29 October, 2011

திலீபன் வைத்த கொலு

தன் முதுகில் வெளிமானைச் சுமந்துகொண்டு

புல் மேயவும் தயாரென்பது போல இருக்கிறது புலி

பசுமாட்டின் நிழலில் சிங்கம் இளைப்பாறிக் கொண்டிருந்தது

கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசிக்

விளையாடும் பாவனையில் இருந்தன

காந்தியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு

புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்

வேட்டைக்காரன் ஒருவன்

காட்டெருமை ஒன்று தாயின் கரிசனத்தோடு

ஓநாய்க்குட்டியை நாவால் தடவிக்கொடுக்கிறது

ஆசியர் பொம்மைக்குப் பாராமுகமாய் நிற்பது

யூகேஜி போகும் கபிலனாகத்தான் இருக்க வேண்டும்

தவயோகி ஒருவர் நடனமாதரில் லயித்திருக்க

தலையை ஆட்டி ஆட்டிச் சிரிக்கிறது

தலையாட்டிப் பொம்மை


22 October, 2011

ஆனந்தியின் பொருட்டு தாழப் பறந்துகொண்டிருக்கின்றன தட்டான்கள்

மணிப்புறாவின் லாகவத்தோடு எழும்பிப் பறக்கிற
என் நிலத்துக்கு ஆனந்தி என்று பெயர்ச் சூட்டியிருந்தேன்
அதனால்தான் அது மேலெழும்பி மிதக்கும்
பாக்கியம் பெற்றதோ என்னவோ
அதனால்தான் அத்தனை வனப்போ செழிப்போ
தட்டான்கள் தாழப் பறந்தால் மழை வரும் தெரியுமா என்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன்முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது
தட்டான்கள் குறுக்கும்நெடுக்குமாகப் பறப்பது
காற்றின் பக்கங்களில் கோட்டோவியம்
வரைவதாகும்போல என்றால்
ஆமாம் அப்படித்தான் என்று
பார்வையாலே தட்டான்மாலை வரைவாள்
பறக்கும் தட்டான்பூச்சிகளுக்குச் சங்கடம் தராமல்
மிதந்துகொண்டிருக்கிறது நிலம்
ஆனந்தி பெயரைச் சொல்லி விதைப்பதும்
ஆனந்தி என்று சொல்லி அறுப்பதும்
மகசூலை அதிகரிக்கச் செய்யும்
விவசாய முறையாயிருந்தது
நிலத்துக்கு நடுவே நட்டுவைக்கப்பட்டிருக்கும்
பொம்மையின் வாயிலிருந்து வைக்கோல் பிதுங்க
தலை தொங்கிக்கொண்டிருக்கிறது
காரணம் ஆனந்தியில் வாத்ஸல்யம்
அந்த நிலத்தின் மீதில்லை இப்போது
நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு அந்த நிலத்தின் மீது
தாழப் பறந்துகொண்டிருக்கின்றன
தட்டான்கள்