20 September, 2024

கவிதை ~ அம்மாவின் விளையாட்டு ~ கதிர்பாரதி

அம்மா வாழ்க்கையே ஓர் ஒளியாங்கண்டு விளையாட்டுத்தான்.

கண்களைப் பொத்தி
துவரங்காட்டிலும் கடலைக் கொல்லையிலும்
அவளது பால்யத்தை தாத்தா ஒளித்துவைத்தார்.
பிறகு மாறி மாறி குடும்பமே அவள் கண்களைப் பொத்தி விளையாடியது. அப்படியொரு கண்கட்டி விளையாட்டில்தான் அம்மாவுக்குத் தவறுதலாய்க் கிடைத்தார் அப்பா.
அதன் பிறகு அவள் கண்பொத்தும் ஏகபோக உரிமை முழுக்க அப்பாவுக்குக் கைமாறியது.
அவர் பொத்திப் பொத்தி ஒளித்ததில் அக்காவை தம்பியை என்னை கண்டுபிடித்து பூமிக்குக் கொண்டுவருவதற்குள் முழிகள் பிதுங்கிவிட்டன அம்மாவுக்கு.
அப்புறம்
தன் கண்களுக்குத் தானே ஒளிந்துவிளையாடி எனக்கு அரசாங்க உத்தியோகத்தையும் தம்பிக்கு வெளிநாட்டு வேலையையும் அக்காவுக்குச் சீர்செனத்தி கல்யாணத்தையும் கண்டுபிடித்துக் கொடுத்தாள்.
அவளது 54வது வயது, சுவாசக் குழல்களைப் பொத்தி நுரையீரலுக்குள் இரு விசில்களை ஒளித்துவைத்தது. பனியீர இரவுகளில் எல்லாம் அவை இசைத்துக்கொண்டே இருக்கும் அம்மா பொத்திப் பொத்தி வாழ்ந்த வாழ்வை.
மருத்துவர் அதை ஆஸ்துமா என்கிறார். அம்மாவோ காற்றில் வட்ட வட்டமாய் வாய் பிளந்து தன் மூச்சைத் தேடித் தேடி ஒளியாங்கண்டு விளையாடுகிறேன் என்கிறாள்.
-கதிர்பாரதி

No comments: