15 April, 2013

, ”நினைவுகள் அழிவதில்லை’’

என் இனிய நண்பர் நா.வே.அருள் செல்பேசியில் அழைத்து, ”நினைவுகள் அழிவதில்லை’’ என்கிற படத்தில் நான் ஒரு பாட்டு எழுதி இருக்கிறேன். என் நண்பர் பகத்சிங் கண்ணன்தான் இயக்குனர். நாளைக்கு (14.04.2013) படம்பார்க்க வரமுடியுமா என்று கேட்டார். நா.வே.அருளின் நட்புக்காகவே தாராளாமாக வருகிறேன் சொல்லிவிட்டுப் படத்துக்கும் போய்விட்டேன். பிரிட்டிஷ் இந்தியாவில் கேரளாவின் கையூர் விவசாயிகள் உள்ளூர் நிலச்சுவந்தார்களை எதிர்த்து நடத்திய போராட்டமும் அதன் விளைவால் நான்கு இளைஞர்கள் தூக்குத்தண்டனைக்கு உள்ளானதைச் சொல்லும் நாவல் நினைவுகள் அழிவதில்லை. அதே பெயரில்தான் படமாக்கி இருந்தார் பகத்சிங் கண்ணன். லண்டன் வரைக்கும் எதிரொலித்த கையூர் விவசாயிகள் போராட்டம்தான் கதை. ஜனரஞ்சக சினிமாவுக்குரிய எந்தத் துருத்தலும் இல்லாத இந்தச் சினிமாவைப் பார்க்க மகிழ்ச்சியாகவே இருந்தது. சுட்டிக்காட்டவும் தட்டிக்கொடுக்கவும் குறை - நிறைகள் நிறைய இருந்தாலும், முந்தைய தலைமுறையின் போராட்ட வாழ்வை படமெடுக்கவும் அதனால் ஏற்படப் படப்போகும் பொருளாதாரச் சிரமங்களை ஏற்றுக்கொள்ளவும் சித்தமாக இருக்கும் இயக்குனர் பகத்சிங் கண்ணனை நினைக்க பெருமையாக இருந்தது. இதுபோன்ற படங்களை பார்வையாளர்கள் கைத்தட்டி ரசித்ததும் வியப்பான அனுபவம். நண்பர் நா.வே.அருள், இயக்குனர் பகத்சிங் கண்ணன் மற்றும் பட்க்குழுவினர் அனைவரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். நம் முன்னோர்களின் போராட்ட வரலாறுகளை அறிந்துகொள்வதற்கான தூண்டுகோல் இந்தப் படம். (இயக்குனர் சார்.. பண்ணையாரின் அடிபொடியாக நடித்த நண்பர் யார்? அவர் நடிப்பு அட்டகாசம்!)

விமர்சனம் ~ காதலை புறங்கையால் தள்ளிவிடும் கவிதைகளை தீராக் காதலுடன் எழுதித் தீர்க்கிறது கதிர்பாரதி பேனா. ~ எழுத்தாளர் வா.மு.கோ.மு

இயல்பாகவே கவிதை தொகுப்புகளை நான் வருடத்தில் மூன்று மட்டுமே படிக்கும்
வழக்கம் கொண்டவன். படிக்கத்துவங்கிய காலத்தில் கவிதை தொகுப்பு தவிர
எதுவும் படிக்க மாட்டேன். எல்லாம் காலத்தின் கோலம் எனலாம். இவ்வருட
துவக்கத்தில் வே.பாபுவின் “மதுக்குவளை மலர்” படித்து கவிதைகளின் உச்சபட்ச
சாத்தியக்கூறுகளைக் கண்டு அதிசயித்துப் போனேன். அதன் பிரமிப்பிலிருந்து
விடுபடாமல் நான் இருக்கையில் கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுதி கைக்கு
வந்து விட்டது. கவிதைகளை படிக்கத் துவங்குவதற்கு தனித்த வாசிப்பு
மனநிலைக்கு தயாராக வேண்டியது அவசியமாகிறது. மனநிலை ஒத்துவராத சமயத்தில்
வலுக்கட்டாயமாகப் படித்தால் கவிதைகள் வெறும் வார்த்தைகளாகவே பதியும்.
நிர்பந்தத்தின் பேரில் படித்தாலும் கவிதைகள் நமக்கு காட்டும்
பாதைகளுக்குள் நாம் செல்லவே முடியாது.
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்.. தொகுதிக்குள் நுழைந்த போது முதல்
நான்கைந்து கவிதைகளை வாசித்ததும் இவ்வளவு இறுக்கங்களை சாதாரண வாசகன்
உணர்ந்து ரசிக்க இயலுமா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதற்கும் எனக்கு
வழி இருக்கிறது என்று கடைசிக் கவிதையிலிருந்து பின்புறத்தில் இருந்து
வந்தேன்.அவைகள் என் கைப்பிடித்து எளிமையாக முன்புறம் நோக்கி கூட்டி
வந்தன.
மதுக்கூடத்தில் கொண்டாட்டத்திற்கு நுழைந்த கவிஞன் கடைசி
மிடறுக்குப் பிறகு விசும்பத் துவங்குகிறான்...காதலியால் உதாசீனப்படுத்தப்
பட்டவன் விடுதியில் தங்கி அவளின் நினைவலைகளை அழிக்க முயன்று தடுமாறித்
தவிக்கிறான்...
இறப்பை நோக்கியே நகரும் கவிதைகள் காதலின் வலிகளை கசப்பாய்
விசிறியடிக்கின்றன...
கவிஞனாய் இருந்துவிட்ட கவிஞன் லெளகீக வாழ்வில் ஒரு அங்கமாக இருக்க
தடுமாறுகிறான். வாழ்வை கவிதையாய் வாழ முயற்சிக்கும் அவன் சுவரொட்டி மீது
மூத்திரம் பெய்து தன் கோபத்தை வெளிக்காட்டுகிறான்..அதுவும் நடு
இரவில்..கூடவே அவனுக்கு தன் பெயரை சுமந்து கொண்டு திரிவது கூட கனமாய்
இருக்கிறது.
காதலை புறங்கையால் தள்ளிவிடும் கவிதைகளை தீராக் காதலுடன் எழுதித்
தீர்க்கிறது இவரது பேனா. இவர் நமக்கு காட்டும் கடவுள் கூட சாத்தானாகும்
ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்.
தலைப்புக் கவிதையும், மகன்களும் மகன்களின் நிமித்தமும் இரண்டையும்
சிறுகதை வடிவில் வாசித்து மகிழ்ந்தேன்.
முதல் தொகுதி வந்த பிறகு சிலவற்றை கழித்திருக்கலாம் என்று கதிர்பாரதிக்கே
தோன்றி இருக்கலாம்..அவைகள் என் கண்களுக்கும் தட்டுப்பட்டன. ஒரு கவிதை
தொகுதி பாராட்டப் படுவதற்கு அனைத்து கவிதைகளுமே சிறப்பானவைகளாக இருக்க
வேண்டிய அவசியம் எதுவுமில்லை.


- வா.மு.கோமு

08 April, 2013

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் (உயிர் எழுத்து - ஏப்ரல் 2013 இதழில் வசுமித்ர எழுதிய விமர்சனம்)


காயம்பட்டவனை அழைத்து வாருங்கள், களிம்பு தருகிறேன் எனச் சொன்னவன் வலியை முதலில் அறிந்தவனாக இருக்கிறன். துக்கம் வேறோடிய தன் உடலை ஒரு கவிஞன்  இலையெனக் கழித்துவிடத் தயங்குவது எதனால் அன்பர்களே. முத்தத்தைத் திருவோடாக்கிக் காத்திருக்கும் கவிஞனுக்கு தங்களது பசிய உதடுகளால் இரண்டு முத்தங்களைப் பரிசளியுங்கள். உங்கள் உதடுகள் ஆசிர்வதிக்கப்படட்டும்.

கவிஞன் தன் இயலாமையிலிருந்து எழுதுகிறான் என்பதைவிட ஒரு மனிதன் தன் இயலாமையிலிருந்து வார்த்தைகளைக் கண்டுகொள்கிறான் என்றே நான் புரிந்துகொள்ளுகிறேன். ஒரு காலத்தில் கவிதை ஆசிர்வாதமாக இருந்தது. அது பசிக்கு உணவாக, தங்கக்காசுகளுக்கும், யானைகளுக்கும்  மாற்றாக இருந்தது. அதன் பின் கவிதை மொழியின் ஆதிக்கத்திற்குள் போய் கற்றறிந்த மனிதர்களின் முன்னால் ஒரு வேசையாக விபச்சாரகனாக மாறிவிட்டது. தலையாட்டல்களுக்கும் தரகுக்கும் இடையே கவிதை தன் நிர்வாணத்தை மறைக்க மிகுந்த சிரமப்பட்டது. பின் கவிதை வேசைத்தனத்தின் மூலம் அரசியலை அறிந்தது.

கவிதைகள் பெரும்பாலும் தமிழில் பாடல்களாகவே இருக்கிறது. நவீனம் வந்தபிறகே பாடல்கள் கவிதைகள் என இரு கூறாகப் பிளவு கொண்டது. மலையாளத்தின் நவீன கவிதைகளை பாடல்களாகப் பாடுவதும் உண்டு. ஆனால், கவிதையின் இலக்கணத்தைச் சொல்லும் மொழியறியாதவன் இசையின் வழியாக வரிகளை அறிந்துகொள்கிறான். வரிகளுக்குள் ஓடும் இசையில் அவன் துக்கத்தை, துள்ளலை மொழிபெயர்த்தவனாகி விட்டான். ஆனால் இதே கவிதை எந்த நிர்தாட்சண்யமும் இன்றி கவிதையாக இருக்கும்போது அது வாசகர்களுக்கு தேவையில்லாமல் போகிறது.

ஆனால் கவிதை மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும் என நான் இப்போது நினைக்கிறேன். கவிஞன் மக்கள் இல்லையா. இருக்கலாம், தனக்கென ஒரு உலகத்தை மொழிவழியே விரிக்கும் ஒருவனை மக்கள் என அழைக்கச் சங்கடமாக இருக்கிறது. இதே சங்கடங்களை மக்கள் முன் கவிஞர்களும் கண்டடையவேண்டும்.


கவிதையைக் கவிதை என்று பாராமல் அது மதுப்போத்தல்களாகவும், கள்ளச் சீட்டுக்களாகவும், அடையாள அட்டைகளாகவும், கடவுச்சீட்டுக்களாகவும்  கழுத்தில் தொங்குவதை இப்போது நான் எனது சமகாலத்தில் கண்டு கொண்டிருக்கிறேன். நவீன கவிஞர்கள் கவிதைக்கு முன் தங்கள் விரல்களால் எதை எழுதினார்களோ இல்லையோ தத்துவத்தை, (இங்கு நான் தத்துவம் எனக் குறிப்பிடுவது மார்க்சியத்தை மட்டும்தான். வாழும் காலத்தில் பயன்தரத்தக்க ஒன்றை மட்டுமே என்னால் தத்துவம் என அழைக்க முடிகிறது.) எதிர்த்தார்கள்.

வரிகள் உணர்ச்சி வசப்பட்டவுடனேயே கவிஞர்கள் உனர்ச்சிவசப்பட்டுக் கத்தியது அது கவிதையல்ல கோஷம், இது பிழைப்பு, இது அரசியல். இது அடிப்படை வாதம், துரதிருஷ்டம் இவை மூன்றும் இல்லாது எந்தச் செயலும் இல்லை. இன்று நவீன கவிஞர்கள் கையில் புழங்கும் பலமான சில்லறையாக செலவாணியாவது காதலின் விவரணை வடிவங்களும், இருண்மையின் வெளிச்சங்களும் மட்டுமே. இவையே பெரும்பாண்மையாக நவீன கவிதை முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது.


கவிதை என்றால் என்னவென்று ஒரு நொடியில் சொல்லிவிடமுடியுமா என அகந்தையோடு கேட்கும் கவி உள்ளங்களை நானறிவேன். ஒரு வாசகனாக சாமனியனாக அதே கவிஞர்களிடம் எனக்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது. பசி என்றால் என்னகாதல் என்றால் என்னகாமம் என்றால் என்ன…. உழைப்பு என்றால் என்ன.. மனிதன் என்றால் யார்…. இவற்றை எல்லாம் தெரிந்துவிட்டா நீங்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இல்லைநாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அல்லது வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம்.

கேள்விகள் நிலமெங்கும் தங்களது கனத்த கைகளால் நிலத்தை ஓங்கியறைந்து புழுதியைக் கிளப்புகிறது. இறுதியில், எதிர்பார்ப்பின் முகத்தில் குறைந்தபட்சம் காறியுமிழ்ந்துவிட்டு வாசகனுக்கு ஒரு சேவையையும், தனது அகங்காரத்தையும் இழந்து, பெற்றவற்றின் சுய நோக்கங்களை, சுய புலம்பல்களை, பெற வேண்டியவற்றை ஒரு மந்தைக்கு முன் நின்று கூவுகிறவரையே நான் கவிஞன் என்பேன். அவன் களத்தில் இறங்கினான் என்றால் அவன் எனக்கு மகா கவிஞன்தான். இதுவே என் கவிதை பற்றிய சிறிய புரிதல்.
சிறிய புரிதல் எனச் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. உரையாடுவதன் மூலம் நீங்களோ நானோ ஓர் உத்தேசமான திசையைக் கண்டுபிடிக்கலாம். அல்லது, கவிதை தொன்மத்தில் சுட்டுகிற திசைப்பூண்டாகக் கூட நாம் கால்களை இழுத்து, தன் தலையில் மிதிக்க வைத்து நம்மை அலைய வைக்கலாம். ஆனால் அடிப்படையில் இங்கு நாம் உரையாட வேண்டும். ஆம் கவிதை குறித்து கவிதை எழுதிக்கொண்டே இருக்கமுடியாது. உரையாடித்தான் ஆகவேண்டும். அதுவே கவிதைக்கும் கவிதை வாசகருக்கும் ஒரு கவிஞராக நாம் செய்ய வேண்டிய உதவி. நிச்சயமாக இதை உதவியென்றே அழைக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். வழிகாட்ட நான் இருக்கிறேன், நான் கவிஞர் என நெஞ்சை நிமிர்த்துபவர்களும், பாடம் நடத்துபவர்களும் தீர்க்கதரிசிகளாகச் செத்தொழியட்டும்.

ஆனால், கவிஞன் தன்னைச் சூதனாக வைத்து வரிகளை பகடைகளாக உருட்டும் போதுதான் வரலாறு பிறக்கிறது. ( அதில் உள்ள சார்பே அவன் எந்த மக்களைக் குறித்து எழுதுகிறான் என்கிற அரசியலையும் பிறக்க வைக்கிறது) அரசும், ஆண்டியும் தீர்க்கதரியும் அவன் மொழி வழியாகவே இத்தனை ஆண்டுகாலமும் நம்மை வந்தணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

கவிஞனின் கண் காலத்தின் கண் எனச் சொல்லும் நாம் அதை மதுப்போத்தலின் முன்னாலும், என் பெயர் இதுதான் எனச் சொல்ல ஒரு வாசகமாகவும் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அவை எனக்கு மிகுந்த சிரமத்தை தருகிறது.

சிரமங்கள் வாழ்க.

மெசியாவின் காயம் எனத் தலைப்பிலிருந்து ஒழுகும் துயரம் கவிதைகள் அனைத்திலும் ஒரு ஊடு நரம்பாகவே ஓடியிருக்கிறது. அன்பை அளவுக்கு மீறிக் கவிஞர் போதிக்கையில் அவர் கவிதைகளை நாம் குரூரத்தோடுதான் வாசிக்கிறோமே என எண்ணத்தோண்டுகிறது. அன்பைச் சொல்லுகையில் கல்லறை மொழியை பார்வைக்குக் கொண்டு வந்துவிடுகிறார் கதிர்பாரதி. இத்தொகுதியில் நான் கண்டடைந்த கவிதைகளென ஒன்றை இங்கே ஞாபகமூட்டுகிறேன் கவிதைத்தலைப்பு சமாதானத் தூதுவர் = ஹிட்லர். (பக்_ 4 ) ஒரு கட்டியங்காரனின் மொழியில் இக்கவிதை தன்னுடலைக் கிடத்தியிருக்கிறது. ஆள்மாறாட்டமும் அரசியல் மாறாட்டமும் நடைபெறுகையில் எல்லாப் பக்கமும் மனிதர்களே காணக்கிடைக்கிறார்கள். மக்கள் தங்கள் கண்களை நம்பி மோசம் போய்க்கொண்டேயிருக்கிறார்கள். இதே தொனியை உடைய அரசியலை உயிர்ப்பந்தல் எனும் கவிதையிலும் வைத்திருக்கிறார். சோரத்தை விரும்பாத குற்றவுணர்ச்சி கொண்ட கவிதையாக இதை முன்மொழிகிறேன்.





ஒரு தோத்திரப் பாடல் ஒன்றும் இத்தொகுதியில் உள்ளது. ஆனால் மதம் கட்டமைத்த மனிதனை மதமே காவு கொண்டு அதை மனிதன் குற்றவுணர்ச்சியின் அடிப்படையில் கேள்வியை முன்வைக்காது குற்றவுணர்ச்சியை அடிப்படையாக வைப்பது எந்த நியதியின் கீழ் எனத் தெரியவில்லை. கடவுள் மனிதர்களின்  பெரும்பாரம் அல்லவா.

தொகுதியில் பத்துக்கவிதைகள் வாசகனின் நேரே விரல் நீட்டி, பற்றிக்கொள் என்கிறது. குறிப்பிட்ட கவிதைகளில் குறிப்பிட்ட வரிகளை நானே துண்டித்திருக்கிறேன். அது கீழ்க்கண்டவாறு


நெடுநாட்கள் கழித்து குடும்பப்புகைப்படம்
ஒன்றைப் பார்க்கையில்
சுடர் விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள்

நான்கைந்து நூற்றாண்டுகளின் ரேகைகள் படிந்திருக்கும்
மாளிகைக்குள் நுழைகிறீர்கள்

நீங்கள் நினைப்பது போலில்லை
குவித்து வைத்த ஏதோ ஒன்றெனத்தான் இருப்பார்

இளஞ்சிவப்பு நிறங்கொண்டது
என்கிறீர்களா

இரைக்காக அது மலம் கொத்திக்கொண்டிருந்தது
எனச் சொன்னால் நீங்கள் வாழத்தகுதியற்றவர்

ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகராக
மிகு புராதானமான எனது தனிமைக்குள்
உங்கள் சந்தையைப் பரப்பிவிட்டீர்கள்

எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
ஒரு பாழடைந்த வீட்டைக் கடக்கும்போது
உங்கள் இதயத்தாய் உற்றுப்பார்க்கிறீர்கள்

தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுதாகத் தெருவைக் கடக்கவில்லை


இதோஇதயநோயாளி நோகாவண்ணம்
பேருந்து விரைவதைக் கவனிக்கிறீர்களா

வாழ்த்துக்கள்
நீங்கள் என்னை அழவைத்துவிட்டீர்கள்

கண்ணாடித் தம்ளரில் நீரினை வெளியேற்றி
அவள் சிரிப்பினை நிரப்பி கடகடவெனக் குடிக்கிறீர்கள்

அதைக்கொல்ல நினைத்துத்தான் இப்போது
சாராயத்தால் மிறுமிடறாக எர்ந்துகொள்கிறேன் என்கிறீர்கள்

இவ்வரிகளிலுள்ள தொனியின் ஒற்றுமை, கவிதைக்கு நம்மை வாசகனாக அடையாளம் காட்டுகிறதென நினைக்கிறேன்.

கதிர்பாரதியின் இத்தொகுதியில் எந்த வாசகனும் அதன் உடலில் இருந்து இரண்டு வரிகளைக் கலக்கிக் குடித்து பருக வைக்கும் இயல்பைக் கொண்டதாக இருக்கிறது. முதல் தொகுதியென இதை முன் வைத்திருக்கும் கதிர் பாரதியின் மேல் எனக்கு இன்னும் சில நம்பிக்கைகளை அழுத்தமாக ஏற்றி வைக்கிறது.  அதோடு கவிஞர் தன் வார்த்தைகளின் மேல் கத்தரிக்கோலை வைக்கத் தயங்கக்கூடாது என வேண்டுகோளும் வைக்கிறேன். நல்ல கவிதை எனச் சொல்லுவது, இங்கும் பெரும்பாலும் மொழியின் வழியே நாம் அடைந்த அனுபவத்தை சொல்லுவதுதான். அப்படியென்றால் உளநூல்கள் அனைத்தும் பெரும்பாலும் கவிதை மொழியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அதற்கு அறிவியல் மொழியே கையாளப்படுகிறது.

கவிதைக்கென்று ஒரு மொழி இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையிலேயே சொல்கிறேன். மொழியைக் கையாளத் தெரிந்த எவரும் கவிஞராகலாம். கொஞ்சம் அளவுகூடிய உழைப்பு அவ்வளவே.

மொழி கைவராத கவிதைகள் சில இத்தொகுதியில் உண்டு. உதாரணத்துக்கு மோகப்பரிபூரணி என்ற ஒன்று, வெறும் மொழிவிளையாட்டுடனேயே கணக்குப் போட்டு தன்னைத்தானே அடையாளப்படுத்தியிருக்கிறது.

இது இத்தனை நிறைளைச் சொன்னவன் ஒரு குறையைச் சொல்லக்கூடாதா என்கிற கருப்புப் புள்ளியல்ல. முதல் தொகுதியில் இத்தனை கவிதைகளை எழுதியவர் கதிர்பாரதி என்ற ஒரு ஆனந்தமான மனநிலையில், ஒரு வாசகனாக நான் வைக்கும் எச்சரிக்கையே. எச்சரிக்கைகள் பாடத்திட்டங்களுக்கு உரியவை. ஆகவே யதார்த்தத்தில் ஒத்துவராதென கதிர்பாரதி நினைக்கலாம். ஆனால் பாடத்திட்டங்களின் படி வாழும் வாழ்க்கைதான் இது.

இறுதியாக ஒரு விவசாய வாழ்க்கையை வாழும் ஒருவன் வயலுக்கு கலையில் எழுந்து மாலைவரை உழுது வீடு திரும்பும் போது அவன் அதிகபட்சம் நூறு வார்த்தைகள் பேசியிருக்கலாம். மாட்டோடும் துணையாக உழுபவனிடமும். அதனால் அவனுக்கு காதல் இல்லையென்றோ உணர்வுகள் இல்லையென்றோ நான் நம்பிவிடக்கூடாது. இதுவே என் வரையறை.

இத்தொகுதியில் மாளாத எரிச்சல் உணர்ச்சியை எனக்கு வழங்கிய கவிதை. மகாகவி கவிதை எழுதுகிறான் என்ற தலைப்பிடப்பட்ட ஒன்று. பக்- 53

உலகை
உன்மத்த தாண்டவமாட வைக்கிற
கவிதையொன்றின் கடைசிவரியை
இயற்றிக்கொண்டிருக்கிற மகாகவியை
அவன் மகனின் மலத்தைக் கழுவிவிட
நிர்பந்திக்கிற கீழ்புத்தியுடைய இச்சமூகம்
அந்தக்கவிதையின் கடைசிவரியைப்
படிக்கையில் மூக்கைப்
பொத்திக்கொள்ளுகிறது

அதோடு மகா கவியை துணி காயப்போடச் சொல்லக்கூடாது, கவிஞரின் எரியும் கவிதையைக் கண்டு பெட்ரோல் மிரள்கிறதுஇப்படியாக பேரிளம் பெண், அடுத்து மனைவி,ஆகக்கடைசியில் டூபிஸ் நடிகை எனத் தாண்டிச்செல்கிறது. இப்படியாக கவிதை நீண்டு செல்கிறது. குண்டி கழுவாத, அதுவும் அவன் மகனுக்குக் கழுவிவிடாத, கவிஞருக்கு உலகைத் தண்டாவமாடவைக்கிற கவிதைகளை எழுதமுடியாது என்பதோடு, அவர் தன் மூக்கையே சம்பந்தப்பட்ட மகாகவிதையை எழுதும்போது  பொத்திக்கொள்ளட்டும்.

ஏனெனில் அவரது வீச்சம் அவரது உடலில் இருந்தே கசிந்து ஊறுகிறது. துவைத்த துணியைக் காயவைக்காத, கறிக்கடையில் நிற்காத, போட்டதை எடுத்துத் தின்று கொழுத்துக் கிடக்கும் பிராணிகளை கவிஞர் என்ற பதத்தைச் சுட்டி எப்படி மன்னிக்கமுடியும். அவர் கவிஞர் எனவும் அவர் எழுதியது மகா கவிதையெனவும் அழைக்க முடியும். இன்னும் ஒன்று இக்கவிதையில் வருகிற மகா கவிஞன் பெண்களை என்னவிதமாக எண்ணுகிறான் என்பதை, தனது பெண்பற்றிய புரிதலை, கவிஞர் கதிரிபாரதி சொல்ல முடியுமா என்று கேட்டால், அதை அவர் ஒரு கேள்வியாகவே எதிர்கொண்டால் போதுமானது.

இத்தொகுதியில் என்னை ஈர்த்த பல கவிதைகள் உள்ளன.
நிற்க

நண்பர்களேஇத்தொகுதியில் உள்ளவைஒரு வாசகனாக எனக்கு கவிதைகளாகவே தன் வரிகளைத் திறந்து போட்டிருக்கிறது. அதோடு முதல் தொகுதியில் இவ்வளவு நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்திய கதிர்பாரதியைக் கவிஞர் என்றே அழைக்க ஆசைப்படுகிறேன். அவருக்கு என் ப்ரியமும். முத்தங்களும்.

வசுமித்ர

03 April, 2013

பகைவீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப்போடும் பெருங்கருணை! - ஆதவன் தீட்சண்யா (தக்கை, அகநாழிகை, 361 டிகிரி இதழ்கள் இணைந்து சேலத்தில் மார்ச் 16, 17 -2013 அன்று நடத்திய கவிதைப் புத்தகங்கள் விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)


ஒரு கவிதைக்கான மூலகப்பொறி அல்லது மூலகச்சொல்லை உள்வாங்கியதற்கும் அது உட்திரண்டு ஒரு கவிதையாக எழுதப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தின் செயல்பாடுகளும் மனநிலைகளும் நேர்க்கோட்டிலானவையல்ல. அவை, சிக்கல் மிகுந்த வரைபடத்தைப் போன்று ஏற்றஇறக்க மாறுபாடுகளைக் கொண்டதாக இருக்கின்றன. இந்த செயற்தொடரில் மிக நேரடியாக தொடர்பு கொண்ட கவிஞரேகூட நிகழ்ந்து
முடிந்தவற்றையெல்லாம் ஒற்றைச்சரமாக தொகுத்துக் கூறவியலாத நிலையில் அதற்கு தொடர்பேயற்ற ஒருவர் வாசகர்/ விமர்சகர் என்ற நிலையில் அந்தக் கவிதைகளை எவ்விதம் ஹிμகி எவற்றை வருவித்துச் சொல்வது? இப்படியானதொரு தத்தளிப்பையும் தவிப்பையும் இதற்குமுன் வெய்யில் மற்றும் சம்புவின் கவிதைகளை வாசித்தபோது உணர்ந்ததாய்  ஞாபகம்.
நீங்கள் கூறும் எதுவும் எதிரொலிக்கிறது
நீங்கள் கூறாதது தனக்கெனக் குரலெழுப்புகிறது
எப்படியாயிருந்தாலும் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது அரசியல்
- விஸ்லாவா சிம்போர்காவின் இந்த வரிகள் சுட்டுவதைப்போல கதிர்பாரதி இந்தக் கவிதைகளை எழுதியதற்கும் அதுபற்றி நான் எழுத நேர்ந்தமைக்கும் அரசியலே காரணமாய் அமைந்திருக்கிறது. ஒருவேளைஇவ்விரண்டையும் ஒருவர் வாசிப்பதற்கும் நிராகரிப்பதற்கும்கூட அரசியலே காரணமாய் இருக்கக்கூடும் என்று
கருதிக்கொள்கிறேன். தஞ்சையின் வயலடிச் சேற்றை உழப்பிச் சாகப்பிறந்த ஒரு சமூக அடுக்கினர் அதிலிருந்து தப்பிக்க கிறித்துவராக மாறியதும் அல்லது கிறித்துவராக மாறி தப்பித்ததும் அப்பட்டமான அரசியல் அரசியல் அரசியல். ஆகவே அந்தச் சமூக அடுக்கின் ஒரு கொழுந்தான கதிர்பாரதிக்கு கல்வியறிவு வாய்த்ததும் இலக்கியப்பரிச்சயம் நேர்ந்ததும் அவரே எழுதக்கூடியவராகியிருப்பதும் தற்செயலானவை அல்ல. அவர் எழுதியிருக்கும் இக்கவிதைகள் அவரையே எழுதியிருக்கின்றன என்று சொல்வதற்கான தடயங்களைக் கொண்டிருக்கின்றன என்று என்னால் உணரத்தான் முடிகிறதேயன்றி வகைதொகையாக்கி உங்களுக்கு காட்டும்
லாவகம் எனக்கு கூடிவரவில்லை. அதுசரிதான், அப்படி காட்ட முடிந்திருந்தால்தான் அவரது கவிதைகளை நானே எழுதியிருப்பேனே என்கிறது மனம்.
உற்பத்தி சார்ந்த வயக்காடு, நுகர்வு சார்ந்த நகரங்கள் என்கிற எதிரெதிர் பண்புகளைக் கொண்ட இருவேறு நிலப்பரப்புகளை வாழ்வெளியாகக் கொண்ட ஒருவரது சிந்தனாமுறையும் உலகு குறித்த கண்ணோட்டமும் எவ்வாறிருக்குமென்ற யூகங்களுக்கு அப்பால் செல்கின்றன கதிர்பாரதியின் கவிதைகள். ஒன்றை மற்றொன்றுக்கு கீழானதாக காட்டுவதற்கு தோதான எளிய வாய்ப்புகள் அனேகமிருந்தும் அவற்றை வேண்டுமென்றே தவறவிடுகிற கதிர்பாரதி ஒவ்வொன்றையும் அதனதன் இருப்பில் நிறுத்திவைக்கிறார்.




நகரவாழ்க்கை தந்திருக்கிற சொகுசுகளை அனுபவித்துக்கொண்டே தன் பூர்வீகநிலம் பற்றி அங்கலாய்ப்பதும், நகரம் பற்றி எப்போதும் சாரமற்ற புகார்களை எழுப்பிக் கொண்டேயிருப்பதுமான பாசாங்குகளை தவிர்த்துவிடுகிற இவர் இந்த இருவேறு வாழ்க்கையிலும் அந்தந்த மண்μக்குரிய மனிதராக இருந்து வாழ்ந்து
பார்ப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருக்கப்போய்தான் இந்தக் கவிதைகளை எழுத முடிந்திருக்கிறது. கண்ணீரைக்கூட உப்புச்செடி என்று விளிக்குமளவுக்கு அவரது நினைவுக்குள் பயிர்பச்சை சார்ந்த நிலமும் விதைநெல்லும் வெள்ளாமையும் மகசூலும் வேம்பும் நல்லேரும் நிறைந்திருக்கின்றன. தட்டான்கள் தாழப் பறந்தால் மழைவருமென்பது போன்ற வானிலையின் பல சூட்சுமங்களை, வாழத்தேவையான அறிவியல் நுட்பங்களை - அறிவாக அல்லாமல், அதாவது மூக்கின்வழியாக சுவாசிக்க அறிந்திருப்பதை ஒரு அறிவாக யாரும் பீற்றிக்கொள்ளாதிருப்பதைப் போல - பாரம்பரியத்தில் அறிந்திருந்த அவரும் ஆனந்தியும் ஓடித்திரியும் நிலமாகத்தான் இந்த பூமி முழுவதையும் கொண்டாடி மகிழ்கிறார். ஆனாலுமென்ன, இயற்கையின் கொடைகளாகிய நிலம், நீர், கடல், மலை யாவும் வாழ்வாதாரங்கள் என்ற நிலையிலிருந்து பண்டங்களாக
விற்பனைச்சரக்காக மாறும் ஒரு காலத்தில் அத்தனையும் யாருக்கோ களவாகிப் போகுமென்றால் கவிஞனும் சோழக்கடற்கரை பிச்சி போல வாய்க்குதப்பி வசவுகளை உமிழத்தான் வேண்டியிருக்கிறது. கடைசியில் அந்த கடல்தேவதையால் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததெல்லாம் சுமக்குமளவுக்கு முந்தானையில் அள்ளிப்போட்டு
முடிந்து கொள்ளும் மணல் மட்டுமே. பஞ்சம் பிழைக்க பரதேசம் போகிறவர்கள் ஊர்ஞாபகமாய் இதாவது இருக்கட்டுமேயென பிடிமண்ணேந்தி போவதும் இவ்விடத்தில் நினைவுக்கு வராமலில்லை. கடல்களையும் கரைகளையும் கொள்ளைக்கு கொடுத்துவிட்டு இப்படி மடியில் மிஞ்சிய மணலை முலைகளுக்கு மத்தியில் பொதிந்து கண்ணயரும் அவளது உருவம், கனிமங்களுக்காக கொள்ளைபோகும் காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் விரட்டியடிக்கப்படும் பழங்குடிப்பெண்களாக, எரிக்கப்பட்ட தமது வீட்டின் சாம்பலுக்குள் விழுந்து கதறும் தருமபுரி தலித் பெண்களாக, தாழப்பறந்து குறிபார்க்கும் வான்படைக்கு அடியில் பதுங்கியோடும் இடிந்தக்கரை பெண்களாக அல்லது ராμஷீ ஒடுக்குமுறையின்கீழ் சூறையாடப்படும் வடகிழக்கு மாகாணத்துப் பெண்களாக பல்கிப் பெருகுகிறது. இந்தச்சூழல்தான்யாவற்றுக்கும் முன்பாக நிலத்தை மீட்டாக வேண்டும்என்று அவரை அறிவிக்கத்தூண்டுகிறது

வாழ்வின் தேவையிலிருந்து இதற்கும் குறைவான ஒரு முடிவுக்கு அவரால் வரமுடியாது என்பதை உணர்கிறபோது அவர் சொல்லும் நிலம் தாயகத்தைப் பறிகொடுத்த யாவரது நிலமுமாக உருப்பெறுகிறது. இழந்ததையெல்லாம் மறக்கடிக்கிற அல்லது மறக்கமுடியாத இழப்புகளிலிருந்து தப்பிக்கவைக்கிற பெரும்பொறுப்பை கபிலன் யு.கே.ஜி என்கிற மகனிடம் ஒப்படைத்துவிட அவர் மேற்கொள்ளும் முயற்சியும்கூட தற்காலிகம்தான். மகன்களோடு மேற்கொள்கிற ரயில் பயணத்திலும் பார்க்கிற கார்ட்டூன்கள் மற்றும் விலங்குச் சேனல்களிலும் தானுமொரு குழந்தையாகிவிட முடியுமானால் நல்லது என்று அவர் தவிப்பதை நம்மால் அறிய
முடிகிறது. குழந்தைகளின் சேட்டைகளையெல்லாம் வியந்து எழுதுவதன் மூலம் தன்னையொரு மெல்லிதயம் படைத்த கவிஞராக கற்பிதம் செய்துகொள்ளும் அபத்தங்களுக்கு பதிலாக ஒரு குழந்தை தன் குழந்தைமை இயல்போடு வாழ்வதற்கு எதிராக விரையும் நடப்புலகத்தைப் பார்த்து அவர் அடையும் பதற்றமடைகிறார்.
இரும்புக்கை மாயாவிகளும் ராம்போக்களும் ஒற்றைக்கண் மந்திரவாதியும் அனகோண்டாக்களும் அருளுரை பொழியும் ஆன்மீகப்பூச்சாண்டிகளும் ஆக்கிரமித்துள்ள குழந்தைகள் உலகத்திற்குள் தன் மகன்களை தனியே அனுப்புவது குறித்த அச்சத்தினால்தான் அவர் தானுமொரு குழந்தையாகி அவர்களுக்கு துணையாக உடன்
செல்கிறார். இது தந்தைமையின் தவிப்பைப்போல மேலுக்குத் தெரிந்தாலும் அந்தந்த பருவத்துக்குரிய வாழ்க்கையை வாழமுடியாத சூழல் குறித்து அவர் கொண்டுள்ள கவலை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. பத்தாம் கிளாஸ் பரிட்சையில் பெயிலாகியவர்கள் அல்லது பக்கத்துவீட்டு சுமாரான அழகிக்கு லவ் லட்டர்
கொடுத்து அவளது அண்ணனிடம் மாட்டிக்கொண்டவர்கள் ஊரைவிட்டு ஓடிவந்து சேர்ந்துகொள்வதற்காக நகரத்து ஓட்டல்களில் பரோட்டா மாஸ்டர்பதவிகளைஉருவாக்கிவைத்திருப்பதும், பிள்ளைக்குப் பாலூட்ட மார் சுரந்த தாயொருத்தியை சுமந்துகொண்டு வருவதற்கென ஒரு ரயிலை ஊருக்குள் ஓட்டிவருவதற்கும்
இந்தக்கவலையே ஆதாரமாக இருக்கிறது. ஒரே காட்சியை இருவிதமாகப் பார்ப்பதற்கும், இருவேறு காட்சிகளை ஏககாலத்தில் தனித்தனியே காண்பதற்கும்
வல்ல இரண்டு கண்கள் வாய்த்திருக்கின்றன கதிர்பாரதிக்கு. அடித்தள உழைப்புச்சமூகத்தின் ஆழ்மனக்கண் வெள்ளாமை தட்டான் வேப்பமரம் கரிச்சான்கள் எருக்கம்புதர் இண்டம்புதர் துளசி கொண்டலாத்தி என்று நிலத்தையே சுற்றிசுற்றி பார்த்துக்கொண்டிருக்க மதமும் கல்வியும் கொடுத்த மற்றொரு கண்ணோ பெருநகரத்துக்கு கூட்டிப்போகும் பாதையொன்றை இமைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறது. கடவுள், வழிபாட்டுத் தலங்கள், மதம், மறைநூல்கள், ஆண்பெண் உறவு, குடும்பம், அறங்கள், ஒழுக்க மதிப்பீடுகள், அரசு, அதிகாரம், புனிதங்கள், கருணை, இரக்கம் என எதுவொன்றையும் அவற்றின் முழுப்பரிமாணத்தில் இந்த இரண்டு கண்களுமே அடிமுடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தக்காட்சிகள் குறித்து இவ்விரு
கண்களும் நடத்திக்கொள்ளும் விவாதங்களே இங்கு கவிதைகளாகியுள்ளன. காலத்தின் கண்ணாடி என்கிற அலங்கார நிலையிலிருந்து காலத்தின் சாட்சியம் என்ற திட்டவட்டமான நிலைக்கு கலையும் இலக்கியமும் இவ்வாறாகத்தான் மாறிச்செல்கின்றன என்று புரிந்துகொள்கிறேன். வாசகர் நுழைவதற்கான இடம் தேவை என்கிற போதத்தைக் கேட்டு ஒவ்வொரு கவிதையிலும் இரண்டிரண்டு
வரிகளை உருவியெடுத்து வழியேற்படுத்திக் கொடுக்கும்நல்லுள்ளம்கதிர்பாரதிக்கு வாய்க்காததால் அவரது சொற்சேர்க்கைகளும் வாக்கிய கட்டுமானமும் - இறுக்கமான என்பதைவிடவும்- திரட்சியான ஒரு வடிவத்தை கவிதைக்கு தந்துள்ளன. நிலம் சார்ந்த இக்கவிதைகளின் இடையிடையே தென்படும் வடசொற்கள் இயல்புக்கு
பொருந்தாத ஜிகினாவாக உறுத்தினாலும் உழைப்பு சார்ந்த வாழ்விலிருந்தும் விவிலியப் பரிச்சயத்திலிருந்தும் உருவாகியுள்ள இவரது மொழியும் படிமங்களும் தொன்மங்களும் மந்திரமான ஒரு மனநிலைக்கு ஆட்படுத்தி கவிதைகளை வாசிக்கவைக்கின்றன. ஆனால் தேங்கிய இரு கண்ணீர்த்துளிகளைப்போல குட்டிரேவதிக்கு தெரிகிற முலைகள் கதிர்பாரதிக்குசதையமுதமாகதெரிவது ஆண் என்கிற ஒரு காரணத்தினால்தான் என்றால்
மற்றமைகள் பற்றிய தனது கரிசனங்களை அவர் தீவிரமாக பரிசீலனை செய்தாக வேண்டியிருக்கும்.
நான் நீ என்கிற இணை எதிர்மைகளுக்குள் கரைந்து வருந்துதல், சினத்தல், பிணங்குதல், நகுத்தல், பகடியாடுதல், ஐயங்கொள்ளல் என்று குரல் மாற்றி குரல் மாற்றி அவர் நடத்தும் உரையாடல்களும் எழுப்பும் கேள்விகளும் உண்மையில் அவர் தன்னோடும் சமூகத்தோடும் நடத்திக்கொள்ள விரும்புகின்றவைதான்.
பகைவீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப்போடும் பெருங்கருணை நிலையை அடைவதற்குரிய குறிப்புகளால் நிறைந்திருக்கும் இத்தொகுப்பு பற்றி நீங்களும் பேசுவதற்காக இவ்விடத்தில் நான் முடிக்கிறேன்.

ஞாயிற்றுக்கிழமை
சுகுணா சிக்கன் ஸ்டால்
வாடிக்கையாளர் வரிசையில்
எனக்குப் பின் நின்ற
சிறுமிக்கு வழிவிட்டு
பின்
நகர்ந்தேன்.
என் கரிசனம் குறித்து
உங்கள் கருத்துகளை அறிய
ஆவல்.
- கதிர்பாரதியின் இந்த ஆவலுக்கு என்னிடம் உடனடியாய் பதிலில்லை. உங்களிடம்...?