நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி(2024) யில் கவிதைப் புத்தகம் வாங்க விரும்புகிறவர்களுக்கு கதிர்பாரதியின் 'உயர்திணைப் பறவை' யை பரிந்துரைக்க விரும்புகிறேன்.
226 பக்கங்கள் கொண்ட அடர்த்தியான தொகுப்பு. பைபிளை படிப்பது போல, தோன்றுகிறபோது பிரித்து வைத்து ,
ஒரு கவிதையைப் படித்துவிட்டு, அதைக்குறித்து சிந்தித்தபடி ராத்திரி முழுவதையும் கடத்தலாம்.
எழுத்தாளர் கரிகாலன் |
சமீப காலத்தில் தமிழில் வந்திருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய நல்லத் தொகுப்புகளுள் ஒன்று உயர்திணைப் பறவை.
கதிர்பாரதியிடம் லேசான பஷீர் தொனி இருக்கிறது. உலகத்தின் எல்லா கசப்பான உணர்வுகளையும் லேசான ஹாஸ்யத்தோடு எளிதாக கடந்து செல்கிறார்.
துக்கம் என்கிற பேருணர்வை விழுங்க வைக்கும் வேலையை மிக அனாயசமாகச் செய்கிறார் கதிர்பாரதி.
What is genius but the power of expressing a new individuality என்பார் ப்ரௌனிங்.
அது பாரதியிடம் வெளிப்படுகிறது.
பாஜக, அதிமுக, காங்கிரஸ், திமுக அரசியலை எழுதுவதல்ல கவிஞனின் வேலை. அதற்கு நக்கீரன், ஜூவி ரிப்போர்ட்டர் போதும். மனித ஆன்மாவின் அரசியல் புதிரை அவிழ்ப்பதுதான் கவிஞனின் பணி.
இந்தத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை மட்டும் உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன்.
அது 'கொக்கிப் பூ' என்கிற
கவிதை (ப 104) .
/சிதம்பரம் டைலர் லேடிஸ் ஸ்பெஷலிஸ்ட்
வேலையில் படு நேர்த்தி
ஜாக்கெட் வடிவமைப்பில் கைநிபுணர்/
என்று தொடங்குகிறது கவிதை.
அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும். பெண்கள் அபாரமான அழகுணர்வுள்ளவர்கள். அவர்களுக்கு ரவிக்கை தைத்து வாங்குவது லேசுபட்ட காரியம் இல்லை.
அக்குள் பிடிக்கிறது என்பார்கள்.
கழுத்து இறங்கிவிட்டது என்பார்கள். இடுப்பு ஏறிவிட்டது என்பார்கள்.
ஆனால் கதிர்பாரதி காட்டுகிற
சிதம்பரம் டெய்லர் நூற்றில் ஒருவர்.
/அவர் கிழித்து தைத்த கோடுகள் தாண்டி ஊரின் பெண்களுக்கு
அளவுகள் துளியும் வழியாது/
/பிரில்கள் உருவாக்கி பஃப் கைகள் தைப்பார்
பிறகு அவை
கைகள் அல்ல கை மலர்கள்/
இப்படிப்பட்ட சிதம்பரம் டெய்லருக்கு கிராக்கி ஏற்படுவதில் அதிசயமொன்றும் இல்லை. ஆனால் அவரிடம் ஒரு சிவப்புரோசா கதை இருக்கிறது.
அதைப் பார்க்க விழைவதே கலை மனம்.
மாதுரி தீட்சித் , 'சோளிக்குள் என்ன இருக்கு!' பாடுவாரே. அது கடுமையான விவாதத்தைக் கிளப்பிய பாடல். ஊர் பெண்களின் ரவிக்கையை துல்லியமாக தைக்கத் தெரிந்த சிதம்பரம் டெய்லருக்கு தன் மனைவியின் ரவிக்கைக்குள் இருக்கும் மனதில் உள்ளதை உணர முடியாமல் போனது துக்கம்தான்!
/கட்டைவிரல் நகப்பூவால்
பிசிறுகள் நீக்கி
ஜாக்கெட் முதுகு நீவியபடி சொன்னார்...
முனைகள் பொருந்தாமல் காஜா பிசிறிய ஜாக்கெட் ஒன்றுண்டு என்னிடம் '
அது
அவர் மனைவி
'உச்சி வகுந்து பிச்சிப்பூ வைத்த கிளி'யான கதை. /
எனக்கு, சிதம்பரம் டெய்லரை கதிர்பாரதியை கட்டிப்பிடித்து அழத்தோன்றியது!
No comments:
Post a Comment