23 September, 2024

விமர்சனக் குறிப்பு : கதிர்பாரதி ~ காலிகிராபி ~ சிறுகதைத் தொகுப்பு ~வரவணை செந்தில் ~

ரவணை செந்திலின் 'காலிகிராபி' சிறுகதைத் தொகுப்பை நேற்றுதான் வாசித்து முடித்தேன் (2023ம் ஆண்டு சென்னை புத்தக காட்சியில் வெளியானது) . மிக நிச்சயமாக நல்ல சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. மொத்தமான 6 சிறுகதைகளில் வாசிக்க நிறைவான 4 க்கும் அதிகமான கதைகள் இருக்கின்றன. முதல் தொகுப்புக்கான எந்த வெளிப்பாட்டுத் தடுமாற்றமும் வரவணை செந்திலிடம் இல்லை. எழுதி எழுதி வசமான தேர்ந்த கை ஒன்று இருக்கிறது அவரிடம். அதுகொண்டு நறுக்கென எழுதுகிறார்கள். தொங்குசதையற்ற மொழியும் அளவே சரியான விவரணைகளும் புதிய உவமைகளும் வாசிக்க சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

விளையாடப்போன பால்குடிப் பிள்ளை, தாய் நினைப்பு வர வந்து பால் குடித்துப்போவதை, " 'தான் ஏற்கெனவே வைத்துவிட்டுப் போனதைப்போல' உறங்கிக்கொண்டிருக்கும் தாயின் ரவிக்கை விலக்கி பால் குடித்துவிட்டுப்போவான்" என்று எழுதும் செந்தில், மம்முதன் கதையில் "அவன் கூப்பிட்டிருந்தா அவன்கூட அப்படியே போயிருப்பேன். அம்புட்டு அழகு அவன்" என ஒரு பெண் சொல்வதாக எழுதுகிறார்.

செந்திலின் கதைகளில் வரும் பெண்கள் சர்வசாதாரணமாக சோரமாக்கப்படுகிறார்கள். ஆனால், அதையே கட்டிக்கொண்டு அழாமல் கைக்கால் முகம் கழுவி அலுப்பு சலுப்பைத் துடைத்துவிடுவதைப்போல அடுத்த வேலை பார்க்கப் போய்விடுகிறார்கள். அவர்களிடம் குற்றவுணர்ச்சியும் கழிவிரக்க உணர்ச்சியும் எடுபடுவதே இல்லை. ஆண்களை அடித்து ஒதுக்கி கரப்பான்பூச்சியாக மல்லாத்திவிடுகிறார்கள். ஊர் அம்மாச்சிகள் சொல்வதுபோல... "பொம்பள நெனச்சா ஆனைய அடிச்சி சொளவுல மறைப்பா. ஆம்பளக்கி என்னத்த தெரியும்...". அப்படி ஆகிருதிகொண்ட நாகம்மாளை வாட்போக்கி கதையில் கண்டுகொண்டிருக்கிறார் செந்தில்.
வாழ்க்கை தன் இருப்பை நிறுவிக்கொள்ளவே பெண்களை இயற்கை படைத்ததோ என எண்ணவைக்கிற அளவுக்கு பெண்கள் பெரும் பாரம்தாங்கிகள்தான். ஆண்டு அனுபவித்துவிட்டு ஒரு கட்டத்தில் 'துறந்துவிட்டேன்' என வீடு நீங்கி தப்பித்து ஓடுவதெல்லாம் ஆணுக்குக் கிடைத்த தரிசனம், ஞானம் போன்றவற்றால் எல்லாம் இல்லை. சொத்தப்பய போனா போய்த் தொலையட்டும் என நினைக்கும் பெண்ணின் கருணையால்தான்... இப்படியெல்லாம் இந்தக் கதைகள் நினைத்துக்கொள்ள இடம்தருகின்றன.
ஏற்கெனவே பிரசுரமான காலத்தில் பத்திரிகைகளில் படித்திருந்தாலும் இப்போது தொகுப்பாகப் படிக்கும்போது 'மம்முதன்', 'மூங்கைப் பெருந்தவம்', 'காலிகிராபி', 'வாட்போக்கி' தலைப்பிலான கதைகள் இன்னும் விஸ்தீரணமும் விச்ராந்தியும் கூடித் துலங்குகின்றன. என் வாசிப்பு பயிற்சிவைத்துச் சொல்கிறேன் இந்த நான்கு கதைகளும் இந்தியாவின் எந்த மொழியிலும் மொழிபெயர்க்கக்கூடிய அளவுக்குச் சத்துள்ளவை.
நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் மேலெழும்பி தமிழில் புத்தம்புதிய அலையாக கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அப்படி ஓர் புத்தலையாக வரவணை செந்தில் தெரிகிறார்.
வாழ்த்துகள் வரவணை செந்தில்

No comments: