26 July, 2012

அரசல்புரசலின் நிறம்


கி.மு.இரண்டாயிரத்தில் கேரட்கள்
ஊதா நிறத்தில்தான் இருந்தனவாம்.
பிறகேன் இளஞ்சிவப்பு நிறம்கொண்டது
என்கிறீர்களா?
ஆண் பிள்ளையாகிய என்னால்
காரணத்தைச் சுவாரஸ்யமாகச்
சொல்லிவிட முடியும்.
எனில்,
நான் சொல்லப் போவது
நீங்கள் அரசல்புரசலாக அறிந்ததுதான்.
அப்படியென்றால்
நாங்களே சொல்லிக்கொள்கிறோம்
என்கிறீர்களா?
சொல்லுங்கள்.
ஆனால், உங்களுக்குத்தான்
சுவாரஸ்யமாகச் சொல்ல வராதே.
நீயே சொல்லிவிடு என்கிறீர்களா?
உங்களுக்கு அரசல்புரசலாகத் தெரிந்ததை
சொல்வதற்கு நானெதற்கு.
தவிர,
கேரட்கள் இளஞ்சிவப்பு நிறம் கொண்டதும்
இப்படி அரசல்புரசலாகத்தான் என்றால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்.


ரயில் விளையாட்டு


எப்போதும்
சலியாத விளையாட்டுத்தான்
என்னிரு மகன்களுக்கும்.
சென்னை மாநகர ரயில் பயணம் ஒன்றில்
ஆள்காட்டி விரலை ஆட்டி
இது எக்மோர் என்கிறான் கபிலன்.
ஆள்காட்டி விரல் சேத்துப்பட்டு
என்கிறான் திலீபன்.
நடுவிரல் நுங்கம்பாக்கம்.
மோதிர விரல் கோடம்பாக்கம்.
சுண்டுவிரல் மேற்கு மாம்பலம்.
அப்போது பார்க்கிறேன்
கட்டைவிரலுக்கும்
சுண்டு விரலுக்கும் இடையில்
ஒரு அதிவேக ரயில்கள் போய்க்கொண்டும்
இரு மிதவேக ரயில் வந்துகொண்டும்
இருக்கின்றன. 

ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்

ஒரு மாநகரத்தின் பரோட்டா கடையில்
ஒரு முட்டை பரோட்டாவும்
ஒரு சாதா பரோட்டாவும்
ஒரு பரோட்டா மாஸ்டரை உருவாக்குவது குறித்து
தீவிர விவாதத்தில் இருக்கின்றன.
பரோட்டா அறிவில்லாத கூமுட்டையனாக இருந்தால்
நிரம்ப நல்லதென்கிறது முட்டை பரோட்டா.
பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தோல்வி
கூடுதல் தகுதி என்கிறது சாதா பரோட்டா.
பக்கத்து வீட்டு சுமார் அழகிக்கு லவ் லெட்டர் எழுதி
அவள் அண்ணனிடம் குத்துப்பட்டிருப்பவனுக்கு முன்னுரிமை.
அவன் கனவில் பரோட்டா வட்டவட்ட பௌர்ணமியாக
வலம் வந்திருக்க வேண்டும்.
வாழ்க்கை ஒரு பரோட்டாவைப் போல அவனைப்
பிய்த்துப்போட்டு உண்டிருக்க வேண்டும்.
விவாதத்தின் முத்தாய்ப்பாக
அவன் ஊரைவிட்டு ஓடிவந்திருக்க வேண்டும் என்கிறது
முட்டைப் பரோட்டா.
பதத்துக்கு வராமல் அவன் முரண்டுபிடித்தால்...
சாதா பரோட்டாவுக்குச் சந்தேகம்.
அப்படியே இரண்டு கைகளால் அவனை அள்ளிக்குவிச்சு
தலையில் தண்ணீர்த் தெளித்து,
சூடாக எண்ணெய்விட்டுப் பிசைந்து
முகத்தில் நான்கு குத்துகள் குத்தவேண்டும்.
அப்போது கைகளில் அடங்காமல் திணறுவான்.
அந்நேரத்தில் உருண்டைப் பிடித்துவிட வேண்டும்.
உருட்டுக்கட்டையால் முகத்தில் தேய்த்து
கிழியக்கிழிய நாலாபக்கமும் வீசி,
சுருட்டிப் போட்டு சூடான கல்லில் இரண்டு பிரட்டுப் பிரட்டி
இரும்புக் கம்பி கொடுத்து நெம்பினால்
தம்பி தானாகப் பதத்துக்கு வந்துவிடுவான்.
திட்டத்தைச் சொன்னது முட்டைப் பரோட்டா.
’’
ஆகா, அற்புதம்’’ என்ற சாதாபரோட்டா
உணர்ச்சி மிகுதியில் குதிக்க
கடையில் சால்னா தளும்பிச் சிந்துகிறது

24 July, 2012

ஆவல்


ஞாயிற்றுக் கிழமை
சுகுணா சிக்கன் ஸ்டால்
வாடிக்கையாளர் வரிசையில்
எனக்குப் பின் நின்ற
சிறுமிக்கு வழிவிட்டு
பின்
நகர்ந்தேன்.
என் கரிசனம் குறித்து
உங்கள் கருத்துகளை அறிய
ஆவல்.
 

அகாலத்தை உருவாக்குபவனின் ஆசீர்


ஊட்டிவிடுங்க என்பதை
சாப்பிட்டு விடுங்கஎன்கிற திலீபன்
வயிறு நிறைந்ததும்
போதும்பா நாளைக்குச் சாப்பிடறேன் என்பதற்குப் பதில்
நேத்துக்குச் சாப்பிடறேன்என்று
நேற்றின் தலை மேல் ஒரு காலை வைக்கிறான்.
நம்மை எதுவும் செய்யாதிருக்க வேண்டுமே என்று 
நடுநடுங்குகிறது இன்று.
நாளைக்குச் சோறு சாப்பிடறப்போ
எனக்கு வயித்தை வலிச்சுதுல்ல 
அதான் சொல்றேன்என்றபோது
நாளையின் தலைமீதும் நங்கென்று ஒரு கால்.
எவை பற்றியும் கிஞ்சித்தும் கவலையில்லை.
காலங்களை மயக்கி
அவன் படைக்கும் அகாலம்
விஸ்வரூபம் எடுக்கிறது.
அதன் 
அடி - முடியைக் கண்டடைபவர்களுக்கு
திலீபனின் ஆசீர்வாதங்கள்.