22 September, 2024

வாசிப்பு அனுபவம் ~ உயர்திணைப் பறவை ~ `வாசிப்பை நேசிப்போம்` முகநூல் குழுமம் ~ தண்டபாணி தென்றல்

யர்திணைப் பறவை கதிர்பாரதி / இன்சொல் வெளியீடு / பக்கங்கள்: 228 / விலை: 260

கவிதை நாமறிந்து சங்க இலக்கியத்தில் துவங்கி சமகால நவீன இலக்கியம் வரைக்கும் ஓடிய, ஓடிக் கொண்டிருக்கும் மராத்தான் பயணம். கெசு வாங்கினாலும் விடாப்பிடியாய் ஓடி வருவது முக்கியம். கதிர்பாரதி ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் தொகுப்பு மூலமாகவே எனக்கு அறிமுகமானார். தட்டான்கள் பிடித்தவனென்பதால் வாங்கினேன். நவீன கவிதைகள் வாசிப்பு எனும் உலகுக்குள் முதல் கதவாக இத்தொகுப்பு இருந்தது. எளிமையான மொழிதலில் நுட்பத்தை கூர் தீட்டிக்கொண்டே போகும் கவிதைகள் கதிர்பாரதியுடையது. அவற்றை எளிதில் அடைந்துவிட முடியாது என்பது கதிர்பாரதியின் கவிதைகளை வாசிப்பவர்களுக்குத் தோன்றும்.
உயர்திணைப் பறவை தொகுப்பில் மொத்தம் 144 கவிதைகள் தலைப்பிடப்பட்டுள்ளன. அதில் இறங்கு வரிசை எண்களில் அமைந்த கவிதைகளும் உண்டு.அவை செட் செட்டாக ஒரே தலைப்பின் கீழ் அமைந்துள்ளன. உதாரணமாக அம்மா குறித்த இரண்டாவது தலைப்பில் மொத்தம் முப்பது குறுங்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நடிகை கனகாவின் திரை வாழ்க்கையில் முதல் கவிதை தொடங்குகிறது. அம்மாவின் கவிதைகள்/ இறுதியில் வரும் அம்மாவின் தலை நீவல் மகனிடம் கால் நீட்டிப் படுத்திருக்கும் துயரத்தை மனதால் தலை கோதி ஆறுதல் படுத்த முயல்கிறது.
/
ஒரு மாங்கனியைத் தீண்டும்போது அதன் காம்பைத் தீண்டுகிறாய் கிளைகளை இலைகளைத் தீண்டுகிறாய்
அடி மரத்தை சல்லி வேர்முடிச்சுகளை
ஆணிவேர் நுனியை அதன் வழி பூமியின் ஆழத்தைத் தீண்டுகிறாய்.
பகலை இருளை அதன் மூலம் வெளியைத் தீண்டுகிறாய்.
ஹலோ...
மாங்கனிப் புழுவைக்கூடத்தான் தீண்டுகிறாய்.
/
இதன் நுட்பம் ஒரு மாங்கனியின் வினைவிளை பண்புகளை சகல ஆழத்தில் இருந்தும் எடுத்துக் கொண்டுவந்து ஆற்றோர கூழாங் கல்லைப் போல வைத்துவிட்டார். கையில் எடுத்து இறுக்கி மடக்கினாலும் இவ்வாறு மொழுக்கென்று வழுக்கி விழுந்துவிடுகிறது. காதலும் அப்படியாப்பட்ட படிமம்தான். புழுதான் வண்ணத்துப்பூச்சியாகிறது. புழுவை புழு என்று நினைத்தால் புழு. பொருள்வயின் பிரிந்தால் கூட்டுப்புழு. சேர்ந்து பறந்தால் வெளியைத் தீண்டலாம். அதற்கான வெளியை மிச்சம் வைக்கும் இடங்களிலெல்லாம் நாமும் வாசித்துப் பறக்கலாம்.
/ உயரத்தில் இருப்பவற்றுக்கு உயரத்தில் ஒரு வேளையும் இல்லை / என்று முடிகிறது உயரத்தின் சரிதம் கவிதை.
/நீ பூமிக் காந்தம்/ - புவி காந்தப்புலம் பற்றி சமீபத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன் அப்போது இது அட.. என்று நிறுத்திக் கடக்க வைத்தது. நோய் அன்பு/ கவிதை என் நோய் நலமுடன் இருக்கிறது என்று தொடங்குகிறது.
/ விட்டமின் டி கபோர்டு வீட்டுக்குள் வந்தும் வராததுமாக கபோர்டைத் திறந்து விட்டமின்-டி மாத்திரைகளை வெளியே எடுத்து தண்ணீரில் கரைத்து பால்கனி செடிக்கு ஊற்றினாள். அனுமதித்த நாட்களைத் தாண்டி அதிகம் வாழ்ந்துவிட்டன மாத்திரைகள். அனுமதித்த நாட்களைத் தாண்டி அதிகம் வாழ்ந்துவிட்டது அவற்றின் தனிமை. அளவு மிஞ்சினால் அளவே நஞ்சு.
/
இதில் ஒரு சொல்கூட அளவுக்கு மிஞ்சாமல் அளவு மிஞ்சுதலின் அளவைக் கூறி அளவான கவிதையாகிவிட்டது. இறுக்கமாகவும் இல்லாமல் தொளதொளப்பாகவும் இல்லாமல் அளவான சொற்கள். தேர்ந்த மருத்துவரின் கணிப்பில் வந்துவிட்ட அலர்ஜி உண்டாக்காத சரியான டோஸ் இக்கவிதை.
/ பூஜ்ஜியத்தில் இருந்து
ஏறுவதாக நினைக்கும் எண்கள் உண்மையில் பூஜ்ஜியத்தை இழக்கின்றன.
வேறு எங்கேயும் சந்திப்பதில்லை. இறங்கிவந்தால் அடைவதும்
முன்பு ஏறிப்போன பூஜ்ஜியம் அல்ல. தனது பூஜ்ஜியத்துக்குள் சுற்றிக்கொண்டே சூரியனை நகர்த்துகிறது கடிகாரம். /
தெரிந்த விஷயத்தின் மீதான தன் நுட்பமான வெளிப்பாட்டுத் தன்மையால் அவிழ்த்துச் செல்ல இயலாதபடி கவிமரத்தில் அதன் இயல்பினைப் பிடித்துக் கட்டிவிடும் கவிதை இது.
/ மரம் பறக்கும் ஆசையைப்
பூ பூத்து வானத்துப் பறவைகளுக்குத் தெரிவிக்கிறது.
பிறகு கனிந்த பருவத்தில்
சதைகளை உண்ணக் கொடுத்து
விதைப் பிள்ளைகளை அனுப்புகிறது பறவைகளோடு பரந்து விரிந்து பறக்க உண்மையில் தன்னை விதைக்க. /
ஒன்றை இன்னொன்றாக்கி அதே ஒன்றுக்குத் திரும்பும் பருவங்களில் கவிதை பூக்கிறது. இதன்மீது ஒரு மரமல்லிப்பூ வந்தமர்கிறது. மரமல்லி காய்க்குமா என்று தெரியாது.. பறக்கும் ஏக்கத்தில் காம்பு நீண்டு பூத்து காற்றில் பறந்து கைகளில் விழுகிற தன்மை அதற்குண்டு.
/ ஆற்றுக்குத் தெரியாது
நீருக்குத் தெரியும் நீச்சல்.
இதை ஊருக்குத் தெரியாமல்
திசை மாற்றுகிறது ஆறு
ஓர் ஆகாயத் தாமரையை மிதக்கவிட்டு. / ஒரேயொரு ஆகாயத் தாமரையை மிதக்கவிட்டு ஜென் கவிதைகளையும் ரூமியையும் மூடி வைத்துவிட்டு தெரிகின்றன கதிர்பாரதியின் இக்கவிதை வரிகள்.
/ காற்று அசைய
கிளை அசைய
இலை அசைய
இலை அசைந்ததும்
இலை உதிர்ந்து வீழ்கிறது
இதொன்றும் மரத்துக்கு முக்கியமில்லை.
குறித்துக்கொண்டேன்
நாம் சந்திக்காத பொழுது என்று. /
மரத்துக்கு முக்கியமில்லை என்பதை எனக்கு முக்கியம் என்றுதான் குறித்துக் கொண்டார். உன்னருகில் தன்னை மறத்தலும் தன்னருகில் பிறவற்றால் உன்னை நினைத்தலும் காதலின் காலத்துக்குமான ஆவி நீந்தும் காபி.
/ பாதங்கள் நடமாட்டமுள்ள வழியில்
உதிர்ந்து கிடக்கும்
ஓர் அரசிலை மீது
பொட்டென்று சிறு துளி விழுந்ததும்
அசைந்து கொடுக்கிறது
இலை.
ஆசைதான்
பழைய உயிராசை. /
இதில் உள்ள சொற் பயன்பாட்டைக் கவனியுங்களேன். இதற்குள் ஒரு புதிர் இருக்கிறது. பாதங்கள் நடமாட்டமுள்ள
என்று துவங்கி அதை மீண்டும் முயல்வதாய் முடிகிறது. அரசிலை. ரொம்பவும் கவனமான சொற் பயன்பாடு. அரசமரத்து இலைதான் இதய வடிவில் இருக்கும். இதிலிருந்துதான் கவித்துவம் உயிராகி பாதமாகி நடக்க முயல்கிறது. அரசமரத்தடியில்தான் சித்தார்த்தனின் ஆசை புத்தனாக குந்திக் கொண்டிருந்தது என்பதும் நமக்கு நினைவிருக்கலாம்.
உன் ஞாபகத்தை இவ்வாறெல்லாம் கிள்ளவேண்டும் என்று சொன்னதை ஆளிடம் சொல்லி தி.ஜாவின் சிலிர்ப்பு கதையில் கடைசியில் நமக்கு சிலிப்பு உண்டாவதுபோல சிலிர்ப்பை ஏற்படுத்தலாம். மலர் நீட்டம் என்றொரு கவிதை அழகாக முடிகிறது. நகரமயத்தின் பொக்லைன் கையை ஆசிர்வதிக்கும் தும்பிக்கையாக பார்க்கிறார் கதிர்பாரதி. கடவுள் கவிதை உன் கற்பனைக்கு என்று படைக்கப்பட்ட கடவுள் நான் என்று கூர்மையாக முடிகிறது.
`உயர்திணைப் பறவை` தொகுப்பிலுள்ள
கடைசிப் பக்க கவிதை

சில உதாரணங்களை மட்டும் ரசனையின் பொருட்டு முழுதாக கூற வேண்டியதாகிவிட்டது. நல்ல தொகுப்பு.
இது தவிர தொகுப்பு முழுக்க ரசித்து மடியில் சாய்ந்து தலை கோதலை அனுபவித்து பாதி உறங்கி எழுந்து அட அடுத்தநாள் வந்துவிட்டதா என்று நள்ளிரவில் குழம்புவோம் அல்லவா அப்படியாப்பட்ட தருணங்கள் நிறைய உண்டு. நம் துயரங்களை தூங்க வைத்துவிட்டு நிம்மதியாக இக்கவிதைகளுக்குள் போவது அலாதியான ஒன்று.
முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். இந்நூலின் முன்னுரையாக எதையும் முனைந்து கைப்பற்றாத... என்னும் நான்கு பக்கங்கள் எந்த ஒளிவுமறைவுமின்றி அவரின் கவிதை அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். அது புதிதாக கவிதை எழுத முயல்பவர்களுக்கு தோளில் தட்டிக்கொடுப்பதாக உள்ளது. அவரின் கவிதைகளும் அப்படியானவைதான். அப்படியானவை இப்போதெல்லாம் தமிழில் மிகவும் அபூர்வமாகிவிட்டன. அபூர்வங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. அதனால்தானோ என்னவோ மொத்தம் மூன்று கவிதைத் தொகுப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். தனது முதல் தொகுப்புக்கு சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். உயர்திணைப் பறவை வந்தே நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த தொகுப்பு எப்போது என்று திட்டத் தொடங்கும் அளவுக்கு இடைவெளி எடுத்துக் கொள்கிறார். கிப்ட் அளித்த Hameed Sirajudeen அவருக்கு ஒரு ப்ரிய நன்றி.

No comments: