29 October, 2012

தகிக்கிறது சிரிப்பு

உங்களுக்கு இல்லைவேயில்லை என்றாகிவிட்ட
ஒருத்தியின் சிரிப்போடு
விடுதியொன்றில் அறை எடுத்துத் தங்குகிறீர்கள்.
அறைக்குள் ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துவிட்டு 
அதற்கு எல்லாமுமாக ஆகிறது அந்தச் சிரிப்பு.
கண்ணாடித் தம்ளரில் நீரினை வெளியேற்றி
அவள் சிரிப்பினை நிரப்பி கடகடவெனக் குடிக்கிறீர்கள்.
மெல்ல சந்நதம் ஏறுகிறது உங்களுக்கு.
சிரிப்புக்குச் சொந்தமான அவள் இதழ்களை
ருசித்த நினைவுகளால் உன்மத்தமாகிறீர்கள்.
தகிக்கிறது சிரிப்பு.
சிரிப்போடு பிணைந்திருக்கும் ஒரு தருணத்தில்
வாளாக மாறும் சிரிப்பொலி ஊடுருவித் துளைக்க
வலியால் தத்தளிக்கிறீர்கள்.
தண்ணீர்க் குழாயைத் திறந்து சிரிப்பினைக் கையில் பிடித்து
முகத்தில் அடித்துக் கழுவும்போது
இயலாமையின் கண்களில் உப்புத்துளிகள் வழிகின்றன.
சிரிப்பின் அணைப்பில் கட்டுண்டு கிடக்கும் உங்களை
இனி எவற்றாலும் தேற்ற முடியாது.
அறையை நீங்கும்போது உங்களை கீழ்நோக்கி வளைத்து
திடீரென்று முத்தமாக மாறும் சிரிப்பை மட்டும்
தயவுசெய்து ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
ஏனெனில்
அது முத்தம் மட்டுமல்ல.

20 October, 2012

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்


வணக்கம் நண்பர்களே...
சேலம் தக்கை பதிப்பகத்தின் வெளியீடாக...
நிலாரசிகனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ”மீன்கள் துள்ளும் நிசி”, எனது முதல் கவிதைத் தொகுப்பு ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” நண்பர் பா.ராஜாவின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது... இந்த மகிழ்வான தருணத்தை நண்பர்களோடு கொண்டாடத் தயாராகி வருகிறது மனம். விழாவுக்கு நண்பர்கள் அனைவரும் வர வேண்டும்.
விழா குறித்த தகவல்கள் விரைவில்....

அன்புடன்
கதிர்பாரதி

18 October, 2012

முகங்கள் 3 கதிர்பாரதி


கதிர்பாரதி என்றொருவன் இருப்பதே எனக்குத் தெரியாது.
பொதுவாகவே தத்தமது பேர்களின் இறுதியில் ஒரு இறகைப் போல
பாரதியையும் காந்தியையும் இணைத்துக்கொண்டு பலபேர் இருப்பதைக்
காண்கிறோம்.எனக்கு அமிர்தம் சூர்யா உடனான நட்பு கிடைத்த பிறகு தான்
அவர் பணிபுரிகிற கல்கி இதழிலேயே கதிர்பாரதி என்னும் ஒரு துணை
ஆசிரியர் இருப்பதை அறிந்தேன்.
அதன் பிறகு நண்பன் நிலாரசிகன் ஏற்பாடு செய்திருந்த கவிதை
நிகழ்வு தூத்துக்குடி அருகே தேரியில் கடந்த ஃபிப்ரவரி 18 ஆம் தேதி
நடந்தது.அங்கே என் முகப்புத்தக இலக்கியஸ்னேகிதர்கள் பலரையும்
நான் முதன்முதலில் சந்தித்தேன்.முக்கியமாக வா.மணிகண்டன்,
பெரியசாமி பொன் இளவேனில்,இளஞ்சேரல்,கறுத்தடையான் மற்றும்
கதிர்பாரதி.

நேரில் பார்க்கும் போது கேட்டே விட்டேன்..."தம்பி
கதிர்பாரதி வரலையா..?"என்று.அதற்கு என்னை முறைத்தபடியே "
நாந்தாங்க கதிர்பாரதி"என்றார்.
இவ்வளவு யூ யூத்தான ஒரு துணை ஆசிரியர்
மற்றும் கவிஞரா....எனக்கு சந்தோஷமாக இருந்தது.ஒரு காலத்தில்
தமிழ் சினிமா சித்தரித்து வைத்திருந்த பத்திரிக்கைக் காரன் என்னும்
பிம்பம் கொடியது.கதர் ஜிப்பாவும் தோளில் ஒரு ஜோல்னாப் பையும்
மொக்கையாய் கழுத்தில் தொங்குகிற கேமிராவும் கண்ணில் கட்டாய
சோடா புட்டிக் கண்ணாடியும் என இன்றைக்கு வழக்கொழிந்து விட்ட
எல்லாவற்றின் மொத்த பிரதி பிம்பன் அவன்.ஆனால் இன்றைக்கு
பத்திரிக்கையாளர்கள் கணிணித்துறையில் வேலை பார்க்கிறவர்களை
விட ஃப்ரீக் அவ்ட் ஆக இருப்பது தான் நிஜம்.அவர்களின் பிரதிநிதியாக
நான் கதிர்பாரதியைப் பார்த்தேன்.
எண்கள் கொடுத்துப் பெற்றுக்கொண்டோம். அதற்கு முன்பே
கதிருடனான ஸ்னேகம் எனக்கு குரல்வழியாகக் கிடைத்தது தான்
என்றாலும் கூட நேரில் பார்த்த பின் இன்னமும் இணக்கமாக மாறிற்று.
என்னுடைய தனிக்கவிதை ஒரு பக்கத்திற்கு கடந்த சனவரி மாதம்
"இயக்குநர்" என்னும் தலைப்பிலானது கல்கியில் வெளியாகி பரவலாக
அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றது.அதற்கு கல்கி தேர்வெடுத்து
இணைத்திருந்த ஓவியம் மிகச்சிறப்பான ஒன்று.
கதிர் பாரதி தனது யவ்வனம் என்னும் வலைப்பூ
முகவரியைக் கொடுத்து "நண்பா...டைம் கிடச்சா பாருங்க நண்பா..."என்றார்.
நான் பார்த்தேன்.கவிதைகள் கவிதைகள்...அதுவும் வெற்று
வாசகங்கள் அல்ல.உணர்வுப் பூர்வமான கவிதைகள் தான் அத்தனையும்.
தொலைபேசியில் அழைத்து "கதிர் நல்லா இருக்குப்பா கவிதைகள் எல்லாம்.."
என்றால் எதிர்முனையிலிருந்து பலவீனாமான கூச்சக்குரலில்,"அப்டியா நண்பா
சொல்றீங்க...?"என்றார்.
இடையில் கொஞ்ச நாள் வேலைப் பரபரப்பில் கதிர்பாரதி
கவிதை எதையும் அப்லோட் செய்யவில்லை தனது யவ்வனத்தில்.அதற்கடுத்து
முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்ட எந்தக் கவிதையுமே எளிதில் கடந்து விடக்
கூடியவை அல்ல.
கதிர்பாரதியின் சிறப்பம்சம்..வளைந்து கொடுப்பது.வளைந்து கொடுப்பது
என்பதை இந்த சமூகம் மிகச்சரியாக தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது.அறம்
வழுவாது,அதே நேரத்தில் எந்த ஒரு மனமும் புண்படாது ஒரு குறிப்பிட்ட
நீட்சி வரை சென்றேனும் மனிதர்களைக் கையாளுவது ஒரு பெருங்கலை.அது
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்க்கப்பெறும்.அந்த வரிசை மனிதர்களில் என்
நண்பர் கதிர்பாரதியை சொல்லலாம்,.
கதிர்பாரதி நாம் என்ன தொனியில் என்ன வாக்கியங்களில்
பேசுகிறோமோ அதே தொனியைக் கூட நமக்குத் திருப்பித் தருபவர்.சிற்றிலக்கிய
அரசியல்கள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.ஆனால் அவரளவிற்கு
இது வரை யாரைப் பற்றியும் புறம் கூறியது இல்லை.இது ஒரு பெரிய்ய குணம்.அவர்
அடுத்த மனிதனைப் பற்றிப் பேசினால் கூட அந்தப் பேச்சில் அடுத்த மனிதனின் செயல்
குறித்தான விமர்சனம் மற்றும் விளக்கம் இருக்குமே ஒழிய மேம்போக்கான வெறுப்போ
பிறர் மீதான ஆத்திர உமிழ்தலோ கட்டாயம் இருக்காது.
கதிர்பாரதி இளைஞர்.கவிஞர்.இவற்றைத் தாண்டி இதழியல் ஊடகத்
துறைகளில் மிகப் பிரகாசமாக வருவதற்குரிய ஒரு நபர்.அவருக்கு அந்தத் தகுதிகள்
உண்டு.சிறந்ததொரு மனமும் உண்டு.மனிதர்களை கையாள்கிற எவனும் முன்னேறுதல்
கடினமல்ல.
அடிக்கடி தொலைபேசியில் அழைப்பேன்.எப்போதாவது தான் அவர் அழைத்துப்
பேசுவார்.ஆனாலும் எனக்கு அந்தகுறை தெரியாமல் அவரது இளவல் தன் மழலைக்
குரலால் அடிக்கடி என்னோடு பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.அவரது செல்பேசியில்
AAவரிசையில் முதல் பெயராக ஆத்மார்த்தி இருப்பதால் மருமகப்பிள்ளை
அடிக்கடி என்னை அழைத்து சர்வதேச ரகசியங்களை மொழியும்..அதில்
சங்கேதசங்கீதம் பொழியவும் பொழியும்.


இன்னமும்
நட்பு
பாராட்டுவோம்

ஆத்மார்த்தி
 

15 October, 2012

முத்தத்தின் முடிவில்
உதடுகள் ஜாக்கிரதை என 
எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்
இனி மனதுக்குள்.
உதடுகளில் முளைக்கிற முத்தங்களை
முத்தங்களாக மட்டுமே கடந்துவிட முடியாதெனில் 
முத்தங்கள் முத்தங்கள் மட்டுமா என்ன?
முத்தம் கடவுள்
முத்தம் சாத்தான்
முத்தம் பிரபஞ்சம் 
முத்தமே முக்தி
முத்தமே சக்தி
முத்தமே மொத்தம்
சத்தமாக முத்தம் தருவோரும் 
மொத்தமாக முத்தம் பெருவோம்
பேறுபெற்றோர்
ஏனெனில்
பரலோக ராஜ்ஜியத்தில்
அவர்கள் முத்தமாவார்கள்.
தவிர,
உயிரில் இறங்கும் 
கூரிய பனிவாள்
முத்தம்.
கிடைக்கப் பெறுவோர்
முத்தத்தின் முடிவில்
செத்துப் போகக் கடவது!


09 October, 2012

அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு


வாழ்த்துகள்
நீங்கள் என்னை அழ வைத்துவிட்டீர்கள்.
அதுவும் தேம்பித்தேம்பி திக்கித்திக்கி
அய்யோவென அழ வைத்துவிட்டீர்கள்.
வார்த்தைகள் உடைந்து குழைய
என் முகம் ஒரு வெட்டுவெட்டி கேவியதை
நீங்கள் பாத்திருந்தால் ஓவென கட்டிப்பிடித்து அழுதிருப்பீர்கள்.
உங்களைப் பிரித்த பயணத்தின் அந்தத் திருப்பம்தான்
எனக்கு அழுகை திருப்பமானது.
முதன்முறை அழுதாலும்
தேர்ந்த அழுகைக்காரன் அழுவது போல
அழுகிறதாகச் சொன்னார்கள்.
அழுத கணத்தில் என்னிடமிருக்கும் உங்கள் கைகுட்டை
பூவாவதை உணர்கிறேன்.
முகத்தின் மீது போட்டுக்கொள்ளும்போது
அதுவே பாறையாவதாக அழுகிறேன்.
நீங்கள் தொட்ட என்னுடலில் வலிபரவ அழுகிறேன்.
எனக்கென்று குறுராஜ்ஜியமொன்று இருக்கிறது
அதன் குடிகளையெல்லாம் அழச் சொல்லி அழுகிறேன்.
ராஜ்ஜியத்தின் திசைகளெங்கும் திரும்பிப் பார்த்து அழுகிறேன்.
ஞாயிற்றுக் கிழமை கசாப்புகடைக்காரனின் கத்திப் போல
உங்கள் நினைவு கழுத்தை நெருக்கி அறுக்க
அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு என அரற்றி
ரத்தம் சொட்டச்சொட்ட அழுது அடங்குகிறேன்.
வாழ்த்துகள்
நீங்கள் என்னை அழ வைத்துவிட்டீர்கள்.
 

03 October, 2012

என் தெய்வமே... தேவதையே... மோகினியே

என் மோகினிக்குப் பித்தவெடிப்புகள் மலர்ந்திருக்கின்றன
அதிலென் கனவினை இட்டு நிரப்புகிறேன்.
ஏனெனில் அவற்றிலிருந்து கவிதைகள் முளைக்கின்றன.
வழியும் மூன்றே மூன்று நரைமுடிகளில் 
பால் பௌர்ணமி இறங்கி வருகிறது
அதை வணங்கி ஆராதனை செய்கிறேன்.
ஏனெனில் அவற்றில் வெளிச்சம் பெறுகின்றன கண்கள்.
காற்றுக்கு அசையும் கூந்தல் கீற்றுகள் முன்
முழந்தாழிடுகிறேன்
அவைதாம் மனதை மேலெழும்பச் செய்கின்றன.
சரியும் சதையமுதங்களுக்கு என் இளமை சமர்ப்பணங்கள்
ஏனெனில் அவை குழந்தையாக்கி உறங்க வைக்கின்றன.
அவளருகே முத்தமாகிக் கிடந்த நான்
சுழன்றடிக்கும் அவள் வாசனையைப் பூசிக்கொண்டு
ருத்ரமூர்த்தியாக ஆடுகிறேன்.
என்னோடு சேர்ந்தாடுகிறது காதல்.
அவள் வதனத்தில் அரும்பியிருக்கும் பருவின் கூர்முனை ஏறி
உயிரைப் பலிபொருளாக்குகிறேன்.
அப்போது என் தெய்வமாகத் தரிசனமாகிறாள்.
என் தெய்வமே
என் தேவதையே
என் மோகினியே