25 February, 2023

கவிஞர் பா.ராஜா `உயர்திணைப் பறவை`க்கு எழுதிய கடிதம்...

இனிய நண்பர், திரு. கதிர்பாரதி, அவர்களுக்கு இதய வணக்கம். நலம், நலமறிய ஆவல்.

 நீங்கள் அன்புடன் அனுப்பி வைத்த உங்கள் கவிதைத்தொகுப்பை, அகச்சேரன் மூலம் பெற்றுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. உயர்திணைப்பறவை என்ற அந்த கவிதை நூலைப்பற்றி உங்களோடு சில சொற்களை பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்கிறேன்.

 கதிர்பாரதி கவிதையின் முதல் வரி எழுதுகிறான், பிறகு அதனோடு என்னை ஒப்புக்கொடுப்பதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார் பாக்கியம் சங்கர்.

 சற்று அன்னாந்து…. என்றொரு கவிதை ( பக்கம் எண் :25)  அப்போது நான் பாலகன். தறித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் என் தாய் வியர்வை காரணமாய் கூந்தலை அள்ளி இரண்டாய்ப்பிரித்து இரு கொண்டைகள் இட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். ஒருமுறை குடிகார அப்பா வீட்டிலில்லாதபோது கொடுத்த கடனை வசூலிக்க வந்த ஒருவன், தாயை வசை பாடுகிறான். என்னவென்றே புரிபடாத கெட்ட வார்த்தைகள். ரெண்டு இது தேவையா என்கிறான்.

  கவிதை

 தொண்டைக்குழிக்குள் கத்தி இறங்கியதுபோல்

இருந்தது அம்மா,  என்று முடிகிறது. அன்றைய தினம் என் தொண்டைக்குள்ளும் கத்திதான் இறங்கியது. ஆனால் தொண்டைக்குள் கத்தி இறங்குவது அதுதான் என்றும், தொண்டைக்குள் கத்தி இறங்கினால் அப்படித்தான் இருக்கும் என அப்போது தெரியவில்லை.

இதோ இந்த வரிகளை வாசித்தபோது, அன்று தொண்டைக்குள் குத்திய கத்தியிலிருந்து ரத்தம் கசிவதை உணர்ந்த போது, பாக்கியம் சங்கர் சொன்னதைப்போல, அதனோடு என்னை ஒப்புக்கொடுப்பதைத்தவிர எனக்கும் வேறு வழியில்லை.

 தாலாட்டு.  ( பக்கம் எண் :210)

 சிறந்த கவிதை. குறிப்பிட்ட ஒரு நாளை கவிதைக்குள் கொண்டு வருவதும், இறுதியில் காலால் தாலாட்டி அந்த நாளைத்தூங்க வைப்பதுமாய் அருமையாய் இருக்கிறது கவிதை.

 அவன் கால்தான்

அவனைத்தூங்க வைத்தது.

 என்று எழுதியுள்ளீர். நான் எனக்களிக்கப்பட்ட வாசகச்சுதந்திரத்தோடு, அவன் கால்தான் அந்த நாளை தூங்க வைத்தது, என்று வாசித்துப்பார்த்தேன். இன்னும் சிறப்பாக இருந்தது.

 நெற்றி, கன்னம் என்று புறங்கையால் தொட்டுப்பார்த்து ஜொரமடிக்குது டாக்டரிடம் போ, என்று சொல்வதற்கும் ஆளில்லாது தன்னந்தனிமையில் இருப்பவர்கள், கால் மீது கால் போடுப்படுக்கும்போது அதுதான் ஜொரமடிக்குது டாக்டரிடம் போ எனவும் சொல்லக்கூடும்.

 இந்த கவிதையைப்படிக்கும்போது, சு. வெங்குட்டுவன் அவர்கள் எழுதிய ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது. இசையோடு வாழ்பவன், என்ற தொகுப்பில் இருக்கும் கவிதையது

 போர்வைக்குச்சிக்காத வலதுகாலின் பெருவிரல்மேல்

கவிழ்ந்திருக்கிறது வானம்

அடி நின்று அண்ணாந்து நோக்கின்

விரலுச்சி மேவியிருப்பது

ஆகாயமல்லாது வேறென்ன…. இப்படியாக தொடங்கும் அவரின் கவிதை நினைவிலாடியது.

 வசந்த முல்லை. ( பக்கம் எண் : 130)

 காலங்கள் கடந்தும் காற்றில் சாகாவரம் பெற்றுவிடும்படியான கலையுழைப்பைச்செலுத்தியவர்களை மெச்சும் வகையில் அமைந்திருக்கும் இக்கவிதை , பாடலை மாற்றிப்போட்டுக்கொண்டால் யாவருக்கும் பொதுவான கவிதையாய் உருவம் கொள்ளும். எனக்கு மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன…. போல் வேறு சிலருக்கு, வேறு சில பாடல்கள்ஆனால் கவிதை உணர்த்துவது காதுடையவன் காணக்கடவன் என்பதையே.

 இடமும் ஊரும். கவிதை…(பக்கம் எண் :164)

மிகச்சிறந்த ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியுள்ளது. இந்த கவிதையில் மட்டும் என்றில்லாமல் மற்ற சில கவிதைகளிலும் சில வரிகளில் அல்லது கவிதையின் முடிவில் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது.

 எனது தூரத்தை

அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.

உனது அண்மையைக்

கூட்டிக்கொண்டு வாஎனும் போதும் சரி….

 

தலையில் விழுந்திருக்கும்

தூங்கமூஞ்சி இலைகளைத்தட்டிவிடுகிறோம்.

எவ்வளவு

பிரமாதமாக நடிக்கிறோம்எனும் போதும் சரி

 

சத்தியம் முன் போகிறது. வண்டி பின்போகிறது. எனும் போதும் சரி….

 

உன் ஒரு சுற்றில் 60, நிறுத்தங்கள்

நன்றி விசுவாசமில்லாமல்

எல்லோரும் இறங்கிக்கொள்கிறார்கள் தெரியுமா. எனும் போதும் சரி

 

அங்குதான் இருக்கின்றன

நாம்

ஏற வேண்டிய உயரம்

மற்றும்

இறங்க வேண்டிய உயரம். எனும் போதும் சரி….

 

திறக்கமாட்டாங்களா? என்று கேட்டான் கபிலன்.

அதற்குத்தான்

இளையராஜா இசையமைத்துக்கொண்டிருக்கிறார். எனும் போதும் சரி…..

மாயாஜால விளக்கொளி சட்டென்று ஒளிர்ந்து மறைந்து, அந்த கவிதையை கவனிக்கவும், கவனித்து ரசிக்கவும் வைத்திருக்கின்றன.

நிஜத்தில் மாயாஜாலத்தின் முறைமைகளை, அதன் சூத்திரத்தை மறைப்பது மரபு. இங்கு கவிதைகளில் அந்த மாயாஜாலம் எப்படி நிகழ்ந்தன என்பதை அழகாய் விவரிப்பது போல, பாருங்கள் இங்க ஒரு முயல் இருக்கா.. அதை ஏற்கனவே இந்த தொப்பிக்குள்ள மறைச்சி வச்சிட்டேனாஇந்தத்துணிய அது மேல போத்துனேனாஎன்று விவரிப்பதைப்போல

எனக்கொரு அம்மா இருந்தாங்களாஅயிரை மீன் என்றால் அம்மாவுக்கு கொள்ளை பிரியமாஅப்பறம் ஒரு அன்பு  கண்ணீர் பளபளக்கும் கண்களை தூக்கிக்கொண்டு வாராதே, ன்னுச்சா….இன்று சிறிய குற்றம் செய்தேனா…..என்று விவரிக்கும் போது அது மேலும் கவிதைகளுக்கு மெருகூட்டி, அழகுபடுத்தியதோடு நில்லாது கவனிக்கவும் செய்திருக்கிறது.

இன்னும் நிறைய பிடித்த, பாதித்த, நெகிழ்த்திய, கவிதைகள் தொகுப்பு நெடுக நிறைய உள்ளது.பென்சில் கொண்டு டிக் அடித்து வைத்துள்ளேன்.

உதாரணமாக

 

1 ஒரே ஒரு ஹலோ..

2 அப்பா என்கிற் காலக்க்ல்.

3 அலைவுறுதல்.

4 நிம்மதியின் முக்காலி.

5 குற்றத்தின் பிறந்த நாள்.

6 தோன்றும் துணை.

7 வழி தவறிய சாவி.

8 பாண்டிச்சேரி தனிமை.

9 படிக்கட்டு ஜாக்கிரதை.

10 மேஜை நாற்காலி மற்றும் லாட்டி. 

11 ஒரு சுற்றுக்கு பிறகு வருபவன்.

12 ஆவரேஜ் சூசை.

13 நொடிப்பழங்கள்.

14 உயர்திணைப் பறவை.

15 ஒன்றுமில்லையின் குவியாடி.

16 சட்டை விதி.

17 துள்ளளவு….. என இன்னும் சொல்லிக்கொண்டேப்போகலாம்.

 

எண்களால் வரிசைப்படுத்திய கவிதைகளில் பல.கவிதைகள் சிறப்பாக உள்ளது.

 சிறப்பான தொகுப்பு. வாழ்த்துக்கள். இதிலுள்ள சில கவிதைகளை நாம் ஏன் எழுதவில்லை, என்ற பொறாமை ஏற்படுகிறது.

 

ரொம்ப ரொம்பப்பிடித்த ஒரு கவிதையோடு இந்த கடிதத்தை முடிக்கிறேன்.

 `மனை நீங்கி மனையாள் நீங்கி

சுகம் நீங்கி சுற்றம் நீக்கி

வெளிநாட்டுப் வேலைக்குப்போனவன்

விடுமுறைக்கு வீடு வந்ததும்

அழுகிறான்.

அவன் அழட்டும். அதற்காகத்தான்

இந்த விடுமுறை.`

 


             

மிக்க அன்புடன்….

_ பா. ராஜா_

4:2:2021