கள் ஊர் ஆம்பிளைகள். இதனால் ஊரில் பெண்கள் யாரும் 10ம் வகுப்பைத் தாண்டுவதில்லை. அப்படி மீறினால், 'அயலி'குத்தமாகி ஊருக்கு பொல்லாங்கு நேரும் என்கின்றனர். கெட்டித்தட்டிய இந்தக் கட்டுப்பாடுகளை தன் புத்திசாலித்தனத்தால் நாயகி தமிழ்ச்செல்வி மீறுகிறாள். 10ம் வகுப்பில் மாவட்ட முதலிடம் பெறுகிறாள். எப்படி? அதைத்தான் சிரிக்க சிரிக்க எள்ளல் துள்ளலோடு சமூகத்தின் அல்லையில் குத்தி, ஒரு சமூகவியல் பாடமாகச் சொல்கிறார் இயக்குநர் முத்துக்குமார்.
நாயகி தமிழ்ச்செல்வி வயசுக்கு வருகிறாள். அவள் அணிந்திருக்கும் பள்ளிச் சீருடையில் ரத்தக்கறை படிகிறது. "என்னத்தா ஆச்சி?" என ஊர்சனம் கேட்கையில், "ஒண்ணுமில்ல... இங்க் கொட்டிருச்சி" என அவள் சொல்வதில் ஆரம்பிக்கிற வசன அதகளம் படம் முழுக்கவும் ஆதிக்கம் செய்கிறது. "ரொம்ப நாள் இதை மறைக்கமுடியாது" என அவள் அம்மா சொல்லும்போது, "அம்மா இந்த ஆம்பளங்களுக்கு சில விஷயமெல்லாம் பொம்பளச் சொன்னாத்தான் தெரியும்..." என நெத்தியில் அடிக்கிறாள் தமிழ் . இது சிறு உதாரணம். இன்னோர் இடத்தில், "யாருக்குத் தெரியும்... ஊரை எதுத்துக் கேள்வி கேட்ட ஒரு பொண்ண அடிச்சிக் கொன்னுட்டு 'அயலி' சாமி ஆக்கிட்டாய்ங்க போல" என்று பொளேர் என விழுகிறது ஒரு வசனம். இப்படி வசனங்களால் அடுத்தடுத்த கட்ட நகர்வை நோக்கி ஒரு வெப் சீரீஸ் நகர்வதை அதியசயமாகவும் ஆனந்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
"சமூகத்தின் கலாசாரம், பண்பாடு, ஈனம் மானம், சாமி, பூமி... எல்லாவற்றையும் ஏன் பெண் உடல்மீதே தேடுகிறீர்கள்...'' என பிரச்சாரம் செய்யாமல் ஆனால், அதைத்தான் கேள்வியாய் முன்வைக்கிறார் இயக்குநர் முத்துக்குமார்.
குடும்ப வன்முறையில் ஆரம்பித்து சமூக வன்முறை வரைக்கும் அதிக பாதிப்புக்கு உள்ளாவது பெண் பாலினம்தான். வலி அதிகம் சுமப்பதும் அவர்களே. விஞ்ஞான ஊடகங்களின் ஆளுமையின் கீழ் உலகம் வந்துவிட்டாலும் பெண் பாலினத்தின் மீது நிகழும் வன்முறைகள் நவீனமாகி இருக்கிறதே அன்றி, நீர்த்துப்போகவே இல்லை. இவற்றை எல்லாம் ஒரு வணிக வெப்சீரிஸ் யோசிக்க இடம்கொடுப்பதே நல்ல மாற்றம்தான்.
நாயக சாகசம் காட்டாத, கொலையைத் துரத்திக்கொண்டோடி குற்றவாளியைக் கண்டுபிடிக்காத, போதை மாஃபியாவின் புகழ்பாடாத, விளிம்புநிலை மக்களை அசிங்கம் செய்யாத, பெண்ணுடலைப் போகமாகக் காட்சியில் வைக்காத, சூதுவாது பின்னணிகளை வியந்து பேசாத... ஒரு வெப் சீரீஸுக்காக தயாரிப்பாளர் குஷ்மாவதிக்குப் பாராட்டுகள்.
வசனம் எழுதிய சச்சின், இசை செய்த ரேவா, இயக்கிய முத்துகுமார், தயாரித்த குஷ்மாவதி எல்லோருக்கும் இது முதல் வெப் சீரீஸ் என நினைக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
அயலி - ஊடக அற்புதம்

26 September, 2024

கவிதை : கதிர்பாரதி ~ ரோலர் பூச்சி


சா
லையைச் செப்பனிடும்
ரோடு ரோலர் சக்கரங்கள்
பூமியில் இழைகின்றன
நீர்ப் பூச்சிகள்போல.

தேரோட்டத் திருவிழாவை வசீகரிக்கும்
நாட்டியக்காரி ஒப்பனையாக
மேலெழும்பி வருகிறது
பழுது நீங்கும் சாலை.

வெட்டி வெட்டிச் சுழன்ற சக்கரங்களை
இடைநிறுத்தி நிறுத்தி
தாகசாந்தி வேறு.

பின்னர்
பூ ஜல்லியில் தார்அமுதம் பாவ
முன்னும் பின்னும் பூச்சிகள் இழைகின்றன.
 
ஓர் உறுமநேரத்தில்
ரோலர்க்காரன் அவனே எதிர்பாராமல்
முணுமுணுத்துவிட்டான்…
`வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுது`

அப்போது ரோலர்பூச்சி
குழைந்து குழைந்து இழைக்கிறது
ஒரு
வெண்ணிலா சாலை.

- கதிர்பாரதி

மறுவாசிப்பு ~ பாரபாஸ் ~ மொழிபெயர்ப்பு நாவன் ~ மொ-ர் : கநாசு (24செப்2023 அன்று எழுதியது)

திருநீற்றுப் புதனோடு கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகிவிட்டது. அதுமுதல் 40 நாட்கள் இறைமையோடு ஒன்றித்திருக்கும் ஒருத்தல் முயற்சியாக தியானம், வழிபாடு, விரதம், சுத்தபோஜனம், இறைச் சொற்பொழிவு, கூட்டுவழிப்பாடு... என இன்னும் சில வழிமுறைகளை வழிபாடுகளாக முன்மொழிகிறது கிறிஸ்தவம். அதாவது ஈஸ்டர் வரை.

யேசுவை சிலுவையில் அறையும்போது பாரபாஸ் என்கிற திருடனை சிலுவைச் சாவில் இருந்து விடுவித்தார்கள். இது ஒரு வழமையான யூத பாஸ்கா சடங்குதான். பாரபாஸை விடுவித்த இடத்தில்தான் யேசுவை சிலுவையில் அறைந்தார்கள் யூத மூப்பர்கள், மறையோர்கள், சதுசேயர்கள்.
தன்னைப் பலிக்குக் கையளித்துவிட்டு சாகும்போதுகூட ஒரு திருடன் மனதை உயிர்ப்பித்துவிட்டு போனது அந்தத் தேவ ஆட்டுக்குட்டி. பாரபாஸ் பார்வையில் மனவோட்டத்தில் கல்வாரி பலிநாளை பார்க்கும் ஏற்பாடாக 'பாரபாஸ்' நாவலை எழுதியிருக்கிறார் ஸ்வீடிஸ் எழுத்தாளர் பேர்லாகர் குவிஸ்ட். தமிழில் க.நா.சு. 1951_ம் ஆண்டு நோபல் பரிசுப்பெற்ற நாவல். நேரடி தமிழ் நாவல்போல தமிழ்ச் சூழலில் கலந்துவிட்ட புகழ்பெற்ற நாவல்.
தவக்காலத்தில் எனக்குத் தெரிந்தவகையில் மன ஒருத்தல் முயற்சியாக "பாரபாஸ்" நாவலை மறுவாசிப்பு செய்ய ஆரம்பித்துவிட்டேன். முதல் வாசிப்பில் கை நிறைய அர்த்தமுள்ள வெறுமையைத் தந்த இந்த நாவல் மறுவாசிப்பில் என்ன தரக் காத்திருக்கிறதோ....

வாழ்த்துச் செய்தி ~ அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது (23செப்2023) ~ எழுத்தாளர் அசதா

சதா சார் எனக்கு எப்போதும் இனியர். அவரை நினைகும்தோறும் நிதானம் + அமைதிகூடிய ஓர் அண்ணன் சித்திரம் மனத்தில் தோன்றும். நேரில் பார்க்கும்போது அவர் அருகில் போய் மௌனமாக நின்றுகொள்ளத் தோன்றும்; நின்றிருக்கிறேன்.

மொழிபெயர்ப்பாளர்கள்... நிலத்தில் இருந்து நிலத்துக்கு, வாழ்வில் இருந்து வாழ்வுக்கு, மொழியில் இருந்து மொழிக்கு, அர்த்தத்தில் இருந்து அர்த்தத்துக்கு வரலாற்றை - கலாச்சாரத்தை - பண்பாட்டை - இலக்கியத்தைக் கடத்துகிறார்கள். ஏறக்குறைய ஒரு மின்கடத்திபோல. அதனாலேயே இவர்கள் எல்லை தகர்க்கிறார்கள்.
எழுத்தாளர் அசதா
அப்படியான க.நா.சு., சு.கிருஷ்ணமூர்த்தி, ரா.கிருஷ்ணையர், தொ.மு.சி., பூ.சோமசுந்தரம், தி.சு.சதாசிவம், தி.ப.சித்தலிங்கையா, எம்.எஸ்., நாகரத்தினம் கிருஷ்ணா, குறிஞ்சிவேலன், பாவண்ணன், சா.தேவதாஸ், யூமா வாசுகி, வே.ஸ்ரீராம், அரும்பு சுப்பிரமணியம், நீல பத்மநாபன், எம்.சுசீலா, குளச்சல் மு.யூசுப், கே.வி.ஷைலஜா... இன்னும் பிற மொழிபெயர்ப்பாளர்களையும் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுபெறும் திறன்மிக்க எழுத்தாளர் அசதா அவர்களால், இவ்விருது இலக்கிய கவனம் பெறுகிறது. இவர்கள் திரைக்கடலோடித் தேடிச் சேர்த்ததை வீட்டின் இருக்கை நுனி அமர்ந்து தின்று களிக்கிறோம். நன்றி.
அசதா மொழிபெயர்த்தவற்றுள் `முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்`, `மந்திரவாதியின் சீடன்...` ஆகிய நூல்களை வாசித்திருக்கிறேன். விருதுபெறும் `நிலத்தின் விளிம்புக்கு` நூலை இனிதான் வாசிக்க வேண்டும்.
`மூர்த்தி சிறிய கீர்த்தி பெரிய` அசதா சாருக்கு வாழ்த்தும் வணக்கங்களும்.

மொழிபெயர்ப்புக் கவிதை ~ அம்மா சிறுமி ~ மொழிபெயர்த்தவர் : கவிஞர் சேலம் ராஜா

சேலம் ராஜா
னது 'அம்மா சிறுமி' கவிதையை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் கவிஞர் சேலம் ராஜா. வாழ்விடம் வாழப்பாடி. பிழைத்தலின் நிமித்தமாக லாரி டிரைவராக இந்தியா முழுக்கச் சுற்றிவருபவர். இப்படி அலைந்து திரியும்போது மலையாளம் பேசவும் தன்முனைப்பில் எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டவர். 'கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள்',,`ஒரு லோடு மழை ஏற்றுபவன்’ ஆகிய இவரது கவிதைத் தொகுப்புகளை இடையன் இடைச்சி நூலகம் வெளியிடிருக்கிறது. "இப்போதுதான் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நிறை குறைகள் இருந்தால் சொல்லுங்கள்" என்றார். எனக்கு சுத்தமாக மலையாளம் தெரியாது. தெரிந்தவர்கள் ராஜாவிடம் சொல்லலாம். கவிஞர் சேலம் ராஜாவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.'அம்மா சிறுமி' நேரடிக் கவிதையும், சேலம் ராஜாவின் மலையாள ஆக்கமும் கீழே உள்ளன.

அம்மா சிறுமி - கதிர்பாரதி
**

மகளுக்குக்
காத்திருக்கும் வேளை.
பள்ளி மைதானத்தில்
ஊஞ்சலாடுகிறாள்
அம்மா.

முன்னேறும்போது
சிறுமி.
பின்னேறும்போது
அம்மா.

முன்னேறி ஒருமுறை
வானம் உதைத்தவள்
மகள் கண்டதும்
பின்னேறி வந்து
பூமியில் நின்றுகொண்டாள்.



Al

24 September, 2024

மொழிபெயர்ப்பு : ஸ்ரீவட்சா ~ அம்மா சிறுமி ~ கதிர்பாரதி கவிதை

 When kicking the football that strayed off the field of play, feeling the receding waves etch the sand away from the soles, looking at a colourful paper kite soaring up high in the sky or swaying on the swings on playgrounds, child long hidden in an adult comes to life. Presenting a brilliant poem in Tamil that kindles nostalgia penned by Kathir Bharathi by reproducing here with his prior permission together with an English translation by moi:

மகளுக்கு
காத்திருக்கும் வேளை.
பள்ளி மைதானத்தில்
ஊஞ்சலாடுகிறாள்
அம்மா.
முன்னேறும்போது
சிறுமி
பின்னேறும்போது
அம்மா.
முன்னேறி ஒருமுறை
வானம் உதைத்தவள்
மகள் கண்டதும்
பின்னேறி வந்து
பூமியில் நின்றுகொண்டாள்.
Waiting for
the daughter,
Amma
sways on the swing
in the school ground.
While going forward,
she is the little girl
and while going back,
ஸ்ரீவட்சா

she is the mother.
Having moved forward
and kicked the sky once,
she retreated and
stood on the ground
upon sighting
the daughter.
~Sri 1555 :: 20102020 :: Noidactions:

மதிப்புரை : சரவணன் மாணிக்கவாசகம் ~ மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் ~ கவிதைத் தொகுப்பு

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி:

ஆசிரியர் குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பணியாற்றியவர். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் விருது உட்பட பல விருதுகளை வென்றவர். இது இவரது முதல் கவிதைத்தொகுப்பு.
கதிர்பாரதியின் கவிதைகளை அங்கொன்று இங்கொன்றுமாகப் படித்து இருக்கிறேனே தவிர மொத்தத் தொகுப்பு வாசிப்பது எப்படியோ நழுவிக்கொண்டே வந்தது. கவிதைத் தொகுப்புக்கு நான்காம் பதிப்பு வருவது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.


கதிர்பாரதியின் கவிதைகள் அன்றாடக் காட்சிகளை நவீன மொழியில் சொல்கின்றன. Survivor's guiltஐச் சொல்லும் இந்தக்கவிதையின் முந்தைய வரிகளின் கனம் கடைசிவரிகளை இன்னும் அழுத்துகிறது.
" கணநேரத்தில் தவறவிட்ட
ஒரு தினத்தில் ரயிலைத்
துரத்திக்கொண்டோடும்படி
கோபத்தையும் இயலாமையையும்
ஏவி விட்டிருந்த போது தான்
விபத்தில் சிக்கி மரணித்தது

எனைக்கடந்து போகிறவர்கள்
பெருமூச்சைச் சொரிந்தபடி
குழந்தைக்குக் கிசுகிசுக்கிறார்கள்
இவன் தான் ரயிலைக் கொன்றவன்"
குழந்தைகள் உலகத்தில் முக்காலம், மரியாதை எதுவும் இல்லை. காலமயக்கத்தில் வார்த்தைகளே அதற்கான அர்த்தங்களை கோடிட்ட இடம் பார்த்து பூர்த்தி செய்து கொள்ளும்.
" நேத்துக்குச் சாப்பிடுறேன் என்று
நேற்றின் தலைமேல் ஒரு காலை
வைக்கிறான் நம்மை எதுவும் செய்யாதிருக்க வேண்டுமே என்று
நடுநடுங்குகிறது இன்று
நாளைக்கு சோறு சாப்பிடறப்ப
எனக்கு வயித்தை வலிச்சதுல்ல
அதான் சொல்றேன் என்றபோது
நாளையின் தலையின் மீதும்
நங்கென்று ஒரு கால்.
காலங்களை மயக்கி
அவன் படைக்கும் அகாலம்
விஸ்வரூபம் எடுக்கிறது"
உதர நிமித்தம் பஹு க்ருத வேஷம் என்பது ஆண்கள் அலுத்துக்கொள்வது. பெண்களுக்கு அதைத்தாண்டியும் பல இம்சைகள். வேலையில் தாமதமாகி குழந்தைக்குப் பாலூட்டவேண்டும் என்ற குற்றஉணர்வோடு வருகிறாள் என்றால் அது ஒரு தகவல். தாலாட்டி என்ற ஒரு சொல் என்ன ஒரு அழகைக் கூட்டிவருகிறது.
"முன் மாலைக்கும் பின்மாலைக்கும்
இடையே மிதவேகத்தில் ஓடுகிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது
அந்திக்குளத்தில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
பயணிக்கிற
சரவணன்
மாணிக்கவாசகம்

அவளின் முலைகளைத்
தாலாட்டி தாலாட்டி"
முழுசரணாகதி வைணவ தத்துவம் மட்டுமல்ல சமயத்தில் பெண்ணிடமும் கொள்வது.
"நீர் குடைந்தாட வந்தவனை
கரையோடை நிறுத்திவிட்டது
உன் பெருங்காமப் பேராற்றுதீரம்
வேறென்ன செய்ய
ஒரு கை நீரள்ளி
தலையில் தெளித்துக்கொண்டு
திரும்பிவிட்டேன்
முப்பொழுதையும் உண்டு செரிக்கும்
மோகப் பரிபூரணி நீ"
ஒன்பது வருடங்கள் கழித்து கும்பகர்ண உறக்கம் தெளிந்து ஒரு கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசுவதில் எந்த ஒரு நியாயமும் இல்லை. இவருடைய முதலையும் கடைசியையும் வாங்கியதால் மனம் வெகுவாகப்பழக்கப்பட்ட FIFO ரூலை கடைப்பிடிக்கிறது போலும்.
கதிர்பாரதியின் கவிதைகள் அவரைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் புதுமொழியில் சின்னச்சின்னதாய் படிமங்கள் கலந்து சொல்கின்றன. பிள்ளை ஊருக்குப்போன வீட்டில் அவன் செய்யும் விளையாட்டுகளை தந்தை விளையாடுவது, சிறுமிக்கு வரிசையில் வழிவிடுவது போன்ற எளிய கவிதைகளும் உண்டு. ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் போன்ற கதைக்கும் நிஜத்துக்கும் மாறிமாறி ஓடும் கவிதை, காமம் பொங்கும் இரவில் எல்லோரையும் துணைக்கழைத்துக் கடைசியாக சிறுநீர் கழித்தல் போன்ற நுட்பமான கவிதைகளும் இருக்கின்றன.
காலாதிகாலத்தின் தூசி, மகரந்த அலை,கர்ப்பகுளத்து இரவு போன்று பல படிமங்கள்இவர் கவிதைகளில் இடைவந்து போகும். மகாகவி கவிதை எழுதுகிறான், ஏப்படி கேரட் இளஞ்சிவப்பாய் மாறியது என்பது போன்ற குறும்புக் கவிதைகளும் இருக்கின்றன. கசாப்புக்கடைக்காரன் வெட்டுவதற்கு இருசக்கர வாகனத்தில் குறுக்காக வைத்து எடுத்துச் செல்லும் ஆடு கவிதையில் ஆட்டுக்கு உயிர் தங்கப்போவதில்லை. ஆனால் முதல்வரியிலேயே திசைகளைப் பதற்றத்துள்ளாக்கி என்ற வார்த்தைகளில் கவிதைக்கு உயிர் வந்துவிடுகிறது. கதிர்பாரதியின் கவிதைகள் நல்லதொரு அனுபவம்.
பிரதிக்கு:
இன்சொல் பதிப்பகம் 63822 40354
நான்காம் பதிப்பு செப்டம்பர் 2020