30 July, 2013

என்னை மறியாய் மாற்றி இழுத்துச் சென்றவன் (கவிஞர். கதிர்பாரதியின் ”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” கவிதைத் தொகுப்புக்கான மதிப்புரை) - ரவிசுப்பிரமணியன்



கவிஞர்களும் ஓவியர்களும் இசைக்கலைஞர்களும் சுவாதீனமாய் உலவும் அந் நகரத்தில்தான், அவனைக் கண்டேன். முதலில் அவனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவனின் சில வரிகளைக் கேட்ட பின்பு, உடனே கண்டுபிடித்து விட்டேன். அவனும் என்னை சட்டென கண்டு கொண்டு விட்டான். நீயும் எனக்கொரு முன்னோடியென கரம் பிடித்து, நேசம் தளும்ப கைகுலுக்கி வீட்டுக்கு அழைத்தான். அவன் சொற்களின் சூன்யக்காரனெனவும் வரிகளை ரத்தம் கக்கவைக்கும் மஸ்தான் விளையாட்டு தெரிந்தவனெனவும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால், கொன்றவனை கடவுளாக்கிய அவனை நிராகரித்து நகர முயன்றேன். அவனோ பேச ஆரம்பித்தான். அவன் வாசகங்களின் மகிமையால் மேய்ப்பவனுக்கு முன்னால் செல்லும் ஆட்டுக்குட்டி போல், அவன் சொற்களை அசைபோட்டபடி போக ஆரம்பித்தேன்.
அவன் வரவேற்பறையில் மாட்டியிருந்த இந்த கவிதை என்னால் மறக்க இயலாதது.

திசைகளைப் பதற்றத்துக்குள்ளாக்கி
மாநகரச் சாலையில் விரையும்
ஞாயிற்றுக்கிழமை கசாப்புக்கடைகாரனின்
இரு சக்கர வாகனத்தில்
குறுக்குவாட்டாகக் கிடந்து கதறுகிற
மறியைப் பார்த்ததும்


நீங்கள் என்ன செய்வீர்கள்.



என் பிதாவே என் பிதாவே

ஏன் என்னை கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
என் தேவனேஎன் தேவனேஎன்று
கை தொழுவேன்
நான்.

ஆட்டுக்குட்டியை கொல்வதற்காக கட்டிச் செல்பவனைப் பார்த்து, ஏதும் செய்ய இயலாது, வழக்கமான பிரார்த்தனையை மட்டுமே செய்ய முடிகிறது அவனால். ஆனால் ஒரு வகையில், ஏசுவும் ஆட்டுக்குட்டியின் நிலையில்தான் இருக்கிறார் என்பதை, இகழ்ச்சியோ, பரிகாசமோ அற்று, கழிவிரக்கமாய் அரற்றுகிற இந்த தொனி கவிதைக்குப் புதிது.
அவனின் ஒவ்வொரு அறைக்குள்ளும் விதவிதமாய்ச் சித்திரங்கள். அபூர்வ சொல்லடுக்கின் லாகிரி மொழியில், நிலத்துக்கு நாமகரணம் சூட்டி, பறவையாக பறக்க வைத்திருந்தான் ஒன்றில். அப்பாவை மகனாக்கி, மகனை அப்பாவாக்கி, பால்கிளி ஓவியங்கள் போல் மாற்றியிருந்தான் சிலவற்றில்.  புரோட்டாக்கள் பேசுகிற ஊரில், ரயிலைக் கொன்றவனும், நேசத்துக்குரியவளின் பார்வைக்கு கோயில் கட்டுபவனும், வானூர்தியை அணைத்துறங்கும் சிறுவனும், சப்பாத்திக் கள்ளியின் கீறலுக்கு கரிசனக் கவலையை மட்டுமே களிம்பாய் பூசுகிறவனுமென, விதவித விசேஷ மனிதர்களை உலவவிட்டிருந்தான் அவன். ஆரம்பத்தில் நான் ஏன் பயந்தேன் என இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும்.
மனித மனசின் பல வித ரூபங்களும் வண்டல் பூமியின் நெல்லும் வேம்பும் வாதநாராயண பூக்களும் அதில் பறந்து திரியும் கொண்டலாத்திகளும் இதர தாவர ஜங்கம உயிரனங்களும் நிறைந்திருந்த அவன் வீட்டின், கொல்லைப்புறக் குளத்தில் ததும்பிக் கொண்டிருந்த பெளர்ணமியை, கொக்கு கொத்த, நிலவோ ரெக்கை விரித்துப் பறந்து கொண்டிருந்தது. புதுமைப்பித்தன் வேறு வகையாய், சூரியனை இப்படி சொன்னது ஞாபகம் வருகிறது. அதுகுறித்து வெங்கட்சாமிநாதனும் சோ. தருமனும் கூட எழுதியுள்ளனர். புதுமைப்பித்தன் எழுதியது இதுதான். வாய்க்காலில் ஓடிய தண்ணீரில், குழந்தை தன் கால்களை முக்கி முக்கி விளையாடிக் கொண்டிருந்தது. ஆனானப்பட்ட சூரிய பகவானே, குழந்தையின் கால் தரிசனத்துக்காக காத்திருந்தான். அங்கே சூரியனை பறிதவிக்க விட்டான் புதுமைப்பித்தன். கொக்கை நிற்க வைத்துவிட்டு நிலவை பறக்கவிட்டிருந்தான் அவன்.
பைபிளின் ஆழ்ந்த வாசிப்பும் அது சார்ந்த பரந்த விஷயங்களும், அவனை மதம் நோக்கி நகர்த்தாமல் இருப்பதும் கூட, கர்த்தரின் கருணைதான் போல.
எளிதில் மீள முடியா வார்த்தைகளின் வசீகரச்சுழல்களை உருவாக்கி, அதில் என்னை சிக்க வைத்து மகிழ்ந்து கொண்டிருந்தவன், நெடுஞ்சாலையை, உயிர் கவ்வும் மிருகமாக்கியும் சிரிப்பினை, மதுவாக்கியும் மேலும் விளையாடிக் கொண்டிருந்தான். ஏற்கனவே திகிலில் இருந்த நான், வெளியேற யத்தனிக்கும் வேளையில், ’ச்சூ- வென ஒரு மந்திரம் சொன்னான். என் தலையில் திருநீறும் வாயில் ரெண்டொரு வேப்பிலை கொழுந்துகளும் இருந்தன. அப்போது தட்டுப்பட்டது இது.


மருத்துவமனையில் இருந்து துவண்ட நாற்றென

ஆயாவை வீட்டுக்கு ஏந்தி வரும்
அந்தப் புளியமரத்து முடுக்குப் பாதையில்
தலைகுப்புற அசைவற்றுக் கிடந்த
வண்ணத்துப் பூச்சியை இழுத்துப்போகின்றன
கொலைக்கரம் வாய்த்த எறும்புக்கூட்டம்.

காற்றுத் தொகுதி ஆராதித்துக் கிடந்த
அதன் வண்ணச் சிறகுகளிலிருக்கும்
நான்கைந்து ஓட்டைகளின் வழியே
வெளியேற முடிவு செய்து விட்டது
ஆயாவின் உயிர்.

இப்படி அவன் சொல்லின் மாயக்கட்டில் மேலும் நடந்து கொண்டிருந்த போது, அவன் சிருஷ்ட்டித்த இன்னும் சில வெளிகள் புலனாகத் துவங்கியது. அங்கேயும் அவன் கவிதைகளை, கூடு விட்டு கூடு பாய ஏவியபடியே இருந்தான். நானோ, அவன் உருவாக்கித் தந்த ஒரு புராதன நகரிலேயே திளைத்து, ஆவணம் ஏதும் கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்த போது, சட்டென ஒரு அதிர் குரலில், தலையில் ஒட்டியிருக்கும் காலாதீதத்தின் தூசியை தட்டிவிட்டு வாவென ஒரு அதட்டல் போட்டான்.
பின் தொடர்ந்த என்னிடம், பெண்ணின் தீராக்காமத்தை, அதன் முன் தண்டனிடும் ஆணின் கம்பீரத்தை, இரண்டும் ரஸவாதம் புரியும் தாது புஷ்ட்டி சிட்டுக்குருவி தாம்பத்திய காமலோக ரகசியங்களை - மயக்கும் பாகேஸ்வரியில், தெலேர் மெஹந்தியின் சூஃபி பாணியின் ஆழ அடர் குரலில் பாடலென இசைக்கத் துவங்கினான். மந்திரம் போல் வேண்டுமடா சொல் என்றான் பாரதி. இவனோ கலா மாய லோகத்தில் சித்திரத்தை, இசையை, புராதனத்தை, மந்திரத்தை என, வித வித வடிவில் வித்வத்வம் காட்டியபடி இருக்கிறான். அவன் கண்கள் மூடியிருந்தும் என்னால் அவனை கடந்து போக முடியவில்லை. ஆவணப்படமென்றும் கவிதையென்றும் பாடலென்றும் பரபரப்பாய் இருந்த என்னை, இங்கிருந்து மீட்டுச்செல்ல விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. அஞ்சல் பேழை 696, சென்னை14.


ஆத்மார்த்தி மதுரையில் ஏற்பாடு செய்திருந்த வதனம் இலக்கிய நிகழ்வில் கவிஞர் ரவி சுப்ரமணியம் வாசித்த கட்டுரை