கவிஞர் - இயக்குநர் சாம்ராஜின் இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு 'ஜார் ஒழிக!'. எழுதித் தீராத மதுரையை நிகழ்விடங்களாகக் கொண்ட கதைகள் பெரும்பாலும்; ஒன்றிரண்டு கேரளா மற்றும் திருச்சியில்.'வாழ்வை இடையறாது முடுக்கும் இயக்கி பெண்கள்தான். அது நேர்மறை அல்லது எதிர்மறை என்ற எந்த விளைவாக இருக்கட்டும். அவர்களின் தலையீடு குறைவான எதிலும் சூடும் சுரணையும் கொஞ்சம் மட்டம்தான்...' என்ற முடிவுக்கு இலகுவாக நகர்ந்துவிடக்கூடிய வாய்ப்பைத் தரும் கதைகள்.
ஆனால், அதே அவர்கள்... வாழ்வின் தீரா இன்னலுக்கு உள்ளாவது ஏன்? நெஞ்சுக்கு நெஞ்சாகத் துயர் வந்து அவர்களைத் தாக்குவது எப்படி? இடிவாங்கி பிளவுண்ட மரம்போல கொதிமனம் கொண்டு அலைவது எதனால்? கண்ணீருக்குத் தெரியாமல் தேம்புவது யாரால்?
என்றெல்லாம் கேட்டுக்கொண்டால் சமூகம் அவர்களுக்கு அப்படித்தான் முகம் காட்டுகிறது எனவும் பதில் சொல்கின்றன இந்தக் கதைகள். காவியம் தொட்டு நவீனக் காலம் வரை இதுதான் பெண் கதி; வாழ்வு.
சாம்ராஜ் |
நளாயினிக்கு நிகர் துயர்கொண்ட பாத்திரம் செவ்வாக்கியம். அவளுக்கு எதிர்நிற்க முடியாமல் நடுங்குகிறது முத்திருளாண்டி ஆண் தனம். பாலியல் சுரண்டலுக்கு எதிரான பரமேஸ்வரியின் தாட்டியம், சீண்டலுக்கு இன்முகம் காட்டும் லட்சுமி அக்காளின் அலட்சியம், மல்லிகாவின் சினிமா மோகம், மரியபுஷ்பத்தின் தீராத்தேடல், கோமதியின் மந்தகாசம்... யாவும் சொட்டச் சொட்டத் துயரங்கள். எனினும் சகித்துக் கடக்கிறார்கள்.
காயமுற்றவர் பக்கம் கருணையாக இருங்கள். ஏனெனில் அதுதான் அவர்கள் வரலாறு. உடைந்தவர் ஒன்றும் ஒடிந்துபோவதில்லை; துளிர்க்கிறார்கள். வெறுங்காலோடு நடந்து கடக்கிறவர்கள் எழுப்பும் புழுதிக்கு வலிமை அதிகம்... என்பனவெல்லாம் இந்தக் கதைகளின் உள்ளோடும் உண்மைகள்.
இவை எல்லாம் தாண்டி அவர்களைத் தூண்டி துலங்கச் செய்வது எது? 'அவர்கள் நகர்த்தியாக வேண்டிய கட்டாய வாழ்க்கை' என்கிறார் சாம்ராஜ். வானம் இல்லாத ஊருக்கு யாராலும் போய்ச் சேர முடியாது எனப் புரிந்துகொள்கிறேன் நான்.
வேறு ஒன்றும் இல்லையா என்றால்... இடதுசாரிப் புரட்சி இந்திய மண்ணில் எப்படித் தொழில் படுகிறது? அதைச் சொந்த வீட்டுக்கு ஒட்டடை அடிக்கும் அவஸ்தையோடு சொல்லப்படும் கதைகளும் இருக்கின்றன.
பிரியத்துக்குரிய ஆசிரியை நம் காதுமடல் திருகித் தண்டிக்கும்போது வலியில் ஒரு சூடு பரவும் அல்லவா... அப்படி கதை சொல்கிறார் சாம்ராஜ். அதில் எள்ளல் துள்ளல் பகடி எல்லாம் அவர் இழுத்தவாக்கில் வந்துபோகின்றன.
'பட்டாளத்து வீடு' சாம்ராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு.