29 January, 2011

மனுஷ்யகுமாரனின் மறியை பிதாவுக்குப் பலிகொடுத்துவிட்டு...

கக்கடைசியில் கல்வாரிக்கு அடித்திழுத்துப் போகிறாம்
எம் மனுஷ்யகுமாரனை
மனக்கசடு தோய்ந்த பரிகாசத்தோடும் - அவன்
காயங்களில் வழியும் நிணத்துக்கிணையான குரூரத்தோடும்
ஆறுதல் தரமுற்படுவோருக்கும் அவன் பாடுகளின்
துயரம்தான் கிட்டுமென்ற எச்சரிக்கையோடும்

தாளாது துவழும் அவன் காலடிகளைக்
கசையடிகளால் இம்சிக்க மறக்கவில்லை
அவன்பொருட்டு யாரேனும் கண்ணீர் உகுக்க நேர்ந்தால்
இம்சையை இரட்டிப்பாக்கவும் தவறவில்லை

மனுஷ்யகுமாரனின்
அத்தனை துயரங்களையும் கண்ணுற்ற எம் கண்கள்
வேசியின் வசப்பட்ட புலனாய்க் களிப்பால் திளைக்கிறது
அவன் தாகமென்று துவண்டபோது
திராட்சை ரசத்தில் எக்களித்த நாவுகளை இன்றும்
பாதுகாத்துக் கடத்துகிறோம் எம் சந்ததிகளுக்கு

தள்ளாடித் தள்ளாடி மனுஷ்யகுமாரன்
இழுத்துப்போகிற சிலுவைமரத்தின் அடிநுனியின்
தேய்மானத்திலிருந்து கசிந்துகொண்டே இருக்கிறது
எப்போதுபோல எம்மீதான கிருபை

மனுஷ்யகுமாரன் தொட்டுக் குணமளித்த
கரங்களைக் எம்மிடம் கையளித்துவிட்டு
சாந்தசொரூபியாய் முறுவலிக்கையில்
மனசின் வேசை திடுக்கிடுவதை மறைக்க
அடித்து இறக்கினோம் ஆணிகளை

விசணமுற்ற எம் குத்தீட்டிகள்
தூக்கிநிறுவிய சிலுவையில் தொங்கும் மனுஷ்யகுமரனின்
விலாநோகக் குத்தி உயிர்சோதிக்கையில்
பெருக்கெடுக்கும் ரத்தத்தில் நனைகிறது

அங்கலாய்த்த பெண்களையும் அவர்தம்
இறுக்கமுற்ற குழந்தைகளையும்
எம் கொடும் பார்வைகளால் அமர்த்தி
வழித்தவறிய மனுஷ்யகுமாரனின் மறியை
பிதாவின் பெயரால் பலிகொடுத்துவிட்டு
வீச்சமடிப்பது அதன் மாமிசம்தானென்கிறோம்

07 January, 2011

நாளின் பொம்மை

காற்றில் அடித்துக்கொணரப்பட்ட
கிழிந்த நாட்காட்டித் தாளைப் போலவும்
கறுத்துத் திரண்ட பாறையின்மீது
மோதிச் சரிகிற அலையைப் போலவும்
எனக்குச் சம்பவித்திருக்கிற இந்நாளுக்கு
நேற்றைய இயலாமையின் கழிவிரக்கமும்
எதிர்க்கால அச்சமும் முகமாயிருந்தது

எனது வலது பாரிசத்தில் கிடத்தி
ஆசுவாசப்படுத்தத் தாலாட்டினேன் அந்நாளை

நோயுற்ற குழந்தையின் கடவாயில்
மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
என் சொற்களை வடித்துக்கொண்டு
பருக்கினேன் துளி தைரியத்தை

வாலைக் குமரிகளின் யவ்வனம் கொப்பளிக்கும்
கூடுமிடங்களுக்குக் கூட்டிப்போய்
கிளர்ச்சியூட்ட எத்தனித்தேன்

புராதனமிகு கோயிலுக்குள் நடத்திச்சென்றபோது
அங்கிருந்து விடுபட மறுத்து எதெதையோ இட்டுக்கொண்டு
உதம்பியபடியேயிருந்த அந்த நாளின் மனம்
மார்கழியின் ஈரக்காற்றுத் தீண்டிய
சதைத் துண்டங்களாய் நடுக்கமுறுவதை
அவதானிக்க முடிந்தது

துக்கத்தின்பால் தோய்ந்துகிடக்கும்
துஷ்டிவீட்டைப் போல இருளத் துவங்கிய அந்நாளை
கபிலனிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கிப்போனேன்

அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில்
ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடிக்கு
உறங்கிக்கொண்டிருந்தான்

நன்றி: உயிர் எழுத்து(மார்ச்2011)