எழுத்தாளர் என்.ஸ்ரீராம் சொல்லித்தான், கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் எழுதிய `சோமனின் உடுக்கை` நாவல் படித்தேன். கன்னடத்தில் `சோமனத் துடி` எனப் பெயர். கன்னட இலக்கியத்தின் முன்னோடி தலித்திய நாவல்.
புலையர் சமூகத்தில் பிறந்த பண்ணை அடிமை சோமன், தன் வாழ்நாளுக்குள் சொந்தமாக தனக்கென கையளவு நிலமாவது வேண்டும் என நினைக்கிறான். அதில் பாடுபட்டு உழைத்து உண்ண வேண்டும் என ஆசைகொள்கிறான். அந்த ஆசையையும் அவனது குடும்பத்தையும் சமூகக் கட்டுப்பாடும் சாதீய தீண்டாமையும் எவ்வாறு சிதறுண்டுபோகச் செய்கின்றன என்பதை வலிமிகச் சொல்லியிருக்கிறார் சிவராம காரந்த். 19_ம் நூற்றாண்டு தொடக்கத்தில் தென்கர்நாடகத்தில் உழைக்கும் மக்கள் எவ்வளவு இழிநிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது நாவல் முழுக்க சம்பவங்களாக விரவிக்கிடக்கிறது.
உதாரணங்களாக... குளத்தில் விழுந்து இறந்துகொண்டிருக்கும் சோமனின் மகன் நீலனைக் காப்பாற்ற ஒரு பார்ப்பனச் சிறுவன் முயல்வான். ஆனால், தீண்டக்கூடாத சாதிச் சிறுவனை தொட்டுக் காப்பாற்றக் கூடாது எனத் தடுத்துவிடுவார்கள். புலையன் தனியாக விவசாயம் செய்து பிழைப்பது சமூக ஒழுங்கை குலைக்கும் செயல் என பண்ணையார் சங்கப்பையா குத்தகைக்கு நிலம் தர மறுப்பான். சோமனின் மகள் பெள்ளியை கங்காணி மனுவேல், காப்பி தோட்டத் துரை இருவரும் பாலியல் சுரண்டல் செய்வார்கள்... கேட்பாரற்று சோமனின் குடும்பம் சிதையும். இத்தனை துன்பங்களில் இருந்தும் சோமனின் அகத்தை மீட்பது அல்லது மாற்றுவது அவன் கை உடுக்கைத்தான். அதை முடுக்கி இசைக்க ஆரம்பித்துவிட்டால் அவன் வசிக்கும் போகனஹள்ளி கிராமமும் காடும் கானுயிர்களும் அவனுக்கு முன்னால் நிற்க முடியாது. அதை இசைக்கும்தோறும் அவனுக்கு சொந்த நிலமும் அதில் விவசாயம் செய்து உண்டு வாழும் வேட்கையும் மேலெழும்பும். ஆனால், பண்ணையார் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கும்போதெல்லாம் மீண்டும் சோமன் தஞ்சம்போவது அவன் உடுக்கையிடம்தான்.
சிவராம காரந்த் |
`பரதேசி` படத்தில் வேலையாட்களை காப்பி தோட்ட வேலைக்கு கங்காணி நடத்திக்கொண்டுபோகும் துயரக் காட்சி இந்த நாவலில் வருவதுதான் எனச் சொல்லிவிடும் அளவுக்கு ஒற்றுமை. 1931_ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவல் படமாக எடுக்கப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பப்பட்டது. திரைக்கதை வசனத்தை சிவராம காரந்தே எழுதியிருக்கிறார்.
சோமனின் உடுக்கை இசையோடு ஆரம்பிக்கும் நாவல் அதே உடுக்கை ஒலியோடு நிறைகிறது. வெளிகளில் மலைகளில் காடுகளில் குன்றுகளில் மோதிச் சிதைகிறது உடுக்கை ஒலி. துயரத்தில் துரோகத்தில் சுரண்டலில் வறுமையில் கனவுகளில் வேட்கையில் மோதிச் சரிகிறது சோமனின் வாழ்வு.
`இருட்டென்றால் இருட்டு அப்படியான இருட்டு` என நாவலின் முதல்வரி ஆரம்பிக்கும். அது வரியல்ல. இப்போதும் வறிய மக்களின் வாழ்வு.
தென்கர்நாடகத்தின் துயர்மிக்க புலையர் வாழ்வைச் சொல்லும் புகழ்மிக்க `சோமனின் உடுக்கை` நாவலை 2002_ம் ஆண்டு தி.சு.சதாசிவம் ஒரு நேரடி தமிழ் நாவல் என்று சொல்லும் அளவுக்கு மிக அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ராஜராஜன் பதிப்பகம் (கலைஞன் பதிப்பகம்) வெளியிட்டிருக்கிறது. இந்த நாவலை வாசிக்க நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
No comments:
Post a Comment