30 October, 2024

விமர்சனம் : சாய்வைஷ்ணவி / நூல் : ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் / ஆசிரியர் : கதிர்பாரதி

ழைமேகங்கள் சூழ்ந்து ஒளியும் இருளுமான மந்தகாசத்தை வானில் நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது உயிருள்ள விமானங்கள்போல கையெட்டும் தொலைவில் விர்ரென்று பறந்து திரியும் தட்டான்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றின் ஒளி ஊடுருவும் மீச்சிறு இறகுகளைக் கவனித்திருக்கிறீர்களா? கண்களுக்குப் புலப்படாத அவற்றின் கடுகளவு கேமரா விழிகளை ஆராய்ந்திருக்கிறீர்களா? பண்படாத நிலங்களின் மீது பறக்கும் தட்டான்களுக்கு மோட்சம் இல்லை. நிலமென்பது மனமென கொள்க. தட்டான்களே உங்கள் ஆசைகள். கதிர்பாரதி தன் கவிநிலத்தில் "ஆனந்தியின் பொருட்டு சிலபல தட்டான்களை தாழப்பறக்கச்" செய்திருக்கிறார். தாழப்பறத்தலில் துயரம் இல்லை அல்லவா?

என்பொருட்டு இப்புத்தகம் கதிரின் கையெழுத்தோடு என் நிலத்தில் வந்து சேர்ந்தது. சொற்கையாடல் என்பது கதிருக்கு கைவந்த கலை என்பது அவரை அறிந்த அனைவரும் அறிந்ததே.  முதலிரண்டு தொகுப்பையும் கையாண்ட லாவகத்தோடு கூடுதல் கொஞ்சம் உப்பு காரத்தையும் தூக்கலாகச் சேர்த்து தந்திருக்கிறார் ஆனந்திக்கு. லிபி ஆரண்யா அவர்களின் மதிப்புரையில் குறிப்பிடுவதுபோல நிலங்களைப் பாடுதல் என்பது சமகாலத்தில் அழிந்துவரும் செஞ்சிட்டுப்போல் ஆகிவிட்டது. கதிர் அதற்கு கொஞ்சம் ஊட்டம் அளித்து பாதுகாத்துவைக்கிறார். அவர் பாடுவது பாலை. பாலை என்பது பாலைவனத்தை மட்டும்தான் என்பதல்ல. ஏனெனில் நாம் வாழும் இந்நிலமே பாலைக்கு ஒப்பானது அறிவீர்தானே?


சில கவிதைகள் ஒருமுறை படித்தாலே புரிந்துபோகும்.  சில கவிதைகளை இரண்டு மூன்று  முறை வாசித்து அவற்றின் முழுமையான சுவாசக் கருவை இதயத்திற்கு விழிவழி ஏற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. படித்ததும் என்னைக் கப்பென்று பற்றிக்கொண்ட ஒரு கவிதையின் கருப்பொருளாக முப்பெரும் இலக்குகளைக் கொள்கிறார். அவை உயர்ரக மதுப்புட்டி, வாலிப்பான பெண்,பின்னொரு வெள்ளாமை நிலம். இவற்றை ஒன்றோடொன்று பின்னிப் பின்னித் தாழம்பூ வாசத்தையொத்த கடைவரியை எப்படிச் செய்திருக்கிறார் பாருங்கள் ,

சாய் வைஷ்ணவி 
‘நிலமே
மதுவே
உனை ஒருவருக்கும் கொடேன்.
ஓரேர் உழவனாய்க் கைகொள்வேன்.
அயலான் அருந்த உனை எப்படிக் கைநெகிழ்வேன்
எனக்கான முதிரிளம் பருவத்து முலையே’

ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு லயத்தை ஒளித்துவைத்ததோடு அதன் வாலிப்பான உபதலைப்புகளில் வாசகனுக்குப் பித்தம் ஏறச்செய்து அவரே கவிதையின் இறுதியில் தெளியவைத்தும் விடுகிறார். புனித பைபிளிலிருந்து தேர்ந்தெடுத்த சில வேறுபட்ட சுவைதரும் கனி(வி) விதைகளை இத்தொகுப்பில் ஆங்காங்கே தூவி இனிமை கூட்டியிருக்கிறார். 

ஒவ்வொரு கவிதையின் வினையாக சிறுகுறு புன்னகையை சிற்சில பக்கங்களில் கொட்டிவிட்டுப் போனேன். அதில் பிரதானமானது,

 // குரங்குக்கென சில வரைமுறைகள் இருக்கின்றன// எனத் தொடங்கும் கவிதையில்,  குட்டிக்கரணம் போடும் குரங்கொன்றின் நிலையைப் பகடியாகக் கூறி இறுதி வரியில்

 //எங்கே ஒரு குட்டிக்கரணம் போட்டு
கூண்டுக்குள் அடைந்துகொள்ளுங்கள் பார்ப்போம்.
ம்ம்ம்.. சமர்த்து//
என முடித்திருப்பார்.

குரங்காகவும், குதிரையாகவும், கடவுளின் கைபொம்மையாகவும், நிலமாகவும் இன்னும் பலவாகவும் தன்னையும் சிலசமயங்களில் முன்னிருக்கும் வாசகனையும் உவமைக்காட்டி சொல்லவந்ததை உள்ளங்கை எடுத்த நன்னீர் போல தெளிவாக விளக்குகிறார்.


பெண்ணை பாடாமல் கவிதை இன்புறுமா?  பெண்ணைப் பற்றி பாட எதையெல்லாம் ஒரு கவிஞன் முன்னிருத்துவானோ அதை கடந்து தன் காதலியோடான ஊடல்களை எளிமையல்லாத உவமைகளாக வெகுசிறப்பாகப் புனைந்து வந்திருக்கிறது சில கவிதைகள். முப்பிரி பின்னலிட்ட நாக சர்ப்பம் என்ற உபதலைப்பின் கீழ்க் காணும் கவிதை,

//உன் யவ்வனத்தின் உன்னதங்கள்
திறந்துக்கொள்கின்றன.
எனது பிரவேசத்துக்குப் பிற்பாடு//
எனத்தொடங்கி இடையில்,

//முகடுகளின் மென்மையிலும்
வளைவுகளின் தீவிரத்திலும்
நீர்வழிப் படூஉம் புணைப் போலாகிறேன்//
என அலாதியான இன்பத்தை சொல்லால் நிறைத்திருப்பார். 

கவிதையின் பாடுபொருளாய் எதைக்கொள்வதென்பது கவிஞனின் விருப்பம். அரசியல் தொடங்கி நிலவுடைமை, அதிகாரம் , சினிமாப் பாடல்கள் தழுவிய சொற்கள் என பல கருப்பொருள்கள் கவிதைகளாக அமைந்திருக்கின்றன.

//உன்னை ஒன்று கேட்பேன் 
உண்மை சொல்ல வேண்டும் என
நம் சரோஜா தேவிகள்
நம்மைப் பார்த்து கண்களை சிமிட்டுகிறார்கள்//
 

நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ அதையே இக்கவிதை சொல்கிறது. முதலில் உண்மை பின்பு சத்தியம்.

//நானொரு நீதிமானின் வார்த்தை
குழந்தையின் புன்னகை//  
எனத்தொடங்கி

நானொரு துன்மார்க்கன்
நானொரு அவிசுவாசி// 
என்று வெறுப்பின் இறுதியில் உண்மையைக் கக்கும் உன்னதவானாய் ஆகிப்போகிறீர்கள் இக்கவிதையின் ஊடாக.

//ஊதாரி மைந்தன் செலவழிக்கும்
தாலந்து என் இன்றைய நாள்
எப்படியும் மாலை
கைவிட்டு போய்விடும்//
என்ற கவிதை "பத்து நிந்தனைகள்" என்ற உபதலைப்பில் அமைந்துள்ளது. ஊதாரி மைந்தர்களே நம் தாலந்துகளை பத்திரப்படுத்தி கொள்வோம்.  ஏற்கனவே சொன்னது போல தலைப்புகள் மட்டுமே ஒரு கவிதைகளாக தனித்து நிற்கின்றன.

"ஆல் தீ பெஸ்டின் புறவாசல்"
"கருவாட்டு ரத்தமூறிய இட்லி"
"ச்சியர்ஸ்"
"ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்"
"ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள்"
"வெட்டுக்கிளியை சூப்பர்மேக்ஸ் பிளேடுக்கு பழக்குதல்"

இதெல்லாம் சொர்ப்பம்தான். தமிழெனும் பெருங்கடலிலிருந்து சொல் உப்பெடுத்து உலர்த்திவைத்து கவிதை உணவுக்கு சுவை சேர்த்திருப்பது புதுமை.

``பின் தங்கியவர்களின் உயரம்`` எனும் கவிதையில் பனிச்சறுக்கு வீரர்கள் உச்சியில் இருந்து சறுக்கி வருகிறார்கள். வீழ்ந்தும்,பறந்து பாய்ந்தும், விரைந்து சரிந்தும் ஒருவரை ஒருவர் முந்தி வரும் வீரர்கள் ஓநாய்கள் போல இலக்கு எனும் இரையைத் தொடத் துரத்துகிறார்கள். ஒரே தாவலில் இலக்கை அடைகிறான் ஒருவன்.
// இரைக்கு பின்தங்கியவர்கள் பெருமூச்சைச் சொரிந்தபடி
மீண்டும் உயரத்தைப் பார்க்கிறார்கள். 
ஆம்
இரையை பள்ளத்தில் தள்ளிய உயரத்தைப் பார்க்கிறார்கள்// இரைக்கு பின்தங்கியவர்கள் உச்சியை அன்னாந்து பார்த்துவிடும் பெருமூச்சில் பற்றும் தீயில் இக்கவிதை நம்மைப் பற்றிக்கொள்கிறது.

ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள் டிஜிட்டல் நாகரீகத்தின் விளைவாக நகரத்தின் ஓரத்தில் அமர்ந்து பல சம்பந்தன்களுக்கு முலையூட்டிக்கொண்டிருக்கிறாள். மெட்ரோபாலிட்டன் நகரில் பரபரக்கும் சாலையில் விரையும் இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையிலிருந்து இளம் மொட்டான மலரொன்று ஆபத்தான யூ டர்னில் சரிந்து விழு யத்தனிக்கும்போது என் ரத்தம் கொதித்துயர ஆரம்பித்தது. நல்ல வேளையாக இக்கவிதைச் சிறுவன் சேனலை மாற்றிவிட்டு கண்டாங்கி பாடலுக்கு தாவச்செய்தான்.

//தூக்கிட்டுக்கொண்டவளின் அறையிலிருந்து அகாலத்துக்குள் சிக்கிக்கொண்டு திணறுகிற மவ்னம் அறையை திறந்ததும் அலறியடித்துக் கொண்டு ஓடுவதைப் போல" என்ற கவியின் மௌனத்தில் கதறியழுது துடித்திறந்தது என் மனத்தின் பேரோசைகள். 

இறுதியாக, "எங்களிடம் நீர்முள்ளிப்பூக்கள் இருந்தன" என்ற கவிதையில் தாத்தாவிடம் இருந்ததும் இல்லாமல் ஆனதும் அல்லது பிடுங்கப்பட்டதும் அவருடையது மட்டுமல்லாது ஒட்டுமொத்த விவசாய தாத்தாக்களும் அவரது பரம்பரைகளும் இழந்ததே ஆகும் எனக்கண்டுணர்ந்தேன். மரண வீட்டிற்கு மீண்டும் போகும்போது அங்கு இறைந்து கிடக்கிறது நிம்மதி என்பதை விம்மலோடு விளக்குகிறது ஒரு கவிதை. 

சமகால மீப்பெரும் கவிஞனின் கவிதை தொகுப்பை விமர்சிப்பதென்பது ஒரு விமர்சகருக்கு மிகப்பெரிய சாகசம். படிக்கும் போது மனதில் உதித்ததத்தனையையும் ஒரு சில வரிகளில் அடக்குவதென்பது இயலாது காரியமென்ற போதிலும் இயன்றவரை முயன்றிருக்கிறேன். அதேபோல, ஒரு வாசகனின் மனதிற்குள் தமிழ் சாட்சியாக கவிதையை கரம்பற்றிக் கொள்ளச்செய்கிறது இத்தொகுப்பு. இறுதிவரை மறக்கவே கூடாது எனும் நோக்கத்தோடு வாசகனுக்கு தேர்ந்த கவிதைகளை அள்ளி அள்ளி தருவது ஒரு சிறந்த கவிஞனின் கடமையாகும் போது கதிர் அதை பரிபூரணமாக செய்திருக்கிறார்.

22 October, 2024

அஞ்சலி : எழுத்தாளர் எம்.ஜி.கன்னியப்பன்... உங்கள் வண்டி கிளம்பிவிட்டது!

எம்.ஜி.கன்னியப்பன்
நான் 'கல்கி'யில் வேலைபார்த்தபோது அங்கே எனக்கு சீனியராக வேலைபார்த்தவர் இயக்குநர் மு.மாறன். அவரது நண்பராகப் பழக்கமாகி எனது நண்பராகவும் நட்பில் இணைந்தவர் எம்.ஜி. கன்னியப்பன். சினிமா பாடலாசியர், வசனகர்த்தா, கதாசிரியர்... என சினிமாவின் கிரியேட்டிவ் பக்கம் இயங்கியவர். நா.முத்துக்குமார், லலிதானந்த், குகை மா புகழேந்தி, கன்னியப்பன்... எல்லாம் ஒரு குழாம். நா.முத்துக்குமார் தூர் கவிதை மூலம் கவனத்துக்கு வந்ததுபோல, கன்னியப்பன், குமுதத்தில் எழுதிய கூட்டுக்குடும்பத்தில் கலவி குறித்து எழுதிய ஒரு கவிதை மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தவர். பாக்கெட் நாவல் காலத்தில் எழுதவந்து எல்லோரையும் அனபையும் எழுத்தின் மூலம் பெற்றவர். தனி இருக்கை இவரது சிறுகதைத் தொகுப்பு, நான்குக்கும் அதிகமான கவிதைத் தொகுப்பும் எழுதியிருக்கிறார். நிறைய சினிமா கதைகளுக்கு ஸ்கிரிப்ட் டாக்டராக வேலைபார்த்தவர். பத்து நாட்களுக்கு முன்பு எனது நண்பர் இயக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எழுத்தாளராக கன்னியப்பனைச் சிபாரிசு செய்தேன். கன்னியப்பன் எழுத்தை அங்கே அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதை மகிழ்ந்து பேசினார். இப்போது அதிர்ச்சி செய்தியாகிவிட்டார். சென்னையில் எனது ஆரம்ப நாட்கள் முதல் இருந்துவந்தவர், இப்போது இல்லாமலாகிவிட்டார். உடல் அவரது சொந்த ஊரான சேலம் (அருகில் ஒரு கிராமம்) நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அஞ்சலி தலைவரே. உங்கள் வண்டி கிளம்பிவிட்டது! 

21 October, 2024

சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது_2013

 மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கவிதைப் புத்தகத்துக்கு ’’சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது- 2013” வழங்குகிறார் சாகித்ய அகாதெமியின் பிரசிடெண்ட் விஷ்ணு பிரசாத் திவாரி. இடம் : சங்கீத நாடக அகாடெமி- ஜோத்பூர் -ராஜஸ்தான் மாநிலம். தேதி : 05.02.2014 நேரம்: மாலை 5.30 க்கு மேல்..





கவிதை~ ஒரு என்பது எல்லாம்~ எனது கவிதையும் Sivakumar Ambalapuzha_ன் மலையாள மொழிபெயர்ப்பும்

மாட்டுவண்டி செல்கிறது. இல்லை வண்டிப்பாதை அழைத்துப்போகிறது. இல்லை காளைகள் இழுத்துப்போகின்றன. இல்லை சக்கரங்கள் நகர்த்திப்போகின்றன. இல்லை தெப்பக்கட்டை தாங்கிப்போகிறது. இல்லை அரிக்கேன் வெளிச்சம் வழிகாட்டுகிறது இல்லை எட்டுக்கால்கள் இரண்டு சக்கரங்கள் சேர்ந்துபோகின்றன. இல்லை கழுத்துமணிச் சத்தம் கூட்டிப்போகிறது. இல்லை சத்தியம் முன்போகிறது. வண்டி பின்போகிறது ஒரு வண்டிக்காரன் உறங்குகிறான் இவை எல்லாவற்றின் மடியில்.

- கதிர்பாரதி
- உயர்திணைப் பறவை

💚 കതിർ ഭാരതി (തമിഴ്)
കാളവണ്ടി പോകുന്നു
ഇല്ല
വണ്ടിത്താര കൊണ്ടുപോകുന്നു
ഇല്ല
കാളകൾ വലിക്കുന്നു
ഇല്ല
ചക്രങ്ങൾ ഇഴഞ്ഞുരുളുന്നു
ഇല്ല
മാർനുകം താങ്ങിപ്പോകുന്നു
ഇല്ല
റാന്തൽവെട്ടം വഴികാട്ടുന്നു
ഇല്ല
എട്ടുകാലുകളും രണ്ട് ചക്രങ്ങളും ചേർന്നുപോകുന്നു
ഇല്ല
കുടമണിയൊച്ച അലിഞ്ഞുചേരുന്നു
ഇല്ല
സത്യം മുമ്പേ പോകുന്നു
വണ്ടി പിൻതുടരുന്നു
ഇവയെല്ലാറ്റിന്റെയും മടിയിൽ
വണ്ടിക്കാരനുറങ്ങുന്നു
🔴

கவிதை : கதிர்பாரதி ~ குடலைமட்டை நத்தை ~

ப்பத்தா ஒரு நத்தை வேட்டையாடி.
மழையீரக் குடலைமட்டை அணிந்து
அவள் வேட்டையாடக் கிளம்பினால்
நத்தைகள் ஓடி ஒண்டும்.
நத்தைகள் மீது சிலுவைகள் வரைந்து மயக்குவாள்.
`மண்ணக வாழ்விலும் மேலான மறுமை வாழ்வு
உங்களுக்கு எம் வயிற்றிலுண்டு` என்று
பிரசங்கிப்பதுபோலிருக்கும்
அவள் வேட்டை.
நடவுபொழுதிலும் களையெடுக்கக் குனிந்தாலும்
நத்தைகளோடே நிமிர்வாள்.
சவ்வுமிட்டாய்க்காரன் பின்திரியும் சிறார்களென
அவளோடு நத்தைகள் வீட்டுக்கு வரும்.
மண்சட்டிக் குளத்தில் நீந்தும் நத்தைக் கனவுகளுக்கு
திருமுழுக்காட்டும் நடக்கும்.
அப்போது விசேஷமாக
தம் உணர்க்கொம்புகளை உயர்த்தி
நத்தைகள் அப்பத்தாவை ஆராதிக்கும்.
என்ன பிரயோஜனம்
கோணூசி குத்தி நெகிழப்படும் நத்தை இறைச்சி
வாழ்வின் அப்பமாக அன்றிரவு மாறும்.
கார் சாகுபடிக் காலையொன்றில்
அப்பத்தா தலையெட்டிப் பார்த்தபோது
அவளொரு வீட்டு நத்தையாய்த் தெரிந்தாள்.
தாத்தாவின் தார்க்குச்சி விளாசலில்
ஊமை நத்தையாய் ஒடுங்கிப் போனாள்.
நத்தை ஓடுகளைத் துளையிட்டு
சலங்கைக் கட்டி ஆடினோம்
அவள் பிணம் முன்பு.
நத்தைகள் கூடி தம் மூதாயை எடுத்துப்போய்
சவப்பெட்டியில் சிலுவை வரைந்து
களத்துமேட்டில் புதைத்தன.
யூரியா சல்ஃபேட் பொட்டாஷியம் பாக்டம்பாஸ்
எல்லாம் செரித்து
தாளடி நடவுக்கால வரப்பில் இழைகிறது
ஒரு புத்தம்புது நத்தை.
அது
அப்பத்தாவேதான்.
_கதிர்பாரதி




09 October, 2024

~ கவிதை : கதிர்பாரதி ~ மேரிகோல்டு உண்ணும் ஸ்ரீயானை

40 வயதுக்குப் பிறகு
இனிக்கமுடிந்தோர் வாழ்வுபெற்றோர்
ஏனெனில்
அவர்களின் கடவுள் இன்சுலினாய் இருக்கிறார்.
இனிக்க முடியாதோர்
சிறுகுறிஞ்சான் கீரையை வேகவைத்து
ஒரு மண்டலம் வெறும்வாயில் உண்டுவர
ரத்தச் சர்க்கரையளவு குறையுமென்ற
கைவைத்தியம் தெரியுமா?
உண்டோருக்குத்தானே தெரியும்
சிறுகுறிஞ்சான் சுவை என்பது
`வாழ்வுகொள்ளாக் கசப்பு` என்று.
அய்யய்ய
கசந்து கசந்து வாழ்வதன் பெயர்தான்
சர்க்கரையா.
ஆமாம்
அதிகாலைக் குடல்குடையும் பசிக்கு
மேரிகோல்டு சாப்பிடுகிறது
ஸ்ரீசாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர்
திருக்கோயில் யானை.
_கதிர்பாரதி



08 October, 2024

~கவிதை : கதிர்பாரதி ~ சாந்தசொரூபிகளின் தெய்வம்

னக்குள்ளிருக்கும் நாயை அவிழ்த்து
கையில் பிடித்தபடி காலைநடை போனேன்.
நானொரு நல்ல ஜீவகாருண்யன்
நாயோ சாந்தசொரூபிகளின் தெய்வம்.
அதன் விடிகாலைக் காதுகளில்
`மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்`
பாடலைச் செருகிவிட்டிருந்தேன்.

அப்போததன் வால்கூடச் சாந்தமாவே குழைந்தது.
வீட்டுத் திருப்பம் மறைந்ததும்
`
மாதா`வைக் கழற்றிப் போட்டுவிட்டு

தெருவோரங்களை மோந்து மோந்து பார்த்தது.
திரைப்படச் சுவரொட்டியைக் கண்டதும்
கால் தூக்கி சிறுநீர் கழித்தது.
`
நாக்கை அப்படித் தொங்கப்போடாதே
அதிலிருப்பவர்கள் அதிரூபங்கள்.
அவர்கள்முன் கால்தூக்குவது நாகரிகமல்ல` என்றேன்.
`எனக்கு எல்லாம் தெரியும்… மூடு` என்று
முகத்தை வைத்துக்கொண்டது.
இன்னொரு திடீர் வளைவில்
என்போல எல்லோரும்
அவரவர் மிருகத்தைக் கையில் பிடித்தபடி
காலைநடை வந்திருந்தனர்.

நாயின் கால் நாயறிந்து, எனைக் கழற்றிவிட்டு
நடையும் துறைந்துவிட்டு
இன்னொரு நாயை இழுத்துக்கொண்டு
முட்டைபோண்டா சுவைக்கப் போய்விட்டது.
பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு
பெண்நாய்களின் பின்புறங்களைக் கவனித்தது.
`
அடச் சீ நீயொரு நாயா?` எனக் கடிந்து
வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன்.
நாயும் முகத்தில் சாந்தத்தை அழைத்துவந்துவிட்டது.

வீட்டு எஜமானி தேநீர் கொடுத்தாள்
`
அருகன் சாறு அருந்தினேன் அம்மா` என்று
வாலைக் குழைத்துவிட்டு
காதுகளில் மறுபடியும் `மாதா`வை மாட்டிக்கொண்டது.
நாயைக் காலைநடை கூட்டிப்போனால்
நமக்குத்தான் ரத்தத்தில் சர்க்கரை 
தாறுமாறாய்க் கூடிவிடுகிறது.

_கதிர்பாரதி



01 October, 2024

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ ஜார் ஒழிக சிறுகதைத் தொகுப்பு ~ சாம்ராஜ் (15 பிப் 2023 அன்று எழுதியது)

விஞர் - இயக்குநர் சாம்ராஜின் இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு 'ஜார் ஒழிக!'. எழுதித் தீராத மதுரையை நிகழ்விடங்களாகக் கொண்ட கதைகள் பெரும்பாலும்; ஒன்றிரண்டு கேரளா மற்றும் திருச்சியில்.

'வாழ்வை இடையறாது முடுக்கும் இயக்கி பெண்கள்தான். அது நேர்மறை அல்லது எதிர்மறை என்ற எந்த விளைவாக இருக்கட்டும். அவர்களின் தலையீடு குறைவான எதிலும் சூடும் சுரணையும் கொஞ்சம் மட்டம்தான்...' என்ற முடிவுக்கு இலகுவாக நகர்ந்துவிடக்கூடிய வாய்ப்பைத் தரும் கதைகள்.

ஆனால், அதே அவர்கள்... வாழ்வின் தீரா இன்னலுக்கு உள்ளாவது ஏன்? நெஞ்சுக்கு நெஞ்சாகத் துயர் வந்து அவர்களைத் தாக்குவது எப்படி? இடிவாங்கி பிளவுண்ட மரம்போல கொதிமனம் கொண்டு அலைவது எதனால்? கண்ணீருக்குத் தெரியாமல் தேம்புவது யாரால்?

என்றெல்லாம் கேட்டுக்கொண்டால் சமூகம் அவர்களுக்கு அப்படித்தான் முகம் காட்டுகிறது எனவும் பதில் சொல்கின்றன இந்தக் கதைகள். காவியம் தொட்டு நவீனக் காலம் வரை இதுதான் பெண் கதி; வாழ்வு.
சாம்ராஜ் 


நளாயினிக்கு நிகர் துயர்கொண்ட பாத்திரம் செவ்வாக்கியம். அவளுக்கு எதிர்நிற்க முடியாமல் நடுங்குகிறது முத்திருளாண்டி ஆண் தனம். பாலியல் சுரண்டலுக்கு எதிரான பரமேஸ்வரியின் தாட்டியம், சீண்டலுக்கு இன்முகம் காட்டும் லட்சுமி அக்காளின் அலட்சியம், மல்லிகாவின் சினிமா மோகம், மரியபுஷ்பத்தின் தீராத்தேடல், கோமதியின் மந்தகாசம்... யாவும் சொட்டச் சொட்டத் துயரங்கள். எனினும் சகித்துக் கடக்கிறார்கள்.

காயமுற்றவர் பக்கம் கருணையாக இருங்கள். ஏனெனில் அதுதான் அவர்கள் வரலாறு. உடைந்தவர் ஒன்றும் ஒடிந்துபோவதில்லை; துளிர்க்கிறார்கள். வெறுங்காலோடு நடந்து கடக்கிறவர்கள் எழுப்பும் புழுதிக்கு வலிமை அதிகம்... என்பனவெல்லாம் இந்தக் கதைகளின் உள்ளோடும் உண்மைகள்.

இவை எல்லாம் தாண்டி அவர்களைத் தூண்டி துலங்கச் செய்வது எது? 'அவர்கள் நகர்த்தியாக வேண்டிய கட்டாய வாழ்க்கை' என்கிறார் சாம்ராஜ். வானம் இல்லாத ஊருக்கு யாராலும் போய்ச் சேர முடியாது எனப் புரிந்துகொள்கிறேன் நான்.

வேறு ஒன்றும் இல்லையா என்றால்... இடதுசாரிப் புரட்சி இந்திய மண்ணில் எப்படித் தொழில் படுகிறது? அதைச் சொந்த வீட்டுக்கு ஒட்டடை அடிக்கும் அவஸ்தையோடு சொல்லப்படும் கதைகளும் இருக்கின்றன.

பிரியத்துக்குரிய ஆசிரியை நம் காதுமடல் திருகித் தண்டிக்கும்போது வலியில் ஒரு சூடு பரவும் அல்லவா... அப்படி கதை சொல்கிறார் சாம்ராஜ். அதில் எள்ளல் துள்ளல் பகடி எல்லாம் அவர் இழுத்தவாக்கில் வந்துபோகின்றன.

'பட்டாளத்து வீடு' சாம்ராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ வெஞ்சினம்~ சிறுகதைத் தொகுப்பு ~ கார்த்திக் புகழேந்தி (13பிப்2023 அன்று எழுதியது)

கார்த்திக் புகழேந்தி யின் 'வெஞ்சினம் & பிற கதைகள்' தொகுப்பை வாசிக்க வாசிக்க எப்படி இந்த ஆளின் எழுத்தை இத்தனை நாள் வாசிக்காமல் இருந்தோம் என்று ஆயாசமாக இருந்தது.

சிலந்தி வாயிலிருந்து எச்சில் நூல்நூலாகக் கிளம்பிவந்து பின்னலாவதுபோல கார்த்திக் புகழேந்தியிடம் இருந்து கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னம்பின்னமாகக் கிளம்பிவருகின்றன என்றே தோன்றுகிறது.
நாட்டார் பண்புலகப் பின்னணியோடு எழுதப்பட்ட வெஞ்சினம், கொடிக்கால், காளிக்கூத்து, தலப்புராணம் போன்ற கதைகள் நம் பால்ய நனவிலியில் பாட்டையாக்களாலும் பாட்டிகளாலும் ஊன்றப்பட்ட விதைகள்தாம்.
கதைகளைப் படித்துக்கொண்டு வரும்போதே, யாரோ கதை கேட்டு 'உம்' கொட்டிக்கொண்டு பின்வருவதைப் போன்ற பிரமை உண்டாகிறது.
பூவாத்தாள், பலவேசத்தம்மாள், மங்கா, செல்லி, கோமு ஆச்சி, சந்திரா - மாரி... என கதைகளின் அத்துணைப் பெண்களும் அசாத்தியமானவர்களாகவும், அதிசயமானவர்களாக இருப்பது தாய்வழி ஆளுமைச் சக்தியின் மிச்சச்சொச்சங்கள் என்றெல்லாம் எண்ணவைக்கின்றன.
கார்த்திக் புகழேந்தி
கதைகளுக்காக உலகம் உருவானதா இல்லை கதைகள் உருவாக்கியதுதான் இந்த உலகமா என்ற சிந்தனாமயக்கத்தை உண்டுபண்ணுகிற இந்தத் தொகுப்புக் கதைகள் மிகுந்த வாசிப்பு இன்பத்தையும் மயக்கத்தையும் தரவல்லவை.
கார்த்திக் புகழந்திக்குக் காட்டாற்று வெள்ளம் போல மொழி. மேடு பள்ளங்களை நிறைத்து ஓடிவருதாக மனித மேன்மை - கீழ்மைகளை அடித்துக்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு கதையிலும் ஓர் அகவயமான வெளிச்சம் பீறிடுகிறது. அது மனித ஆழ்மனத்தின் மீது நிகழ்த்தும் ஆத்ம விசாரணைகளாக இருப்பதே இந்தக் கதைகளின் நற்பண்பு என நான் நினைக்கிறேன்.
வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி