23 September, 2024

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ¬ தீடை ¬ சிறுகதைத் தொகுப்பு ¬ ச,துரை

மீபமாக கவிதைகளில் கவனம் ஈர்த்த கவிஞர் ச. துரை யின் முதல் சிறுகதைத் தொகுப்பு #தீடை. நேற்று இரவு ஆரம்பித்து இன்று பின்மாலைக்குள் படித்து முடித்தேன். 120 பக்கங்களுக்குள் வாசிப்பு சுவாரஸ்யம் குன்றாத 8 கதைகள். சொல்முறையில் சிறுகதையிலும் கவனத்துக்கு உரியவராகத் தெரிகிறார் ச.துரை.

உலகுக்கு ஒளியாக உப்பாக இருக்கிறார் கடவுள் என்கிறது பைபிள். வாழ்க்கைக்கு உப்பாகவும் தீராத கச்சாப்பொருளாகவும் இருப்பது மனிதத் துயரம் என்கின்றன ச.துரை கதைகள். கொந்தளிக்கும் கடலும், அல்லல்படும் கடல்மாந்தரும் கசகசப்பும் கண்ணீரும் தொந்தரவுமாக வாசகரைப் பாதிக்கின்றனர்.

மொத்தக் கதைகளில் புள்ளியந்திருக்கை, ஆவுளியா, தீடை, சொற்ப மீன்கள் ஆகியவை வடிவம் மற்றும் உள்ளடகத்தில் தன்னிறைவானவை. தூரத்துக் கடல்போல ஆழமும் ஓரத்துக் கடல்போல அலைக்கழிப்பும், இந்தக் கதைகளிலும் தர்க்கமாக, உளவியல் தொந்தரவாக வந்துகொண்டே இருக்கின்றன.
கடல்தான் உயிர் உருவாகிவந்த ஆதிப் பனிக்குடம். அதனால்தான் பனிக்குடம் நீரில் உயிர் வளர்கிற கடற்தொடர்ச்சி ஒவ்வோர் உயிரிடத்திலும் இருக்கிறது. அதன் நீர்மையில் உருவாகி வந்த உப்பு இந்தக் கதைகள்.
கடலிடம் மாய்ந்துபோவோம் என்று தெரிந்தேதான் அதற்குள் இறங்குகிறான் மீனவன். வாழ்க்கை விசிறுகிற விதிக்கு எதிராகத்தான் பாய் விரிக்கிறான். கடலில் இறங்கி நிலத்தை வென்றுவிடவும் துடிக்கிறான். இறுதியில் மட்கிவிடும் கதையாக, உப்பிடம் ஒப்படைக்கப்படுகிறான். மேரியும் தாமஸும் சேவியரும் ஆரோக்கியராஜும் சோற்றுத்தரவை சவேரியும், ஸ்டீபனும் இதைத்தான் சொல்லிச் செல்கின்றனர்.

கடலில் தொலைந்த தாமஸ் 16 வருடங்கள் கழித்து தன் மனைவி மேரியைப் பார்க்க வருகிறான். அவனுக்குப் பிடிக்கும் என தனக்குக்கூடப் பிடிக்காத திருக்கை மீனை 16 வருடங்கள் கழித்து சமைத்துக் காத்திருக்கிறாள் மேரி. ஆனால், அவளது இரண்டாவது கணவன் ஆரோக்கியராஜ் அதைச் சாப்பிட்டுப் படுக்கிறான். அது தாமஸுக்காக பிரத்யேகமாகச் சமைக்கப்பட்டது என்பது அவனுக்கும் தெரியும். இந்த மூவருக்குள்ளும் அலைக்கழிவது என்ன? அதுவே இந்த மொத்தத் தொகுப்புக் கதைகளின் பண்பு.
கவிஞர் ஒருவர் உரைநடை வடிவத்துக்கு வரும்போது அவரிடம் மொழி எப்படித் தொழில்படுகிறது என்பதைப் பார்க்கத் தோன்றும். குறிப்பாக அல்லலுக்கு உள்ளாகிறதா என்று கவனிப்பேன். ச.துரையிடம் பழக்கப்பட்ட வீட்டுமிருகம்போல அது குழைகிறது. வாசகரிடமும் விளையாடுகிறது.
எந்த ஒரு புத்தகத்தையும் வாசித்து முடித்ததும், அதன் உள்ளடகத்தை முன்வைத்து அதற்கு நானாக ஒரு பெயர் வைத்துப் பார்ப்பேன்; கவிதை - கதைகளை வேறுவிதமாக வரிசை அடுக்கிப் பார்ப்பேன்; வேறு எங்கிருந்து இந்தக் கவிதை - கதைகளை ஆரம்பித்திருக்கலாம் என கலைத்துப் பார்ப்பேன். எல்லாம் வாசக உரிமையில்தான். அப்படி இந்தத் தொகுப்புக்கு நான் வைத்துப்பார்த்த மற்றொரு பெயர்...
'புள்ளியந்திருக்கை'

No comments: