12 May, 2016

வாசல் தெளிப்பின் மணம்… -ந.பெரியசாமி

அதிகாலையில் அம்மா தெளிக்கும் சாணத்தின் மணம் நிலத்தின் மணத்தோடு சேர்ந்து வெளியேற விழிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான குடும்பங்களில் வாசல் தெளிப்புக்குப் பின்னரே வீட்டிலிருக்கும் ஆண்களை வெளியேற்ற அனுமதிப்பார்கள். வீட்டையும் நிலத்தையும் என்றும் நினைவில் வைத்திரு என்பதாகப்படுகிற பழக்கம் இது. கதிர்பாரதியின் ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் தொகுப்பை வாசித்த பின் அம்மாவின் வாசல் தெளிப்பு மணம் நினைவிற்கு வந்தது.
கை விரல்களால் வீடு கட்டும் வித்தை கற்ற குழந்தைகளின் துள்ளல்களையும், கண்டிஷன்களின் சொற்கள் மிதக்கும் வாடகைவீட்டில் வெளியைச் சுருக்கி இறகு பந்தாடும் குழந்தைகளின் துயரையும் நமக்கானதாக்கிவிடுகின்றன கவிதைகள்.
வீடு
இரு கைவிரல் நுனிகளை
கோபுரமெனக் குவித்து
விடுன்னா இப்படித்தான் இருக்கும் என்று
புன்னகைக்கிற திலீபன்
மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும் என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்

நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
போதுமானதாக இருக்கிறது
இந்த வீடு.
தொகுப்பிலிருக்கும் திலீபன் குறித்த கவிதைகள் நம்மோடிருக்கும் குழந்தைகளின் உலகத்தையும் நினைவூட்டியபடி இருந்தன.
வெள்ளந்தியான மனம் நிறைந்திருப்போரும், உள் ஊறும் வன்மத்தை புன்னகையுள் ஒளித்து வைத்திருப்போரும் தம்தம் நிலைக்கேற்ப இப்புவியை விளையாட்டுக் களமாக்கி புள்ளிகளை சேகரிக்கும் சூட்சுமத்தையும். ஊர்ப்புறத்திற்கும் நகரமயமாக்கலுக்குமான மாற்றத்தில் சிக்குண்டவர்களின் மனப்பிறழ்வுகளை காட்சிபடுத்தியும் செல்கின்றன கவிதைகள்.
தேவனின் படைப்பில் உன்னதமானது பெண்ணெனக் கொண்டாடி, அவள் வராத கோடையில் பொசுங்கி, அருகில் வந்தவளின்பால் ஏற்பட்ட இன்பத்தைவிடவும் வந்து விடுவதாக நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் ஏற்படும் இன்பத்தை சுகித்தும், மழையை மார்பகமாக்கி தாகம் தணிப்பவனின் பெரும் காதலை முத்தத்தின் வழியாக வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன பெரும்பாலான கவிதைகள்.
உழவு மாடுகள், இறாபுட்டி, குலசாமிகளின் கதைகள், நீர்முள்ளிப் பூக்கள் நிறைந்த கனவு, பயிர்களின் பருவங்களுக்கேற்ற பாடல் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்த தாத்தாவின் உப்பு படிந்த உடலில் கிடந்து வளர்ந்தவன் தன்னிடம் ஏதும் இல்லாது போவதும், தாத்தா உயிராக நினைத்த நிலமும் மெட்டோபாலிடல் அரசியலுக்கு பலியாக்கப்படுவதும், விடுதலை உணர்வையும் நிம்மதியையும் தரும் நிலம் பெரும் கனவானதாகிவிட, சொந்தமாக ஒதுங்க ஒரு செண்ட் நிலமும் அதில் சிறு வீடும் கட்டவதற்காகவே வேலை ஓய்வுபெறும் வரை உழைக்க வேண்டியிருக்கிற அவலத்தையும் கிளறிவிடுகின்றன கவிதைகள்.
………………………..
என் தாத்தாவிடம்
கண்ணீரும் தாகமும்கூட இருந்தன
மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்தவருக்கு
டமக்கரான் போத்தலில் தண்ணீர் வந்தது.
அதை முகத்தில் தெளித்து அவரைப் புதைத்தபோது
அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்.
பெறவேண்டிய உரிமையை பெரும் கனவாக்கி அதைநோக்கி நமை ஓடவைக்கிறது எஜமானர்களின் உலகம். கொஞ்சமான எஜமானர்கள் குரங்காட்டிகளாக இருந்து நமை குட்டிக்கரணம் போட வைத்து வேடிக்கைக் காட்டி அவர்களின் தட்டை நிரப்பி உல்லாச வாழ்வு வாழும் பல மல்லையாக்களை நினைவூட்டுகின்றன கவிதைகள்.
என்னவாகப்போகிறதோ எனும் பதட்டத்தில் வாசித்துக்கொண்டிருக்கையில் சிறுவன் சேனலை மாற்றிவிட ஆசுவாசம் அடைந்து ரசித்திடச்செய்தது ‘மெய் நிகர் தீபம்’.
மொட்டைமாடியின் முத்தத்தை கடன் வாங்கி ஒளிர்ந்த கற்கள் நட்சத்திரமாகினவெனும் வரிகள் என்றும் நினைவிலிருக்கும்.
தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் ஆனந்தி மிளிர்கிறாள். ஆனந்தியின் பொருட்டு காதல் மிகுவதும், காதல் மிகுந்து சரணாகதி அடைவதும், சரணாகதி மிகுந்திட காமம் பிறப்பதும், காமம் பிறக்கையில் பெண் நிலமாக மாறுவதும், நிலம் என்பது சொத்து எனும் வஸ்துவாகிவிடுவதால் சொந்தமாக்கி உரிமை கொண்டாடுவதும், உரிமை அதிகாரமாக மாற்றம் கொள்வதும் கவிதைகளின் போக்கில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
நெடும் காலத்தின் நீட்சிதான் ஆண் எனும் அதிகாரம். அது நீண்ட ஆணி வேராக புதைந்து கிடக்கிறது. நம் வாசிப்பும் சக ஜீவிகளின் மீதான கரிசனமும் சிறிது சிறிதாக அதை பட்டுப்போக செய்துகொண்டிருக்கிறது. அது முற்றாக பட்டுப்போக வைக்கவும் முடியும். ‘ஒரு குளத்துக் குரவையாக’ கவிதையில் வரும் ‘அதிகாரம் என் சொற்களில் மட்கி எருவாகும்’ எனும் வரி அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு- உயிர்மை பதிப்பகம்.

11 May, 2016

விதைநெற்கள் அதிகமுள்ள தானியக்குவியல். - கோ.கலியமூர்த்தி


அரசியலை அகற்றிவிட்டு, பொறுப்புணர்வைப் புறந்தள்ளிவிட்டு, உத்திகளின் சோதனைச்
சாலையாக, அசட்டு ஆன்மீக மத்தியதர வர்க்க மழுங்கலாக, உள்ளொளி தர்ஸன உளறலாக
 தமிழ்க்கவிதையை மாற்றிவிட்டு, அதையே நவீனகவிதை என முழங்கிய காலம் முடிவுக்கு
 வந்துவிட்டதை, 2010 க்குப்பிறகான நவஅரசியல் கவிதைகள் தங்கள் பறிக்கப்பட்ட வாழ்வை, 
வீழ்த்தப்பட்ட விழுமியங்களைப், புதியதொரு அழகியல் கூடிய உக்கிரமான மொழியில் 
பாடத்துவங்கிவிட்டபோதே புரிந்துகொள்ள முடிந்தது.இந்த மாற்றத்துக்குப்பின் விளைந்த 
முக்கியக் கவிஞர்களில் ஒருவர் கதிர்பாரதி. விருதுகளும் அங்கீகாரங்களும் பெற்றுப், 
பரவலாக வாசிக்கப்படும் பாக்கியம் பெற்ற அவரது முதல்தொகுப்புக்குப் பிறகு, இன்னும் 
அடர்த்தியும் நுட்பமும் கூடியதாக வந்திருக்கிறது, "ஆனந்தியின் பொருட்டு 
தாழப்பறக்கும் தட்டான்கள் "என்கிற இரண்டாவது தொகுப்பு. நிலம், காதல் இரண்டையும், 
உழுகுடி மரபின் உளவியலோடு பாடும் கவிதைகளே அதிகம் இத்தொகுப்பில்.
என் நிறைசூலியான பசும்நாற்றுகளில் புகையான் திகைந்துவிட்டது.
என் வரப்புகளில் நட்டுவாக்காலி ஊர ஆரம்பித்துவிட்டது
என் நிலத்தை விரியன்குட்டி கைப்பற்றிவிட்டது
என் குலசாமி கல்லாகிவிட்டது
     
எனக்கதறும் இக்குரலுக்குப்பின்னே, வாழ்வுதொலைத்த உழுகுடி இனத்தின்
வலியிருக்கிறது. அதை வலிமையோடு சொல்லத்தெரிந்த மொழியிருக்கிறது.
"எங்களிடம் நீர்முள்ளிப்பூக்கள் இருந்தன "என்கிற தொகுப்பின் உச்சக்கவிதை, 
வேளாண் வாழ்வின் வளங்களை, ரணங்களை, காட்சிகளை மட்டுமல்ல, 
விழுமியங்களையும் விளக்கி நீண்டு
என் தாத்தாவிடம் கண்ணீரும் தாகமும்கூட இருந்தன
மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்தவருக்கு
டமக்ரான்போத்தலில் தண்ணீர் வந்தது
அதை முகத்தில் தெளித்து அவரைப் புதைத்தபோது
அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்
       என முடியும்போது, வழிகிறது கண்ணீர். வலிக்கிறது மனம்.
       கண்ணீரின் ஈரம் மட்டுமல்ல, கனலும் வீரமும் 
கொண்டது வேளாண்குடி என்பதை 
உணர்த்தும் "குள்ளநரி அழைக்கிறது வாரீர் "உக்கிரமான அரசியல் கவிதைக்கான 
உதாரணக்கவிதை. அதில், நிலம் என்பதை, 
நினைவுகளின் ஆழ்மடுவிலிருந்து பொங்கும் 
வெறிபிடித்த படிமங்களாக அடுக்குகிறார் இப்படி.  
நித்தமும் நாங்களிட்டு உண்ணும் எம் அன்னத்து உப்பு
இளம்விதவை ஈன்றெடுத்த முதல்மகவு
பொட்டல்வெளி காளி வெளித்தள்ளும் நாவு
எந்தையும் தாயும் உருவிஉருவி முத்தமிட்ட 
எம் ஆணுறுப்பு
எம் காதற்பெண்டிரின் பெண்ணந்தரங்க உறுப்பின் சுவை
தாவுகாலிட்டு உச்சங்கிளையில் தீவனம் கடிக்கையில்
காற்றிலாடும் மறியின் பால்செறிந்த மார்பு 
சேறுகுடித்து ஊறிக்கிடக்கும் கருவேலமுள்ளின் முனை
       -என்றெல்லாம் அடுக்கி, கடைசியில்,
தன் மூத்திரம் குழைத்த மண்ணெடுத்து
இரையின் முகத்தில் விசிறி
குரல்வளை கடித்திழுக்கும் குள்ளநரி
     -என முடிக்கும்போது வேறொரு பரிமாணம் கொள்கிறது கவிதை.
      கவிஞர் அதிகம் பாடும் இன்னொரு தளம் காதல்.முன்னுரையில் லிபி ஆரண்யா 
சரியாகவே குறிப்பிடுவதுபோல, காமமில்லாத காதல் என்பதுபோன்ற பம்மாத்துகளற்ற, 
காமத்தின் தகிப்பும் நீர்மையும், இழந்துவிட்ட காதலின் ஏக்கமும் அதன் ரணங்களும் 
வடுக்களும் என, விதவிதமான மொழிபுகளில் கசிகிறது காதல்.
எனைநோக்கி நீ வருகிறாய் என்ற நினைப்பே
பல பருவங்களைத் திறந்துவிடுகிறது
     -எனச் சொல்லத் தெரிந்திருக்கிறது கவிஞருக்கு. ஏராளமாக எழுதியிருந்தாலும், 
யாரும் சொல்லியிராத ஒரு கவிதை இப்படிப் பேசுகிறது.
முக்கோடைக்கும் முந்தின கோடையொன்றில்
நேசக்கடிதங்களைப் பரிமாறிக்கொண்ட
இனிச்சமரத்தினடியில்
இக்கோடையில் நிற்கும்போது
சொத்தென்று தலையில் விழுகிற புளியம்பழத்துக்கு
உன் கீழுதட்டின் சுவை
ஆகவே
பழம்தின்று கைமீந்த புளியங்கோதுக்கு
உன் பெண்ணந்தரங்கத்துப் பொன்னிற முடிகளின் சுவை
      -இப்படிச் சொல்கையில் காதல் காமம் கவிதைமொழி யாவும் உச்சம் தொடுகின்றன.
      காதலுக்கேயுரிய, மிகையுணர்ச்சிகள், ரொமாண்டிக் சொற்கோர்வைகள் எதுவுமின்றி
நீ என்பது
எத்துணை பெரிய வெறுமை
நான் என்பது
எத்துணை பெரிய தனிமை
        நகுலன் பாணி எளிய சொற்களின் மூலமேகூட அற்புதமாக நெய்துவிடமுடிகிறது 
கதிர்பாரதிக்கு.
கசிந்து பரவுகிற உன் நீர்மையில்
மெல்லமெல்ல மூழ்குகிறது என் வேர்
என்றும்,
உழுது பயிர்செய்திருக்கிறேன் உன் யவ்வனத்தை
நீர்க்கால் ஓரத்து மரங்களென
அது தளிர்க்கத்தொடங்கியிருக்கிறது
என்றும், காதலைப் பாடும்போதும், மருதநில அழகியலே ததும்புகிறது.
       அடுத்த முக்கியமான தளம், காதலை, எளியோரின் வாழ்வை, தமிழ்ச்சமூக
 விழுமியங்களை வீழ்த்தும், சமீபகாலச் சாதிவெறிக்குரூரங்களுக்கெதிரான கவிதைகள்.
சிட்டுக்குருவி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது, 
வெட்டுக்கிளிகளைச் சூப்பர்மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல், ரயில் என்பது ரயில் இல்லை
ஆகியவை, காலத்தைப்பாடும் கவிஞனின் சன்னதம்.
ஆஸ்பெஸ்டாஸ் அம்மன், கண்டிஷன்ஸ் அப்ளை, நினைந்தும் நனைந்தும் 
வாழப் போதுமானதாயிருக்கிற திலீபனின் வீடு ஆகியவை மறக்கமுடியாதவை.
       கதிரின் வயலில் மகசூல் அதிகம்.
காற்றில் பறக்கும் பதர்களைவிட, களஞ்சியம் போகும் மணிகளே அதிகம்.
அதனினும் சிறப்பு  காலகாலத்துக்குமான விதைநெற்கள் அதிலுண்டு என்பதுதான்.
       

  கோ.கலியமூர்த்தி
Hc686, பகுதி1
அண்ணாநகர்
திருச்சிராப்பள்ளி-26

மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ - எழுத்தாளர் பாவண்ணன் http://puthu.thinnai.com/?p=32235

கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது  முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை. தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமானதாகவும் வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும் அமைந்துவிடுகின்றது. மொழியின் தளத்திலும் உணர்வின் தளத்திலும் இந்த வசீகரம் ஒருபோதும் கூடிவிடாமலும் குறைந்துவிடாமலும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று இயைந்து ஒளிர்கின்றன. இதுவே கதிர்பாரதியின் கவிதைகளின் தென்படும் முக்கியமான சிறப்பம்சம். மற்ற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவதும் இந்த அம்சமே.
கதிர்பாரதியின் கவிதைகள் புதிய வகையான குறியீடுகளை உருவாக்க விழைகின்றன. எழுதி எழுதிப் பழகிப் போய்விட்ட காற்று, வெப்பம், மலர், மழை, பறவை போன்ற குறியீடுகளைக் கூட முற்றிலும் வேறொரு தளத்தில் முன்வைக்க விரும்புகின்றன.
ஒரு ஊரில் ஒரு கழுகு வசித்துவருகிறது
தன் கூடு தாங்கும் மரத்தைக்கூட கொத்தி
வேரடி மண்ணோடு சாய்த்தும் வருகிறது
கோழிக்குஞ்சின் மாமிசத்துக்கு
தன் கூர் அலகைப் பழக்கிவரும் அது,
புறாக்கள் களைப்புறும் மாடங்களில்
மைனாக்கள் உலவுவது தகாது எனச் சீறிவிட்டு
கோயில் விமானத்தில் போய் உட்கார்ந்துகொண்டு
தன்னிரு இறக்கைகளைக் கோதிக்கொள்கிறது
பதற்றமே சிட்டுக்குருவிக்கு அழகு என்றும் சொல்லி
மகிழ்ச்சியின் வானில் சுற்றித்திரியும்
சிட்டுக்குருவிகளைப் பதற்றத்துக்குள்ளாக்கவே
கத்தியின் நகலான
தன் நகங்களப் பயன்படுத்திவருகிறது
அதில் பதறிப் போய்த்தான்
ஒரு சிட்டுக்குருவி தண்டவாளத்தில் விழுந்தது
அப்போது
கழுகின் நகம் பளபளத்துக்கொண்டது.
இப்படி ஒரு கவிதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதிகாரத்தின் விளைவுகளை ஒரு காட்சித்தொகுப்பாக முன்வைக்கும் இக்கவிதை தொகுப்பின் முக்கியமான கவிதைகளின் ஒன்றெனச் சொல்லலாம். தன் அதிகாரத்தின் கீழ் தன் வசிப்பிடமான மரம், தன்னைச் சுற்றியுள்ள வானம், மண், மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே பறந்து திரியும் புறாக்கள், மைனாக்கள், குருவிகள் என எல்லாவகையான பறவைகளையும் ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து ஆட்சியை விரிவாக்கிக் கொள்கிறது கழுகு. முழு அதிகாரமும் வசப்பட்ட பிறகு, கழுக்குக்கு நகங்களோ அலகுகளோ தேவைப்படவில்லை. தன் தோற்றம் அல்லது இருப்பின் வழியாகவே தன் அதிகாரத்தை நிலைநிறுத்தித் தக்கவைத்துக்கொள்கிறது.  பார்வை ஒன்று மட்டுமே அதற்குப் போதுமானதாக இருக்கிறது. கழுகை அஞ்சும் சிட்டுக்குருவிகள் தண்டவாளத்தில் விழுந்து சாகும் காட்சி மனத்தைக் கனக்கவைக்கிறது. வானம் விரிந்த வெளி. அவ்வெளியில் கழுகுக்கு ஓர் இடம், சிட்டுக்குருவிக்கும் ஓர் இடம் என்னும் இயல்பான வாழ்க்கைமுறை ஒரு முடிவைநோக்கி வந்துவிட்டது என்பதை அறிவிக்கும் கணமாக அந்த மரணம் அமைந்துவிடுகிறது. வானத்தையும் மண்ணையும் வசப்படுத்த நினைக்கும் கழுகின் பேராசைக்கு இன்று சிட்டுக்குருவிகள் பலியாகின்றன. நாளை இந்த அதிகாரப்பரப்பு இன்னும் விரிவாகலாம். அப்போது சிட்டுக்குருவியைவிட இன்னும் சிறியதும் சுதந்திரத்தை விரும்புவதுமான   வண்ணத்துப்பூச்சிகளும் மறையக்கூடும். உயிர்த்திருப்பதையே ஒரு துயரமான அனுபவமாகவும் மரணத்துக்கான காத்திருத்தலாகவும் மாற்றிவிடுகிறது அதிகாரம். அது எவ்வளவு பெரிய அவலம்.
கழுகின் அதிகாரத்தைச் சித்தரிக்கும் கதிர்பாரதி ‘அங்கிங்கெனாதபடி ஓடும் அணில்’ என்னும் கவிதையில் அணிலின் சுதந்திரத்தைப்பற்றியும் சித்தரிக்கிறார். பூங்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் தாவிக் குதித்தோடுகிறது அந்த அணில். சரசரவென வாதம் மர உச்சிக்கு ஏறுகிறது. அங்கிருந்து குதித்து சிதறிக் கிடக்கும் வாதம் விதைகளைக் கொறிக்கிறது. அருகில் விளையாடும் சிறுமியைக் குறுகுறுவெனப் பார்க்கிறது. பிறகு அந்தச் சிறுமியைப் போலவே தானும் தாவிப் பார்க்கிறது. வாழைமரத்தில் ஏறி வாழைப்பூவை முகர்ந்து பார்க்கிறது. நெருங்கி உட்கார்ந்திருக்கும் காதலர்களைப் பார்க்கிறது. மரத்தடியில் மல்லாந்து உறங்கும் மனிதர்களையும் பார்க்கிறது. உதிர்ந்து கிடக்கும் மலர்களையும் பார்க்கிறது. எல்லா இடங்களிலும் நின்றுநின்று பார்த்துவிட்டுக் கடந்துபோகும் அணிலைச் சித்தரிக்கும் போக்கில் ஒற்றைக்கணத்தில் புற உலகத்திலிருந்து நம் அக உலகத்துக்குள் அந்த அணில் தாவி விழுந்துவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் அணிலாகிவிடுகிறோம். நம் வாழ்க்கை அணில் வாழ்க்கையாகிவிடுகிறது. அணில் வாழ்க்கை என்பதால்தான் அது கழுகால் அனுமதிக்கப்பட்ட வாழ்க்கையாகவும் சுதந்திரமான வாழ்க்கையாகவும் இருக்கிறது.
தனிமையின் துயரைச் சித்தரிக்கும் கதிர்பாரதியின் கவிதை பாரதியாரின் ’ஓடி விளையாடு பாப்பா’ என்னும் வரிக்கு எதிர்முனையில் இருக்கிறது.
மாநகர வாழ்வின்
கண்டிஷன்ஸ் அப்ளைகளுக்குப் பிறந்த மகனொருவன்
சிறகு முளைத்த பந்தை
யாருமற்ற தன் வீட்டின் அறைச்சுவரில்
அடித்து அடித்து விளையாடுகிறான்.
அந்தப் பந்து
அவனுக்கும் தனிமைக்குமாகப்
போய்த் திரும்பி
திரும்பிப் போய்
ஓய்கிற வேளையில்
வந்தே விட்டது
மற்றும் ஓர் இரவு
குழந்தைகள் கூட்டம்கூட்டமாக விளையாடி மகிழ்ந்ததெல்லாம் இன்று இறந்த காலமாகிவிட்டது. பள்ளியையும் படிப்பறையையும் மறந்து தோப்புகளிலும் குளக்கரையிலும் ஆற்றங்கரையிலும் கோவில் மண்டபங்களிலும் விளையாடி களிப்பில் ஆழ்ந்ததெல்லாம் ஒரு காலம். படிப்புக்கென ஒரு நேரத்தை வகுத்துக்கொண்டு எஞ்சிய நேரத்தையெல்லாம் ஆடிக் கழித்து மகிழ்ந்ததெல்லாம் வேறொரு காலம். சுதந்திரமான மானாக துள்ளித் திரிந்த காலம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இன்று எல்லா இடங்களிலும் தனிமை பரவியிருக்கிறது. யாரும் யாருடனும் இல்லாத அவலம். மாநகரத்திலோ அந்த அவலம் இன்னும் அதிகம். எண்ணிக்கையின் அடிப்படையில் மக்கள் தொகை மிகுதியான நகரில் யாரும் யாருடனும் இல்லாத தனிமையே மாபெரும் துயரம். பாதுகாப்புக்காக பூட்டப்பட்ட வீடுகளில் தனிமையில் தனக்குத்தானே விளையாடி பொழுதைக் கழிக்கும் குழந்தைகளை நினைக்கவே பாவமாக இருக்கிறது. முதுமைத்தனிமையை மட்டுமே இதுவரை பேசி வந்த உலகம் குழந்தைத்தனிமையை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது. பொழுதைப் போக்குவதற்காக ஓர் அறையில் அல்லது ஒரு கூடத்தில் தனிமையில் தனக்குத்தானே சதுரங்கம் ஆடிக்கொள்ளும் முதியவர்களைப்போல, இப்போது அடுக்ககக்குழந்தைகள் பூட்டப்பட்ட அறைக்குள் தனிமையில் ஆடி பொழுதைப் போக்குகின்றன. குழந்தை அடிக்கும் பந்தை மறுமுனையில் ஓர் ஆளாக நின்று வாங்கித் திருப்பி அனுப்புகின்றன சுவர்கள். வீடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தும் சுவர்கள், தனிமையில் ஆடும் குழந்தைக்கு உயிரில்லாத் துணையாக மறுமுனையில் நின்று ஆடுகின்றன. மாநகரம் முழுதும் கோடிக்கணக்கான சுவர்கள். கோடிக்கணக்கான குழந்தைகள். ஒவ்வொரு சுவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு குழந்தை ஆடிக்கொண்டிருக்கிறது. சுவரைவிட்டு வெளியே வந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் பல குழந்தைகளின் துணை கிடைக்கக்கூடும். ஆனால் பாதுகாப்புச்சுவர்களை விட்டு கடந்துவரத் தெரியாத பரிதாபத்துக்குரிய குழந்தைகள் அவர்கள். பாதுகாப்பு என்னும் அம்சமே வாழ்வின் மிகப்பெரிய ஆனந்தத்தை குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டதென்னும் உண்மையை உணராத மாநகரம் இன்னும் இன்னும் என சுவர்களைக் கட்டியெழுப்பியபடி இருக்கிறது. கண்டிஷன்ஸ் அப்ளை விதிகளைக் கொண்ட விண்ணப்பங்களில் கையெழுத்திட்டு கடன் பெறும் மாநகரவாசிகளுக்காக அடுக்ககங்கள் உருவானபடியே உள்ளன.
’உன்னையொன்று கேட்பேன்’ என்னும் கவிதை மானுட மனத்தைத் தகவமைப்பதில் ஊடக பிம்பத்துக்கு இருக்கும் ஆற்றலைச் சுட்டிக் காட்டுகிறது. திரைப்படத்தைப் பற்றி எதுவுமே அறியாத ஒரு கிராமத்துக்குள் தன்னை ஒரு திரைப்படம் எடுப்பவனாக அறிமுகப்படுத்திக்கொண்டு நுழையும் ஒருவனைப்பற்றிய அயல்நாட்டுப் படமொன்றை இக்கணத்தில் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.  சுருள் இல்லாத படப்பெட்டியை ஓடவிட்டு, அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அப்பெட்டியின் முன்னால் நிறுத்திவைத்து தம்மைப்பற்றிப் பேசச் சொல்வான் அந்த இளைஞன். அவனுடைய பொய்மையைப்பற்றி எதுவுமே அறியாத கிராமத்தினர் கடவுளின் முன்னால் நிற்க நேர்ந்ததைப்போல நினைத்துக்கொண்டு கண்ணீர் மல்க ஒவ்வொருவரும் தன் மனத்தைத் திறந்து பேசத் தொடங்குவார்கள். மின்ஊடகத்தின் வலிமை கற்பனைக்கு எட்டாததாக உள்ளது. ஊடகத்துடன் மானுடன் உருவாக்கிக்கொள்ள விழையும் உறவு வியப்பூட்டக்கூடியது. அந்த உறவுப்பின்னலின் சிக்கலை கதிர்பாரதியின் இந்தக் கவிதை வாசகர்களுக்கு உணரவைக்கிறது என்றே சொல்லலாம். உன்னையொன்று கேட்பேன் என்பது ஒரு பாடல். அப்பாடலுக்கு வாயசைத்து நடிக்கிறாள் ஒரு நடிகை. அந்த நடிகையின் முகவசீகரம் பார்வையாளனை அந்த வரிக்குப் பதில் சொல்லத் தூண்டுகிறது என்பதுதான் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம். சக மனிதர்களின் கேள்விகளையும் உறவையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்கிறவர்களாகவே பல நேரங்களில் நாம் இருக்கிறோம். அதே சமயத்தில் ஒரு பிம்பம் முன்வைக்கும் பாவனைக் கேள்விக்கு மனமுருக, உயிருருக பதில்களை நம் ஆழ்மனம் மறுநொடியே முன்வைத்துச் செல்வதில் வேகம் காட்டுகிறோம். ஆச்சரியமான இந்த முரண் மிகப்பெரிய சமூக ஆய்வுக்குரியது.
’அலறி ஓடும் மவ்னம்’ கவிதை அதிர்ச்சியும் துயரும் கலந்த ஒரு சித்தரிப்பு.
இருபது நிமிடங்கள் நகர்வதற்கு முன்பு
தூக்கிலிட்டுக்கொண்டவளின் பொருட்டு
அறையை அறைந்தறைந்து கலங்குகிறது
அலறும் செல்பேசி .
நேற்றைய ஊடலை நேர்செய்வதற்கான
காதலன் முத்தம் தேங்கி நிற்கிற
அந்த செல்பேசிக்குள் சாபமென நுழைகிறது
அவன் அனுப்பிய அந்தரங்கக் குறுஞ்செய்தி
இனிப்புப்பண்டங்களின் மீது ஊர்கிற எறும்புகள்
தற்கொலையின் கசப்பைச் சுமந்து தள்ளாடுகின்றன
திரும்ப இயலாத அகாலத்துக்குள்
சிக்கிக்கொண்டு திணறுகிற அந்த அறையை
காற்று திறக்க அலறிக்கொண்டு ஓடுகிறது
விக்கித்து நின்ற மவ்னம்
கதிர்பாரதியின் கூறுமுறையில் உள்ள கருணையில்லாத விலகல் தொனி இக்கவிதையை செதுக்கிவைத்த சிற்பமாக்கிவிடுகிறது. தூக்கில் தொங்கி மரணமடைந்துவிட்டவளிடமிருந்து நேரிடையாகத் தொடங்கிவிடுகிறது கவிதை. செல்பேசி அலறுகிறது. எடுக்க ஆளில்லை. ஒருமுனையில் உயிரற்ற உடலாக சொற்களை உதறிக் கடந்து சென்றுவிட்ட ஒருத்தி. மறுமுனையில் சொற்களையும் முத்தங்களையும் ஆறுதல்களையும் கொட்டுவதற்குத் தயாராக உள்ள ஒருவன். அவனுடைய மன்றாடல்களாக அலறுகிறது செல்பேசி. திறந்துவைக்கப்பட்ட இனிப்புப்பண்டம் அழுத்தமான ஒரு படிமம். உண்டு மகிழவென வாங்கிவந்த இனிப்பு தின்னப்படாமலேயே எறும்புகளுக்கு உணவாகிவிடுகிறது. கலந்து மகிழவென தொடங்கிய வாழ்க்கை வாழப்படாமலேயே மரணத்தில் முடிந்துபோகிறது. அதைப்பற்றி அதிகம் பேசிவிடக்கூடாது என்பதில் கதிர்பாரதி காட்டும் எச்சரிக்கையுணர்வு மிகமுக்கியமானது. அந்தத் தருணத்தை மிகவிரைவாகக் கடக்க நினைப்பவர்போல அடுத்த வரிக்குச் சென்றுவிடுகிறார். இறந்து தொங்கும் உடல், அலறித் துடிக்கும் செல்பேசி, எறும்புகள் உண்ணும் இனிப்பு என ஒவ்வொன்றாகக் காட்டி நகரும் கவிதை இறுதியில் அரூபநிலையில் அங்கு தேங்கியிருக்கும் மெளனத்தின் நிலையைக் காட்டி நிறைவெய்துகிறது. ஓர் உயிருள்ள ஆகிருதியாக மெளனம் அக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் மூழ்கிவிடுகிறது. துன்பம் கொள்கிறது. துயரத்தின் பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துடிக்கிறது. இறுதியாக காற்றின் கருணையால் திறந்த கதவின் வழியாக வெளியேறிவிடுகிறது. அந்த மெளனம் ஏன் அலறியடித்துக்கொண்டு ஓடவேண்டும் என ஒருகணம் நினைத்துப் பார்க்கும்போது கவிதையின் ஆழம் நமக்குப் புலப்படுகிறது. அந்த மெளனம் அந்த அறையில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அந்தக் காதலர்கள் சிரித்து மகிழ்ந்ததையும் முத்தமிட்டுக் கொண்டதையும் பேசிக் களித்ததையும் ஒரு சாட்சியாக எப்போதும் பார்த்து வந்திருக்கிறது. இயல்பில்லாத முறையில் நிகழ்ந்துவிட்ட மரணத்தை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதையும் தடுக்கமுடியாமல் ஒரு சாட்சியாக நின்று பார்க்க நேர்ந்த துக்கத்தின் வேதனையிலிருந்தும் அதனால் தப்பிக்க முடியவில்லை. அந்த அலறலுக்கான காரணம் அதுதான். ஒருபுறம் செல்பேசியின் அலறல். மறுபுறம் அனைத்துக்கும் சாட்சியான மெளனத்தின் அலறல். ஓர் அலறலில் தொடங்கும் கவிதை இன்னொரு அலறலில் முடிவடைகிறது. வாசிப்பின் முடிவில் துயரத்தை நோக்கித் தள்ளும் அனுபவமே இதை கவிதையாக்குகிறது.
தொகுதி முழுதும் இப்படிப்பட்ட நுண்சித்தரிப்புகளைக் கொண்ட பல கவிதைகள் உள்ளன. கதிர்பாரதி வரிகளில் விவரித்திருக்கும் உலகுக்கு இணையாக இன்னொரு உலகத்தை வாசகனுக்குள் உருவாக்கும் ஆற்றல் கதிர்பாரதியின் கவிதைகளுக்கு இருக்கின்றன. ஒருவகையில் கதிர்பாரதியின் கவிதைமொழி மாயாஜால வித்தைக்காரனின் கையில் இருக்கும் அழகான வண்ணத்துணியை ஒத்திருக்கிறது. ஒருமுறை மடித்துவிட்டுப் பிரிக்கும்போது அது இதழ்கள் விரிந்த மலராகத் தோற்றமளிக்கிறது. இன்னொருமுறை அழகான குடையெனத் தோற்றமளிக்கிறது. அடுத்தமுறை சிறகுகள விரித்துப் பறக்கக் காத்திருக்கும் பறவையெனத் தோற்றமளிக்கிறது. கணம்தோறும் மாறிமாறித் தோற்றமளிக்கும் காட்சிகள் வாசகனின் மனவுலகில் விரிந்துவிரிந்து கற்பனைகளைத் தூண்டியபடி இருக்கின்றன. இந்தக் கற்பனைகளே கதிர்பாரதியின் கவிதைகள் வழங்கும் செல்வம் அல்லது கொடை.

(ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள். கதிர்பாரதி கவிதைகள். உயிர்மை பதிப்பகம். 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை. ரூ.85)