21 September, 2024

கவிதை ~ அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது ~ உயர்திணைப் பறவை ~ கதிர்பாரதி

30
கக்கடைசியில்
ஏர்வாடி தர்க்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலி பிணைத்து அழைத்துப்போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.


29

 வெள்ளிக்கிழமை அன்று
அம்மா பூண்டிருப்பது
மௌனமா
விரதமா
தனிமையா எனத் தெரியாது
அன்றைய மதிய உலை
கொதபுதா என்று கொதிய
வேடிக்கை பார்ப்பாள்.


28
அம்மாவின் காதோரச் சுருள்முடியிடம்
அப்பாவுக்கு இருந்த பயபக்தி
என் மீசை முறுக்கிவிளையாடும்
மனைவியிடம் இல்லை
அதாவது
சுத்தமாக இல்லை.

27
தனியாக
பிறந்த வீடு போகும்போது
அடி இமையில் மிருதுவாக
மை தீற்றுவாள்…
அம்மாவோடு போகும் அதிபெண்ணே
இத்துணை நாளாய்
அவள் இமையிலா இருந்தாய்
நீ?

26
எல்லாத் துயரங்களையும்
சிறுசுடராக்கி
அகலில் ஏற்றி
மாடக்குழியில் வைத்துவிட்டு
வீட்டுக்குள் போகிறாள்
அம்மா.
அவள் கடக்கவிரும்பாத இரவு
வந்துகொண்டிருக்கிறது
முன்புபோல.

25
புகைப்படத்தில்
அப்பாவுக்குப் பின்னால் நிற்கும் அம்மா
இக்கரையில்
இருந்து
அக்கரைக்கு
ஒற்றை ஆளாய் நீந்திக் கடந்தாள்
ஆற்றை.
சத்தியமாக அது ஆறு இல்லை
என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

24
தெருக்குழியின் நாள்பட்ட மழைநீரை
நக்கிக் குடித்தது பூனை.
‘இந்தப் புலிக்கு என்னாச்சு
பூனைபோல நக்கி நக்கிக் குடிக்குது’
என்றாள் அம்மா.
நொடியில் பூனை புலியாகும் `அ’வித்தை
அம்மாவுக்குத் தெரியும்.

23
மனைவிக்குக் காத்திருந்தேன்
மின்சார ரயில் நடைமேடையில்.
`ஏன்ப்பா நிக்கிற குந்து’ என்றாள்
சிமெண்ட் பலகை காட்டி
யாரோ ஓர் அம்மா.
என் அம்மா பக்கத்தில்
குந்திக்கொண்டேன்.

22
Top of Form
இலைகளோடு
இரண்டொரு வேப்பம் ஈக்கிகள் ஆய்ந்து
தலையில் செருகிக்கொண்டு
ஓர் உருமநேரத்தைக் கடந்தாள்
அம்மா.

அவள் பொன்மூக்குத்தி
வேப்பம்பூவாக மினுக்கம் காட்டியது.

21
Top of Form
`நீ போ
இந்த அநாதை மேகத்தை
வீட்டுக்கு அனுப்பிட்டு வர்றேன்’ என்று
சொன்னபோது
முதன்முறை
அம்மாவைப் பார்க்க
பயமாக
இருந்தது.

20
அயிரை மீன் என்றால்
அம்மாவுக்குக் கொள்ளைப் பிரியம்.
குமுளி நீரில் அவள் கால் நுழைக்க
கொலுசுபோல சூழும் அயிரைகள்.
பிறகு
தாவாக்கட்டை பிடித்து
செல்லம்
கொஞ்சுவாள்
முகத்தில் மொய்க்கும்
அயிரைகள்.

19
ஐந்து வயது வரை
வாய்ப்பேச்சு வரவில்லை
நாக்கில் அலகு குத்தி
அம்மனுக்குக் காவடி தூக்கினாள்
அம்மா.
அவள் குருதியில் இருந்து
பெருகியதுதான்
என் எல்லா வார்த்தைகளும்.

18
முளைப்பாரி கும்மியில்
இரண்டு தட்டு
மூன்று தட்டு
நான்கு தட்டு என
கைவளையை மேலே ஏற்றிவிட்டு
வேகம் கூட்டுவாள் அம்மா
என் குரல்வளை நெரிபட… நெரிபட…
Top of FormTop of Form

17

கர்ணனுக்கு
மனைவி பரிமாறாத உணவை
அப்பாவுக்குப் பரிமாறினாள் அம்மா.
நானும் தம்பியும்
அப்பா தோளில் உட்கார்ந்து உண்ட
கவசக்குண்டலங்களாக இருந்தோம்.
அம்மாவை நிரம்பப் பிடித்த
அப்பத்தா சொன்ன சித்திரம் இது.

16
Top of Form
நான்கு முறை அம்மாவுக்குப்
பேய் பிடித்தது.
எருக்கம்விளாரால் விளாசினார் பூசாரி.
வலி மீறி சிரித்த அம்மாவை
மிகவும் பிடித்த தருணம் அது.
வழிந்து பெருகிய கண்ணீரைத்
துடைத்துக்கொண்டேன்.

15
Top of Form
உடலுக்குள்
கனன்று
குமைந்து எரியும்
ஆற்றங்கரைச் செங்கல்சூளை.
நிலைத்த விழிகளோடு பார்த்த அம்மா
வீடு வந்து சேர்ந்த பிறகு
தலைக்குத் தண்ணீர் ஊற்றுகிறாள்
குளிரவே இல்லை
அவளது தாவரம்.

14
யாரும் புழங்காத ஒழுங்கையில்
அக்கம்பக்கம் நோட்டம்விட்டு
சுருட்டு குடிப்பாள் அம்மா.
அப்போது அவள் வெளியிடும்
மீச்சிறு மேகம் பொழிந்த கருணையில்
துளிர்கொண்ட சுள்ளி நான்.
அல்லது
அம்மாக்கள் வாழ்வில் அப்பன்களுக்கு
பெரிதாய் ஒன்றும் வேலை இல்லை.
மற்றும்
வேலையே இல்லை.

13

உச்ச வெந்நீரில்
உயிர்ச்சேவலைத் தலைக்குப்புற அமுக்கி
பிள்ளைகளுக்கு
விருந்தமுது படைக்கும் அம்மா
மானாவாரிக் கொல்லைத் துவரை
மஞ்சள் நிறப் பூ பூத்து
காய்த்து
கனிந்து
`நெத்து`ப் பருவம் அடைந்துவிட்டது
உன்போலவே.

12

நான் கடித்த
எச்சிற்பழம்
அம்மா.

11
சற்று அன்னாந்து
பின்வழியும் கூந்தல் லாவி
கீழது மேலாக மேலது கீழாகச் சுழற்றி
கொண்டை வனைந்து
கடைசிக் கூர்நுனியை
கட்டைவிரல்கொண்டு உள்ளுக்குள்
நீ செருகும்போது
தொண்டைக்குழிக்குள் கத்தி இறங்கியதுபோல்
இருந்தது அம்மா.

10
வயலில் கால்கள் புதைய
நாற்றுநடும் அம்மாவைப் பார்த்திருக்கிறேன்…
தன்னைப் பிய்த்துப் பிய்த்துச்
சேற்றில் ஊன்றுவாள்.
பின்னொரு பருவத்தில்
அவள் உடலை அறுவடைசெய்து
பசியாறுவோம்.

9     
சினைப்பசு அடிவயிற்றை நீவி நீவி
உண்ணிப்பூச்சிகளைத் தறித்துப்போடும்
அம்மாவின் கைகளில் ஒன்று
என்னோடு இருந்திருந்தால்
அதன் சுண்டுவிரலை இறுகப்பற்றி
திரும்பிப் பார்த்து, புருவங்கள் நெரித்து
`என்ன?’ என்று வாழ்க்கையை
ஒரு கேள்வி கேட்டிருப்பேன்.

8

பால்குடி மறக்க
கற்றாழைச் சாற்றைக் காம்பில் இழுவி
முலை ஈந்த அம்மா
வாழ்வின் முதற்கசப்பையும்
உன் உடலில் இருந்தே
அருந்தப்பெற்றேன் என்பதையாவது
சொல்லிவிடுகிறேன்.

7

அந்தியில் இருந்து இறங்கி
ஒத்தையடிப் பாதையில்
அம்மா வந்துகொண்டிருந்த ஒரு சித்திரம்
மனதில் இருக்கிறது.
அந்நேரம் அவள் நேர்வகிட்டில்
நானும் ஒரு பேனாக
இறங்கி வந்துகொண்டிருந்தேன்.

6
அம்மாவின் வெளிர்நீலச் சேலையை
ஒருமுறை சொப்பனத்தில் கண்டேன்
நதிபோல் அது நெளிந்துகொண்டிருந்தது
மீன்குஞ்சுபோல் நானதில் நீந்தினேன்.

5
`மங்கும்போது மா பெருகும்
பொங்கும்போது புளி பெருகும்` என
நீ பேசிக்கொண்டிருந்தபோது
நம் வீட்டு மனைப்பாம்பு
உனையே பார்த்துக்கொண்டிருந்ததை
நான் பார்த்தேன் அம்மா.

4
சாயுங்காலக் கோடை .
திருகையில் இட்டு
உளுந்து உடைக்கையில்
உன் அம்மா வந்தாள் அம்மா
அப்போது அவளைக்
கட்டிக்கொண்டு அழுதாயே
அந்தத் திருகைமீது
என் மகள் அமர்ந்திருக்கிறாள்
அவள் மூக்குத்தி மினுங்குகிறது.

3
நெடுநாள் கழித்து
வீடு திரும்பும் மூத்தமகன்
குறுக்குவிட்டம் பார்த்து
`அம்மா` என மறுகுகிறான்.
கண்கள் கண்ணீரில் பளபளக்கின்றன.
சுருக்கில் இருந்து
கழுத்தைத் தளர்த்திக்கொண்டு
கீழிறங்கிவந்த அம்மா,
மூக்கை உறிஞ்சியபடி
`வாப்பா இப்பதான் வந்தியா
இரு சோறு போடுறேன்` என்கிறாள்.

2
சாரையும் நாகமும் பிணையல் போடும்
வைக்கோல் போர்த் தோட்ட
சீமைக்கருவேல மரத்தடியில்
அழுதபடி
ஓரிரவு முழுக்க
தனித்துப் படுத்திருந்தாயே ஏன் அம்மா?
நீயும் பார்த்தாய்தானே நிலவே...

1
சிறுவயதில் மண்டை உடைந்து
கதறியபடி
வீட்டுக்கு ஓடிவரும்போது
அய்யோ எம்புள்ளக்கி
`சேசுநாதர் சாமிக்கி ஊத்தன்ன
ரத்தம் ஊத்துதே’ எனப் பதறி                                                                            
மாராப்பால் காயம் பொத்தினாள் அம்மா.

எந்நேரத்திலும் பிள்ளைகளைக்
கடவுளாக்கிவிட முடிகிறது அம்மாவால்.
கடவுளருக்குத்தான்
இங்கிதமில்லாமல் மண்டை உடைந்துவிடுகிறது.

No comments: