29 December, 2009

ததும்புகிறது @ ததும்புகிறான்

நிறைந்து ததும்புகிறதுன் யவ்வனம்

பட்டாம்பூச்சியின் மென்சிறகு
மல்லிகையின் ரம்யம்
முற்றிய நிலவின் கிரணங்கள்வரைக் கூட
நீண்டிருக்கிறது
அதன் ஆளுமையின் வசீகரம்

யவ்வனத்தின் கரத்திலிருக்கும் மந்திரக்கோல்
காலங்களை மெலிதாக்கி ஆசிர்வதிக்க
பருவங்கள் நிறம்கொள்ளத் துவங்குகின்றன

சுழித்தோடி நுரைத்துப் பொங்கும்
நதியில் எதிர்நீச்சலில்
புனல் கீறி முன்னேறும் படகுக்கு
உன் யவ்வனத்தின் பெயர் வைக்கலாம்

மலைப்பாதை வளைவுகளின்
அபாயம் குறித்து அலட்டிக்கொள்ளாத
யாத்ரீகனின் மோனத்துக்குத் தள்ளும்
அதன் லாகவம் நகர்த்துகிறதவனை
பூக்களாகவும் தற்கொலைமுனையாகவும்
இருக்கும் உச்சம் நோக்கி

-அகநாழிகை

குளம்

புணர்ச்சிக்குப் பரிச்சயமான யோனியை
மிருதுவாய் மலர்த்தி
அதிரப் புணர்கையில்
மேலெழும்பி மிதக்கும் இசையை
ஒத்திருக்கிறது
தவளைகள் தத்தித்தத்திச் செல்ல
ஒலிஎழும்பி அலைமோதும்
மாரிக்கால குளம்

18 December, 2009

நீர் சொட்டும் ஈரக்கூந்தலோடு
நீ சுற்றி வரும் துளசிமாடத்தைக்
கடந்துபோன கணத்தில்தான்
எனக்குள் தொற்றிக்கொண்டது
கடவுள் பயம்

17 December, 2009

அடித்து நொறுக்கி
வாகாய் பெட்ரோல் ஊற்றி
உனை எரியூட்டிக்கொண்டிருக்கும்
கணத்தில் இதழில் தண்ணென்று
முறுவலேந்தி
ஒரு தம்ளர் தண்ணீரோடு
நிகழ்ந்தாய் நீ
சுவாசத்தில் புகைபோல
வெளியேறிக்கொண்டிருந்தது
ஏதோ ஒன்று
கோபத்தின் சாயலோடு

16 December, 2009

காக்கைகள்

கறுப்பும் சாம்பலும் முயங்கிப் பெற்ற
வண்ணத்திலிருக்கும் காக்கைகளை
ஒற்றுமையின் படிமமென
ஒத்துக்கொள்ள மறுதளிப்பான் சின்னதுரை

இரைக்கு அடித்துக்கொள்ளும்
காக்கைகளை முன்னிறுத்தி
உழைக்காது சுற்றி வரும் காக்கைகள்
இருக்கவே செய்கின்றன ஊர்ப்புறத்தே
கண்ணசரும் வேளையில் எத்திப் பிழைக்க

லாபமாயின் காக்கைகள்
தயங்கவே தயங்காது
பிணங்களின் துர்நாற்றத்தையும்
பங்கிட்டுக்கொள்ள

காக்கைகளுக்காய்க் கசிந்துருகும்
குழந்தைகள் அறியக்கடவது
பாட்டியின் சோகம்

வடகம் திருடும் காக்கையைச் சாக்கிட்டு
வசைபெய்யும் சந்திராவால்
பக்கத்து வீடு காயப்படும் முப்போதும்

காக்கைகளைக்கூட மன்னிக்கலாம்
காக்கா பிடித்து காரியம் செய்பவனை
என்ன செய்வது
ம்ம்ம்ம்.... இருக்கின்றனவே
கல்யாண வீடு துஷ்டி வீடு
பேதமறியாது
எச்சிலைக்காகவே
சில காக்கைகள்


ஆதவன் ஒளி புகத் தயங்கும்
ஆழ்கடல் மவ்னத்தை
நிராகரிப்பின் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு
அடைத்து வைத்திருக்கிறாய்
உன் மனவறையில்
கணங்கள் கெட்டிப்படும்
அதன் வாயிலில் சூசகமாய்
தூவிவிட்டு வந்திருக்கிறேன்
சொற்களின் விதைகளை
கதவிடுக்கில் கசிந்து பரவும்
ஈரத்தின் தாய்மையில்
வேர்க்கிளைத்துவிடாதா
நமக்கான மொழி

10 December, 2009

நின் நினைவுகள்

நித்தம் புணர்கின்றன என்னை
வன்புணர்ச்சியின் ஆதிக்கத்துக்கு
சற்றே குறையும் அதன் ஆலிங்கனத்தில்
மனம் கிலேசமுறுவதை மறுப்பதற்கில்லை
உள்ளங்கால் நீவி உந்திச்சுழி கடந்து
மார்பு ரோமம் கோதி கழுத்துப் பள்ளம் நிறைத்து
உச்சந்தலையில் மய்யமிடும்
பரத்தையின் உதடுகளாய்
புலன்களைத் திரும்பிப் படுக்க வைக்கின்றன
வாலை இடவலம் சுழித்தபடி
நீந்திப் பரவி நதிக்குக் கிளர்ச்சியூட்டும்
சிலேப்பி மீன்களுக்கு உவமையாக்கலாம்
உன் நினைவு முயங்கும் தீவிரத்தை
ருசிக்கு மயங்கியலையும் பூனையாய்
நானும் இயைந்து மிதக்க
அதிர்ந்து அதிர்ந்து அரங்கேறுகிறது
ஒரு திருவிழா கொண்டாட்டம்
இருள் விலக்கி பகலில் எண்ணுகையில்
நான் கொஞ்சம் செலவாகி இருந்தது
கூடவே நானும்
-இருவாட்சி பொங்கல் மலர் 2010
கொல்லைப்புற கொன்றை
முதல் பூ பிரசவித்ததாய்
நீ அனுப்பிய குதூகல
குறுஞ்செய்தியில்
ஒரு கார்காலத்தில்
குளுமை
சூல்கொண்ட முகிலென
முப்போதும் கொட்டிவிட
தயாராகவே இருக்கின்றன
உன்னிடம் சொற்கள்
அதன் ஈரம் உண்டு
முளைத்துவிடுகிறது
ஒரு கவிதை
நீர் குடைந்தாட வந்தவனை
கரையோடே நிறுத்திவிட்டது
உன் பேரழகின் பேராற்றுத்தீரம்
வேறென்ன செய்ய
ஒரு கை நீரள்ளி தலையில்
தெளித்துக்கொண்டு
பயபக்தியோடு திரும்பிவிட்டேன்

09 December, 2009

குருதட்சனை

திட்டமோ யதார்த்தமோ அவன் குறுக்கிடுகையில்
இவன் பாதை பதட்டமுறுகிறது
பாதங்கள் நடைகுளறித் தள்ளாட்டமிடுகின்றன

அவன் பவிசும் நயமும்
இவன் தன்னியல்பைக் குழைத்து
இருப்பை கேள்விக்குறியில் தொங்கவிடுகின்றன
நார்நாராய்க் கிழித்து

அவன் பூடகமௌனம்கொண்டு கல்லெறிகிறான்
காயம்பட்ட இவனின் வார்த்தைகள் துவள்கின்றன
இரத்தத்தாலும் நிணத்தாலும்

அவன் அருள்வாக்கு
இவன் கடவுளின் மென்னியைப் பற்றி நசுக்குகிறது

தலையைத் தடவி மூளையை உறிஞ்சும்
அவன் லாகவத்திடமிருந்து
வேர்களையாவது காப்பாற்றிக்கொள்ள முடியுமா...
வியர்க்கிறான் இவன்

அவன் பிரயோகிக்கும் கழிவிரக்கத்தாலும்
போலிகரிசனத்தாலும் துர்நாற்றமுறும்
இவன் நாட்களை அவனுக்குத் தெரியாமல்தான்
அகற்றியாகவேண்டும் இவன்

அதுவரைக்கும்
இவன் பட்டாம்பூச்சியின் சிறகுகள்
அவன் கண்களைச் சந்திக்காதிருக்க
வேண்டும்