27 September, 2024

வைரமுத்து~40 வாழ்த்துக் குறிப்பு~ (10மார்ச்2020 அன்று எழுதியது) _ கதிர்பாரதி

நான் படித்த கவிஞர் வைரமுத்துவின் முதல் புத்தகம், கவிதைப் புத்தகம் அல்ல. அவரது பேட்டிகளின் தொகுப்பு... 'கேள்விகளால் ஒரு வேள்வி'. அப்போது நான் திருச்சி செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன். அவரது புகழ்பெற்ற முதல் பாடலான பொன்மாலைப் பொழுது பாடலில் 'கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்' என்று ஒரு வரி வரும். அதேயே அவரது பேட்டிகள் தொகுப்புக்கு தலைப்பாக வைத்திருப்பார்.

அந்தப் புத்தகத்தில் 'ஞானக்கூத்தன், ந.ஜயபாஸ்கரன் போன்றோர் எல்லாம் தமிழ்க் கவிதைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் தோற்றுவிட்டார்கள்' என்ற ரீதியில் ஒரு பதில் இருக்கும். 'நான் பாடல் எழுதவந்த காலத்தில் கண்ணதாசனுக்கு சாதித்த சலிப்பு வந்துவிட்டது' என்று ஒரு இடத்தில் சொல்லியிருப்பார். 'திரைப்பாட்டில் தத்துவம் என்றால் 'நிலையாமை'யைப் பாடுவதாக இருந்ததை இளம்தலைமுறைக்கு நம்பிக்கை தருவது என்பதாக என் போன்றோர் மாற்றினோம்' என்று சொல்லியிருப்பார்.
அதன் பிறகு 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்', 'இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல', 'கொடிமரத்தின் வேர்கள்', 'ரத்ததானம்', 'தமிழுக்கு நிறமுண்டு', 'தண்ணீர் தேசம்', 'சிகரங்களை நோக்கி' என அவரது புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்ததுண்டு. பிறகு அந்தப் பித்தை தெளியவைத்தார் அப்துல் ரகுமான் தன் 'பால்வீதி' தொகுப்பு மூலம். தேடலின் நல்வாய்ப்பாக கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், தேவதச்சன், தேவதேவன் இன்னும்பிற கவிஞர்கள் கிடைத்தார்கள்.
ஆனால், அப்போதிருந்து இப்போது வரை என் விருப்பதுக்குரிய ஒரே பாடலாசிரியராக வைரமுத்து மட்டும்தான் இருக்கிறார். அவ்வப்போது வாலி புலமைப்பித்தன் பழநிபாரதி ஆகியோர் அட எனச் சொல்லவைத்திருப்பது உணமைதான். ஆனால், ஆதிக்கம் செலுத்தியது வைரமுத்துதான். எம்.எஸ்.வி ஆரம்பித்து ரகுநந்தன், ஜிப்ரான் வரைக்கும் எழுதிய ஒரே ஆள் வைரமுத்து. அவ்வளவு வாய்ப்புகள். அத்தனையிலும் முதல் பாடல் வாய்ப்பு போல தன்னை முனைந்து நிறுவும் முனைப்புதான் அவரின் பிரமாண்ட வெற்றியின் பின்னணி. இளையராஜாவோடு முட்டல் உரசல் இருந்தபோது ஆறு ஆண்டுகள் அவ்வளவாக பாடல் வாய்ப்பில்லாதபோது ஓரிரு படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.
வைரமுத்து
திரைப்பாட்டில் அவரது முக்கிய சாதனையே வட்டார வழக்குகளையும் இலக்கிய அந்தஸ்தோடு உலவ விட்டதுதான்... 'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு', 'கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கிழங்கு வைக்கும்', 'காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும், ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்த... இப்படிச் சொல்லலாம்.
இந்தியக் கலை கிரேக்க கலை இணைந்த காந்தாரக் கலை போல, மரபின் தேர்ச்சி நவீன பயிற்சி இரண்டும் இணைந்த மொழி செப்பம் வைரமுத்துவுடையது. தோகை இளம் மயில் ஆடி வருகுது... சாலையோரம் சோலை ஒன்று வாடும்...ஆயிரம் தாமரை மொட்டுக்களே... தலையைக் குனியும் தாமரையே... செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ... என்று ஏராள உதாரணங்கள் சொல்லலாம். ஏர்.ஆர்.ரகுமானோடு இணைந்து வைரமுத்து தொட்டதெல்லாம் உலக உயரத்துக்கு துலங்கியது. ஏர்.ஆர்.ரகுமான் இசை தங்கக் கிண்ணம் என்றால் நிச்சயமாக வைரமுத்துவின் வரிகள் சிங்கப்பால்தான்.
நாளை நிச்சயமற்ற திரையுலக வாழ்வில் 40 ஆண்டுகள் நிலைத்திருப்பது அதுவும் உயிர்ப்போடு இருப்பது என்பதெல்லாம் நிச்சயம் சாதனை. திரையுலகில் 40 ஆண்டுகள் என்பது மூன்று தலை முறை என்பார்கள். பாடலாசிரியர்களில் மூன்றிலும் வென்றவர், மூன்றிலும் முத்தெடுத்தவர் இப்போதைக்கு வைரமுத்து மட்டும்தான்.

No comments: