24 April, 2010

கவிகிறது மெழுகின் சாட்சியோடு

தீ தின்னும் மெழுகை சாட்சி வைத்து
தன் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் இரவு
வாதையின் கூடாரமென
சன்னமாய்க் கவிகிறது அவள் மீது

முகமன் சொல்லி வரவேற்கும்
அவள் முறுவலின் பின்புறத்தில்
சலசலக்கும் ரணங்களின் கண்ணீரில்
மேலதிகமாய் இருள்கிறது அவ்விரவு

வடிக்கட்டமுடியாத வக்கிரம்
இயலாமையின் கழிவிரக்கம்
அந்தரங்கத்தின் வெக்கை
கொண்டாட்டத்தின் எச்சம்...
யாவற்றையும் அவளுக்குள் துப்பிவிட்டு
பேய் சிரிப்பில் அதிரும் அவ்விரவை
யார் பார்வைக்கும் படாதவாறு
பதட்டத்தோடு ஒளிக்கவே விழைகிறாள்
தீட்டுத் துணியென

17 April, 2010

ஏக்கத்தில் விழுதல்

வன்நுகர்ச்சிக்குப் பலியான ஊமைச் சிறுமியின்
பீதியை நகலெடுத்த முகத்தோடும்
கட்புலனாகா கிரீடத்தைப் பொருத்தியிருக்கும்
அசௌகரியத்தோடும்
பார்வைக்கு வந்துபோகும் அவர்தான்
கடவுளின் நேரடி வாரிசு என்பதை அறிந்த கணம்
அவன் காலத்தை ஊழியலை தாக்கியிருந்தது

சர்வாதிகாரியின் கொடுங்கரத்தின்கண் சிக்குண்ட
சாமான்யப் பூச்சியைப் போல
பூலோகத்தின் பித்தலாட்டங்களும் துரோகங்களும்
அவரைக் கையாளத் துவங்கியிருந்தன

எழுச்சிக் குறைவான குறியை
வாய்க்கப்பெற்றிருந்தாராகையால்
விசனமுற்ற தாம்பத்யம்
அவ்வளவாய்ச் சேர்ப்பதில்லை என்பது குறித்து
அவருக்குண்டு அவர்மீது கழிவிரக்கம்

மதுவின் கணத்திலன்றி பிற பொழுதுகளில்
தான் கடவுளின் வித்தென்ற கித்தாப்பு
அவர் சிரசுக்குள் நிலைத்ததில்லை

இல்லத்துக்கு அவர் திரும்புகையில்...
நெகிழ்ந்திருந்த உள்ளாடையை திருத்தியபடி
அதரத்தில் நர்த்தனமிடும் முறுவலைச் சிந்தியவாறு
கடைவாயில் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தான்
சாத்தான்

களைத்திருந்த மனைவியின் வியர்வையில்
நிறமிழந்த தமது அந்தரங்கத்தை
என்ன செய்வதென்று அறியாது
சாத்தானாகும் ஏக்கத்தில் விழுந்தார்
கடவுள்

நன்றி: உயிரோசை (27.09.10)

12 April, 2010

கை உதறுதல்

காற்றென்னை கை உதறிய
பொழுதொன்றின் அந்திமத்தில்தான்
பருவத்தைக் கொட்டிச் செய்த ப்ரியத்தை
திரும்பப் பெற்றுக்கொண்டாய்

விண்மீன் உதிர்ந்துவிழுந்த தடத்தின்
வடுவென புகைந்து குமையும் இதயத்தில்
பகல் போல ஒளிரும் எனதன்புக்குள்
பூனைப்பாதம் பொறுத்தி ஊடுருவின
அமாவாசை சபலங்கள்

மலைமுகட்டின்மீதேறி தற்கொலைபுரியும்
அந்திப் பகலவனின் வண்ணம் கொண்டது
பலிகொள்ளப்பட்ட நேசத்தின் ரத்தம்

பழிப்பு செய்கிற காலம்
துவண்டெழும் வார்த்தைகளின்
சுவாசப் பரப்பெங்கிலும்
சுவாதீனத்தைக் கலந்து கெக்கலிக்கிறது

மல்லாந்து துயில முயன்ற
மொட்டை மாடி நிசி ஒன்றில்
உன் பாதரட்சையின் எழிலெடுக்கும் பிரயாசையில்
தோற்றுத்தோற்றுச் சரிகிறது
மூன்றாம்பிறை

யுகமாயினி ஜூலை 2010