17 October, 2016

அப்பங்களுக்கு காத்திராத நில மீட்பன் - கவிஞர் யுகபாரதி எழுதியிருக்கும் விமர்சனம்


 
ஒரு நல்ல கவிதை எந்தத் தொகுப்பில் எந்தப் பக்கத்தில் இருக்கக்கூடும் என்னும் தேடலைத் தொடங்காத ஒருவர்எந்த சந்தர்ப்பதிலும் கவிதையைக் கண்டடைய வாய்ப்பில்லை என்பார்கள். அதேபோலஒரு தொகுப்பு சொல்ல விளைந்த உணர்வை உட்பொருளை மிகச் சரியாக உள்வாங்கிக்கொண்ட அல்லது கிறகித்துக்கொண்ட அணிந்துரைகளோ மதிப்புரைகளோ இதுகாரும் எழுதப்படவில்லை எனவும் சொல்லலாம். ஒருகாலம்வரைகவிதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை கூட்டியோ குறைத்தோ சொல்லிவிடக்கூடாது என்பதால் எந்த ஒரு படைப்பாளியும் தன் சக படைப்பாளியின் படைப்புகள் மீது விமர்சனம் வைக்கத் தயங்கினார்கள். படைப்பு வேறு விமர்சனம் வேறு என்பதாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு நல்ல விமர்சகர் எந்த காலங்களிலும் நல்ல படைப்பைத் தந்ததில்லை என்று சொல்பவர்களும் உண்டுதான். எழுபதுகளிலும் எண்பதுகளின் இறுதியிலும் ஓரளவு கடைபிடிக்கப்பட்ட இந்த மரபுபின்வரும் காலங்களில் முற்றிலுமாக பிறழ்ந்துவிட்டது. காரணம்படைப்பாளியே விமர்சகனாகவும் விமர்சகனே படைப்பாளியாகவும் மாற நேர்ந்துவிட்ட அபாயம்தான்.  ஒரு கவிதைத் தொகுப்புக்கு உள்ளே உள்ள அரசியலைவிடவும் அக்கவிதைத் தொகுப்புக்கு வெளியே உள்ள அரசியலைச் சமாளிப்பதற்குள் ஒரு படைப்பாளிக்குப் போதும் போதும் என்றாகிவிடுகிறது. குறிப்பாகதொண்ணூறுகளுக்கு பின்வந்த கவிஞர்கள் அத்தனை பேரும் இப்பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதிர்கொண்டுவருகிறார்கள். இதைவிடுத்து ஒரு கவிதைத் தொகுப்பை பார்வைக்குள் வசப்படுத்த இயலுவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ நமக்குள்ளும் சில எதிர்பார்ப்புகள் சில யூகங்கள் நுழைந்துகொள்கின்றன.
 
எழுத்தாளர் சுஜாதா அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இருபதுக்கும் மேலான கவிஞர்கள் தொண்ணூறுகளில் அடையாளப்பட்டதைப்போல இன்றைக்கு எந்த ஒரு கவிஞனையும் அடையாளப்படுத்த யாரும் அவ்வளவாக முனைவதில்லை என்றே தோன்றுகிறது. ஒரு பெரும் எழுத்தாளராக எல்லா மட்டத்திலும் அறியப்பட்ட ஒருவர் கவிதைகள் குறித்து சொல்லவரும் அல்லது சொல்லிவரும் கருத்துக்கள் தற்சார்ப்பு கொண்டதாக அமைந்துவிடும் இந்த நேரத்தில்தான் சுஜாதாவின் பணி எத்தகையது என உணரமுடிகிறது. ஒரு படைப்பாளி தன் சக படைப்பாளியின் படைப்பு குறித்து பேசுவதே அரசியல் என்னும் நிலையில்தான் கதிர்பாரதியின் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கவிதைத்தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. ரசித்து நெகிழ்ந்த தருணங்களை எழுத்துக்குள் கொண்டுவர முடியுமா தெரியவில்லை. ஒருவிதமான மன ஆவேசம். இன்றைக்கே எழுதிவிட வேண்டும் என  எழுத அமர்ந்து அமர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தேன். மன ஆவேசத்தை விட்டு வெளியேறாமல் சொல்ல விளைவதை தெளிவாகச் சொல்ல முடியாது எனத் தெரிந்து தாமதத்தை நானாக தருவித்துக்கொண்டேன். இன்று ஓரளவு ஆவேசம் அடங்கிவிட்டது. ஆனாலும்கதிர்பாரதி கவிதைகள் கட்டவிழித்துவிட்ட நெகிழ்வை உதறிவிட இயலவில்லை. இதற்கு முன்பு வெளிவந்த கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்னும் தொகுப்பை வாசிக்கையில் அடைந்த அதே மன ஆவேசம். அதே நெகிழ்வு. ஏற்கனவே வெளிவந்த மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் கவிதைத் தொகுப்பு கதிர்பாரதிக்கான அடையாளத்தை அழுத்தமாக ஏற்படுத்திக்கொடுத்ததை மறுப்பதற்கில்லை. பத்திரிகைகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை அத்தொகுப்பை கொண்டாடி மகிழ்ந்தன.
 
கதிர்பாரதியின் வளர்ச்சியை மற்றவர்கள் பார்ப்பதைவிட நான் சற்றே கூடுதலாக கவனித்து வந்திருக்கிறேன். அவருடைய மேல்நோக்கிய ஒவ்வொரு அடியும் என்னை மகிழ்ச்சிப்படுத்தும். சதா இயங்கிக்கொண்டிருக்கும் அவரை அவருடைய எழுத்துகளை அவை இடம்பெறும் இதழ்களை தவிர்க்காமல் சந்தித்து வருகிறேன். ஏனெனில்பாழ்பட்ட விவசாய பூமியிலிருந்து ஒரு படைப்பாளன் தன் எழுத்து எல்லைகளை விரிந்துக்கொண்டு போவது அதே மண்ணைச் சேர்ந்த எனக்கு பெருமையும் பெருமிதமும் தரவல்லதாயிற்றே. கதிர்பாரதிதன்னுடைய படைப்பூக்கத்தினால் மட்டுமே சகல முகாந்திரங்களையும் சாத்தியப்படுத்தி வருகிறார். பொதுவெளியில் அவர் உண்டாக்கியிருக்கும் அடையாளம் என்பது எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் எழுதவந்த ஒருவர் அடைந்திடா முடியாது உயரம் என்றே சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து இயங்குவதும் தொடர்ந்து தன்னை புதுக்கிக்கொண்டே இருப்பதுமாக இந்த உயரங்களை அவர் அடைந்துவருகிறார். வெகுசன பத்திரிகையொன்றில் பணிபுரிந்துவந்த போதிலும் அவருடைய இலக்கிய மனத்தின் கடைமடை அடைபடுவதே இல்லை என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
 
மேலும்ஒரு தொகுப்பு ஏற்படுத்திய அதிர்விலிருந்து மற்றொரு தொகுப்பிற்கு வாசகனைக் கடத்திக்கொண்டு போவது அவ்வளவு எளிதான காரியமில்லை. குறிப்பிட்ட காலம்வரை அந்த படைப்பாளியே அந்த அதிர்விலிருந்து  மீளுவது கடினம். இன்னும் சொல்லப்போனால் அது அதிர்வா இல்லை அதிர்வைப் போன்ற மாயையா என்று கூட யோசிக்க இயலாத நொடிக்குள் கதிர்பாரதி அடுத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறார். அவகாசம் தேவைப்படாமல் அடுத்த அதிர்வை நோக்கிய அவர் பாய்ச்சல் பாராட்டுக்குரியது. அதிர்வை நான் இப்படியாக புரிந்துகொள்வேன். தன்னை சுற்றி குவிக்கப்பட்டிருக்கும் கண்களுக்கு ஊடாக ஒருவர் எப்படி இயல்பாக நடந்துசெல்ல இயலாதோ அப்படியான செயலே அதிர்விருந்து மீள்வதும். பிறர் தன்னை கவனிக்கிறார்கள் என்பதற்காக நம்முடைய நடையில் ஏற்பட்டுவிடும் மாற்றங்கள் பலநேரத்தில் அற்புதமான நகைச்சுவையாக மாறிவிடுவதுதும் உண்டுதான். எது எப்படியாயினும் அந்த அதிர்வை யார் ஒருவர் சாமர்த்தியாக கையாண்டு கரையேறுகிறாரோ அவரே அளுமைக்கு உரியவராகிறார்.கதிர்இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். முந்தைய தொகுப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு அதே சமயம் அதில் சொல்ல எத்தனித்து விடுபற்ற விஷயங்களை இதில் எழுதியிருக்கிறார். என்றாலும்மொழியில் மேல் நோக்கிய அடுக்குகளைத் தொட்டிருக்கிறார். கதிர்பாரதியின் கவிதைகளை ஒரே மூச்சில் வாசித்து மறு மூச்சில் வெளியிட முடியாதவை. சொற்களின் ஸ்திர தன்மைகளை அவர் விவிலியத்தின் வாயிலாக அமைத்துக்கொள்கிறார். மெல்லிய ஓசைகளுக்கு மத்தியில் நடத்தப்படும் ஜெபக் கூட்டத்தின் தொனியை அவருடைய கவிதைகள் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு தஞ்சை மாவட்டத்திலிருந்து இத்தகைய மொழியமைப்பை யாரும் கொண்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இடதுசாரிகளால் பெருமளவு ஆட்கொண்ட பிரதேசத்திலிருந்து இப்படியான மொழியை அவர் விவிலியத்திலிருந்து பெற்றிருப்பது அபூர்வம்.
 
மதமாச்சர்யங்களை விலக்கி மானுட நேசத்தை ஓங்கிக் கூவும் ஒரு பூமியிலிருந்து மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் என்னும் பதப் பிரயோங்களே கூட கவனத்துக்குரியன. கதிர்பாரதியின் நிலம் சார்ந்த பதிவுகளை ஒவ்வொரு கவிதையிலும் பார்க்க முடிகிறது. நிலத்தின் மீதிருந்தே அவருடைய கவிதைகள் எழுகின்றன.என்றாலும்நிலத்தின் உள்ளே மங்கிக்கிடக்கும் விதைகளை பேசாமல் இல்லை.  நீ வரவே இல்லை என்னும் கவிதையை என் கரம்பை நிலத்தில் உதிர்ந்துவிட்ட தென்னங்குரும்பைகளை என்றே ஆரம்பிக்கிறார்.எனக்கான முதிரிளம் பருவத்து முலை கவிதையில்,கண்களில் செவ்வரி ஓடியிருப்பது /  வெடிப்புறச் செம்மாந்திருக்கும் கோடை குடித்த என் நிலம்தான் / நிலமே /மதுவே / உனை ஒருவருக்கும் கொடேன்/ ஓரேர் உழவனாய்க் கைகொள்வேன் - என்று சொல்லவரும் அவர்முப்பிரி பின்னலிட்ட நாக சர்ப்பம் கவிதையில்உழுது பயிர் செய்திருக்கிறேன் உன் யவ்வனத்தை / நீர்க்கால் ஓரத்து மரங்களெனெ/ அது தளிர்க்கத் தொடங்கியிருக்கிறது என்கிறார். சுற்றுச்சூழ நிலத்தை விடுத்து கதிர்பாரதியால் சிந்திக்க முடியவில்லை. எது ஒன்றையும் நிலத்திலிருந்து நிலத்தின் மீதிருந்தே ஆரம்பிக்கிறார். ஒருவகையில் அதுவே அவருடைய பலமாகப்படுகிறது.
 
கதிர்பாரதியின் கவிதைகள்நில அரசியலின் மைய்யத்திலிருந்துதான் உலக இலக்கியங்கள் உருப்பெற்றிருக்க கூடும் என்னும் யூகத்திற்கு இடமளிப்பவை. காதலே ஆனாலும் அவர் கைகொள்ளும் படிமங்களும் குறியீடுகளும் நிலத்தை ஒட்டியே அமைகின்றன. அரசியலைக் கூட அவர் நிலத்தின் பாதிப்பிலிருந்துதான் பார்க்கக் கற்றிருக்கிறார். பின் தங்கியவர்களின் உயரம் என்னும் கவிதையில்இரைக்குப் பிந்தங்கியவர்கள் பெருமூச்சை சொரிந்தபடி/ மீண்டும் உயரத்தைப் பார்க்கிறார்கள். / ஆம் /  இரையை/ பள்ளத்தில் தள்ளிய உயரத்தைப் பார்க்கிறார்கள் - என்கிறார். இரையைப் பள்ளத்தில் தள்ளியவர்கள் யார் என்பதும் ஏன் என்பதும் கேட்கப்பட வேண்டிய வேள்விகள். தரிசு நிலங்களில் பயிர் செய்ய மானியம் வழங்கும் ஒரு அரசுஇதுவரை விளைந்துவந்த விவசாய நிலங்களை தரிசாக்கிக்கொண்டிருப்பதை எந்தக்கேள்வியும் இல்லாமல் எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல் காலம் தன்னை கடத்துக்கொண்டிருக்கிறது. ஒரு விவசாய பூமியை சாகக்கொடுத்துவிட்டு ஆர்கானிக் உணவுக்கடைகளை ஆரம்பிக்கும் சமூகத்தை என்னவென்று சொல்வது?. மாற்று அரசியல்மாற்று சினிமாமாற்று இலக்கியம் ,மாற்று சிந்தனை என சகலத்திலும் மாற்றை பார்க்க விரும்பும் நம்முடைய மனம் ஒரு விவசாயி மாற்றுத் தொழிலை நோக்கி நகர்வதை அச்சமில்லாமல் ஏற்றுக்கொள்ள முடியுமா?மரபின் பிறழ்வுகளை அல்லது நகர்வுகளை வரவேற்க எண்ணுகிற நாம் பாரம்பரிய விதைகளை இழந்த சோகத்தை என்றைக்காவது எண்ணியிருக்கிறோமாஒரு குளத்துக்குரைவையாக என்னும் கவிதையில்என் நிலத்தின் கண்களாக அலைகளைச் சிமிட்டுகிற ஏரியில் / ஒரு குளத்துக் குரவையாகத் துள்ளுகிறது என் சொற்களின் கனவு என்று கதிர்பாரதி சொல்வதைப் புரிந்துகொண்டால் அவர் கவிதைகள் முழுவதும் எதைச் சொல்ல வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். நிலத்தின் கண்களாக அலைகளைச் சிமிட்டுகிற ஏரி என்பதை திரும்பத் திரும்பி வாசித்து லயித்தேன். நிலமடந்தை எழில் ஒழுகும் என்று தமிழ்தாய் வாழ்த்தை நிதானமாகப் பாடுகின்ற நம்மில் எத்தனை பேருக்கு நிலம் இழந்த அழகுகளைப் பற்றி சிந்திக்க நேரமிருக்கிறது?
 
கதிர்பாரதியின் கவிதைகளில் நிலத்தைப் பற்றிய பதிவுகளைப் போலவே சடார் சடாரென வந்துவிழும் கோபத்தின் பதிவுகளையும் தவிர்க்க முடியவில்லை. அறத்திற்கு எதிரான எந்த ஒரு செயலையும் அவரால் கோபமில்லாமல் பார்க்க முடியவில்லை. எதிர்வினையாற்றும் பொறுப்பிலிருந்து இன்றைய படைப்பாளிகள் நழுவிவிடுகிறார்கள் என்னும் கூற்றை கதிர்எதிர்கொள்ள தயாராயில்லை என்றே தோன்றுகிறது. சாதீயத்தின் கோரப்பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளாமல் அதிலிருந்து பெறும் அற்ப சொற்ப சகாயங்களுக்காக பிடியை இறுக்குகிற சமூகத்தை  - எளியோரின் ரத்தம் தோய்ந்து/  வாளின் தூய்மையில் துருவேறிவிட்டதென / நீங்கள் அங்கலாய்த்தீர்கள்./ இதுதான் தருணமென நீதி தன் புறவாயிலை உடைத்துக்கொண்டு வெறியேறியது / அத்தருணத்தில்தான் மூளை சரிந்து விழுந்தோம்/ மாரிலடித்துக்கொண்டு அழுத / எம் பெண்டிரின் ஓலங்களின் மீது ஊர்ந்த ரயிலை/ இன்னுமா ரயில் என்கிறீர்கள். -
என்னும் கவிதையில் பதிந்திருக்கிறார்.ஒரு கவிதை எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்று அனுமானிக்க முடியாத வேளையில் நாயக்கன் கொட்டாய் என்ற குறிப்பு இதயத்தை நடுங்கச் செய்துவிடுகிறது. கட்சி அரசியல் வாக்கு வங்கிக்காக என்றானதைப் போல சாதி அரசியலும் வன்முறை வெறியாட்டங்களும் சமூகக் கண்டனங்களுக்கு அப்பால் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு படைப்பாளியால் எழுத்தைத் தாண்டி எதையும் செய்ய இயலாத நிலை. எந்த இயக்கங்களும் தன்னுடைய செயல்பாட்டில் சிறிதளவும் மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பாத சூழல். உலகமயமாக்கலுப்பின் ஒரு சமூகம் தன் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக சாதீயத்தை தூக்குப்பிடித்துக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் தேர்ச்சக்கரங்களுக்குத் தீனியாக தாழ்த்தப்பட்ட உயிர்களைத் தர விரும்புகிறார்கள். எது நல்ல எழுத்துஎது நல்ல கவிதைஎன்னும் விவாதங்களை கதிர் எளிதாக தாண்டிவிடுகிறார். மனித நேசத்தின் சின்னப்புள்ளியிருந்தே அவருடைய அதி அற்புத கோலங்கள் ஆரம்பமாகிறது.
 
ஒருவர் மொழியைக் கண்டடைந்துவிட்ட பிறகு எது ஒன்றையும் எழுத்துக்குள் கொண்டுவர முடியும்.ஆனால்கதிர் எதை எழுத வேண்டும் என்பதிலும் எப்படி எழுத வேண்டும் என்பதிலும் கறாராய் இருக்கிறார். பக்கங்களை நிரம்பாமல் தன் பக்கத்தில் நடப்பவற்றை பதிவு செய்யவே நினைக்கிறார். ஆஸ் தி பெஸ்டின் புறவாசல்,அஸ்பெஸ்டாஸ் அம்பாள்,ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்கண்டிஷன் அப்ளைவெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல் போன்ற கவிதைகள் தலைப்பளவிலேயே வசீகரம் கொண்டவை. ஆங்கிலப் பதங்களின் ஊடாக அவர் கடத்த விரும்பும் உணர்வுகள் லேசான பகடியைக் கொண்டிருந்தாலும் காத்திரத்தில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாதவை. தன்னை முன்வைத்து எழுதுவது ஒருவகை. தன் எழுத்தை முன்வைப்பது இன்னொருவகை. தன்னையும் தன் எழுத்தையும் சமூகத்திற்கு முன் வைப்பது மூன்றாவது வகை. கதிர்பாரதிக்கு மூன்று வகை மீதே கவனம். அவரிலிருந்து ஆரம்பிக்கும் ஒருகவிதையை அவர் அவருடனே முடித்துக்கொள்ள விரும்புவதில்லை. கிளைத்து கிளர்ந்து எங்கும் வியாபிக்கும் சமூக வேர்க்கால்களை எட்டித்தொட எத்தனிக்கிறார். அமைதியை நிலைநாட்ட விரும்பும் ஒரு பள்ளி ஆசிரியர் சைலண்ட ப்ளீஸ் என்று கத்துவதைப்போல நோக்கத்தின் எதிர் முனையிலிருந்து கவிதைகளைப் படைக்கிறார். வெகுமக்கள் மொழியை இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை. என்றாலும்வெகு மக்களின் பிரச்சனைகளையே பேசுகின்றன. பிரச்சனைகளை கவிதைகள் பேசலாமா கூடாதா என்னும் வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ள நானும் இந்தக் கவிதைகளைப் போல விரும்பவில்லை.
 
என்வரையில் கதிர்பாரதியின் எழுத்து வண்டல்மண்ணின் வாழ்வை புதுக்கித் தந்திருக்கிறது. நிதானமிழந்த கோஷங்களுக்கு ஆட்படாமல் கவிதைகளின் நிறைவை நோக்கி நகந்திருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் ஓர் அமைதியை ஓர் அன்பை ஒரு பகிர்வை ஒரு தேவையை உணர்த்த முயன்றிருக்கிறது. இதற்கு முன் எழுதப்பட்ட படைப்புகளில் இருந்து ஒரு புதுவகை எழுத்தை வண்டல் மண் பகுதிக்கு கொண்டுவந்த பெருமையை கதிர்பாரதிக்கு அளிக்கலாம். அவர் எழுத்து புலியைப் பொம்மையாக்கிவிட்ட அதிகாரங்களை கொல்லவோ சொல்லவோ அஞ்சுவதில்லை. விண்ணரசின் விதைகளை மக்களுக்கானதாக மாற்றும் மனுஷ்ய குமாரனாகப் பிரசங்கிக்கிறார். ஆஸ்பெஸ்டாஸ் கொட்டைக்குள் அம்பாளாகவும் மாறி புதிய சம்பந்தன்களுக்கு அவர் எழுத்து மூலையூட்டுகிறது. எம் நிலத்தின் பாடல்களால் தானியக் கிடக்குள் நிறைந்தன  என்று குள்ள நரி அழைக்கிறது வாரீர்  கவிதையில் சொல்லியிருக்கிறார். உண்மையில் இன்று எம் நிலத்தின் பாடல்களால் தானியங் கிடங்குள் நிறையவில்லை. மாறாக ஓலங்களாலும் சோகங்களாலும் உருவிழந்து கிடக்கின்றன. அக்கிடங்குகள் விவசாயத்தின் சவப்பெட்டியாக மாறுவதற்குள் நாங்கள் எங்கள் நிலத்தை பாடல்களால் மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் கைகளில் வண்ணங்களை ஒட்டிவிட்டு இரைதேட கிளம்புகின்றன.

13 October, 2016

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் எழுதிய குறிப்பு...

இரு வருடங்களுக்கு முன்பு கதிர்பாரதியின் " மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் " கவிதைத்தொகுப்பை வாசித்தேன்.நிலம்,பறவை,காற்று,மழை,ரயில் ,காதல்,காம்ம,நேசம் என கவிதைகளின் படிமவேர்கள் மன ஆழத்துக்குள் ஊருருவி பெரும் நெகிழ்ச்சிகொள்ள வைத்தன.தற்போது இவரின் " ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் " கவிதைத்தொகுப்பை வாசித்து முடித்தேன்.எப்போதும் நிலக்காட்சி சார்ந்து நிறைய எழுதுவதாக இருந்த என் இறுமாப்பை இவரின் ஒவ்வொரு கவிதைகளும் உடைத்தெரிந்தன.மணிப்புறாக்களும்,தட்டான்களும்,ஆட்டுக்கிடாய்களும்,வெட்டுக்கிளிகளும்,நீர்முள்ளிகளும்,அணில்களும் என கவி உயிர் பெற்று படிம பிணையல் நர்த்தனத்தில் ஆங்காங்கே ஏகாந்த சிற்பமாய் காலவெளியின் நுட்பத்தை சுமந்து காட்சி தருகின்றன.குள்ளநரி அழைக்கிறது வாரீர்,புன்செய் வெயிலாகும் முத்தம்,அழகு பகல் ,கற்றாழைப்பழம் சுவைத்தேன்,அலறி ஓடும் மவ்னம்,நான் என இவரின் கவிதைகள் என் மனதைவிட்டு நீங்கா தன்மை கொண்டதாக இருக்கிறது.நிலத்தை நேசிப்பவனாக ,நட்பை போற்றுபவனாக ,சகபடைப்பாளிகளை ஊக்குவிப்பவனாக இருக்கும் கதிர்பாரதி பெருங்கவிஞன் என்ற தலைச்சுமை சிறிதுமின்றி எளிமையாகப் பழக கூடியவர்.சமீப ஆண்டுகளில் என்னை ் ஆனந்த விகடனில் சிலகதைகள் எழுத வைத்து எங்கள் ஊர்ப்பக்கம் வாசிக்க வைத்த என் பெருமைக்கு சொந்தக்காரன்.விரைவில் இவரிடமிருந்து சில நல்ல சிறுகதைகளையும் ஒரு நண்பனாய் எதிர்பார்க்கிறேன் .