28 April, 2012






அன்பு நகர்


அன்பு ஆட்சி செலுத்தும் மிகுபுராதனமான நகரம் இதென்று
சுற்றிக்காட்டினான் அந்தச் சுற்றுலா வழிக்காட்டி.
காருண்யமும் வாஞ்சையும் அதன் தலைமை பீடமென்று
சொல்லும்போதே அவன் முகத்தில் பெருமை சம்மணமிட்டிருந்தது.
முதியோர் இல்லங்கள் இழுத்துச் சாத்தப்பட்டு
பிறகு அவை ஆராதனை மையங்களாக மலர்ந்தனவாம்.
விபச்சார விடுதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களான அன்றுதான்
மழை கொட்டோகொட்டென்று கொட்டி நகரம் செழித்திருக்கிறது.
வாசங்களின் சிம்மாசனமாகத் தரிசனம் தருகிற இந்தப் பூங்கா
கோட்டான்கள் அலறித்திரிந்த கல்லறை மேடாகவும்
செப்பனிடப்பட்ட தானிய சேமிப்புக் கிடங்குகள்
கொள்ளையர்களின் மந்திராலோசனை கூடமாகவும் இருந்தவைதானாம்.
அல்லவை அனைத்தும் நல்லவையானதற்கு
அன்பு ஆட்சிக்கு வந்ததுதான் காரணம் என்றான்.
அன்பின் கொடுங்குளிரில் பதற்றமும் உதறலும் எடுக்க ஆரம்பித்தது.
எண்கள் அச்சிடப்பட்ட சில் தாள்களை
அவன் கையில் திணித்துவிட்டு ஓடிவந்துவிட்டேன் 
அதிகாரம் ஆட்சி செலுத்தும் நகரத்தின் வெப்பத்துக்கு...

18 April, 2012

14 April, 2012

குடும்பப் புகைப்படம்


ஒரு குடும்பப் புகைப்படத்தை நீங்கள் பார்க்கையில்
சுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்
வேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது
மற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது
பிறிதொன்றில் அசூயையும் ஆற்றாமையும் வழிகிறது
தளிர்முகமொன்றில் தன் சல்லிவேருக்கு
பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது
வயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக சதியொன்றின் வடுவில்
தடுக்கி விழ நேர்கிறது
திடுக்கிட்டு மூடிவிட்ட புகைப்படத்தை
மீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்
காற்றுக்கு அஞ்சி நடுங்குகிறது தீயின் நாவொன்று
பனியாலான குறுவாளொன்று குறிபார்க்கிறது
கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது
அறுவடைக்கு நிற்கும் நெல்வயலொன்றில் தீ பரவுகிறது
இறுதி நொடியிலிருக்கும் உயிரின் கரமொன்று
காற்றின் விழுதொன்றில் ஊசலாடுகிறது
யாவற்றையும் அவதானித்துவிட்டு
புகைப்படக் கலைஞனைப் பாராட்டக் கிளம்பும்
நீங்கள் மாபெரும் ரசிகன்
அவனைக் கொன்று திரும்பினால்
கடவுள்