21 November, 2024

புதியதலைமுறை - கதிர்பாரதி பேட்டி டீஸர்


 

புதிய தலைமுறையில் கதிர்பாரதி பேட்டி


 

புதியதலைமுறையில் கதிர்பாரதி பேட்டி


 

கவிதை வாசிப்பு : சென்னைப் புத்தகக் கண்காட்சி 46 -


 

புத்தக விழா : தமிழ் மகனின் ஞாலம் நாவல்


 

பாராட்டு உரை : எழுத்தாளர் யூமா வாசுகி - பாலபுரஸ்கார் விருது - பாராட்டு விழா - தஞ்சாவூர் - சிம்ளி அமைப்பு - சித்தன்ன வாசல் இலக்கிய வட்டம்


 

கதிர்பாரதி கவிதை : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சமூக வானொலியில்... நன்றி : மதுமிதா


 

கதிர்பாரதி கவிதையை வாசித்தல்


 

கரிகாலன் 60 : வாழ்த்துரை


 

புத்தக அறிமுக உரை : இந்து செல்லா - இணை நாவல்...


 

புத்தக அறிமுக உரை : நிஷா மன்சூரின் தேடல்களும் விடுபடுதல்களும் கட்டுரைப் புத்தகம்


 

புத்தக அறிமுக உரை : சுகுணா திவாகரின் `அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்’ கவிதைப் புத்தகம்.


 

அறிமுக உரை : சித்தாவரம் - சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களின் முதல் புத்தகம்


 

களரி அறக்கட்டளை - மணல் வீடு இலக்கிய வட்டம் விருதுகள். எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி - நாவல் விருது... கவிஞர் கரிகாலன் - கவிதை விருது.

கரிகாலன் - சு.தமிழ்ச்செல்வி
மிழ் நிலத்தின் நடுநாட்டுப் பகுதியின் மிக முக்கியமான படைப்பாளி கரிகாலன். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வெதெனில் இலக்கியத்தின் எல்லா ஃபார்ம்களிலும் இயங்கக்கூடிய நடுநாட்டுப் படைப்பாளி என்று நான் கவிஞர் - எழுத்தாளர் கரிகாலனைச் சொல்வேன். உரைநடையிலும், கருத்தியலிலும் இவரை எழுத்தாளர் இராஜேந்திரசோழனின் தொடர்ச்சி என்பேன்கூட.

கவிதையில் கரிகாலனுக்கு முன்பாக அந்நிலத்தைப் பதிந்தவர் கவிஞர் பழமலய். எனக்குத் தெரிந்து தன்னுடைய உரைநடைக்காக கதா விருதுபெற்ற முதல் தமிழின் நவீனக் கவிஞர் கரிகாலனாகத்தான் இருக்கும். பின்னர் உமா மகேஸ்வரி பெற்றார் என்பது நினைவு.
ஜனரஞ்சக இதழ்களிலும் இலக்கியம் செய்பவர் கரிகாலன் . குமுதம் இதழில் அவர் ஓராண்டுக்கு மேலாக எழுதிவரும் பத்தி எழுத்துகள் அதற்கு உதாரணம். 30க்கும் மேற்பட்ட நூல்களாக விரிந்திருக்கின்றன கரிகாலனின் இலக்கியப் பங்களிப்பு. அவற்றில் கவிதை, நாவல், திறனாய்வு எழுத்து, திரைப்பட அறிமுக எழுத்து, நூல் முன்னுரைகள், கட்டுரைகள் வகைகள் உண்டு.
இவரது மேலாண்மையில் உருவான களம்புதிது இலக்கிய அமைப்பும், களம் புதிது பத்திரிகையும் இலக்கிய பண்பாட்டு வெளியில் ஏற்படுத்திய அசைவுகள் கவனம் ஈர்த்தவை. முக்கியமாக நிறப்பிரிகை இயக்கத்தில் ஓர் உடைவு ஏற்பட்டபோது இவரது ஆசிரியத்துவத்தில் களம்புதிது பத்திரிகையில் வெளியான அ.மார்க்ஸ் நேர்காணல் அவரது இயக்கத்துக்கான முக்கிய ஆவணம்.
உலகத் திரைப்படங்கள், உலக இலக்கியப் போக்குகள், பண்பாட்டுவெளிகளில் உண்டாகும் உடைவுகள் ஆகியவற்றில் அப்டேட்டாக இருப்பவர் கரிகாலன். அவரிடம் பாடகி லேடி காகா பற்றியும் பேசலாம். ஆண்டாளின் மார்கழி குறித்தும் உரையாடலாம். இலக்கியத்திலும், களத்திலும் எப்போதும் எளியோர் பக்கம் நிற்கும் அவரது அரசியல் எனக்கு உவப்பானதே.
கரிகாலனின் களம் புதிது அமைப்பு எனக்கு வழங்கிய களம்புதிது கவிதை விருதை மிக முக்கியமான அங்கீகாரமாகக் கருதி நான் மகிழ்ந்துவருகிறேன். கரிகாலன் தனது கவிதைச் செயல்பாட்டுக்காக களரி அறக்கட்டளை - மணல் வீடு இலக்கிய வட்டம் விருதுபெருகிறார்.
அவரது வாழ்வுத் துணை எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி, நாவலுக்காக விருதுபெறுகிறார். ஏற்கெனவே இவரது நாவல் பங்களிப்புக்காக 'விளக்கு விருது', 'எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருது' உள்ளிட்ட ஏராளமான அங்கீகாரங்கள் பெற்றவர். இல்வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் வெற்றிகரமான இந்த எழுத்துத் தம்பதிகளை வாழ்த்துகிறேன். அதனால் மகிழ்கிறேன்.

19 November, 2024

`இன்சொல் வெளியீடு' புதிய இலச்சினை அறிமுகம்:


சில நண்பர்களுக்குத் தெரியும் பலருக்கு இனிமேல் தெரியவரும் `இன்சொல் வெளியீடு` என்பது எனது இலக்கிய இயக்கத்தில் இன்னொரு களம். எனது நூல் வெளியீட்டுக்காக மட்டும் தொடங்கப்பட்ட பதிப்பு நிறுவனம். இதன் மூலம், எனது மூன்றாவது கவிதை நூலான `உயர்திணைப் பறவை` முதல் புத்தகமாக 2020-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அது தமிழ்நாடு அரசு - தமிழ்வளர்ச்சித் துறை விருது, எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருது, டாகடர் தாமோதரன் இஅக்கியப் பரிசு, சௌமா இலக்கிய கவிதை விருது, படைப்புக் குழுமம் கவிதை என ஐந்து விருதுக்குரிய நூலாகத் தேர்வானது. அந்த நூலுக்கு எழுத்தாளர் பாவண்ணன், `உயிர் எழுத்து` இதழில் எழுதிய விமர்சனத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். எனது முதல், இரண்டாவது கவிதைப் புத்தகங்கள்... `மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்`, `ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்` ஆகியவை முறையே நான்காவது பதிப்பு, இரண்டாவது பதிப்பும் `இன்சொல் வெளியீடா`கத்தான் வெளிவந்தன. `இன்சொல் வெளியீடு` பதிப்பிக்கும் புத்தகத்துக்கான விற்பனை உரிமையை டிஸ்கவரி புத்தக நிலையத்துக்குக் கொடுத்திருந்தோம். அது இப்போதும் தொடர்கிறது. எனக்காக மட்டும் தொடங்கப்பட்ட `இன்சொல் வெளியீடு` பதிப்பு நிறுவனத்தில், இனி நண்பர்கள் புத்தகங்களையும் பதிப்பிக்கலாம் என நினைக்கிறேன். விருப்பமுள்ளோர் அணுகலாம். முன்பு மறுத்ததுபோல இப்போது மறுக்க வாய்ப்பில்லை. கீழே இணைப்பில் இருப்பது `இன்சொல் வெளியீடு` நிறுவனத்தின் புதிய இலச்சினை. அனைவருக்கும் நன்றி.

#சித்தாவரம் - சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களின் புத்தக வெளியீடு

கதிர்பாரதி, சாரு நிவேதா, அர.கண்ணன், டி.பாஸ்கரன்

சித்தாவரம்... எனது நண்பர் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களின் முதல் மருத்துவக் கட்டுரைப் பனுவலை, நேற்று (17நவ2024) எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் தலைமையேற்று வெளியிட்டார் (அவரது நல்ல உரையை ஸ்ருதி டீவி யில் கேட்கலாம்) நானும் இன்னும் சில நண்பர்களும் புத்தக அறிமுக உரையும் வாழ்த்துரையும் வழங்கினோம். அண்ணன் - பத்திரிகையாளர் எம்.பி. உதயசூரியனின் வாழ்த்துரை மிக ஆத்மார்த்தமாக இருந்தது. அற்புதமான ஒரு குடும்ப விழாபோல நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்கள். இவர் இம்காப்ஸ் என்கிற அரசு சித்தமருத்துவ நிறுவனத்தின் ஓர் இயக்குநரும்கூட. வேலூரில் புற்றுமகரிஷி சித்த மருத்துவ சேவை மையத்தைத் தலைமையேற்று நடத்திவருகிறார்.

அத்திரி முனிவரின் இன்னொரு பெயர்தான் புற்று மகரிஷி. அவர் வேலூரில் 1516ல் வாழ்ந்தவர். வேலூர் ஜலகண்ட ஈஸ்வரர் கோயிலின் மூலஸ்தானத்தை நிர்மாணம் செய்தவர். அந்தக் குரு வழிமரபில் வந்த 49_வது தலைமுறைதான் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன். இவரது சிறப்பே நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பதுதான். வந்த நோய்க்குத் தீர்வு மட்டுமல்ல. வரப்போகிற நோயையும் சொல்லிவிடுகிறார். கேட்டால், "எல்லாம் சித்தப் புருஷர்களின் ஆசீர் சார்..." எனப் புன்னகைப்பார்.

கொங்கணச் சித்தரின் மாணவரான சிவவாக்கியருக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர் மட்டும்தான் சித்த மரபில் திருமணம் செய்துகொண்டவர் என நினைக்கிறேன். 100க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். காசிக்குச் சென்று கொங்கணச் சித்தரை குருவாக ஏற்றுக்கொண்டவர். சிறந்த சித்தவைத்தியக் குறிப்புகளை விட்டுச் சென்றவர். மக்களைத் தேடி மருத்துவம் என்பதன் முன்னோடி சிவவாக்கியர். சித்தர்கள் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் சேர்த்து மருத்துவம் பார்த்தவர். உடல் பேணி உயிர் காத்து, உடல் வழி இறையை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

சித்த ஞான மரபில் வந்த சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களை, நான் ஒரு நவீன சிவவாக்கியர் என்றுதான் சொல்வேன். சிவவாக்கியர் போல இவரும் திருமணம் செய்துகொண்டவர். சிவவாக்கியருக்கு கொங்கணச் சித்தர் குரு. டி.பாஸ்கரன் அவர்களுக்கு குரு அவரது பெரியப்பா கேபி அர்ச்சுணன் குரு. இவர்கள் இருவருக்கும் மூல குருபரம்பரை தந்தைதான் புற்றுமகரிஷி. சிவவாக்கியரைப் போல 100க்கும் மேற்பட்ட சித்த மருத்துக் கட்டுரைகளை எழுதியவர் டி.பாஸ்கரன் அவர்கள்.

கொரானா காலத்தில் இவர் தயாரித்துக் கொடுத்த மூலிகைக் கவசம், வேலூர் மாவட்டத்தில் பலரின் உயிரைக் காத்தது. இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசும், தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகமும் இவருக்கு விருது கொடுத்து அங்கீகரித்து மகிழ்ந்திருக்கின்றன. மருத்துவர் டி.பாஸ்கரன் சித்தாவரம் புத்தகத்தில் தனது வைத்திய சீக்ரெட்களை மருத்துவக் கட்டுரைகளாகச் சொல்லிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய உறவு நாகரீகம் தொடங்கி, ஆரோக்கியமான தாம்பத்திய உறவு வரைக்குமான அனைத்து வாழ்வியல் பண்பாட்டு செய்திகளையும சித்தாவரம் புத்தகத்தில் விவாதிக்கிறார் டி.பாஸ்கரன்.

சித்தாவரம் புத்தகம் பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால், "தமிழ்நாட்டில் வாழ்கிற அனைத்துக் குடும்பங்களிலும் இருக்கவேண்டிய வாழ்வியல் மற்றும் மருத்துவக் கையேடு இது" என்றுதான் சொல்வேன்.

அற்புதமான சித்த மருத்துவக் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்ட தேநீர்பதிப்பகம் கோகிலன் & தேவி அவர்களுக்கு நன்றி. நண்பரும் சித்தமருத்துவமான டி.பாஸ்கரன் அவர்களுக்கு அன்பும் வணக்கமும்.

13 November, 2024

வாசிப்புக் குறிப்பு : கதிர்பாரதி, நாவல்: மண்ணும் மனிதர்களும், ஆசிரியர்: சிவராம காரந்த்

ன்னட இலக்கிய சிகரம் சிவராம காரந்த் எழுதிய "மண்ணும் மனிதரும்" 647 பக்கம் கொண்ட நாவல். சிறிது இடைவெளி விட்டு விட்டு இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன்.மூன்று தலைமுறைகள் கதை. "முதல் தலைமுறை நொடித்தால் தலைமுறை, மூன்றில் எழும்" என்ற சொல்வழக்கு இன்றும் கிராமத்தில் உண்டு. ஆண்கள் ஊதாரியாகவும் உபத்திரகாரர்களாகவும் திரிய, பெண்கள் சுமக்கமாட்டாமல் இந்த வாழ்வை சுமந்து சாகிறார். அல்லது வெல்கிறார்கள். கடற்கரையோரத்து கர்நாடகத்தில் மழையும் கடலும் மண்ணும் பாத்திரங்களாக மாறி மாறி மனத்தை ஈர்க்கின்றன. உப்பு சத்தியாகிரகத்துக் காலக் கதை. வாழ்வுதான் அகத்தைப் புடம்போடும் சத்தியாகிரகம். நாகவேணி, பார்வதி, சரசுவதி,

சிவராம காரந்த் 
சத்தியபாமா, சுப்பு... என அத்தனைப் பெண்களின் கண்ணீர்தான் ராம ஐதாளரின் வாழ்வை துளிரச் செய்கிறது. கண்ணீர், வாழ்வின் கைப்பொருள் எனப் புரியவைக்கிறது. ஈரம் காயாத பெண்ணின் கண்ணீர்தான் கடலாகத் திரண்டு அலையடிக்கிறது நாவல் முழுக்க. தென்கர்நாடகத்தின் மண்ணையும் மக்களையும் விரும்பச் செய்யும் புதினம் இது. தி.பா.சித்தலிங்கையாவின் தமிழில் சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது


05 November, 2024

வினர்சனக் குறிப்பு : கதிர்பாரதி, நாவல் : சதுரங்கக் குதிரை, ஆசிரியர்: நாஞ்சில்நாடன்

ப்போதுதான் இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன். 2011_ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாசிப்பு செய்திருக்கிறேன். 2013_ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதை நான் பெற்றுக்கொள்ள ரயிலில் ஜெய்ப்பூர் சென்றேன். அப்போது 'அக்கோலா' ரயில்வே ஸ்டேஷனைக் கடந்தபோது 'நாஞ்சில் நாடனும்','சதுரங்கக் குதிரை' நாவலும் நொடி நேரத்தில் நினைவுக்கு வந்துபோனார்கள். 

மணமாகாத ஒரு 45+ ஆணின் தனிமையுணர்ச்சியும் ஆற்றாமையும் நிராசையுமாக நகர்கிற கதை. நாஞ்சில் நாட்டுக்கும் மஹாராஷ்டிரத்துக்குமாக போய்ப் போய்த் திரும்புகிறது... ஓர் ஊசலாட்டம்போல. நாஞ்சில் நாடன் ஓரிடத்தில் சொல்கிறார்... "ஃபேன்கள் காற்றை உலைக்கும் ஓசை" என. நாராயணன் என்கிற மணமாகாத ஆணை இப்படித்தான் உறவும் வாழ்வும் உலைக்கின்றன. அவர் வேலை பார்க்குமிடத்து ஆண்களில் அநேகர் அப்படித்தான் இருக்கின்றனர்.

ஊஞ்சலாட்டப் பாணியில் விரியும் கதை. தாய் இறப்புக்கு கடன் வாங்கிக்கொண்டு பம்பாயில் இருந்து நாஞ்சில் நாட்டுக்கு நாராயணம் வரும் பகுதி மிக உக்கிரமானது. ஆனால், அதைவிட உணர்ச்சிமயமான பகுதி, தான் கட்டிக்கொள்ளவிருந்த காமாட்சியின் மகள் திருமணத்துக்கு வந்துவிட்டு மீண்டும் பம்பாய் திரும்பும்போது, நாராயணனுக்கு பெண் தர மறுத்த அவனது பெரிய மாமா, " அடிக்கடி வந்து போடே... போனதும் கடிதாசி போடு..." எனத் தளும்பும் இடம். 

காமாச்சி மீதல்ல அவள் தங்கை கல்யாணி மீதே நாராயணின் காதல்; காமம் என கனவும் நினைவுமாக வெளிப்படும் இடங்கள் நிராசையின் சித்திரங்கள். எதற்கெடுத்தாலும் கூம்பிக்கொள்ளும் ஆண் மனம் அடையும் சஞ்சலங்கள். 

இந்த நாவலின் இன்னொரு முக்கியமான அம்சங்களாக இருப்பவை.. பயணமும் மனிதர்களும் உண்வுகளும். நாராயணன் அடையும் மன உலைச்சலுக்கு அவரது பயண அலைச்சலே ஒரு மாமருந்து எனத் தோன்றுகிறது. அது மட்டுமில்லாவிட்டால் அவனடையும் தனிமை உணர்ச்சியும், உறவுகளின் புறக்கணிப்பும் தற்கொலை முனைக்கு கொணடுவந்து நிறுத்திவிடும்.

நாஞ்சில் நாடன்

உறவுகளைவிட உலவிடத்து மனிதர்கள் மனிதமிக்கவர்களாக இந்த வாழ்விலும் நாவலிலும் இருக்கிறார்கள். தன் ஃப்ளாட்டை நாராயணனுக்கு எழுதித் தரும் ராகவேந்திர ராவ், கோவாவில் முதலிரவைக் கொண்டாட அழைக்கும் குட்டினோ - க்ளாரா, மழைக்கால இரவில் டீக்கடைக்குள் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகும் ஜல்கா ஜாமோட் ஆள், மேனோன், கேயார்வி., ஜாய்ஸ், காமாச்சி, கல்யாணி, பரசிவம், பூதலிங்கம், விபச்சாரத் தரகன், திருநவெலி க்ளீனர் பையன்,  பெரியமாமா, அத்தை, பெரியம்மை, குமரேசன், ராதா கேசவமூர்த்தி... என நல்லதும் கெட்டதுமாக எத்தனையெத்தனை மனிதர்கள். 

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்வு சடங்கு உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்கிறார் நா.நா. ஒரு சோளரொட்டிப் பற்றி எழுதினாலும் கடுகும் உளுந்தம்பருப்பும் கொஞ்சம் கறிவேப்பிலையும் கிள்ளிப்போட்டு தாலித்த சட்னி என டீட்டெய்ல தருகிறார். இது மஹாராஷ்டிர நகரத்து உணவுவகைக்கும் நீள்கிறது.

எத்தனை பெண்கள் அலுவலிடத்துக் குறுக்கிட்டாலும் அவர்களைவிட நாராயணன் ஊரில் பெண் தேடிக் களைப்பது ஏன்? சுயச்சமூகப் பாசமா? என்றால் அவன் பாத்திரம் இல்லை என்றுதான் சொல்கிறது. ராதா இடத்தில் மையலில் சாய்வது அப்படித்தான். பின்னர் ஏன் தனிமையும் ஏக்கமும்? எல்லாவற்றுக்கும் விடை தெரிய வாழ்க்கை ஒன்றும் கணிதமல்லவே.

மாட்டுங்கா சர்க்கிலுக்கு தனிமையாக வரும் நாராயணன், ஆர்ட் கேலரிக்கு வருகிறேன் எனச் சொன்ன ராதா ஏன் வரவில்லை என தனிமையில் நிற்கிறான். இந்தத் தீராநெடுந்தனிமை நீறுபடியா நெருப்புத் துண்டமாக நாவல் முழுக்க வருகிறது.

எழுதிமுடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நெருப்புத் துண்டத்தின் அனலடிக்கிறது.