24 August, 2012

சர்வநிச்சயமாக


இன்றைய என் காலை
ஒரு டி.வி.தொகுப்பாளினியின் குறும்புன்னகையால் 
திறந்துகொள்கிறது.
’நன்றாகத் தூங்கினீர்களா’ என வாஞ்சையாக வேறு
மாறுகிறது அந்தப் புன்னகை.
தொடர்பிலிருக்கும் நேயரின் பொருட்டு
அவளுதிர்க்கும் அச்சச்சோ,
’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என்று
என்னிடம் உரிமை எடுத்துக்கொள்கிறது.
அவ்வுரிமையில் சுடர்வது
பருவத்தில் கிளைத்து ஒரு வெங்கோடையில்
கருகிய என் பிஞ்சுக் காதல்தான்.
கோத்துக்கோத்துப் பிரியும் அவள் விரல்களை
என்னைந்து விரல்களாக்கிக் கோதிவிடுகிறேன்
தலைகேசங்களை.
நேயருக்கு வாழ்த்துச் சொல்லி
அவள் தவழவிடும் ஒரு மென்கானம் மூலம்
சொல்லொண்ணா பிரியத்துடன்
என் இன்றைய பொழுதைத் தொகுத்து வழங்கிவிட்டாள்.
இப்போது குளியலறையில்
தலைக்கு மேலிருந்து வழிகிறதே
சர்வநிச்சயமாக
அது
அவள் குரல்தான்.

10 August, 2012

மகாகவி கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.











1.
உலகை
உன்மத்தம தாண்டவமாட வைக்கிற
கவிதையொன்றின் கடைசிவரியை
இயற்றிக்கொண்டிருக்கிற மகாகவியை,
அவன் மகனின் மலத்தைக் கழுவிவிட
நிர்பந்திக்கிற கீழ்புத்தியுடைய இச்சமூகம்
அநதக் கவிதையின் கடைசிவரியைப்
படிக்கையில்
மூக்கைப் பொத்திக்கொள்கிறது.
2.
கவிதை இயற்றலில் லயித்திருக்கும்
ஒரு வெய்யில்பொழுதில்
நான்காம் அடுக்கின் தலையிலிருக்கும்
மொட்டைமாடியில்
வெளுத்தத் துணிகளை உலர்த்த
பணிக்கப்படுகிற மகாகவி,
இடது புறம் ஒரு க்ளிப்
வலது புறம் ஒரு க்ளிப்... போட்டு
தன் கவிதையை
சூரியனில் காயவைத்துவிட்டு
கிடுகிடுவெனக் கிழிறங்கி வருகிறான்.
3.
இருசக்கர வாகனத்துக்கு
எரிபொருள் இடுகிற மகாகவி
சில்லறை பைசாவுக்காக
சட்டைப் பையிலிருந்து
எரியும் கவிதையொன்றை
எடுத்துக்கொடுக்கையில்
மிரண்டு பின்வாங்குகிறது
பெட்ரோல்.
4.
மாமிசம் வெட்டப்படுவதை
நெற்றிக்கண்ணால் வெறித்தபடி
சிக்கன்கடை வாடிக்கையாளர் வரிசையில்
நிற்கிற மகாகவி,
அல்லவற்றைக் கழித்து
நல்லவற்றைச் சேர்த்து
லெக்பீஸ் போல புஸ்டியானதாய்
மனசுக்குள் சொற்களை
வெட்டிவெட்டிச் சேர்க்கிறான் கவிதைக்காக.
குடல்போல கொழகொழ சொல்லொன்று
கவிதையில் என்னையும் சேரேன் என்கிறது.
நிர்தாட்சண்யமாக மறுத்துவிடுகிறவன்,
கூடுதலாக
கால்கள் போன்ற ஓடியாடும் சொற்களை
வாங்கிக்கொண்டு
வீடுவந்து
சூப் வைத்து
கவிதையைக் குடிக்கிறான்.
5.
கொடும்பசியோடு நடந்துபோகிற
மகாகவி முன்பு
பெருத்த பிருஷ்டங்களை இடவலமென
லயத்தோடு அசைத்து அசைத்துப்
போய்க்கொண்டிருக்கிறாள் பேரிளம்பெண்.
பசியாறிய பிறகு
உலகமே காமுறுவகையில்
கவிதையொன்றை
இயற்றிக்கொண்டிருக்கிறான்.
6.
மரம் குறித்த கவிதையொன்றை
யோசித்தபடி
தெருவில் போய்கொண்டிருக்கிற
மகாகவி தலைமீது
திடீரென்று கொட்டுகிற மழை,
மரத்தின் உச்சங்கிளையில்
விழுந்து
வழிந்து
இறங்கி
அவன் காலை நனைக்கும்போது
அப்படியே
மரத்தின் வேர்களும்
நனைகின்றன.
7.
லௌகீகப் பிடுங்கல்கள் தாங்கவொன்னாது
திரைக்குப் பாட்டெழுத வந்த மகாகவிக்கு
இரண்டுக்கட்டை வித்தியாசத்தில்
முதல் குத்துப்பாட்டு வாய்ப்பொன்று
கைமீறிப் போய்விட்ட அன்றைய இரவில்
வன்மையாகத் திரும்பிப் படுத்திருக்கிறாள் மனைவி.
அவளை அண்டாது அணுகாது
விசனத்தோடு
மாநகர நடுநிசி வீதியில் நடந்துபோகிறவன்,
ஆளரவமற்ற ஒரு கணத்தில்
டூபீஸ் உடையில் அபிநயிக்கும்
நடிகையின் சுவரொட்டி முன்பு
சிறுநீர்க் கழித்துவிட்டு வந்து
குப்புறப் படுத்துக்கொள்கிறான்


07 August, 2012

ஆமாம் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்



நான்கைந்து தடவைகளுக்கு அதிகமாகவே
உதிர்ந்து ஒழுகிவிட்டது உங்கள் மனைவியின் கர்ப்பம்.
கலைந்துபோகின்றன உங்கள் உள்மன அடுக்குகள்.
அதற்குள், முற்காலத்துக்கும் முற்காலத்தில்
பறவைகூடுகளில் ஊடுவித் திளைத்த சாரையாக
நீங்களிருந்த குற்றவுணர்வு வாலாட்டுகிறது.
அதைக் கொல்ல நினைத்துதான் இப்போது
சாராயத்தால் மிடறுமிடறாக எரிந்துகொள்கிறேன் என்கிறீர்கள்.
சொல்லும்போதே, ஒரு தண்ணீர்க் காலத்தில்
நவாமரக் குரங்குக்கு நட்டாற்றில் துரோகமிழைத்த
முதலை நானென்று
கல்லீரலை அறைந்தறைந்து கலங்குகிறீர்கள்.
விபத்தில் நசுங்கிய உங்கள் பருவமகளின் துடிதுடிப்பு
செந்நாய் பிறவியில் உங்களால் கிழிக்கப்பட்ட
கலைமான் குட்டியினுடையது என்று
சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறு அரற்றுகிறீர்கள்.
ஒரு தேசத்துக்கு ராஜகுமாரனாக இருந்ததும்
தற்போது வாடகை குடித்தனத்தில் அவிவதும்
இப்படித்தானென நீங்கள் ஆங்காரம் கொள்கிறபோது
உங்கள் போதை உச்சிக்கு வந்திருந்தது.
என்ன வாழ்க்கையடா இதென்று
உயிரைக் கழற்றி எறிவதற்காக
தொப்பித்தூக்கிப் பாறையின் குணநலன்கொண்ட
காலத்தின் இரக்கமற்ற பள்ளத்தாக்கு முனைக்கு
ஒருமுறை சென்றுவிட்டதாகவும்... பிறகு,
அந்த எண்ணத்தை மட்டும் கழற்றி எறிந்ததாகவும்
அது திரும்பி வந்து துரத்திக் கொண்டிருப்பதாகவும்
அதனால் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆமாம்
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.