23 September, 2024

விமர்சனம் ~ வாசகசாலை மின்னிதழில் வெளிவந்த கவிதைக்கு ~ எழுத்தாளர் மா.காளிதாஸ்

ண்ணாடிகள் நம்மைச் சரியாகக் காட்டுகின்றனவா, தவறாகக் காட்டுகின்றனவா?பிம்பம் என்ற ஒன்று இருக்கிறதா? அல்லது நாமே ஒரு கண்ணாடி தானா?

ஒரு பிம்பம் நகர்ந்த பின் கண்ணாடி உடைவது, அந்த பிம்பத்தின் மீது எவ்வகையான எதிர்வினை? அல்லது ஒரு பிம்பம் கண்ணாடியை விட்டு நகர்வது, கண்ணாடிக்குள் எவ்விதமான வினையை நிகழ்த்தும்?
ரசம் பூசப்படுவது, பிம்பத்தை எதிரொளிக்க மட்டும் தானா? அல்லது கண்ணாடி தன்னைத் தகவமைக்கவா?
இந்தக் கேள்விகளை முன்னிறுத்தி கண்ணாடிக்குள் நம்மையும் கண்ணாடிக்கு வெளியே நம் பிம்பத்தையும் உலவச் செய்கின்றன, வாசகசாலை இணைய இதழில் வெளிவந்துள்ள கதிர்பாரதியின் இக்கவிதைகள்.
மா.காளிதாஸ்
"தங்குவிடுதி
குளியலறைக் கண்ணாடி மீது
திடுதிடுவென ஓடும் கரப்பு,
ஒட்டியிருக்கும் கோபுரப் பொட்டின்
கூர்முனையை
தன் உணர்கொம்புகளால்
தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது."
அனைத்தும் ஏதோவொரு வகையில் மறைமுகமாகக் கண்காணிக்கப்படுகிற நவீன உலகு, ஆபத்தானது மட்டுமின்றி, சுயஇன்பத்திற்கான வடிகாலாகவும் இருக்கிறது என்பதை,
"கரப்பு,
ஒட்டியிருக்கும் கோபுரப் பொட்டின்
கூர்முனையை
தன் உணர்கொம்புகளால்
தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது."
என்ற வரிகளால் உணர்த்துதல் மட்டுமின்றி, எல்லா ரகசியங்களும் ஒருநாளில் பிம்பமாக உடைபடக் கூடியனவே எனக் கவனப்படுத்துவது பெரும் அதிர்வு.
எங்காவது ஓரிடத்தில், ஒரேயொரு நிமிடமேனும், ஒரேயொரு சந்தர்ப்பத்திலேனும் பெண்ணைத் தற்கொலை முடிவெடுப்பதற்கான தூண்டுதலாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது ஆணுலகு.
ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீளும் பெண்ணுக்கு, அதிவேக ரயிலின் மனம். எந்த நிறுத்தமும் அவளுக்கான ஆசுவாசத்தைத் தரப் போவதில்லையென்றாலும், எல்லா நிறுத்தங்களிலும் எட்டி எட்டிப் பார்ப்பதை அனிச்சைச் செயலாகவே வைத்திருக்கிறாள்.
"அதிவேக ரயிலில் போய்க்கொண்டிருப்பவள்
பாத்ரூமுக்குள் புகுந்து
அதன்
கண்ணாடிக்குள் பாய்ந்து
தற்கொலை செய்துகொண்டாள்.
பிறகு
ரயில் சென்றுசேரவே முடியாத
அவளது ஸ்டேஷனில்
இறங்கிக்கொண்டாள் மிக நிதானமாக."
தன்னிலை, தனக்கான உலகு என்பது பெண்ணைப் பொறுத்துத் தீராக்கனவு என்பதையே 'சென்று சேரவே முடியாத' என்கிற சொல்லாடல் உணர்த்துகிறது.
அன்பால் தொலைதல், அன்புக்குள் தொலைதல் வேறுவேறு வகைமைகளே. தொலைந்த பின் தேடிக் கண்டடைதல் சாத்தியமான போதும், அதிலிருக்கும் சத்தியங்கள் நிலைகுலைந்துவிடுகின்றன.
அன்பை மையப்படுத்திய பார்வைகள் எவ்வித நிலைத்தன்மை கொண்டமை, அவை ஏற்படுத்தும் அடுக்கடுக்கான விளைவுகள் எவ்வித மாயத்தோற்றம் கொண்டவை என்பதை விளக்குகிறது கதிர்பாரதியின் இக்கவிதை:
"ஒருத்திக்குள் இருக்கும்
கண்ணாடியும்
ஒருவனுக்குள் இருக்கும்
கண்ணாடியும்
நேரெதிர் பார்த்துக்கொண்டன.
அப்போது அவற்றுக்குள்
அடுக்கடுக்காக விரிந்தவற்றில்
ஓர் அடுக்குத்தான்
அவளும் அவனும்."
நீலப்படம் பார்த்தல் என்பது ஆணுக்கான பொதுவான வரையறை என்பதை முற்றாக உடைத்து நொறுக்கியிருக்கிறது,
"நீலப் படம் ஒன்று
ஓடிமுடிந்த செல்திரைக் கண்ணாடி
ஓர் உடலைப்போல
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது."
என்ற கவிதையில் உள்ள "ஓர் உடலைப் போல" என்ற பொதுப்படை வரி.
கதிர்பாரதியை காண்பதற்கு அவரின் தனித்த அறையும் தொங்கவிடப்பட்ட கண்ணாடியும், அதில் நகரும் சில பிம்பங்களும் மட்டும் போதாதென்றே தோன்றுகிறது.
- மா. காளிதாஸ்
நன்றி: வாசகசாலை இணைய இதழ் - 86. https://vasagasalai.com/kathir-bharathi-kavithaigal-vasagasalai-86/?fbclid=IwY2xjawFeNPZleHRuA2FlbQIxMQABHX4LCvMiLH-ryxDJ4i02qhS4o3uXp-r726uy2GihmU-MzRThVKHYoKWYZA_aem_FYgrTWwLLrCuxi8rEar0vw

No comments: